அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
(அதிகாரம்:மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் எண்:691)
பொழிப்பு (மு வரதராசன்): அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.
|
மணக்குடவர் உரை:
மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க.
இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று.
பரிமேலழகர் உரை:
இகல் வேந்தர்ச் சோந்து ஒழுகுவார் - மாறுபடுதலையுடைய அரசரைச் சோந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை
மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க.
(கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல்வேந்தர்' என்றார், மிக அகலின் பயன் கொடாது, மிகஅணுகின் அவமதிபற்றித் தெறும்
வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
மாறுபாடுடைய அரசரைச் சேர்ந்தொழுகுவார் நீங்குதலும் நெருங்குதலும் இன்றித் தீக்காய்வார் போல அளவாக நடந்து கொள்க.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இகல் வேந்தர்ச் சோந்து ஒழுகுவார் அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க.
பதவுரை: அகலாது-மிக நீங்காமல்; அணுகாது-மிக நெருங்காமல்; தீக்காய்வார்-நெருப்பு காய்பவர்; போல்க-போல இருக்க, ஒத்திருக்க; இகல்-மாறுபாடு; வேந்தர்-மன்னவர், ஆட்சித் தலைவர்; சேர்ந்து-கூடி; ஒழுகுவார்-நடந்து கொள்பவர்.
|
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க;
பரிப்பெருமாள்: தீக்காய்வாரைப் போலநீங்குதலும் செய்யாது குறுகலும் செய்யாது;
பரிதி: அணுகில் சுடும் அகலின் குளிரும் என்று தீக்காய்வார் போல;
காலிங்கர் (‘போல’ பாடம்): குளிர்க்கு உடைந்து தீக்காய்கின்ற இடத்து மற்று அதனை அகல்வதும் செய்யாது அணைவதும் செய்யாது தீக்காய்ந்து இன்புறுகின்றனர்
யாதொருபடி; அப்படியே அவரைப் போல ஒழுகுவார் யார் எனின்;
பரிமேலழகர்: அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க. [மிகச் செறிவதும் - மிக நெருங்குவதும்]
'அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் பழகுக', 'அதிக தூரத்தில் விலகி இல்லாமலும் மிகவும் பக்கத்தில் போய்விடாமலும், குளிர்காய்கின்றவர்கள் நெருப்புக்கு அருகில் இருப்பது போல்', 'தீயின் வெப்பத்தால் குளிர் நீக்கிக் கொள்பவன்போல, மிகவும் விலகிப் போதலும் மிகவும் நெருங்குதலும் இல்லாமல்', 'மிகவும் நீங்கிவிடாமலும், நெருங்கிவிடாமலும் குளிரின் பொருட்டு நெருப்புக் காய்வார் போல' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தீயில் குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் பழகுக என்பது இப்பகுதியின் பொருள்.
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை.
மணக்குடவர் குறிப்புரை: இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று.
பரிப்பெருமாள்: மாறுபாடு இல்லாத வேந்தரைச் சேர்ந்து ஒழுகுக அமாத்தியர் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சார்ந்தொழுகும் திறம் கூறிற்று. இத்துணையும் பெரும்பான்மையும் மாற்றரசரை நோக்கிற்று.
பரிதி: ராசசேவை பண்ணுக என்றவாறு.
காலிங்கர் (‘விறல்வேந்தர்’ பாடம்): விறல் மன்னரைச் சேர்ந்து ஒழுகும் விதி மரபு உடையோர் என்றவாறு. [விறல் மன்னர்-வலிமைமிக்க அரசர்]
பரிமேலழகர்: மாறுபடுதலையுடைய அரசரைச் சோந்தொழுகும் அமைச்சர். [மாறுபடுதல்-பகைத்தல்]
பரிமேலழகர் குறிப்புரை: கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல்வேந்தர்' என்றார், மிக அகலின் பயன் கொடாது, மிகஅணுகின் அவமதிபற்றித் தெறும்
வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது. [கடிதின் வெகுளும் தன்மையர்- விரைந்து சினக்கும் தன்மையுடையவர்; அவமதிபற்றி - இகழுதல் குறித்து; தெறும் -வருத்தும்]
'மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகுபவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் சேர்ந்தொழுகுபவர் என்பது அமைச்சர் குறித்தது என்றனர். காலிங்கர் விதிமரபு உடையோர் என்றார்; இவர் 'இகல்வேந்தர்' என்பதற்கு 'விறல்வேந்தர்' எனப் பாடம் கொள்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'மன்னரொடு பழகுபவர்', 'பலம் பொருந்திய பதவியிலிருக்கும் அரசர்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டும்', 'அரசரைச் சேர்ந்து ஒழுகுவோர் நடக்க வேண்டும்', 'மாறுபடுதலை உடைய அரசரை நெருங்கி ஒழுகுகின்றவர் அவரை இருத்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
மனம் மாறுபடுதற்குரிய ஆட்சியாளரோடு பழகுவோர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
இகல்வேந்தரோடு பழகுவோர் தீயில் குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் இருக்க என்பது பாடலின் பொருள்.
