இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0571 குறள் திறன்-0572 குறள் திறன்-0573 குறள் திறன்-0574 குறள் திறன்-0575
குறள் திறன்-0576 குறள் திறன்-0577 குறள் திறன்-0578 குறள் திறன்-0579 குறள் திறன்-0580

தண்டிக்கவேண்டிய சமயங்களில் சிறுது கருணை காட்டுதலும் இரக்கவுணர்வும் தயவு செய்தலும் கண்ணோட்டமெனப்படும். மனம் நெகிழ்தலைக் கண்காட்டும்போது, கண்ணோட்டம் என்ற மெய்ப்பாடு உளதாகிறது.
- தமிழண்ணல்

கண்ணோட்டம் என்பது பிறரது துயரம்கண்டு இரங்கும் பண்பையும் பிறர் குற்றத்தை மன்னிக்கும் பெருந்தன்மையையும் குறிப்பதாகும். காணப்பட்டார் மேல் கண் ஓடியவிடத்து இவை உண்டாவதால் கண்ணோட்டம் எனப் பெயர் ஆயிற்று. கொடுங்கோன்மையும், வெருவந்த செய்தலும் நாட்டைக் கெடுத்துக் காடாக்கும்; வெறும் 'சட்ட ஆட்சி'யாக மட்டும் இல்லாமல் மனிதாபிமான முறையிலும் நாடு ஆளப்படவேண்டும் என்பதை வலியுறுத்த அவ்வதிகாரங்களை அடுத்துக் கண்ணோட்டம் வைக்கப்பட்டது. எனினும் இவ்வதிகாரம் நாடாள்வோர்க்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் பொருந்துவதாகும்.

கண்ணோட்டம்

கண்ணோட்டம் என்ற சொல் இரக்கம் காட்டுதல் என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. அது கண்ணின் வழியாக அன்பைச் செலுத்துதல் என்ற பொருளில் நின்றது. கண் என்ற சொல் இரக்கம் என்ற பொருளிலும் குறளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது - கண் நின்று கண் அறச் சொல்லினும்... (புறங்கூறாமை குறள்184) என்னும் பாடலில் உள்ள 'கண் அற' என்ற தொடர் 'இரக்கம் இல்லாமல்' என்ற பொருளில் வந்தது. கண்ணோட்டம் அதிகாரத்தில் ஒரு குறள் தவிர்த்து ஒன்பது குறட்பாக்களில் கண் என்னும் சொல்லும் கண்ணோட்டம் எனும் தொடரும் பொதிந்து நிற்கின்றன.

கண்ணோட்டம் என்பது அன்பும், இரக்கமும் கொண்ட கண்ணின், உயிரோடு பிணைந்த, பண்பைக் குறிக்கும். துன்புற்ற ஒருவரைக் காணும்போது மனம் இளகி அவர்கள் துன்பத்தைக் களைதலையும் குற்றஞ் செய்த ஒருவர்பால் இயல்பாக இரங்கிக் குற்றத்தைப் பொறுத்தலையும், கண்ணோட்டம் எனக் கொள்வர். நிலநடுக்கம், ஆழிப்பேரலை, மழைவெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் எந்த நாட்டிற்கு ஏற்படினும் அவை உண்டாக்கும் துயரங்களைப் பார்த்து உலக நாடுகள் உதவுவதற்கு ஓடோடி வருவது கண்ணோட்டத்தினால்தான். சாலையோர விபத்தில் துடிக்கும் உயிர்களைக் காணும்போது பொறுக்காத மனமும், உதவத் துடிக்கும் கைகளும் இயங்குவது இரக்கம் என்கிற கண்ணோட்டம் காரணமாகத்தான். ஒப்புரவு செய்தல் (பிறருக்கு உதவுதல்), புறந்தருதல் (பாதுகாக்கப்படுதல்) தவறிழைத்தாற் பொறுத்தல் ஆகிய உலகத்து உயிர்களது நடை இரக்கப் பண்பில் அமைவது.
இந்தப் பண்பு தனி மனிதருக்கும் தேவை. சமுதாய அளவிலும் தேவையான ஒன்றாகும். சமுதாய வாழ்வில் நாடாள்வோன் முதல் அனைவரும் கண்ணின் வழியாக அன்பைச் செலுத்தி வாழவேண்டும். மக்கள் குற்றத்தின் நீங்கியும் குற்றத்தை நீக்கியும் வாழவேண்டும் என்னும் முயற்சியுடையோராகவே இருப்பர். முயற்சி எவ்வளவினதாயினும் குற்றம் ஓரொரு வேளை நிகழ்தல் கூடும். அவ்வாறு நேர்ந்துவிட்டால் மன்னிக்கத்தக்கவற்றை மன்னிக்க வேண்டும் பண்பு அனைவர்க்கும் வேண்டும் என்பதை வற்புறுத்துவதே கண்ணோட்டமாகும். பரிப்பெருமாள் என்ற உரையாசிரியர் 'இது உலகத்தார் பலர் ஆதலால் குற்றம் செய்வார் மிகுந்திருப்பர். அதற்கெல்லாம் தண்டம் செய்யின் உலகம் என்பது ஒன்று இல்லையாம். அதற்காகப் பொறுக்க வேண்டுவன பொறுக்க வேண்டும்' (குறள் 571 உரை) என்று மன்னிக்கும் குணத்தைக் கண்ணோட்டம் குறிப்பதாகச் சொல்வார்.

