இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0571



கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு

(அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:571)

பொழிப்பு (மு வரதராசன்): கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

மணக்குடவர் உரை: கண்ணோட்டமாகிய பெரிய அழகு அரசன்மாட்டு உண்டானபடியினாலே, இவ்வுலகநடை யாகின்றது.
இஃது அஃதில்லையாயின் உலகங்கெடும் ஆதலால் கண்ணோடவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: கண்ணோட்டம் என்னும் கழி பெருங்காரிகை உண்மையான் - கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்; இவ்வுலகு உண்டு - இவ்வுலகம் உண்டாகாநின்றது.
('கழிபெருங்காரிகை' என்புழி ஒருபொருட் பன்மொழி, இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெருவந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, 'இவ்வுலகுண்டு' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: இரக்கம் என்னும் அழகிய பெரும்பண்பு இருத்தலால் இவ்வுலகம் இருக்கின்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் இவ்வுலகு உண்டு.

பதவுரை: கண்ணோட்டம்-இரக்கம்; என்னும்-என்கின்ற; கழிபெரும்-மிகப்பெரிய, மிகச்சிறப்பான; காரிகை-அழகு; உண்மையான், உள்ளமையால், இருத்தலால், உண்டாகலான்; உண்டு-உளது, இருக்கிறது; இவ்வுலகு-இந்த உலகம்.


கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணோட்டமாகிய பெரிய அழகு;
பரிப்பெருமாள்: கண்ணோட்டமாகிய பெரிய அழகு;
பரிதி: கண்ணோட்டம் என்கிற திருமாது;
காலிங்கர்: கண்ணோட்டம் என்று சொல்லப்பட்ட மிகவும் பெரிய நன்மையாவது;
பரிமேலழகர்: கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு;
பரிமேலழகர் குறிப்புரை: 'கழிபெருங்காரிகை' என்புழி ஒருபொருட் பன்மொழி,

'கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு/திருமாது/பெரிய நன்மை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இரக்கம் என்று கூறப்படும் மிகச் சிறந்த அழகு', 'தாட்சணியம் என்ற மிகப் பெரிய நற்குணம்', 'கண்ணோட்டம் என்று சொல்லப்படுகிற மிகச் சிறந்த அழகு', ''இரக்கம்' என்று சொல்லப்படுகின்ற சிறப்புடைய பண்பு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இரக்கம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு என்பது இப்பகுதியின் பொருள்.

உண்மையான் உண்டிவ் வுலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன்மாட்டு உண்டானபடியினாலே, இவ்வுலகநடை யாகின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அஃதில்லையாயின் உலகங்கெடும் ஆதலால் கண்ணோடவேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அரசன்மாட்டு உண்டானபடியினாலே, இவ்வுலகநடை யாகின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அஃதில்லையாயின் உலகங்கெடும் ஆதலால் கண்ணோடவேண்டுமென்றது. செங்கோன்மை கூறுகின்ற வழிக் கண்ணோடாது முறை செய்க என்று கூறி ஈண்டுக் கண்ணோடுக என்று கூறுதல் மாறுபடக் கூறுதலாம். பிற எனில், அற்றன்று; அது முறை செய்யும் திறன் கூறிற்று. இது உலகத்தார் பலர் ஆதலால் குற்றம் செய்வார் மிகுந்திருப்பர். அதற்கெல்லாம் தண்டம் செய்யின் உலகம் என்பது ஒன்று இல்லையாம். அதற்காகப் பொறுக்க வேண்டுவன பொறுக்க வேண்டும்' என்று கூறிற்று.
பரிதி: உண்டாகில் அரசற்கு உலகம் உண்டு என்றவாறு.
காலிங்கர்: அரசர் முதலிய பெரியோர்மாட்டு உளதாய் வருவதால் உளது இவ்வுலகத்து உயிர்களின் வாழ்க்கை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே, மற்று இவர்கள்மாட்டு அஃது இல்லையாயின் பல உயிர்க்கும் துன்பம் வருவது பொருள் என அறிக. பரிமேலழகர்: அரசர்மாட்டு உண்டு ஆகலான் இவ்வுலகம் உண்டாகாநின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெருவந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, 'இவ்வுலகுண்டு' என்றார். [இன்மை - கண்ணோட்டமின்மை; புல்வாயினம் - மான் கூட்டம்; ஏமம் சாராமை - காப்பிடம் பெறாமை]

'அரசர்மாட்டு உண்டு ஆகலான் இவ்வுலகம் உளது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'உண்டாகில் அரசற்கு உலகம் உண்டு' எனச் சொல்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இருத்தலால்தான் இவ்வுலகம் நடைபெறுகிறது', '(மக்களுக்குள்) இருப்பதனால்தான் இந்த உலகம் இருந்து வருகின்றது', 'அரசரிடத்துக் காணப்படுதலால் இவ்வுலகம் நிலைபெற்றிருக்கின்றது', 'இருப்பதனால் இவ்வுலகம் நிலைத்திருக்கின்றது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இருப்பதனால் இவ்வுலகம் இருக்கின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இரக்கம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த காரிகை இருப்பதனால் இவ்வுலகம் இருக்கின்றது என்பது பாடலின் பொருள்.
'காரிகை' என்ற சொல்லின் பொருள் என்ன?

கண்ணோட்டம் இருத்தலினாலே இந்த உலகம் அழிந்து படாமல் உள்ளது.