'இகல்வேந்தர்' யார்?
|
தலைவரிடமிருந்து மிகவும் விலகிப்போகாமலும் அவருடன் மிக நெருங்கிப் பழகாமலும் இருக்க வேண்டும்.
அடிக்கடி மாறுபடுதலையுடைய தலைவரைச் சார்ந்தொழுகுவோர் அந்த மன்னரை மிகவும் நீங்கியிராமலும், மிகவும் நெருங்கியிராமலும், நெருப்பில் குளிர் காய்கின்றவர்கள் போல இருத்தல் வேண்டும்.
குளிரான நேரத்தில் மக்கள் தீக்காய்தல் வழக்கம். நெருப்பை மூட்டி அதன் அருகில் இருந்து குளிர்காய்பவர்கள், தீயினை விட்டு விலகினால் குளிர் தாக்கும்; மிகவும் குறுகிச் சென்றால் நெருப்பு சுடும். அது போல, அதிகாரத்திலிருப்போரிடம் இருந்து நீங்கிவிட்டால், பயன் இராது; ஆனால் மிகவும் நெருங்கிவிட்டாலோ அவரது செல்வாக்கால் அழிவு
நேரலாம். எனவே, காலத்திற்குத் தக்கபடி விலகியிருந்தும், உரிய மதிப்பு காட்டி அணுகி இருந்தும் அவரிடம் பழக வேண்டும். வேந்தர் என்று சொல்லப்பட்டிருந்தாலும், இது பெரிய நிறுவனங்களை நிர்வகிக்கும் தலைவரைச் சார்ந்து ஒழுகுபவர்க்கும் நன்கு பொருந்தும்.
நெருப்பின் அருகில் அமர்ந்து அதன் வெப்பத்தை அடைய விரும்புவோர் மிக அகலாதும் அணுகாதும் இடைப்பட இருந்து தீக்காய்வர். குளிர் காய்பவர்கள் மிக நெருங்கினால் நெருப்புச் சுடும்; மிக விலகிப் போனால் குளிர்காயும் பயன் கிடைக்காது. அது போலவே அதிகாரத்தில் உயர்நிலையில் இருப்போரிடம் பழக வேண்டும் என்கிறது பாடல். சேர்ந்தொழுகுபவர் மிகநெருக்கம் காட்டினால் அவர்களுடைய பலவீனங்களை எளிதில் தெரிந்து கொண்டு அவர்களை ஒருவித அடிமை நிலைக்குக் கொண்டு சென்றுவிடுவர்; ஏதாவது தவறுகள் நிகழ்ந்தால், தேவையில்லாமல், அவர்கள் மீது வேகம் காட்டவும் இடம் உண்டாகும். மிகவும் நெருங்கிச் சென்றால் கடிவனோ என்று ஒரேயடியாக விலகி இருத்தலும் கூடாது. தள்ளிப் போவது சேர்ந்தொழுகுவோரை மறந்துவிடச் செய்யும்; அவர்களும் நல்லது எதுவும் செய்ய இயலாது; அவர்களால் நன்மை பெறவும் முடியாது. உயர்பதவியில் இருப்பவர்கள் சிறு காரணத்துக்காகவும் பகைக்க முற்படும் குணம் உடையவர்கள். எனவே அவர்களை அணுகாது, அகலாது பழக வேண்டும்.
பணியிடங்களில் தங்கள் மேலதிகாரியிடம் பழகும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவர்கள் அங்கு எளிதில் வெற்றிபெறுவர். 'அகலாது அணுகாது' என்பதைப் பழகும் நெறிமுறையில் ஒரு பொது விதியாகக் கொள்ளலாம்.
'போல்க' என்பது 'போல இருக்க' எனப் பொருள்படும். மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் முதலியோர் 'போல்க' எனப்பாடங்கண்டு 'போல இருக்க' எனப் பொருள் கூறினர்.
‘போல’ என்று காலிங்கர் பாடம் கொண்டார். 'போல' என்பதினும் 'போல்க' என்ற பாடம் சிறந்தது. 'போல்வர்’ என்று கொண்ட பழைய உரை(உ வே சா)யும் ஏற்கும்.
|
'இகல்வேந்தர்' யார்?
