உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்
(அதிகாரம்:கண்ணோட்டம்
குறள் எண்:574)
பொழிப்பு: தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்?
|
மணக்குடவர் உரை:
அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண்கள், முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்?
அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படாதென்றது.
பரிமேலழகர் உரை:
முகத்து உளபோல் எவன் செய்யும் - கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் - அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்.
('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.)
இரா சாரங்கபாணி உரை:
செயல்முறை கெடாமல் அளவோடு இரக்கம் காட்டாத கண்கள் ஒருவர் முகத்தில் இருப்பனபோல் தோன்றுதல் அல்லது வேறென்ன பயனைச் செய்யும்?
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் உளபோல் முகத்துஎவன் செய்யும்.
|
உளபோல் முகத்துஎவன் செய்யும்:
பதவுரை: உள-இருக்கின்றவை; போல்-நிகராக; முகத்து-முகத்தின் கண்; எவன்-என்ன பயன்?; செய்யும்-செய்யும்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்?
பரிப்பெருமாள்: முகத்து உள் போன்று தனக்கு என்ன பயனைச் செய்யும்?
பரிதி: முகத்திலே இரண்டுகண் என்று இருந்தால்;
காலிங்கர்: முகத்து உளபோலத் தோன்றி அங்ஙனம் வரும் பொருட்களைக் கண்டதேயாயினும் அதனால் என்ன பயன்;
பரிமேலழகர்: கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன.
'முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முகத்தில் இருப்பதுபோல் காட்டுவது எதற்கு?', 'முகத்தில் இருப்பது போல் இருந்து என்ன பயன்?', 'முகத்தில் உள்ளதுபோலத் தோன்றுவதல்லது வேறு என்ன நன்மையைச் செய்யும்?', 'கண்டார்க்கு முகத்தில் உளபோல் தோன்றுவன அல்லாமல் வேறு என்ன பயனைச் செய்யும்? ஒன்றுமில்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
முகத்தில் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்? என்பது இப்பகுதியின் பொருள்.
அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்:
பதவுரை: அளவினால்-வரையறை யோடுகூடிய; கண்ணோட்டம்-இரக்கம்; இல்லாத-இல்லாத; கண்-விழி.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண்கள்,
மணக்குடவர் குறிப்புரை: அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படாதென்றது.
பரிப்பெருமாள்: அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படாதென்றது.
பரிதி: ஆரளவிலும் கிருபைப் பார்வை இல்லாதபோது கண்ணால் ஏது பயன் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவர்க்கு இரங்கவேண்டும் அளவினால் குறிக்கொண்டு கண்ணோடுவது ஓர் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது என்றவாறு.
பரிமேலழகர்: அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்.
பரிமேலழகர் குறிப்புரை: கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.
'அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண்கள்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'ஆரளவிலும் கிருபைப் பார்வை இல்லாதபோது' என்றார். 'இரங்கவேண்டும் அளவினால் குறிக்கொண்டு கண்ணோடுவது ஓர் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது' என்று காலிங்கர் சொல்ல 'அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்' என உரைத்தார் பரிமேலழகர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வேண்டும் அளவு இரக்கம் ஓடாத கண்', 'அளந்து அறியக்கூடிய தன்மையோடு எல்லாப் பக்கங்களிலும் பார்வையை ஓட்டி நிலைமையை ஆராய்ந்து அறிந்து கொள்ளச் செய்யாத கண்கள்', 'வேண்டிய அளவு கண்ணோட்டம் இல்லாத கண்', 'அளவினைக் கடவாத வகையில் கண்ணோட்டம் இல்லாத கண்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
இரக்கத்தின் அளவறிந்து ஓடாத கண்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் முகத்தில் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்? என்பது பாடலின் பொருள்.
'அளவினால் கண்ணேட்டம் இல்லாத கண்' என்ற பகுதியின் பொருள் என்ன?
|
உளபோல் என்ற தொடர்க்கு உள்ளன போன்று என்பது பொருள்.
முகத்து என்ற சொல் முகத்தில் என்ற பொருள் தரும்.
எவன் செய்யும் என்ற தொடர்க்கு என்ன செய்யப் போகிறது? என்று பொருள்.
இல்லாத கண் என்ற தொடர் இல்லாத கண்கள் என்ற பொருளது.
|
தகுந்த அளவில் இரக்கம் காட்டாதவரின் கண்கள் முகத்தில் வறிதே தென்படுகின்றன. அவ்வளவுதான்.
முந்தைய பாடலில் கண் பெற்றதற்குப் பயன் கண்ணோட்டமே எனப்பட்டது. இக்குறளில் ஒருவரது இரக்கத்துக்குரிய நிலைமையை உணர்ந்து அதன் இயல்பை அளந்து அறிய உதவாத கண்களால் பயன் இல்லை எனச் சொல்லப்படுகிறது.
