இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0580



பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

(அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:580)

பொழிப்பு (மு வரதராசன்): யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.



மணக்குடவர் உரை: நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர், எல்லாரானும் விரும்பத் தக்க நாகரிகத்தை விரும்புவார்.
நாகரிகம்- அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை.

பரிமேலழகர் உரை: நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் - பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர்.
(நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல் 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற் 355 ) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

நாமக்கல் கவிஞர் உரை: (அதைவிடச் சிறந்த தாட்சண்ணிய குணமுள்ள தியாகிகள் அதனால் நமக்கு அபாயம் வருமென்றாலும் பொருட்படுத்தமாட்டார்கள்.) பலபேருக்கான நன்மை வரும் என்றால் தாட்சண்ணியத்தை விரும்புகின்றவர்கள் விஷத்தை ஊற்றிக் கொடுத்தாலும் அதை உண்டுவிடச் சம்மதிப்பார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்,

பதவுரை: பெய-இடப்படுவதை, ஊற்றுதலை; கண்டும்-நேரில்பார்த்தும்; நஞ்சு-நஞ்சு, (கொல்லும் தன்மை கொண்ட பொருள் குறித்தது); உண்டு-உண்டு, உட்கொண்டு; அமைவர்-மேவுவர், அமைதியாய் இருப்பர்; நயத்தக்க-நயக்கத்தக்க, விரும்பத்தகுந்த; நாகரிகம்-உயர்ந்த பண்பு, கண்ணோட்டம்; வேண்டுபவர்-விரும்புபவர், விழைபவர்.


பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர்;
பரிப்பெருமாள்: நஞ்சு பெய்தது கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர்;
பரிதி: மாற்றார் நமக்கு நஞ்சிட்டாலும் இது அமிர்தம் என்று இருப்பர்;
காலிங்கர்: ஒருவர் தமக்கு இன்னாமையால் கொணர்ந்து இடக்கண்டு வைத்தும் அவரிட்ட நஞ்சினைத் தாம் உண்டு உயிர் வாழ்க்கை சமைந்து விடுவர்; [சமைந்து விடுவர் - அமைவர்]
காலிங்கர் குறிப்புரை: பெயக்கண்டு என்பது கொணர்ந்திடக் கண்டும் என்றது.
பரிமேலழகர்: பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர்.

'நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி பகைவர் நஞ்சிட்டதைக் கூறினார். காலிங்கர் இன்னாமையால் இட்ட நஞ்சு அதாவது தீங்கு செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட நஞ்சு என்றார். பரிமேலழகர் பழகியவர் நஞ்சிடக் கண்டும் என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நேரே நஞ்சிடினும் உண்டு அடங்குவர்', 'நண்பர் உண்ண வைத்த நஞ்சினை நேரிற்கண்டும் மறுக்க இயலாமையால் அதனை உண்டு மன அமைதியுறுவர்', 'பழகினவர் நஞ்சிட்டாலும் அதனை யுண்டு பின்னும் அவரோடு கலந்திருப்பர்', 'பிறர் நஞ்சு இடுவதைக் கண்டும் அந்நஞ்சை உண்டு அவரிடம் வெறுப்பின்றி இருப்பர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நஞ்சு ஊற்றப்படுதலை நேரில் கண்டும் அதை உண்டு அமைதியுறுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாரானும் விரும்பத் தக்க நாகரிகத்தை விரும்புவார்.
மணக்குடவர் குறிப்புரை: நாகரிகம்- அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை.
பரிப்பெருமாள்: எல்லாரானும் விரும்பத் தக்க நாகரிகத்தை வேண்டி விரும்புவார்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: நாகரிகம்- அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை. மறாமையால் கண்ணோட்டம் ஆயிற்று இது. பொறுத்தலே அன்றித் தமக்குச் செய்யும் தீமைக்கும் உடன்படுவர் புகழ்வேண்டுபவர் என்பது. [மறாமையால் - மறுத்து உரையாமையால்]
பரிதி: காரியத்தினாலே சுவர்க்கம் வேண்டியும் இந்தப் பூமி வேண்டியும் மன்னவர் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின், பெரியோரால் விரும்பத்தக்க உம்பர் உலகினுள் சிறப்புடைய உத்தரகுருவினைத் தாம் எய்தி இனிது வாழ்ந்திருக்க வேண்டுமவர் என்றவாறு. [உம்பர்- தேவர்; உத்தரகுரு - யோகபூமி ஆறனுள் ஒன்றாகிய புண்ணிய பூமி (சைனர் கொள்கை)]
பரிமேலழகர்: யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர்.
பரிமேலழகர் குறிப்புரை: நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல் 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற் 355) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.

