இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0693



போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது

(அதிகாரம்:மன்னரைச்சேர்ந்தொழுகல் குறள் எண்:693)

பொழிப்பு (மு வரதராசன்): (அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக்கொள்ள விரும்பினால், அரிய தவறுகள் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்; ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.

மணக்குடவர் உரை: காப்பின், காத்தற்கு அரியனவற்றைக் காப்பாற்றுக: ஐயப்பட்ட பின்பு தெளிவித்தல் யாவர்க்கும் அரிது.
இஃது அடுத்தொன்று சொல்லாம லொழுகவேண்டும்மென்றது.

பரிமேலழகர் உரை: போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான்.
(அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வெளவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: அரசர்களோடு அல்லது மேலாண்மையரோடு பழகுவார் தம்மைக் காத்துக்கொள்ளக் கருதினால், அரிய பிழைகள் எவையும் தம்மிடம் வராமல் காக்கவேண்டும். ஏன் எனில், அரசர்கட்கு ஒருமுறை ஐயம் ஏற்பட்டுவிட்டால், பிறகு அவர்களை அவ் ஐயம் தீர்த்து நம்பவைத்தல் யாராலும் இயலாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது.

பதவுரை: போற்றின்-காக்கக் கருதினால்; அரியவை-அரியன; போற்றல்-காக்க; கடுத்தபின்-ஐயுற்றபிறகு; தேற்றுதல்-தெளிவித்தல்; யார்க்கும்-எவருக்கும்; அரிது-அருமையானது.


போற்றின் அரியவை போற்றல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காப்பின், காத்தற்கு அரியனவற்றைக் காப்பாற்றுக:
பரிப்பெருமாள்: காப்பானாயின், காத்தற்கு அரியனவற்றைக் காக்க:
பரிதி: இராசாவின் உறவு அருமை; நெறிமுறைமையிலே ராசசேவை பண்ணுக;
காலிங்கர்: அரசர்மாட்டுக் குறிக்கொண்டு ஒழுக நினைப்பின் கீழ்ச்சொல்லிப் போந்தவையும் பிறவும் ஆகிய அரியனவற்றைக் குறிக்கொண்டு நெறியின் ஒழுகுக; [கீழ்ச்சொல்லிப் போந்தவை - கீழே குறித்தவை]
பரிமேலழகர்: அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க;
பரிமேலழகர் குறிப்புரை: அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வெளவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல் [அரிய பிழை - பெரிய பிழை; அறைபோதல் -கீழறுத்துச் செல்லுதல் அஃதாவது அமைச்சன் தன் பிழையாகாதவாறு மறுத்து அரசர்க்குத் தீமை செய்தலும் மறைவெளிப்படுத்தலும்; உரிமையோடு மருவல் - ஆட்சித்தலைவர்க்குரிய பெண்களோடு கலத்தல்; அரும்பொருள் வெளவல்- அரசுக்கு உரிய அரிய பொருள்களைக் கவருதல்]

'காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெருங்குற்றம் வாராதபடி காத்துக் கொள்க', 'அமைச்சர் தம்மைக் காத்துக் கொள்ள நினைத்தால் தம்மிடம் அரிய தவறுகள் வாராதவாறு காத்துக் கொள்க', 'அடக்கிக் கொள்வதற்குக் கடினமான பழக்கங்களையும் அடக்கி எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்', 'தம்மைக் காத்துக்கொள்ளக் கருதினால் செய்யக் கூடாத குற்றங்கள் தம்மிடம் நிகழாமல் காத்துக்கொள்ள வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காத்துக்கொள்ளக் கருதினால் பெருங்குற்றம் தம்மிடம் நிகழாதவாறு காத்துக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஐயப்பட்ட பின்பு தெளிவித்தல் யாவர்க்கும் அரிது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அடுத்தொன்று சொல்லாம லொழுகவேண்டும்மென்றது.
பரிப்பெருமாள்: குற்றமுண்டு என்று ஐயப்பட்டபின்பு தெளிவித்தல் யாவர்க்கும் அரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: அடுத்தொன்று சொல்லாமல் ஒழுகவேண்டும்மென்றது. அது பெரும்பான்மையும் பெண்டிர்மாட்டே வரும்.
பரிதி: அரசன் மனஞ்சலித்தால் தேற்ற முடியாது என்றவாறு.
காலிங்கர்: என்னை எனின் அவற்றுள் ஒன்றினான் அரசர் முகம் கடுத்தபின் அவரைத் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது; எனவே உயிர்க்கேடும் பொருட்கேடுமாய் விடும் என்பது பொருள் ஆயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.