கண்ணோட்டத்தின் தகுதி கூறவந்த பாடல். இரக்கத்துக்குண்டான தகுதி, இரக்கப்படவேண்டியவன் தகுதி, தனது தகுதி இவற்றால் வரையறுக்கப் பெறுவது கண்ணோட்டம். பிறர்க்குத் துன்பமோ இடரோ நேர்கிறது என்பதைக் கண்ணுறும்போது அத்துன்பத்தின் இயல்பு அறிந்து அதற்குத்தக அவர்மேல் அருள் காட்டவேண்டும் எனச் சொல்லிக் கண்ணோட்டத்திற்கு எல்லை வகுக்கிறது இப்பாடல்.
யாருக்கு என்ன அளவில் இரக்கம் கொள்ளவேண்டும் என்பதை அறியும் திறம் வேண்டும் என்பது பாடலின் கருத்து. உயிர்கள் வருந்துவதை நேரில் கண்ணாரக் கண்டும், உள்ளம் இரங்கி, அவைகளுக்கு உடன் நன்மை செய்யாதவfர், தொடர் கொலையில் ஈடுபடும் கொடியவர்க்கு மிகுந்த கருணை காட்டுபவர் போன்றோர் 'அளவினால் கண்ணேட்டம் இல்லாத கண்' உடையவர்கள்' அதாவது கண்ணோட்டத்தின் அளவு அறியாதவர்கள் ஆவர். வாழ்விற்கு ஆக்கந்தராத குறைந்த அளவு கண்ணோட்டம் காட்டுதல் பயனற்றது; அளவுக்கு மீறிய (கழி) கண்ணோட்டமும் கூடாது என்பது செய்தி.
இக்குறளும் இதே அதிகாரத்துக் கருமஞ் சிதையாமல்.... (578) என்ற பாடலும் கண்ணோட்டத்திற்கு வரம்பு கட்டுவன.
|
'அளவினால் கண்ணேட்டம் இல்லாத கண்' என்ற பகுதியின் பொருள் என்ன?
இப்பகுதிக்கு அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதல் செய்யாத கண்கள்(அளவென்றது தகுதியை), ஆரளவிலும் கிருபைப் பார்வை இல்லாத கண், இரங்கவேண்டும் அளவினால் குறிக்கொண்டு கண்ணோடுதல் இல்லாத கண், அளவிறவாத கண்ணோடுதல் அல்லாத கண்கள், அவரவர் தன்மையறிந்து கண்ணோட்டம் செய்யாத கண், அளவான- ஓர் எல்லைக்குட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண்கள், தகுந்த அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண், தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள், வேண்டும் அளவு இரக்கம் ஓடாத கண், செயல்முறை கெடாமல் அளவோடு இரக்கம் காட்டாத கண்கள், அளந்து அறியக்கூடிய தன்மையோடு எல்லாப் பக்கங்களிலும் பார்வையைச் செலுத்தி பார்வையினாலேயே நிலைமைகளை ஆராய்ந்து செய்ய முடியாத கண்கள், காட்ட வேண்டிய அளவில் கண்ணோட்டத்தைக் காட்டுதல் இல்லாத கண், வேண்டிய அளவு கண்ணோட்டம் இல்லாத கண், அளவினைக் கடவாத வகையில் கண்ணோட்டம் இல்லாத கண்கள், தேவைப்படும் அளவுக்கு அருள்பொழியாத கண், அளவைக் கடவாத கண்ணோடுதலை யுடைய தல்லாத கண்கள், தகுந்த அளவிற்குக் கண்ணோட்ட மில்லாத கண்கள். வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், அன்பைத் தகுதியளவறிந்து வெளிப்படுத்தாத கண் என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.
இவற்றுள் 'தகுந்த அளவிற்குக் கண்ணோட்டமில்லாத கண்கள்' என்பது பொருத்தம். 'அளவினால் கண்ணேட்டம் இல்லாத கண்' என்ற பகுதிக்குக் 'கண்ணோட்டத்தின் தகுதி அறியாத கண்கள்' அல்லது 'இரங்கவேண்டும் அளவு தெரியாத கண்கள்' என்பது பொருள்.
|
இரக்கத்தின் அளவறிந்து ஓடாத கண்கள் முகத்தில் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்? என்பது இக்குறட்கருத்து.
கண்ணோட்டத்தின் தகுதியறிதல் வேண்டும்.
இரக்கத்தின் அளவறிந்து ஓடாத கண்கள் ஒருவர் முகத்தில் இருப்பனபோல் தோன்றுதல் அல்லது வேறென்ன பயனைச் செய்யும்?
|