'இகல்வேந்தர்' என்றதற்கு மாறுபாடுடைய வேந்தர், மாறுபாடு இல்லாத வேந்தர், விறல் மன்னர், மாறுபடுதலையுடைய அரசர், மாறுபாடுடைய அரசர், மனப்பேதகாமாயிருக்கிற (மனவேறுபாடாய் இருக்கிற) அரசர், மனம் மாறுபடுதற்குரிய வேந்தர், பலம் பொருந்திய பதவியிலிருக்கும் அரசர், வலிய (பகைவெல்லும்) ஆட்சியர், என்றும் போர்த்தொழிலிலேயே ஈடுபாடுடைய மன்னர், மனவேறுபாடுகளை எளிதில் அடையும் மன்னர், விரைவில் வெகுளுந் தன்மையுடைய அரசர், வலிமையுள்ள அரசர், அதிகாரம் உடைய மன்னர், ஒரு சமயம் அன்பும் மறுசமயம் கோபமும் கொண்டொழுகும் வேந்தர் என்றவாறு உரையாசிரியரகள் பொருள் கூறினர்.
இகல் என்ற சொல் மாறுபாடு அல்லது கருத்து வேறுபாடு என்ற பொருள் தருவது.
எனவே 'இகல்வேந்தர்' என்ற தொடர்க்கு மாறுபாடுடைய வேந்தர் எனப் பொருள் கொள்வர். இதற்கு வலிமைமிக்க மன்னர், அன்பும் சினமும் மாறிவரும் குணம் கொண்ட மன்னர், மாறுபடும் மனமுடைய மன்னர் எனவும் பொருள் கொள்வர். இவற்றுள் மாறுபாடுடையை மன்னர் என்பது பொருத்தமானது.
இகல் வேந்தர் என்பதற்கு ‘விறல்வேந்தர்’ எனப் பாடம் கொள்வார் காலிங்கர். இது வலிமைமிக்க அரசர் எனப்பொருள்படும். இப்பொருளும் ஏற்குமாயினும் ‘விறல்வேந்தர்’ எனும் பாடத்தினும் ‘இகல்வேந்தர்’ என்னும் பாடம் எதுகை நயமுடையது. இகல் வேந்தர் என்பதற்கு மாற்றரசர் என்று பரிப்பெருமாள் உரை தருகிறார். இவர் உரையின்படி இப்பாடல் மாற்றரசரைச் சார்ந்து ஒழுகுவோர் பற்றியது என்பதாகிறது.
பொதுவாகத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மாறுபாடுடையவராகவே இருப்பர். ஆட்சித்தலைவர் மாறுபாடே தமக்கியல்பாக இருப்பதால் இகல்வேந்தர் எனப்பட்டார். ஆட்சியதிகாரம் கையிலிருக்கிற காரணத்தினாலும் தமர் என்றும் பாராது தந்நலம், அரசியல் இவற்றைப் பார்த்து விரைந்து சினம்கொள்பவர்களாதலினாலும், தலைவர் அடிக்கடி அன்பு மாறும் இயல்பினராகவே இருப்பார். அவர் ஒரு சமயம் அன்பும் மறுகணம் சினமும் கொண்டவராயிருப்பார்
ஆட்சிச் சுமை தாங்குவோர்க்குப் பொறுப்புக்கள் மிகுதியாதலாலும் தம் ஆட்சியில் முறைதவறி எதுவும் நடந்துவிடக்கூடாது என்று குறிக்கொண்டு அவர்கள் செயல்படுவர்கள் ஆதலாலும் மன அழுத்தம் எளிதில் கொள்வர்; இதனாலேயே அவர்கள் மாறுபடும் இயல்புடைய அல்லது பகை முகம் காட்டும் தன்மையுள்ளவராக இருக்கின்றனர்.
இகல்வேந்தர் என்ற தொடர்க்கு மாறுபடுதலையுடைய ஆட்சித்தலைவர் என்பது பொருள்.
|
மனம் மாறுபடுதற்குரிய ஆட்சியாளரோடு பழகுவோர் தீயில் குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் இருக்க என்பது இக்குறட்கருத்து.
தக்க இடைவெளி விட்டு மன்னரைச் சேர்ந்தொழுகல் வேண்டும்.
கணப்புக்கான நெருப்பில் மிக அருகே செல்லாமலும் மிகவும் நீங்காமலும் குளிர் காய்வதுபோல், மாறுபாடுடைய மனம் கொண்ட ஆட்சியாளரிடம் பக்குவமாகப் பழக வேண்டும்.
|