'எல்லாராலும் விரும்பத் தக்க நாகரிகத்தை விரும்புவார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் நாகரிகம் என்பதை 'அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை' என விளக்கினர். பரிதியும் காலிங்கரும் வேறுலகம் வேண்டுபவரைப் பற்றிப் பேசுகின்றனர். பரிப்பெருமாள் 'மறுத்து உரையாமையால் கண்ணோட்டம் ஆயிற்று எனவும் பரிமேலழகர் 'அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி' எனவும் நாகரிகம் என்றதற்குக் கண்ணோட்டம் எனப் பொருள் கொள்கின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாவரும் விரும்பும் நாகரிகம் உடையவர்', 'எல்லோராலும் விரும்பத்தக்க நாகரிகம் (கண்ணோட்டம்) வேண்டுபவர்', 'யாவராலும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தை வேண்டுபவர்', 'எல்லோராலும் விரும்பத்தக்க நாகரிகத்தினை விரும்புபவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

விரும்பத்தக்க நாகரிகத்தை வேண்டுபவர் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
விரும்பத்தக்க நாகரிகத்தை வேண்டுபவர் நஞ்சு ஊற்றப்படுதலை நேரில் கண்டும் அதை உண்டு அமைதியுறுவர் என்பது பாடலின் பொருள்.
கண்ணோட்டத்துக்கும் இப்பாடலுக்கும் இயைபு உள்ளதா?

நாகரிகம் கருதுபவர் பொதுநன்மை உண்டென்றால் நஞ்சையும் உண்டு அமைவர்.
இங்கு காட்டப்படும் நிகழ்ச்சி: நஞ்சு ஊற்றப்படுகின்றது; நஞ்சு என்று தெரிந்தும் ஒருவர் அதை அருந்தி அமைதி காக்கிறார். இக்காட்சியை 'எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகம் என்ற உயர்ந்த பண்பு கருதி நஞ்சு அருந்தினார்' என்றும் 'நற்றிணைப் பாடலுடன் (355) இக்குறளை ஒப்பிடலாம்' என்றும் விளக்கினர்.

