இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0578கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு

(அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:578)

பொழிப்பு (மு வரதராசன்): தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம் உரிமை உடையது.

மணக்குடவர் உரை: தங்கருமத்திற்கு அழிவு வாராமற் கண்ணோட வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமையாதலை உடையது.
இது நற்குணமாவது கண்ணோட்டமாயினும் அரசர்க்குப் பொருட்கேடு வாராமல் கண்ணோடவேண்டுமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு - முறை செய்தல் ஆகிய தன் தொழில் அழியாமல் கண்ணோட வல்ல வேந்தர்க்கு; உரிமை உடைத்து இவ்வுலகு - உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம்.
(தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு முறை சிதைத்தல்,மேல் 'ஓர்ந்துகண்ணோடாது' (குறள் 541 )என்ற முறை இலக்கணத்தாலும் பெற்றாம். முறை சிதைய வரும் வழிக் கண்ணோடாமையும், வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின், 'கண்ணோட வல்லார்க்கு' என்றும், அவ்வியல்பு உடையார்க்கு உலகம் நெடுங்காலம் சேறலின், 'உரிமை உடைத்து' என்றும் கூறினார். இதனான் கண்ணோடுமாறு கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: காரியக்கேடு இல்லாமல் கண்ணோட்டம் காட்ட வல்லவருக்கு இந்த உலகம் உரிமையுடையதாகும். கண்ணோட்டமும் கடமையும் பெரும்பான்மையும் முரண்படுவன. இவை முரண்படாமல் - கடமை தவறாமல் கண்ணோட்டம் காட்டுதல் ஒரு அருந்திறன் ஆகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்து இவ்வுலகு.

பதவுரை: கருமம்-முறை செய்தல், செயற்பாடு, தொழில்; சிதையாமல்-அழியாமல்; கண்ணோட-இரக்கப்பட; வல்லார்க்கு-திறமையுடையவர்க்கு; உரிமை உடைத்து-உரிமை உடையது; இவ்வுலகு-இந்த உலகம். .


கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தங்கருமத்திற்கு அழிவு வாராமற் கண்ணோட வல்லவர்க்கு;
மணக்குடவர் குறிப்புரை: இது நற்குணமாவது கண்ணோட்டமாயினும் அரசர்க்குப் பொருட்கேடு வாராமல் கண்ணோடவேண்டுமென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: தங்கருமத்திற்கு அழிவு வாராமற் கண்ணோட வல்லவர்க்கு;
பரிப்பெருமாள் குறிப்புரை: நற்குணமாவது கண்ணோட்டமாயினும், அரசர்க்குப் பொருட்கேடு வாராமல் கண்ணோடவேண்டும் என்று எய்தியது விலக்கிக் கூறிற்று. உரிமையிருந்ததென்று பாடமாயினும் அமையும்.
பரிதி: இராச காரியம் குன்றாமல் அதுவே கண்ணாக இருக்கும்;
காலிங்கர்: தாம் செய் கருமம் வாய்த்தற் பொருட்டாக யாவர்மாட்டும் கண்ணோட வல்லா(ர்க்கும்;
பரிமேலழகர்: முறை செய்தல் ஆகிய தன் தொழில் அழியாமல் கண்ணோட வல்ல வேந்தர்க்கு;
பரிமேலழகர் குறிப்புரை: தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு முறை சிதைத்தல்,மேல் 'ஓர்ந்துகண்ணோடாது' (குறள் 541 )என்ற முறை இலக்கணத்தாலும் பெற்றாம். [இடுக்கண் -துன்பம்; கண்ணோடி- இரக்கங்காட்டி; ஒறாதார் - தண்டிக்காத மன்னர்; முறை-நீதி; முறையிலக்கணம்- நீதி வழங்கும் முறைக்குள்ள இலக்கணம்]

'தம் கருமத்திற்கு அழிவு வாராமற் கண்ணோட வல்லவர்க்கு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காரியம் கெடாமல் இரக்கம் காட்டுவார்க்கு', 'காரியம் கெடாமல் இரக்கம் காட்ட வல்லவர்களுக்கு', 'காரியமும் கெட்டுப் போகாமல் தாட்சணியமும் காட்டி உபகாரம் செய்யக்கூடிய வல்லமையுள்ள (மகான்களுக்கு)', 'தாம் மேற்கொண்டுள்ள கருமம் கெடாமல் இரக்கம் காட்ட வல்லவர்க்கு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செயற்பாடு கெடாமல் இரக்கம் காட்ட வல்லவர்களுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