மு வரதராசனின் (மு வ) 'கண்ணோட்டம் என்ற பண்பு இல்லையானால், ஒருவரை ஒருவர் சீறுவதும் சிதைப்பதுமே வாழ்க்கையாக இருக்கும். புலியும் மற்ற கொடிய விலங்குகளும் வாழும் காடுபோல நாடும் மாறித்தோன்றும். ஆகையால் உலகத்தில் சமுதாய அமைப்பிற்குக் கண்ணோட்டம் அடிப்படையாக இருக்கின்றது. ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வையிலே உள்ளத்தில் நெகிழ்ச்சி புலப்படும். அந்தக் கண் பார்வையால்தான் அன்பு கொண்டு பழக முடிகின்றது. மக்களுக்குப் பிறவியிலேயே இந்தக் கண்ணோட்டம் அமைந்திருக்கின்றது. அதனாலேயே மக்கள் நூற்றுக்கணக்காகவும் நூறாயிரக்கணக்காகவும் சேர்ந்து பழகவும் கூடி வாழவும் முடிகின்றது. மான் முயல் முதலான மற்றத் தீமை அற்ற உயிர்கள் எவ்வளவோ அழிவுகளுக்கு இடையிலும் பெருகி வாழ்ந்து வருகின்றன; இருபது முப்பதாகக் கூடி வாழ்கின்றன; கவலையில்லாமல் காற்றிலும் ஒளியிலும் கலந்து விளையாடி வருகின்றன; புலிகளைப் போல் குகைகளிலும் கற்பாறைகளிடையிலும் ஒதுங்கிப் பதுங்கிப் பகலில் வெளிவர அஞ்சி அடைபட்டுக் கிடப்பதில்லை; வெட்ட வெளியில் வாழ்ந்து மகிழ்கின்றன; மக்கள் வாழ்க்கையும் இப்படித்தான். பிறரோடு பழகிப்பழகி கண்ணோட்டம் உடையவர்களாய் இயைந்து வாழ்வதே மக்கட்பண்பு. அதனால்தான் நூறாயிரக்கணக்காகக் கூடி வாழ்வதும் பெரிய பெரிய சமுதாயம் அமைத்து வாழ்வதும் இயல்வனவாக உள்ளன' என்ற விளக்கம் கண்ணோட்டம் என்ற சொல்லின் பொருளை நன்கு தெளிவுபடுத்துகிறது.

கண்ணோட்டம் என்பதற்குப் 'பழகினவரைக் கண்டால் அவர் சொல்வதை மறுக்க முடியாமை' என்று பல உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர். பழகியவர் பற்றியும் அவர் சொல் மறுக்கமுடியாமை பற்றியும் இவ்வதிகாரப் பாடல்களில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. பெயக்கண்டு ... (குறள் 580) எனத் தொடங்கும் பாடற்பொருளின் அடிப்படையில் உரையாளர்கள் அவ்விதம் கூறினர் போலும். மற்ற எல்லாப் பாடல்களிலும் இரக்கப்படுதல் என்ற பொருளிலேயே கண்ணோட்டம் என்ற சொல் ஆளப்பட்டது. அதுவே சரியான பொருள்.