நாகரிகமும் கண்ணோட்டமும்:
மணக்குடவர்/பரிப்பெருமாள் நாகரிகம் என்ற சொல்லுக்கு 'அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை' என்று விளக்கம் தருகின்றனர். பரிப்பெருமாள் கூடுதலாக 'மறாமையால் அதாவது மறுத்து உரையாமையால் கண்ணோட்டம் ஆயிற்று' எனவும் உரைக்கிறார். பரிதியும் காலிங்கரும் வேறுலகம் எனக் குறிக்கின்றனர். பரிமேலழகர் பரிப்பெருமாள் உரைப்பொருளை ஏற்று நாகரிகம் என்பது கண்ணோட்டம் எனச் சொல்கிறார். இங்ஙனம் தொல்லாசிரியர்களில் பரிப்பெருமாளும் பரிமேலழகரும் நாகரிகம் என்ற சொல்லுக்குக் கண்ணோட்டம் எனப் பொருள் காண்கின்றனர்.
இன்று நாகரிகம் என்ற சொல் பண்பாடு என்ற பொருளிலும் புதுமையான பழக்கவழக்கங்கள் என்ற பொருளிலும் வழங்கி வருகிறது, உணவு குமட்டலாக இருந்தாலும் அதை வெளிக்காட்டினால் விருந்து தருபவர் மனம் உடைந்துவிடும் என்பதால் நன்றாக இருக்கிறது என்று சொல்வது நாகரிகம் என்பது புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் உணவிலே மனிதரைக் கொல்லும் நஞ்சு ஊற்றுகிறார்கள் என்று தெரிந்தும் அதை உண்பதை நாகரிகம் என்று எப்படிச் சொல்வது என்று உணர்ந்த சிலர் இக்குறட் கருத்துக்குக் கூறிய அமைதிகள்:
'நஞ்சனைய தீங்குபல நேரிடையாகவே செய்தாலும் என்பது சொல்லப்பட்டது';
'நஞ்சூட்டுதல் என்பது கொடுந்துன்பம் செய்ததற்கு எடுத்துக்காட்டு';
'நண்பரிட்ட உணவாதலால் அது அவர் அறியாதிட்ட நஞ்சு';
'நஞ்சனைய சொற்களைப் பெய்தும் எனக் கொள்ளவேண்டும்'.
இனி, கண்ணோட்டம் என்ற சொல் மற்ற எல்லாப் பாடல்களிலும் இரக்கப்படுதல் என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. இங்கு மற்றவர் மனம் நோகாதபடி நடந்துகொள்ளுதல் என்ற பொருளில் கண்ணோடல் குறிக்கப்படுவதாகிறது. அல்லது தன்னலக் கேட்டினைப் பொறுத்து வாழ்தலே நாகரிகம் அதாவது கண்ணோட்டம் எனச் சொல்லப்பட்டதாகக் கொள்ளப்படுகின்றது.
தண்டபாணி தேசிகர் 'பரிமேலழகர் முதலியோர் கொண்ட 'கண்ணோட்டம்' என்ற பொருள் நாகரிகத்திற்கு நேரான சொற்பொருளன்று. அதிகாரத்தாற் பெற்ற பொருள். 'நாகரிகம் வள்ளுவத்திலும் ஆசிரியர் பெயரறியப் பெறாத நற்றிணைப் பாடல் 355விலும் அன்றிப் பிற சங்ககால இலக்கியங்களில் ஆட்சியில் இல்லாத சொல்' என்று கூறுகிறார். மேலும் அவர் 'நாகரிகம் சமுதாய வாழ்வினால் விளைந்த நற்குணங்களில் ஒன்று எனலாம். பெருங்கதையில் 'நகரத் தொடர்பான செப்பம் (பெருங். உஞ்சை 41, 83) என்ற பொருளிலும், 'பலகால வன்மை' என்ற பொருளில் (சீவக 1110) சீவக சிந்தாமணியிலும் வந்துள்ளன' எனக்கூறி இச்சொல் பயின்று வரும் நூல்களையும் குறிப்பிடுகிறார்.
இவை எல்லாவற்றையும் கலந்து எண்ணும்போது, நாகரிகம் வேறு; கண்ணோட்டம் வேறு என்பதாகவே தெரிகிறது. எங்கோ (பரிப்பெருமாளிடத்ததாக இருக்கலாம்) ஓர் பிழை நேர்ந்து இரண்டும் ஒன்றற்கொன்று தொடர்புடைய சொற்கள் ஆகிவிட்டன என்பதுபோல் தோன்றுகிறது.
நாகரிகம் என்ற சொல் கண்ணோட்டம் என்ற பொருளில்தான் இங்கு ஆளப்பட்டுள்ளதா என்ற ஐயமும் உடன் உண்டாகிறது.

உண்டவருக்கும் பெய்தவர்க்கும் உள்ள உறவு என்ன?
நற்றிணைச் செய்யுளில் ஊற்றிக் கொடுப்பவர் நட்டோர் அதாவது நட்புடையவர் (காதலர்) எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் பெய்பவர் யார் என்பது பற்றி இக்குறளில் எந்தக் குறிப்பும் இல்லை. பரிதி பகைவர் எனக் கூறுகிறார். பரிமேலழகர் பயின்றார் அதாவது பழகினவர் என்கிறார். நஞ்சு கொடுப்பவர் யார் என்று சொல்லாததால் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று பொதுமை மிகுந்து காணப்படுகின்றது என்பது நோக்கத்தக்கது,

