இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0697வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்

(அதிகாரம்:மன்னரைச்சேர்ந்தொழுகல் குறள் எண்:697)

பொழிப்பு (மு வரதராசன்): அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும் எப்போதும் சொல்லாமல் விட வேண்டும்.

மணக்குடவர் உரை: எப்போதும் வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லித் தமக்குப் பயன்படாதவற்றைக் கேட்டாலும் சொல்லாது விடுக.
சொல்லாது விடலாவது தூதனை அரசர்க்குப் படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினவினால் நீ அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை.

பரிமேலழகர் உரை: வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக.
('வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை' என்றும் வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்' என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பயன் விளைக்கும் அரசன் விரும்பும் காரியங்களை அவன் கேட்காவிடினும் கூறி, எப்பொழுதும் பயன் விளைக்காதவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேட்பன சொல்லி, வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்.

பதவுரை: வேட்பன-விரும்புவன; சொல்லி-உரைத்து; வினைஇல-செயல் அற்ற, பயன் இல்லாத; எஞ்ஞான்றும்-எப்போதும்; கேட்பினும்-(வலிந்து)கேட்டாலும்; சொல்லா-சொல்லாமல்; விடல்-விட்டொழிக.


வேட்பன சொல்லி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லி;
பரிப்பெருமாள்: வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லி;
பரிப்பெருமாள் குறிப்புரை: 'வினையில' என்றமையால் பயன் உண்டாயின் சொல்லுக என்பது கருத்து.
பரிதி: அரசன் விரும்பின் காரியம் சொல்லுக;
காலிங்கர்: அரசரைச் சேர்ந்து ஒழுகும் அருமை இத்தன்மைத்து ஆகலான் அவர் விரும்பிக் கேட்பனவற்றைச் சொல்லி;
பரிமேலழகர்: பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி,

'வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேண்டியதைக் கேளாவிடினும் சொல்லுக', '(பேசுகின்ற காரியத்துக்குச் சம்பந்தப்பட்ட) விரும்பத் தக்கவைகளை மட்டும் சொல்லி.', 'விரும்பத்தக்கனவற்றை அரசனிடம் வற்புறுத்தி.', 'எவரும் விரும்பத்தக்கனவற்றைச் சொல்லி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விரும்புவனவற்றைச் சொல்லி என்பது இப்பகுதியின் பொருள்.

வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்குப் பயன்படாதவற்றை எப்போதும் கேட்டாலும் சொல்லாது விடுக.
மணக்குடவர் குறிப்புரை: சொல்லாது விடலாவது தூதனை அரசர்க்குப் படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினவினால் நீ அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை.
பரிப்பெருமாள்: தமக்குப் பயன்படாதவற்றைகேட்டாலும் சொல்லாது விடுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: தன் அரசன் பெண்டிர் முதலாயினாரைக் கேட்டார்க்குச் சொல்லாமை. இவை போல்வன சொல்லாமை வேண்டும் என்றது. சொல்லாது விடலாவது தூதனை நுமக்குப் படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினவினால் நீ அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை.
பரிதி: விரும்பாத காரியம் கேட்டாலும் சொல்லாமை நன்று என்றவாறு.
காலிங்கர்: மற்று ஆங்கும் அவ்வுரையினான் மேல் ஒரு பயன் விளைத்தல் இல்லனவற்றை அரசர் கேட்டாராயினும் தாம் சொல்லாது ஒழிக என்றவாறு.
பரிமேலழகர்: பயனிலவாயவற்றை எஞ்ஞான்றும் தானே கேட்டாலும் சொல்லாது விடுக.
பரிமேலழகர் குறிப்புரை: 'வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை' என்றும் வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்' என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.

'தமக்குப் பயன்படாதவற்றை எப்போதும் கேட்டாலும் சொல்லாது விடுக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேண்டாததைக் கேட்டாலும் சொல்லற்க', 'காரியம் அல்லாத எதையும் அரசன் கேட்டாலும் சொல்லிவிடாமல் பேச வேண்டும்', 'காரியமல்லாதவற்றை அரசன் விரும்பிக் கேட்டாலும் எப்போதுஞ் சொல்லாது ஒழிக', 'அரசர் கருமத்திற்குரியன அல்லனவற்றை எப்பொழுதும் அரசரே கேட்டாலும் சொல்லாது விடுக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பயனில்லாதவற்றைக் கேட்டாலும் எப்பொழுதும் சொல்லாது விடுக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தாம் விரும்பும் பயனுள்ளவற்றைச் சொல்லிப் பயனில்லாதவற்றைக் கேட்டாலும் எப்பொழுதும் சொல்லாது விடுக என்பது பாடலின் பொருள்.
'வினையில' என்பதன் பொருள் என்ன?

