இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0575



கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்
புண்என்று உணரப் படும்

(அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:575)

பொழிப்பு: ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே; அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

மணக்குடவர் உரை: கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலமாவது கண்ணோட்டமுடைமை: அஃதில்லையாயின் அவை புண்ணென்றறியப்படும்.
இது கண்ணோட்டமில்லாத கண்ணிற்குப் பெயர் கூறிற்று.

பரிமேலழகர் உரை: கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - ஒருவன் கண்ணிற்கு அணியும்கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் - அக்கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும்.
(வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்றகண்ணின் குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: கண்ணிற்கு நகையாவது இரக்க உணர்வே; இரக்கமிலாக் கண்ணைப் புண்ணென்று கொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல் புண்என்று உணரப் படும்.


கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்:
பதவுரை: கண்ணிற்கு-கண்ணுக்கு; அணிகலம்-அணியப்படும் நகை; கண்ணோட்டம்-இரக்கம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலமாவது கண்ணோட்டமுடைமை:
பரிப்பெருமாள்: கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலமாவது கண்ணோட்டமுடைமை:
பரிதி: கண்ணுக்கு ஆபரணம் கிருபை;
காலிங்கர்: எல்லா உறுப்பிற்கும் அணிகலம் அணியலாம்; மற்றுக் கண்ணுக்கு அணிவது ஓர் அணிகலன் இல்லை என்று இங்ஙனம் கருதற்க; என்னை எனின், கண்ணுக்கு அணியும் கலனாவது கண்ணோட்டம்;
பரிமேலழகர்: ஒருவன் கண்ணிற்கு அணியும்கலமாவது கண்ணோட்டம்;

'கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலமாவது கண்ணோட்டம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் கண்ணிற்கு அணியும் நகையாவது இரக்கமே', 'கண்களுக்குச் சிறப்புத் தருவது (கண்ட மனிதரின் தரமறிந்து) தாட்சணியம் காட்டுவதுதான்', 'ஒருவன் கண்ணிற்கு இயற்கையாய் உள்ள அணியாவது கண்ணோட்டம்', 'ஒருவன் கண்ணிற்கு அணியும் நகையாவது கண்ணோட்டமாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கண்ணிற்கு அணியாய் உள்ளது கண்ணோட்டம் என்பது இப்பகுதியின் பொருள்.

அஃதுஇன்றேல் புண்என்று உணரப் படும்:
பதவுரை: அஃது-அது; இன்றேல்-இல்லாவிடில்; புண்-வடு; என்று-என்பதாக; உணரப்படும்-அறியப்படும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃதில்லையாயின் அவை புண்ணென்றறியப்படும்.
மணக்குடவர் குறிப்புரை: இது கண்ணோட்டமில்லாத கண்ணிற்குப் பெயர் கூறிற்று.
பரிப்பெருமாள்: அஃதில்லையாயின் அவையிற்றைப் புண்ணென்றறியப்படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கண்ணோட்டமில்லாத கண்ணிற்குப் பெயர் கூறிற்று.
பரிதி: அது அல்லது முகத்தில் இரண்டு புண் என்றவாறு.
காலிங்கர்: ஆகலான், அஃது ஒருவர்க்கு இல்லை எனின் மற்று அது வெறும் புண் என்றே அறிய அடுக்கும் என்றவாறு [அடுக்கும்-பொருந்தும்].
பரிமேலழகர்: அக்கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்றகண்ணின் குற்றம் கூறப்பட்டது [புலன் பற்றலானும் -செய்திகள், உருவங்கள் முதலியவற்றை அறிதலாலும்].

'அஃதில்லையாயின் அவை புண்ணென்றறியப்படும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவ்விரக்கம் இல்லாவிட்டால் அக்கண்கள் அறிஞரால் புண்ணாகக் கருதப்படும்', 'அப்படி இல்லையானால் அக்கண்கள் (தாமறியும் தன்மையில்லாமல் துன்பம் செய்யும்) புண்களேயாகும்', 'அஃது இல்லையானால் கண்ணென்பது புண்ணென்று கருதப்படும்', 'அந்நகையானது கண்ணிற்கு இல்லையேல் புண் என்று அறியப்படும். (கண்ணோட்டம் இல்லாத கண் புண்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது இல்லையானால் கண் புண்ணென்று கொள்ளப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கண்ணிற்கு அணியாய் உள்ளது கண்ணோட்டம்; அது இல்லையானால் கண் புண்ணென்று கொள்ளப்படும் என்பது பாடலின் பொருள்.
'புண்' குறிப்பது என்ன?

கண்ணிற்கு என்ற சொல்லுக்குக் கண்களுக்கு என்பது பொருள்.
அணிகலம் என்ற சொல் அணியும் ஆபரணம் என்ற பொருள் தரும்.
கண்ணோட்டம் என்ற சொல் இரக்கவுணர்வு குறித்தது.
அஃதுஇன்றேல் என்றது அது இல்லாவிட்டால் எனப்பொருள்படும்.
என்று உணரப்படும் என்ற தொடர் என அறியப்படும் என்ற பொருளது.