உரிமை உடைத்துஇவ் வுலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்வுலகம் உரிமையாதலை உடையது.
பரிப்பெருமாள்: இவ்வுலகம் உரிமையாதலை உடைத்து.
பரிதி: அரசற்கும் பூமிக்கும் உரிமை உடைத்தாம் என்றவாறு.
காலிங்கர்: கருமம் அழியாதவாறு அவர்) வழிச் செல்லுதல் உடைத்து இவ்வுலகு என்றவாறு.
பரிமேலழகர்: உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம்.
பரிமேலழகர் குறிப்புரை: முறை சிதைய வரும் வழிக் கண்ணோடாமையும், வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின், 'கண்ணோட வல்லார்க்கு' என்றும், அவ்வியல்பு உடையார்க்கு உலகம் நெடுங்காலம் சேறலின், 'உரிமை உடைத்து' என்றும் கூறினார். இதனான் கண்ணோடுமாறு கூறப்பட்டது.

'இவ்வுலகம் உரிமையாதலை உடையது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'உரிமை உடைத்தாம்' என்றும் காலிங்கர் 'அவர் வழிச் செல்லுதல் உடைத்து இவ்வுலகு' என்றும் பரிமேலழகர் 'உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம்' என்றும் பொருள் உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வயப்பட்டது இவ்வுலகம்', 'இவ்வுலகு உரிமையுடையது', 'இந்த உலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது', 'இவ்வுலகம் உரியது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உரியது இவ்வுலகம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரியது இவ்வுலகம் என்பது பாடலின் பொருள்.
'கருமம் சிதையாமல்' என்ற தொடர் குறிப்பது என்ன?

செயல் ஒழுங்கமைதி முறை கெடாமல் கண்ணோடுக.

தாம் மேற்கொண்ட செயற்பாட்டில் குறை நேராதவாறு இரக்கம் காட்டி உதவுபவர்களுக்கு உரியது இந்த உலகம்.
தொழிலில் கெடுதல் உண்டாகா வண்ணம் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ளும் திறன்கொண்டவர்களுக்கு வயப்படும் இவ்வுலகம். நடுநிலைமையிலிருந்து தவறாமல் கண்ணோட்டம் செய்தல் வேண்டும். கருணை காட்டுதலில் நண்பன், அயலான் முதலிய வேறுபாடு கூடாது. கண்ணோட்டம் கருதித் தாம் மேற்கொண்ட செயலிலும் தவறுதல் கூடாது. இத்தகையோர் நெடுங்காலம் இவ்வுலகில் உரிமையோடு வாழத்தகுதியுடையவர் ஆவர். செயற்பாட்டில் குற்றம் ஏற்படாதவாறு கண்ணோடுதல் அருமை ஆதலால் 'கண்ணோட வல்லார்' எனக் கூறப்பட்டது. கடமை கெடாமல் இரக்கம் காட்டுக எனச் சொல்லப்படுகிறது.
கடமைச் செயலாற்றும்போழுது சில வேளைகளில் ஒரு சிலருக்கு இரக்கம் காட்ட வேண்டிய தேவை இருந்தால் அத்தருணங்களில் கண்ணோடலாம். ஆனால் அக்கண்ணோட்டம் தான் செய்யும் கடமையில் பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் காட்டப்படவேண்டும். இன்னொருவகையில் சொல்வதானால் காரியங்கள் சிதைவுபடாத அளவிற்குத்தான் கண்ணோட வேண்டும்.
சுற்றமோ, பழகியவரோ, பிறரோ சொல்வதைத் தட்டிக்கழிக்காது ஏற்றுச் செயல்படுதல், தனது செல்வாக்கைப் பயன்படுத்திப் பிறர்க்குத் தீது இழைக்க ஒருவர் வேண்ட அவ்வேண்டுகோட்கு இசைவது போன்றன கருமம் சிதையாமல் கண்ணோடுவது ஆகா.

இந்த வல்லமை பெற்றவர்கள் நல்ல தலைவர்களாக விளங்குவர். உலகம் அவர்களைத் தம்முள் ஒருவராக ஏற்றுக் கொண்டு உரிமை கொண்டாடி மகிழும் எனவும் சொல்கிறது இப்பாடல்.