ஐயப்பட்ட பின்பு/முகம் கடுத்தபின்/ஐயுற்றால் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசர் ஐயப்படின் தெளிவித்தல் முடியாது', 'அரசர் ஐயுற்றால் பின்னர் அவரைத் தெளிவுபடுத்தல் எவர்க்கும் அரியதாம்', 'அல்லாமல் (மன்னர்) சந்தேகப்படும்படி நடந்து கொண்டால் (அதனால் அரசனுக்குண்டாகும் கோபத்தை) மாற்றுவது யாராலும் முடியாது', 'அரசர் ஐயுற்றால் அவரைத் தெளிவித்தல் யாராலும் முடியாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆட்சித்தலைவர் ஐயுற்றால் அவரைத் தெளிவுபடுத்தல் யாராலும் முடியாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காத்துக்கொள்ளக் கருதினால் அரியவை தம்மிடம் நிகழாதவாறு காத்துக் கொள்க; ஆட்சித்தலைவர் ஐயுற்றால் அவரைத் தெளிவுபடுத்தல் யாராலும் முடியாது என்பது பாடலின் பொருள்.
இங்கு சொல்லப்பட்டுள்ள 'அரியவை' எவை?

அரசியல் மேலடுக்கில் உள்ளோர் கடுங்குற்றங்கள் நிகழாமல் தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்; ஐயம் உண்டானால் தப்புதல் அரிது.

ஆட்சித்தலைவரைச் சேர்ந்தொழுகுவோர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் பெரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும்; அத்தகைய பிழைகள் நேர்ந்தனவாக அவன் ஐயுற்றானானால் அதனின்று அவனைத் தெளிவித்தல் எவராலும் முடியாததாகிவிடும்.
தலைவரைச் சுற்றியுள்ளவர்கள் பெரும் பிழைகள் நேர்ந்துவிடாதவாறு விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தலைவருக்கு நெருக்கம் என்பதில் நன்மைகள் பல உண்டு என்றாலும் அது எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் இடமுமாகும். எனவே எந்தவிதமான ஐயத்துக்கும் இடம் கொடாமல் பிழைகள் வந்து தம்மை அணுகாத வண்ணம் அங்கு ஒழுகிச் சார்ந்தோர் தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். ஒரு தடவை தலைவருக்கு ஐயம் எழுந்துவிட்டால், அவரது ஐயத்தைத் தெளிவித்து இழந்த நம்பிக்கையை பெறுவது மிகவும் கடினம். குற்றம் நிகழவில்லையென்றாலும், ஆட்சித்தலைவனின் ஐயத்தை விலக்குவது யாருக்குமே இயலாது.
ஆட்சித்தலைவர் என்பது நாடாளும் தலைவர் மட்டுமல்லாது பெரிய நிறுவனங்களை நிர்வகிக்கும் தலைவர்க்கும்/மேலாளர்க்கும் பொருந்துவதாக உள்ளது.