நற்றிணைப் பாடலான 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற்றிணை 355 பொருள்: எதிரே சென்று நட்பினர் நஞ்சைக் கலந்து கொடுத்தாலும் நாகரிகம் மிக்கவர் அதனையுண்பர்) என்பதுடன் இக்குறட்கருத்தை ஒப்பிட்டது சரியா?
நற்றிணைப் பாடலின் நோக்கம், வரைவு கடாஅதல் அதாவது தலைவன் தலைவியை விரைவில் மணம் செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தோழி வற்புறுத்துவது. அங்கு நட்டோர் என்பது அன்புடையோர் அதாவது காதல் கொண்டவரைக் குறிக்கும். அப்பாடலின் பின்னணியில் தலைவன் தலைவியை மணம் செய்வது தள்ளிப்போய்க் கொண்டிருப்பதால் தோழி இதற்கு ஒரு முடிவு கட்ட தலைவனை பார்த்து இப்படிச் சொல்கிறாள்: 'அன்புடையோர் நஞ்சைக் கொடுத்தாலும் விரும்பி ஏற்பர். நீ அவளை மணக்க விரும்பாவிட்டாலும், அவ்வுண்மையை உரைத்துவிடு. அதை ஏற்கும் பண்பு எங்களுக்கு உண்டு'. தலைவனை மணப்பது இனிதானதாகவும், அவனை இழப்பது நஞ்சாகவும் தலைவிக்கு விளங்கும் என்பது குறிப்பு. நற்றிணையில் நாகரிகர் என்பது உயர்ந்த பண்பு கொண்டோர் என்ற பொருளில் வந்தது. மேலும் அதில் நஞ்சைக் காதலி மனமுவந்து ஏற்பாள் என்று உண்மையான காதல் அன்பை வெளிப்படுத்தச் சொல்லப்பட்டது. ஆனால் இக்குறளில் அது போன்ற குறிக்கோளோ அல்லது உறவோ கூறப்படவில்லை. எனவே இக்குறளை நற்றிணைப் பாடற்கருத்துடன் ஒப்பிடுவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

சிலர் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் நஞ்சுண்டு அமைவதுடன் இப்பாடற்கருத்தை ஒப்பிடுகின்றனர். சிறைவைக்கப்பட்டு நஞ்சுண்ணல் என்னும் அரசுத் தண்டனை தரப்பட்ட சாக்ரடீஸே இரங்கத்தக்கவர்; அவர் யார்மீது கண்ணோடி அல்லது என்ன நாகரிகம் கருதி நஞ்சருந்தினார்? எனவே அதுவும் பொருந்தி வராது.

மேற்சொல்லப்பட்ட 'இது கண்ணோட்டம் அதிகாரத்திற்குரிய பாடல்தானா?', 'உண்டவருக்கும் பெய்தவர்க்கும் உள்ள உறவு என்ன?', 'நாகரிகம் என்பது கண்ணோட்டம் குறித்ததுதானா?', இங்கு சொல்லப்பட்டுள்ள கொல்நிகழ்ச்சியில் இரங்கத்தக்கதாக ஏதும் இருக்கிறதா?', 'நற்றிணைப் பாடலு(355)டன் இக்குறட்கருத்தை ஒப்பிட்டது சரியா? இப்பாடல் அதிகாரப் பொருத்தும் உடையதுதானா? ஆகிய வினாக்களுக்கு விடை கிடைக்கும்வரை இக்குறளின் உரைத்தெளிவு பெறுதலும் அதிகார இயயைபு காண்பதும் கடினம்.
பொதுநன்மை உண்டென்றால், நாகரிகம் கருதுபவர் தன்னுயிரைக் கொல்லும் தன்மையுள்ள நஞ்சையும் அருந்துவர் எனக் கூறி அமையலாம்.

கண்ணோட்டத்துக்கும் இப்பாடலுக்கும் இயைபு உள்ளதா?