'கருமம் சிதையாமல்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'கருமஞ் சிதையாமல்' என்ற தொடர்க்கு தங்கருமத்திற்கு அழிவு வாராமல், அரசர்க்குப் பொருட்கேடு வாராமல், இராச காரியம் குன்றாமல், தாம் செய்யுங்கருமம் வாய்த்தற் பொருட்டாக, முறைசெய்தலாகிய தம்தொழில் சிதையாமல், தம் கடமையாகிய தொழில் கெடாமல், காரியமுங் கெட்டுப் போகாமல். கடமை தவறாத, நிருவாக நடைமுறை கெடாத அளவில், காரியக்கேடு இல்லாமல், காரியம் கெடாமல், செயற்பாட்டில் தவறாமல், காரியக் கெடுதி இல்லாமல், கருமம் கெடாமல், தம் தொழில் கெடாமல், நடுநிலையாக முறை செய்யவேண்டிய தம் கடமை தவறாமல் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

கருமம் என்ற சொல் கடமையைச் செய்தல், வினையாற்றல், செயல்படுமுறை, என்ற பொருள் தரும். சிதையாமல் என்ற சொல் கெடாமல் எனப்பொருள்படும்.
கருமம் சிதையாமல் என்பதற்குப் பொதுநிலையில் வைத்து, தான் மேற்கொண்ட கடமை கெடாமல் என உரைப்பார் மு வரதராசன். முறை தவறாமல் என்ற பொருளில் பெரும்பான்மையர் உரை கண்டனர். முறைகெடாது என்றதால் இது ஆட்சித்தலைவனுக்குச் சொல்லப்பட்டது எனவும் கூறினர். இது முறை செய்யும் பொறுப்பில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.
ஆட்சித்தலைவனின் கருமம் எனக்கொண்டு அதைச் சிதையாமல் கண்ணோட வல்லவர்க்கு உலகம் உரித்தாகும் என்று கொள்வது இக்குறட்கருத்தை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும். ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை (செங்கோன்மை 541 பொருள்; ஆராய்ந்து, யாவர் மாட்டும் அன்பு காட்டாமல், இறையாண்மை செலுத்தி, தெளிவாக உணர்ந்து, செய்வது நீதியாட்சியாகும்) என நாட்டுத்தலைவன் முறை செய்யும்போது யார் மாட்டும் கண்ணோடாது செய்யவேண்டும் என்று முன்னர் சொன்னது குறள். அக்கருத்தே இங்கு 'முறை கெடாமல் இரக்கம் காட்டலாம்' என நடைமுறை உலகிற்குக் கொண்டு வரப்படுகிறது. நாட்டுத்தலைவனது கடமை நடுநிலை காத்து அரசாட்சி செய்வது. அதற்குக் குறைவு வராத அளவிற்கு கண்ணோடலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
கண்ணோடினால் முறைசெய்தல் கடமை யிலிருந்து வழுவ நேரிடலாம். கண்ணோடாவிட்டால் உதவி செய்யாமல் போனோமே என்ற குற்ற உணர்வு உண்டாகலாம். முறை செய்தலுக்கும் கண்ணோடுவதற்கும் முரண் உண்டானால் அதை எப்படி தீர்ப்பது எப்படி என்பதை தெளிவாக்குகின்றது இப்பாடல். எதிர்மாறான நிலையில் கடமையின் குறிக்கோளுக்கு இடையூறில்லாதிருந்தால் கண்ணோடுக என்று பாடல் கூறுகிறது. இந்த வல்லமை நாடாள்வோர்க்கு மட்டுமன்றி தனிமனிதருக்கும் தேவை. இது எத்தொழில் புரிவோர்க்கும் பொருந்தும்படியாக உள்ளது.
தேவநேயப்பாவாணர் '(முறை) தவறுமிடமாவது கண்ணன்ன கேளிர் குற்றஞ் செய்யின் தண்டிக்க விரும்பாமை. தவறாமிடமாவது தன்னால் வெறுக்கப் படுபவன் குற்றஞ் செய்யாவிடினுந் தண்டிக்கவும் சிறு குற்றஞ் செய்யினும் பெருந்தண்டனை யிடவும் விரும்புதல்' எனக் காட்டுகள் கூறுவார்.

'கருமஞ் சிதையாமல்' என்பது கடமை கெடாமல் என்ற பொருள் தருவது.

செயற்பாடு கெடாமல் இரக்கம் காட்ட வல்லவர்களுக்கு உரியது இவ்வுலகம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கடமை வழுவாமல் கண்ணோட்டம் காட்டுக.

பொழிப்பு

செயற்பாடு கெடாமல் இரக்கம் காட்ட வல்லவர்கள் வயப்பட்டது இவ்வுலகம்.