இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0700பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்

(அதிகாரம்:மன்னரைச்சேர்ந்தொழுகல் குறள் எண்:700)

பொழிப்பு (மு வரதராசன்): யாம் அரசர்க்குப் பழைமையானவராய் உள்ளோம் எனக் கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத் தரும்.

மணக்குடவர் உரை: யாம் பழைமையுடையோ மென்று கருதி இயல்பல்லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை தமக்குக் கேட்டைத்தரும்.
இது பின் பகையானவற்றைத் தவிரல் வேண்டும்மென்றது.

பரிமேலழகர் உரை: பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை - அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் - அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும்.
(அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வெளவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும், பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: அரசனுக்கு நாம் நெடுநாளைய நண்பராயிற்றே என்று எண்ணிக் கொண்டு முறை தவறி நடந்து கொள்ளும் உரிமை கெடுதியுண்டாக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்.

பதவுரை: பழையம்-முன்பிருந்தே தொடர்புடையோம்; என-என்று கருதி-எண்ணி; பண்பு-இயல்பு; அல்ல-ஆகாதவைகள்; செய்யும்-செய்யும்; கெழுதகைமை-நட்புரிமை, நட்பு கொள்ளும் தன்மை; கேடு-அழிவு; தரும்-பயக்கும்.


பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாம் பழைமையுடையோ மென்று கருதி இயல்பல்லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை;
பரிப்பெருமாள்: யாம் பழையம் என்று கருதி இயல்பல்லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை;
பரிதி: அரசற்குப் பழையோம் என்று பண்பல்லாத காரியம் செய்தால்;
காலிங்கர்: அரசர்க்கு நாம் பழையர் எனக்கருதி யாதானும் ஒன்று காரணமாக அரசர்மாட்டுத் தாம் ஒழுகும் பண்பிற்கு உரிய அல்லனவற்றைச் செய்யக் கருதும் கெழுதல் தன்மையானது;[கெழுதல் தன்மை - நட்பு கொள்ளும் தன்மை]
பரிமேலழகர்: அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை;

'அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பழக்கம் என்று பண்பில்லாதபடி நடந்தால் அந்த நட்புரிமை', 'அரசருக்கு நெடுநாள் உறவுடையோம் என்றெண்ணி இயல்பல்லாத செயல்களைச் செய்யும் உரிமை ஒருவர்க்கு', 'அரசரிடம் பழைமை பாராட்டித் தாஞ் செய்யத் தகாதனவற்றைச் செய்து உரிமை கொண்டாடுதல்', 'அரசியலில் முதிர்ந்த பயிற்சியுடையோம் என்று கருதி இழிந்தனவற்றைச் செய்யும் உரிமை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆட்சித்தலைவரிடம் முன்பே பழகியவன் என்று பண்பற்றவற்றைச் செய்யும் உரிமை என்பது இப்பகுதியின் பொருள்.

கேடு தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்குக் கேட்டைத்தரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பின் பகையானவற்றைத் தவிரல் வேண்டும்மென்றது.
பரிப்பெருமாள்: தனக்குக் கேட்டைத்தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இயற்கையல்லாதன தவிரல் வேண்டும்மென்றது.
பரிதி: கேடு வரும் என்றவாறு.
காலிங்கர்: கேட்டினைத் தரும்.
காலிங்கர் குறிப்புரை: எனவே என்றும் அரசர்மாட்டு அஞ்சி ஒழுகுதல் கடன் என்பது பொருள் ஆயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வெளவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும், பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.

'தனக்குக் கேட்டைத்தரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேடு விளைக்கும்', 'கேட்டினைத் தரும்', 'கேட்டினைப் பயத்தல் கூடும்', 'கேட்டினைத் தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கேட்டினை விளைக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆட்சித்தலைவரிடம் முன்பே பழகியவன் என்று பண்பற்றவற்றைச் செய்யும் உரிமை கேட்டினை விளைக்கும் என்பது பாடலின் பொருள்.
'பழையம்' என்றால் என்ன?

தலைவர் தன் நெடுங்கால நண்பர் என்ற உரிமையில் தகாதன செய்யக்கூடாது.