இங்கு சொல்லப்பட்டுள்ள கொன்றன்ன இன்னா செய்யும் நிகழ்ச்சியில் இரங்கத்தக்கதாக ஏதும் இருக்கிறதா? இது கண்ணோட்டம் அதிகாரத்திற்குரிய பாடல்தானா?
என்ன காரணத்திற்காக நஞ்சு பெயப்படுகிறது என்று இக்குறளில் கூறப்படவில்லை. அறிந்தே நஞ்சு தருபவர்மீது, அவர் நண்பராயிருந்தாலும் பகைவராயிருந்தாலும், ஏன் இரக்கம் உண்டாக வேண்டும் என்பது அறியக்கூடவில்லை.
'கண்ணோட்டம்' என்னும் அதிகாரம் உயிர்களிடம் இரக்கம் காட்டப்படவேண்டும் என்பதைச் சொல்வது. அன்பும் அருளும் இணந்த தன்மையை -கண்ணோட்டத்தை-இரக்கப்படுவதை- நாடும் மனம் வேண்டும் என்பதைச் சொல்வதே 'கண்ணோட்டம்' அதிகாரத்தின் நோக்கம். கடுந்தண்டனைக்கு உள்ளானவர் செய்த குற்றத்தின் பின்னணியை ஆராய்ந்து அவர்மீது இரக்கம் காட்டுதல் கண்ணோட்டத்திற்கு அடிக்கடிச் சொல்லப்படும் ஓர் எடுத்துக்காட்டு. இக்குறட்கருத்தைக் கண்ணோட்டத்துடன் எப்படி பொருத்துவது?
கண்ணோட்டம் உடையோர் தங்களது வாழ்க்கையால் பிறருக்குத் துன்பம் விளைகிறது என்று எண்ணினால் தங்களது வாழ்வை முடித்துக் கொள்ளத் தயங்கமாட்டார்கள்; தம்மைத் துன்புறுத்தும் இயல்பினராயினும் அவர் முன் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளல் கண்ணோடியவர்தம் இயல்பாகும் என்று கண்ணோட்டத்துக்கும் இப்பாடலுக்கும் உள்ள இயைபை விளக்கினர். கண்ணோட்டத்தின் இறுதி வரையறையாக நஞ்சுண்டல் கூறப்படுவதாகவும் உரையாசிரியர்கள் விளக்கம் செய்கின்றனர். இவை யாவும் வலுவற்ற காரணங்களாகவும் குறட்பொருளை முழுமையாக விளக்குவனவாகவும் இல்லை.
குறளின் சொல்லமைதியை நோக்கும்போது இரக்கப் படுவதற்கான செய்தி ஒன்றும் இல்லை. கண்ணோட்டம் அல்லாது நாகரிகம் அதாவது நல்ல பண்பு என்று கொண்டாலும் தெரிந்தே கொடுக்கப்பட்ட நஞ்சை, கொடுத்தவர் மனம் நோகக்கூடாது என்ற காரணத்திற்காக, குடித்தல் உயர்ந்த பண்பு என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. எனவே கண்ணோட்டம் அதிகாரத்தில் இப்பாடல் இடம் பெற்றது ஏன் என்பது தெளிவுபடவில்லை. எந்தவகையில் நோக்கினாலும் கண்ணோட்டத்துக்கும் இக்குறளுக்கும் இயைபு உள்ளதாகத் தெரியவில்லை.

இப்பாடலின் உரைக்கருத்தாலேயே கண்ணோட்டம் என்பது 'பழகினவரைக் கண்டால் அவர் சொல்வதை மறுக்க முடியாமை' என்று சிலரால் வரையறை செய்யப்பட்டது. இது பழகினவர் யாது சொல்லினும் அதனைத் தட்டிக்கழிக்காது நன்கு ஏற்றுச் செயல் வேண்டும்; நண்பன் தன் செல்வாக்கால் பிறர்க்குத் தீது இழைக்க வேண்டினும் அவ்வேண்டுகோட்கு இசைவது போன்றவற்றையே கண்ணோட்டம் என்ற சொல் குறிக்கிறது என்று தவறாகப் பொருள் கொள்ள வழி வகுத்தது.

விரும்பத்தக்க நாகரிகத்தை வேண்டுபவர் நஞ்சு ஊற்றிக் கொடுத்தலை நேரில் கண்டும் அதை உண்டு அமைதியுறுவர் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

கண்ணோட்டம் என்பதின் எல்லை எது?

பொழிப்பு

விரும்பத்தக்க நாகரிகம் வேண்டுபவர் நஞ்சு ஊற்றப்படுதலை நேரில் கண்டும் அதை உண்டு அமைதியுறுவர்.