சிறுசிறு தவறுகள் ஏற்படுவது எவ்விடத்திலும் இயல்பாதலால் அதை யாரும் பொறுத்துக் கொள்வர். ஆனால் பெரிய குற்றம் நேர்ந்துவிட்டால் எந்தத் தலைவரும் பொறுக்க மாட்டார். ஒருமுறை ஐயம் உண்டாகிவிட்டால் ஐயப்பட்டார் மீதிருந்த நம்பிக்கை குறைந்து. அவரைப் பார்க்கும்போதெல்லாம் அந்த ஐயமே சிந்தையில் தோன்றும். இதனைப் பரிமேலழகர். 'கடன் கொண்டான் தோன்றக் கடன் தோற்றுமாறு போல ஐயப்பட்டார் தோன்றும்போதெல்லாம் பிழைகளே நினைவுக்கு வரும்' என எடுத்துக்காட்டினால் விளக்குகிறார். தனது நேர்மை, பற்று ஆகியவற்றில் தலைவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை எப்பொழுதும் இருக்குமாறு ஒழுகி தன்மேல் எந்தவித ஐயமும் வராமல் சேர்ந்தொழுகுவார் பார்த்துக்கொள்ள வேண்டும்

இப்பாடலிலுள்ள 'கடுத்த' என்ற சொல்லுக்கு சினந்த என்றும் ஐயப்பட்டு என்றும் பொருள் கூறுவர். பின்னர்த் தேற்றுதல் அதாவது தெளிவித்தல் கடினம் எனவும் சொல்லப்பட்டதால் ஐயப்பட்டு என்பதே பொருத்தமாகிறது. 'கடுத்தபின்' என்ற தொடர்க்கு ஐயுற்றால் என்றும் ஐயுற்றபின் எனவும் உரை கூறினர். 'கற்றபின் நிற்க' (391) எனும் குறள்நடையை ஒப்ப இருப்பதால் ஐயுற்றால் என்ற பொருள் சிறந்தது என்பர். இத்தொடர்க்கு ஐயுற்றுச் சினந்தால் எனவும் பொருள் கூறியுள்ளனர்.

இங்கு சொல்லப்பட்டுள்ள 'அரியவை' எவை?

இப்பாடலில் சொல்லப்பட்ட 'அரியவை' என்றதற்குப் பெருங்குற்றங்கள் அல்லது பிழைகள் என்று அனைவரும் பொருள் கூறினர்.
'அரியவை' என்பதற்குப் பரிமேலழகர் ஆட்சித்தலைவரால் பொறுத்தற்கரிய பிழைகள் என விளக்கம் கூறி அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வெளவல் என்றிவை முதலாயின என உரை வரைந்தார். அறைபோதல் என்பது கீழறுத்துச் செல்லுதல் அதாவது சேர்ந்தொழுகும்போதே பகைவருடன் சேர்ந்து தலைவர்க்குத் தீமை செய்தலையும் மறைவெளிப்படுத்தலையும் குறிக்கும். உரிமையோடு மருவல் என்பது தலைவர்க்குரிய பெண்களோடு கூடுதலைச் சொல்வது. அரும்பொருள் வெளவல் என்பது அரசுக்கு உரிய அரிய பொருள்களைக் களவாடுதலாம்.
நாமக்கல் இராமலிங்கம் அரியவை என்பது பெரிய பிழைகள் அல்ல; அடக்க இயலாத சிறுசிறு கெட்ட பழக்கங்கள் எனச் சொல்லி அவை பொடி போடுதல், கண்ணடித்தல், கைகொட்டி ஆரவாரித்தல் போல்வன; இவற்றை அரசர்க்கு முன் அடக்குக என விளக்கினார். இவர் கூறுவனவற்றுள் தலைவரைத் தெளிவுபடுத்தமுடியாதனவாக ஏதும் இல்லையாதலால் சிறக்கவில்லை.

காத்துக்கொள்ளக் கருதினால் பெருங்குற்றம் தம்மிடம் நிகழாதவாறு காத்துக் கொள்க; ஆட்சித்தலைவர் ஐயுற்றால் அவரைத் தெளிவுபடுத்தல் யாராலும் முடியாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஐயத்துக்கு அப்பாற்பட்டு மன்னரைச்சேர்ந்தொழுகல் வேண்டும்.

பொழிப்பு

காத்துக் கொள்ள நினைத்தால் பெருங்குற்றம் தம்மிடம் நேராதபடி காத்துக் கொள்க; ஆட்சித் தலைவர் ஐயுற்றால் அவரைத் தெளிவித்தல் யாராலும் முடியாது.