'நீண்டகாலமாக நெருக்கமாகப் பழகியவர்கள்' என்ற நட்புரிமையில் சேர்ந்தொழுகுவார் பண்பற்றவற்றைச் செய்தல் ஆட்சியின் மாண்புக்குத் தீங்கு தரும்.
முன்பிருந்தே தனக்கு நல்ல நண்பன் என்பதற்காக ஆட்சித்தலைவன் அவனுக்குச் சமநிலை தரலாம். ஆனால் அதுவே ஆட்சியின் மாட்சிக்கு ஊறு விளைவிக்கக் காரணம் ஆகி விடக்கூடாது.
வயதில் மூத்தவன், உறவுமுறையினன், பாராட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டவன் என எண்ணிக்கொண்டு தலைவனை அவமதிக்கவோ, விரும்பத்தாகாதனவற்றைச் செய்யவோ கூடாது என்று இதற்கு முந்தைய குறள்களில் சொல்லப்பட்டது. அந்த வரிசையில் இங்கு பழைமை என்ற உரிமை காரணமாக ஆட்சிக்கு இழிவு தரும் பண்பற்றன செய்தல் ஆகாது எனக் கூறப்படுகிறது.

பழையம் யாம் எனப் பண்பு அல செய்வரோ? பருணிதர் பயன் ஓர்வார் (கம்பராமாயணம், சுந்தர காண்டம், ஊர்த் தேடு படலம் 5139-4 பொருள்: தம் வேலையால் தமக்கு வரும் பயனை ஆராய்ந்து அறிந்த அறிவாளிகள், நாம் நெடுநாள் பழக்கம் உடையேம் என்று பண்புக்குப் பொருந்தாதவற்றைச் செய்வார்களோ?) எனக் கம்பரும் இக்குறட் கருத்து புலப்பட அமைந்த செய்யுளில் இப்பாடலிலுள்ள பழையம், பண்புஅல என்ற சொற்களைப் பயன்படுத்தினார்.

'பழையம்' என்றால் என்ன?

'பழையம்' என்றதற்குப் பழைமையுடையோம், பழையோம், பழையர், பழைமையானவராய் உள்ளோம், நீண்ட நாளாகப் பழக்கமுடையோம், பழகிய பழக்கம் உடையோம், பழக்கம், நெடுநாள் உறவுடையோம், நாம் நெடுநாளைய நண்பராயிற்றே, பழமையான தொடர்பு உடையேம், பழைமை, முதிர்ந்த பயிற்சியுடையோம், மிகவும் பழைமையானவராய் உள்ளோம், நெடுங்காலம் பழக்கமுடையவன், இளமையிலிருந்தே யாம் பழகினேம், நீண்ட காலத் தொடர்பு உடையோம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மு கோவிந்தசாமி 'பெரிய அரசியற் பதவியில் இருப்பவர்கட்கெல்லாம் செல்வாக்கும் உடையேம்' என்றும் 'அந்நாட்டின் பழைய குடிகள் என்னும் உரிமை' என்றும் உரைத்தார். 'பழையம்' என்பதற்கு அரசியலில் முதிர்ந்த பயிற்சியுடையோம் எனப் பொருள் கூறினார் சி இலக்குவனார். தேவநேயப் பாவாணர் 'பழைமையாவது விளையாட்டுத் தோழமையும் கல்வித் தோழமையும்' எனக் குறித்தார்.
ஆட்சித்தலைவருடனான நெடுங்காலத் தொடர்பால் உண்டான உரிமையையே அனைத்து உரையாசிரியர்களும் கருதினர்.

'பழையம்' என்ற சொல்லுக்கு நெடுநாள் உறவுடையோம் என்ற பொருள் பொருத்தம்.

ஆட்சித்தலைவரிடம் முன்பே பழகியவன் என்று பண்பற்றவற்றைச் செய்யும் உரிமை கேட்டினை விளைக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பழைய நண்பன் என்று மிகைப்பட்ட உரிமையுணர்வு கொண்டு மன்னரைச்சேர்ந்தொழுகல் கூடாது.

பொழிப்பு

பழைய பழக்கத்தின் உரிமையில் பண்பில்லாமல் நடந்தால் கேடு விளையும்.