கருணையுள்ளம் என்ற அணிகலனே கண்களுக்கு அழகு தருவது. இரக்கமற்றவர்க்கு அமைந்த கண்கள் புண்களாகவே பார்க்கப்படும்.
ஆடை, அணி முதலியவற்றை அணிவது சமுதாய வாழ்வின் சீர்திருத்தத்தைக் குறிப்பதாகும். அதை நாகரிக வளர்ச்சி என்றும் சொல்வர். நாம் உடலில் உள்ள பல்வேறு உறுப்புக்களுக்கு அணி பூணுகிறோம். ஆனாலும் அணி பூண்ட அவை புனையாக் கண்களை ஒக்குமா? எனக் கேட்கிறார் ஒரு கவிஞர். அதாவது கண்களே சிறந்த அழகுதாமாம். கண்ணிற்கு எத்தகைய அணிகலனும் இல்லை. ஆனால் உயிர்களின் மிக முக்கிய உறுப்பான கண்களுக்கு ஓர் அணிகலம் இருப்பதாகச் சொல்கிறது குறள். அதுதான் கண்ணோட்டம். எப்படி புற அழகு மேம்படுவதற்காக ஆபரணம் அணிவார்களோ அதுபோல் இரக்கம் உண்டானால் கண்களின் புற அழகும் அக அழகும் இன்னும் பொலிவு பெற்றுத் தோன்றும், பிறிதோர் இடத்தில் பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி ... (இனியவைகூறல் 95) என இன்சொலன் ஆதலும் ஓர் அகத்தணி என்று சொன்னது குறள்.
முன்னர் கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை..... (குறள் 571) என்று கண்ணோட்டம் பேரழகு என்று சொல்லப்பட்டது.
பிறர்படும் துயரங்கண்டு இரங்கும் கண்களைக் கொண்டிருப்பதே ஒருவருக்கு அழகு சேர்க்கும் அணிமணிகள் போன்றதாம். இயற்கை யணியாகிய அது இல்லாமல் துயரங்களை நேரில் கண்டும் அதற்கு இரக்கம் காட்டாமல் உணர்ச்சியற்று இருந்து விட்டால் அவர்க்கு கண்கள் இல்லை, புண்களே உள போலும்' என மற்றவர் எண்ணுவர். இதையே உணரப்படும் என்கிறது குறள்.

'புண்' குறிப்பது என்ன?

கல்வி அதிகாரத்தில் கண்ணுடையோர் என்போர் கற்றோர்; முகத்திரண்டு புண் உடையார் கல்லாதவர் (குறள் 393) என்ற பாடலில் கல்லாதவரது கண்கள் புண்கள் போன்றவை எனச் சொல்லப்பட்டது. பார்வை இருந்தும் எண்ணை, எழுத்தைப் படிக்க இயலாமல் இருப்பதால் கல்லாதவர் கண் புண் என கூறப்பட்டது. இங்கு கண்ணோட்டமில்லாதவர் கண்கள் புண்கள் எனச் சொல்லப்படுகிறது.
பரிமேலழகர் 'கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் (செய்திகள், உருவங்கள் முதலியவற்றை அறிதலாலும்) துயர் விளைத்தல் நோக்கி, 'புண்' என்று உணரப்படும்' என்று விளக்கம் கூறினார். இதனைப் பாவாணர் 'அவ்வணிகல மில்லாதார் கண் அழகிழப்பதுடன் பல்வேறு வகையில் நோவுதரும் உறுப்பாயிருப்பது பற்றி, 'புண்ணென்றுணரப் படும்' என்றார். பல்வேறு வகை நோவாவன கண்ணோயும் தூசியுறுத்தலும் தீய ஆசையுண்டாக்குதலுமாம்' என விரித்து உரைத்தார்.
மற்றவர்கள் 'அழகை இழப்பதன்றித் துன்பமும் தருமாதலால் புண்கள்' 'காண்பவற்றின் மீது ஆசையுண்டாக்கி, அவ்வழித் துன்பம் தரும். ஆதலால் 'புண்'', 'அவ்வருள் நோக்கு அமையாத கண்கள் வெறும் புண்கள்' 'புண் உடையவரும் துன்பப்படுவார்; அதை பார்ப்பவரும் வேதனைப்படுவார்கள்; கண்ணோட்டம் இல்லாத கண்ணை உடையவர் பலர் அன்பைப் பெறுவதற்குப் பதிலாகப் பலரின் வெறுப்புக்கு ஆளாவார்கள்; கண்ணோட்டமில்லாக கண்ணுடையான் தானும் வருந்திப் பிறரையும் வருத்துவான்' என விளக்குவர்.

கண்ணிற்கு அணியாய் உள்ளது கண்ணோட்டம்; அது இல்லையானால் கண் புண்ணென்று கொள்ளப்படும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கண்ணோட்டம் என்னும் அகத்து அணி பூண்டவர் மேலும் பொலிவுடன் தோன்றுவர்.

பொழிப்பு

கண்ணிற்கு அணியாவது இரக்கம் கொள்ளுதலே; இரக்கமற்றவர் கண் புண்ணென்று கொள்ளப்படும்.