இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0572



கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை

(அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:572)

பொழிப்பு: கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது; கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருந்தால் நிலத்திற்குச் சுமையே தவிர, வேறு பயனில்லை.

மணக்குடவர் உரை: உலகநடை கண்ணோட்டத்தின்கண்ணது: ஆதலால், அஃதில்லாதார் உளராயிருத்தல் நிலத்துக்குப் பாரமாம்.
இது கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்றது.

பரிமேலழகர் உரை: உலகியல் கண்ணோட்டத்து உள்ளது - உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை - ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று.
(உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: உலகியல் என்பது இரக்கப்பண்பில் உள்ளது. இரக்கமில்லார் இருப்பது பூமிக்குப் பாரம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை.


கண்ணோட்டத் துள்ளது உலகியல்:
பதவுரை: கண்ணோட்டத்து-இரக்கத்தில்; உள்ளது-இருக்கின்றது; உலகியல்-உலகநடை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணது;
பரிப்பெருமாள்: உலக நடை கண்ணோட்டத்தின் கண்ணது;
பரிதி: கிருபைக்கண் ஆகிய மன்னவன் பூமிபாரஞ் சுமந்தவன்;
காலிங்கர்: கீழ்ச் சொன்ன பரிசே கண்ணோட்டத்தின் கண்ணே உள்ளது, உலகத்து உயிர்களது நடை [கீழ்ச் சொன்ன பரிசே- கீழ்ச் சொன்னபடி];
பரிமேலழகர்: உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது;
பரிமேலழகர் குறிப்புரை: உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின.

'உலகநடை/ உயிர்களது நடை கண்ணோட்டத்தின் கண்ணது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி வேறுபாடாக 'கருணையோடு கூடிய அரசன் பூமிபாரஞ் சுமந்தவன்' என்றுரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகநடை இரக்க உணர்வினால்தான் நிகழ்கிறது', 'உலக வாழ்க்கை நடைபெறுவது தாட்சணியம் என்ற குணத்தினால்', 'உயர்ந்தோ ரியல்பு கண்ணோட்டத்தின் சார்பாக உள்ளது', 'உலக இயக்கம் கண்ணோட்டத்தில் உள்ளது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உலக இயக்கம் கண்ணோட்டத்தில் நிகழ்கிறது என்பது இப்பகுதியின் பொருள்.

அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை:
பதவுரை: அஃது-அது; இலார்-இல்லாதவர்; உண்மை-உளராதல்; நிலக்கு-நிலவுலகிற்கு; பொறை-சுமை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலால், அஃதில்லாதார் உளராயிருத்தல் நிலத்துக்குப் பாரமாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்றது.
பரிப்பெருமாள்: ஆதலான், அஃது இல்லாதார் உளராதல் இந்த நிலத்துக்குப் பாரம் ஆம் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கண்ணோட்டம் இல்லாதாரை நிலம் பொறாது என்றது.
பரிதி: கொடுங்கோல் மன்னவன் பூமிக்குப் பாரம் என்றவாறு.
காலிங்கர்: ஆதலான் மற்று அதனைத் தங்கண் இல்லாதோர் உளதாயிருத்தலின் நிலத்துக்குப் பாரம்.
காலிங்கர் குறிப்புரை: எனவே இங்குள்ள உயிர்கட்குப் பெரியதோர் கிலோபாரம் என்பது பொருள் என்றவாறு [கிலோபாரம்- துன்பச் சுமை].
பரிமேலழகர்: ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று.
பரிமேலழகர்: அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.

'கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவ்வுணர்வு இல்லாதவர் உயிருடன் இருத்தல் இந்நிலத்திற்குப் பாரமாகும்', 'அந்தக் குணம் இல்லாத மனிதர்கள் உண்மையாகவே பூமிக்குப் பாரமானவர்கள்', 'கண்ணோட்டம் இல்லாதவர்கள் உலகில் இருத்தல் நிலத்திற்குப் பாரமே', 'அக்கண்ணோட்டம் என்ற பண்பு இல்லாதார் இருப்பது நிலத்திற்குச் சுமையாகும் ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அப்பண்பு இல்லாதார் உள்ளமை நிலத்திற்குச் சுமையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலக இயக்கம் கண்ணோட்டத்தில் நிகழ்கிறது; அப்பண்பு இல்லாதார் உள்ளமை நிலத்திற்குப் பொறை என்பது பாடலின் பொருள்.
கண்ணோட்டமிலார் ஏன் 'பொறை' யாகின்றனர்?

கண்ணோட்டத்து உள்ளது என்ற தொடர்க்கு கண்ணோட்டத்தினால் நடைபெறுகிறது என்பது பொருள்.
உலகியல் என்ற தொடர் உலக இயக்கம் குறித்தது.
அஃதிலார் என்றதற்கு அது இல்லாதவர் என்று பொருள்.
உண்மை என்ற சொல் உள்ளமை அதாவது இருப்பது என்ற பொருள் தரும்.
நிலக்குப் பொறை என்ற தொடர் நிலத்திற்கு சுமை எனப்பொருள்படும்.