கண்ணோட்டம் அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 571ஆம் குறள் இரக்கம் என்று சொல்லப்படுகின்ற பேரழகு இருப்பதனால் இவ்வுலகம் இருக்கின்றது என்கிறது.
  • 572ஆம் குறள் உலக இயக்கம் கண்ணோட்டத்தில் நிகழ்கிறது; அப்பண்பு இல்லாதார் உள்ளமை நிலத்திற்குச் சுமையாகும் எனக் கூறுவது.
  • 573ஆம் குறள் பாட்டுக்குப் பொருந்தாவிடில் இசை என்று சொல்லோம்; இரக்கமில்லாத இடத்து கண் என்னத்துக்கு? எனக் கேட்கிறது.
  • 574ஆம் குறள் இரக்கத்தின் அளவறிந்து ஓடாத கண்கள் முகத்தில் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்? என வினவுகிறது.
  • 575ஆம் குறள் கண்ணிற்கு அணியாய் உள்ளது கண்ணோட்டம்; அது இல்லையானால் கண் புண்ணென்று கொள்ளப்படும் எனக் கூறுகிறது.
  • 576ஆம் குறள் கண்ணிருந்தும் இரக்கம் காட்டாதவர் மண்ணோடு பொருந்திய மரத்தினை ஒப்பர் என்கிறது.
  • 577ஆம் குறள் இரக்க உணர்வு இல்லாதவர் கண் இல்லாதவர்; கண்ணைப் பெற்றிருப்பவர் கண்ணோட்டம் இல்லாமலும் இருக்கமாட்டார்கள் என்பதைச் சொல்கிறது.
  • 578ஆம் குறள் செயற்பாடு கெடாமல் இரக்கம் காட்ட வல்லவர்களுக்கு உரியது இவ்வுலகம் என்கிறது.
  • 579ஆம் குறள் தண்டிக்கும் வலிமை உடையவர்க்கும், இரக்கம் காட்டிப் பொறுத்து நல்வழிப்படுத்தும் குணமே தலையாயது எனக் கூறுகிறது.
  • 580ஆவது குறள் யாவரும் விரும்பக்கூடிய நாகரிகத்தை வேண்டுபவர் நஞ்சு ஊற்றிக் கொடுத்தலை நேரில் கண்டும் அதை உண்டு அமைதியுறுவர் என்கிறது.

கண்ணோட்டம் அதிகாரச் சிறப்பியல்புகள்

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டு இவ்வுலகு(குறள் 571) என்ற பாடலில் கண்ணோட்டம் என்ற பண்பையே பேரழகு எனப் புனைந்து உரைக்கப்படுகிறது. அதை அழகு என்று சொல்ல எண்ணி அழகிய பெண் என்கிறார் வள்ளுவர். பின் பெரும் அழகு எனக் கூட்டிச் சொல்கிறார். அப்படியும் அவர்க்கு நிறைவு உண்டாகவில்லை. கழி பேரழகு எனக் குறிக்கிறார். அழகு என்ற ஒரு சொல்லே இங்கு போதுமானது. ஆனாலும் உண்டாலம்ம உலகு என்ற அழுத்தமான கருத்துக்கு ஏற்ப கழி, பெரும் என்ற இரண்டு அடைகள் அழகுக்குக் கொடுத்து பாடலைச் செழுமையாக்குகிறார்.

செங்கோன்மையில் ஓர்ந்து கண்ணோடாது யார் மாட்டும் தெரிந்து செய்வதே முறை (குறள் 541) என்று கண்ணோட்டம் இன்றி நடுநிலையில் இயங்குக என்று அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. கண்ணோட்டம் பற்றிய இவ்வதிகாரத்தில் கருமஞ்சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமையுடைத்திவ்வுலகு (578) என்றும் அளவினாற் கண்ணோடுக... (574) எனக் கூறப்படுகிறது. இவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவை முரண்கள் அல்ல. செங்கோன்மையிற் கூறியது நீதித்துறையில் நடுநிலை தவறாதிருக்க. இங்கு கூறியது அரசாட்சிக்குக் கேடு வராமல் இருப்பதற்காகவும் கொடுங்கோலனாகாமல் தடுப்பதற்காகவும் ஆகும்.

பார்க்கும் ஆற்றல் உள்ளவர்கள் அனைவருக்கும் உள்ளத்தில் ஈரம் உண்டு; அது கண் வழி கண்ணோட்டமாக வெளிப்படும் என்பதை முழுமையாக நம்புகிறார் வள்ளுவர். கண் என்ற ஒன்று ஒருவரிடம் இருந்தால் அவரிடம் கண்ணோட்டம் உறுதியாக உண்டு என்ற பொருளில் .....கண்உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்(குறள் 577) எனச் சொல்கிறார்.
குறள் திறன்-0571 குறள் திறன்-0572 குறள் திறன்-0573 குறள் திறன்-0574 குறள் திறன்-0575
குறள் திறன்-0576 குறள் திறன்-0577 குறள் திறன்-0578 குறள் திறன்-0579 குறள் திறன்-0580