பயன்தருவன என்று கருதினால் கேட்காத போதும் சொல்லுக; பயன் தரத்தக்கதல்ல என எண்ணினால் எப்போதும் சொல்லாது விடுக

ஆட்சித்தலைவரைச் சார்ந்தவர்கள் தாம் விரும்பக்கூடிய பயனுள்ள செய்திகளை தலைவர் கேளாவிடினும் சொல்லி, பயன் தராது என்று உணர்பவற்றை அவர் கேட்டாலும் எப்பொழுதும் சொல்லாது விடுக.
சேர்ந்தொழுகுவோர் தலைவரிடம் எவற்றைச் சொல்லவேண்டும், எவற்றைச் சொல்லாது விடவேண்டும் என்பதைச் சொல்கிறது இப்பாடல். தலைவர் கேட்காவிட்டாலும், ஆட்சிக்குப் பெரும்பயன் கிடைக்கும் என்று ஒரு செயலின் மீது நம்பிக்கை இருக்குமானால் அதைத் தலைவர் கேட்காமலும் சார்ந்தொழுகுவார் சொல்லவேண்டும். இவ்வாறு பயன்தரும் செய்திகளை, தலைவர் கேட்டால் சொல்லிகொள்ளலாம் என்றிராமல், தானாக முன்வந்து சொல்லவேண்டும். அதுபோல ஒரு செய்தியால் எந்தவித பயனும் இல்லை என்று தெரிந்தால் அதுபற்றித் தலைவர் கேட்டாலும் சொல்லாமல் வழுவிவிடலாம் எனவும் சொல்கிறது பாடல்.

இக்குறளின் சொற்கிடக்கைக்கு நேரடியான பொருள் சொல்வதானால் (ஆட்சியாளர்) விரும்புவனவற்றைச் சொல்லிப் பயனில்லாதவைகளை (அவராகக்) கேட்டபோதிலும் எப்போதும் சொல்லாமல் தவிர்த்து விடவேண்டும் என்பது. தலைவர் விரும்புவனவற்றையே உடனிருப்போர் சொல்வது ஒரு நல்ல ஆட்சிக்கு அழகல்ல என்பதை எண்ணிய பரிமேலழகர் 'பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி, எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக' எனப் பொழிப்புரை தந்தார். இவர் உரைதரும் கருத்து 'இச்செயலைத் தலைவர் விரும்புவார் என்று கருதும் சேர்ந்தொழுகுவார் அதில் பெரும்பயன் உள்ளதா என்று ஆராய்ந்து அதைத் தலைவரிடம் சொல்வார்; அதுபோல், பயன் விளையாது என எண்ணினால் அச்செயல்பற்றித் தலைவர் கேட்டாலும் சொல்லவேண்டாம்' என்பது. பரிமேலழகர் பாடலிலுள்ள 'வினையில' என்றதற்கு மறுதலையான வினையுள்ளன என்பதையும் 'கேட்பினும்' என்பதால் கேளானாயினும் என்பதையும் வருவித்து முதற்பகுதிக்குப் பொருள் கூறியுள்ளார்.
தண்டபாணி தேசிகர் 'அரசன் வேட்குங்காரியங்களைச் சொல்லும்போது 'அவன் கேட்டிலனாயினும்' சொல்லி என்ற குறிப்பு ஆராய்தற்குரியது. அரசன் வேட்பனவற்றைச் சொல்லும்போது அவன் விரும்பாதிருத்தல் யாங்ஙனம்? பயனாற் பெரியன என்று ஆய்ந்து தாம் விரும்பியவற்றை அரசன் விரும்பானாயினும் பயன் கருதிச் சொல்லி, அவன் விரும்பினாலும் பயனற்றவைகளைச் சொல்லாதிருத்தலே மன்னரைச் சேர்ந்தொழுகுவார் மாண்பு எனப் பொருள்காணப் பெறின் சிறப்புடைத்தாதல் காண்க.' என்ற குறிப்பு இக்குறட்பொருளை இன்னும் தெளிவாக்குகிறது. இவர் உரை 'வேட்பன' என்பதைச் சேர்ந்தொழுகுவார் மேலதாகக் கூறிற்று.