கண்ணோட்டம் இருப்பதால் உலக இயக்கம் நடைபெறுகின்றது. அப்பண்பு இல்லாதவர்கள் பூமிக்குச் சுமையாவர்.
உலகியல் அதாவது உலகத்து உயிர்களது நடை இரக்கப் பண்பில் உள்ளது என்ற நேர்மறையான செய்தியைத் தருகிறது இக்குறட்பா. கண்ணோட்டம் என்ற விழுமியத்தின் துணை கொண்டே ஒரு சமுதாயம் நடைபெறுகிறது என்பது கருத்து. உலகநடை என்பதற்குப் பரிமேலழகர் உயிர்கட்கு ஒப்புரவு செய்தல், புறந்தருதல் (பாதுகாக்கப்படுதல்) தவறிழைத்தாற் பொறுத்தல் இவற்றைக் குறிப்பிடுவார்.
மனிதநேய அறமான கண்ணோட்டம் என்ற பண்பே உலக வாழ்வியலுக்கு ஆதாரமாக அமைவதால் அத்தகைய நோக்கு இல்லாதவர்கள் உலகில் இருப்பது இவ்வுலகுக்குச் சுமையாம். இன்னொருவகையில் சொல்வதானால் அவர்கள் இறந்துபோவது மேல் என்பது கருத்து.
நிலத்திற்கு என்பது நிலக்கு என்று செய்யுள் விகாரமாயிற்று என்பர் இலக்கண ஆசிரியர்கள்.

கண்ணோட்டமிலார் ஏன் 'பொறை' யாகின்றனர்?

கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்று சொல்கிறது பாடல், உலகத்திற்குச் சுமையாய், பயனன்றி இருப்பவன் என்ற பொருளில் நிலத்திற்குச் சுமை என்று சொல்லப்பட்டது.
கண்ணோட்டம் சமுதாய நடைமுறையின் ஓர் அங்கமாக ஆகிறது அதாவது அது இயல்பான வாழ்வில் ஒரு பகுதியாகும். எனவே கண்ணோடாதவர்கள் இந்த பூமிக்கே பாரம் என்று கூறப்படுகிறது. உயிர் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர்களால் இயக்கத்திற்கு முடக்கம் உண்டாகிறது. நிலவுலகம் கரடுமுருடில்லாமல், இடரற்றுச் செல்லக் கண்ணோட்டமே உதவுகிறது என்பது வள்ளுவர் கருத்து. அந்த உணர்வு இல்லாத எதுவும் இப்பூமிக்குச் சுமையே ஆகும். அவை நிலவுலக மக்களும் உயிர்களும் அழிந்துபடவே துணை செய்யும். இரக்கமில்லாதார் வேறுவகையில் பூமிக்குப் பயன்படமாட்டார்களா? வேறுவழிகளில் உலகிற்குப் பங்கு அளித்தாலும் கண்ணோட்டமிலார் தம் வன்கண்மையால் தனக்கும் பிறர்க்கும் அல்லவையே விளைவிப்பவர் ஆதலால், அவர்கள் எப்பொழுதும் பூமிக்குத் துன்பச் சுமையாகவே இருப்பர்.
பூமிக்குச் சுமையெனக் குறளில் வேறு இரண்டு இடங்களும் குறிக்கப்பெறுகின்றன. சென்ற அதிகாரத்தில் கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை (வெருவந்த செய்யாமை, 570 பொருள்: அறிவுஇல்லாதவர்கள் கடுமையான ஆட்சியைச் சுற்றிக் கொள்வர். கொடுங்கோலனும் மூடர்களும் இணைந்த கொடுங்கோல் ஆட்சி என்னும் இப்பெருஞ்சுமையைத் தாங்க இயலுமா அந்த ஆட்சியமைந்துள்ள பூமி?) என்று கல்லாதவர்களைத் துணையாகக் கொண்டு ஆள்வோனைக் கண்டிக்கும் வகையில் கல்லாதாரைப் பிணிக்கும் கடுங்கோன்மையை நிலத்திற்குச் சுமை எனக் குறள் கூறியது. பின்னரும் ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை (நன்றியில் செல்வம் 1003 பொருள்: சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்) எனப் புகழ் வேண்டா ஆடவர் இருப்பதும் சுமையென்று கூறும்.

உலக இயக்கம் கண்ணோட்டத்தில் நிகழ்கிறது; அப்பண்பு இல்லாதார் உள்ளமை நிலத்திற்குச் சுமையாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கண்ணோட்டம் இல்லாதார் நிலத்திற்குச் சுமையாக இல்லாமல் உலகினின்றும் நீங்கலாம்.

பொழிப்பு

உலக இயக்கம் என்பது இரக்கப் பண்பில் உள்ளது. அப்பண்பு இல்லாதவர் இந்நிலவுலகிற்குச் சுமையாகும்.