பகைமன்னரிடம் ஒரு தூதுவன் எவ்வாறு ஒழுக வேண்டும் எனக்கொண்டு கூறுவதாக மணக்குடவர் விளக்குவார். மன்னரைச் சேர்ந்தொழுகுவார்க்கு அவர் இல்லறச் செய்திகளும் அறிய வாய்ப்புண்டு; ஆதலால் அவற்றைப் பிறர் கேட்கும் பொழுது மன்னரைச் சேர்ந்தொழுகுவார் கூறுதலாகாது என விளக்குவர் பரிப்பெருமாள். ‘கேட்பினும்‘ என்பதற்குத் தன்னரசன் கேட்பினும் எனப் பரிமேலழகரும் வேற்றரசர் கேட்பினும் என மணக்குடவரும் பிறர் கேட்பினும் எனப் பரிப்பெருமாளும் பொருளுரைக்கின்றனர்.

'வினையில' என்பதன் பொருள் என்ன?

'வினையில' என்றதற்குப் பயன்படாதவற்றை, ஒரு பயன் விளைத்தல் இல்லனவற்றை, பயனிலவாயவற்றை, பயனில்லாதவற்றை, வேண்டிய காரியங்களல்லாத பயனற்றவற்றை, பயனற்றவற்றை, வேண்டாததை, பயன் விளைக்காதவற்றை, காரியம் அல்லாத எதையும், பயனில்லாதவற்றை, காரியமல்லாதவற்றை, கருமத்திற்குரியன அல்லனவற்றை, பயனற்ற செய்திகளை, வினைக்குதவாத வீண் செய்திகளை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'வினையில' என்பதற்கு நேர்பொருள் 'செயல்அல்லாத' என்பது. இதற்கு உரையளர்கள் 'பயனில்லாதவற்றை' அதாவது செயலாம் வரும் பயன் இல்லாதவற்றை என்று பொருள் கூறுவர். தேவநேயப்பாவாணர் 'வினைக்கு உதவாத செய்திகள்' என்கிறார். இங்குப் பயன் வினையால் வருவது ஆதலால்.வினை என்ற சொல்லுக்குப் 'பயன்' என்ற பொருள் எழுந்தது. 'வினையில' என்றமையால் பயன் உண்டாயின் சொல்லுக என்பது கருத்து.

'வினையில' என்றதற்கு விளக்கமாக 'அரசற்குப் படை எவ்வளவு என்று பகைமன்னன் கேட்டால்' என்று கூறுவார் மணக்குடவர். இதன் கருத்து அரசன் தன்னைத் தூதனுப்பிய நோக்கந்தவிர, தனக்குரிய தொழிலல்லாத படை எவ்வளவு? பொருணிலை என்ன? என்பன போன்ற தொடர்பற்ற செய்திகளைக் கேட்டால் சொல்லற்க என்பதாம். பரிப்பெருமாள் 'தன் அரசன், பெண்டிர் முதலாயினரைக் கேட்டார்க்குச் சொல்லாமை. இவை போல்வன சொல்லாமை வேண்டும்' என விளக்கம் தருவார்.

பழைய (உ வே சா) உரையாது 'விளைவில' என்னும் பாடமும் ஏற்கத்தக்கதே. விளைவில என்பது 'பயன் விளைவிலாத' என்ற பொருள் தருவது.

'வினையில' என்றது செயலுக்குரியன அல்லனவற்றை என்ற பொருள் தரும்.

விரும்புவனவற்றைச் சொல்லிப் பயனில்லாதவற்றைக் கேட்டாலும் எப்பொழுதும் சொல்லாது விடுக என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பயன் உள்ளனவற்றை மட்டும் சொல்வதே மன்னரைச்சேர்ந்தொழுகல் மாண்பு.

பொழிப்பு

தாம் விரும்பும் பயன் விளைக்கும் செயல்களைத் தலைவர் கேட்காவிடினும் கூறி, பயன் தராதனவற்றை அவரே கேட்டாலும் எப்பொழுதும் சொல்லாது விடுக.