இரக்க குணம் என்று சொல்லப்படுகிற மிகச் சிறந்த அழகு இருப்பதனாலேதான் இந்த உலகம் நிலைபெற்றிருக்கின்றது.
கண்ணோட்டம் என்ற சொல்லுக்கு இரக்கம், மன்னிக்கத்தக்கவற்றை மன்னிப்பது, பிறரது துயரம்கண்டு இரங்கும் அடிப்படை மனிதப்பண்பு மற்றும் பெருந்தன்மை, அருட்பார்வை, அன்புப் பார்வை, பழகியவரிடத்தில் நெகிழ்ந்து நடக்கும் பண்பு, பிறர்க்குத் தீங்கு இழைக்காத நட்புதவி, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துத் தாட்சண்யம் காட்டுவது என்று பொருள் கூறுவர்.
இரக்க குணம் உலகிற்கு மிகப்பெரிய அழகு தருகிறது; அந்தச் சிறப்புடைய குணம் இருத்தலால்தான் இந்த உலகம் நிலைத்துநிற்கின்றது. கண்ணோட்டம் என்பது காணப்பட்டார் மீது கண்ஓடும்போது இரக்கப்படுதல் குறித்தது. ஒருவருடைய இரக்கப் பார்வையே பேரழகு என்றும், அப்பார்வை இவ்வுலகில் இருப்பதாலேயே இவ்வுலகம் வாழ்கிறது என்றும் கூறுகிறது இப்பாடல். வெருவந்த செய்யாமை அதிகாரத்துக்குப் பின் இவ்வதிகாரம் வருவதால் ஆட்சியாளர்க்கு அருட்கண்ணோட்டம் மிகத் தேவை என்பதை உணர்த்துவது இது என்பர். ஆனால் 'இவ்வுலகில் இருப்பதால்' என்று பொதுவாகச் சொல்லப்பட்டதால் ஆட்சியாளர்க்கு மட்டுமன்றி அனைத்து மாந்தர்க்கும் கண்ணோட்டம் என்பது இருக்கவேண்டிய பண்பு என்றே கொள்ளவேண்டும். இந்த உலகம் இன்னும் அழிந்து போய்விடாமல் இருப்பதற்கான காரணமே 'கண்ணோட்டம்' என்ற இந்தப்பண்பு தான் எனச் சொல்வதால் வள்ளுவர் இக்குணத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் தருகிறார் என்பதை உணரலாம். உலக இயக்கம் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒழுகுவதாக அமைவதால் கண்ணோட்டம் இல்லையாயின் உயிர்க்குத் துன்பம் நேரும் என்பது அறியப்படவேண்டும். உலகம் பலவகையான மாந்தர்களை உள்ளடக்கியது. அதில் குற்றம் செய்வாரும் பலர். குற்றம் எல்லாம் ஒறுக்கப்படவேண்டும் என்றால் உலகம் என்பது ஒன்று இல்லையாம். அதனால் கண்ணோட்டம் மனித உறவுகள் உராய்வின்றித் தொடர்வதற்கு இன்றியமையாத ஒன்றாகிறது. கண்ணோட்டம் ஒரு பண்பட்ட நலம். அது உயிரோடு பிணைந்து நின்று பேரழகு செய்கிறது. இரக்ககுணம் உள்ளவர்க்கு அதுவே ஒருமுகப் பொலிவான அழகு தருவதால் அதைச் சிறப்புடைய பேரழகு என்ற பொருளில் 'கழிபெரும் காரிகை' என்று கூறப்பட்டது.

உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதுஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே
(புறநானூறு 182 பொருள்: உண்டேகாண் இவ்வுலகம்; இந்திரர்க்குரிய அமிழ்தம் தமக்கு வந்துகூடுவதாயினும் அதனை இனிதென்றுகொண்டு தனித்து உண்டலுமிலர்; யாரோடும் வெறுப்பிலர்;பிறர் அஞ்சத்தகுந் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி அதுதீர்த்தற் பொருட்டு சோம்பியிருத்தலுமிலர்; புகழ்கிடைக்கின் தம்முடைய உயிரையுங்கொடுப்பர்; பழியெனின் அதனான் உலகமுழுதும்பெறினும் கொள்ளார்; மனக்கவற்சி யில்லார்; அப்பெற்றித்தாகிய மாட்சிமைப்பட்ட அத்தன்மையராகித் தமக்கென்றுமுயலாத வலிய முயற்சியையுடைய பிறர் பொருட்டென முயல்வார்உண்டாதலான்) என்று சங்கப்பாடல் கூறியது.
இப்பாடலிலுள்ள 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்ற பகுதியையும் மனத்திற்கொண்டு, அறிவிலாரும் தீமை செய்வாரும் கலந்திருக்கும் இவ்வுலகம் எப்படி நிலைக்கிறது என்று எண்ணிப் பார்த்து உயிர்களுக்கிடையே நிலவும் இரக்க குணமே உலகைக் காக்கிறது என வள்ளுவர் முடிவுக்கு வருகிறார். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன் (குறள் 996 பொருள்: பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது; அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்துபோகும்) எனவும் பின்னர் குறள் கூறும்.

'காரிகை' என்ற சொல்லின் பொருள் என்ன?

'காரிகை' என்ற சொல்லுக்கு அழகு, மாது, நன்மை, பேரழகு, பண்பு, நற்குணம் என்று உரையாசிரியரகள் பொருள் கூறினர்,
அருவமாக உள்ள அறம், ஆக்கம், இன்மை, நாண், சூது, அழுக்காறு போன்றவற்றையும் உருவகமாக்கிக் காட்டுவது வள்ளுவர் வழக்கம். இங்கு காரிகை என்றதை அழகிற்கும், பண்பாகுபெயராய்ப் பெண்ணிற்குமாக ஆளப்பட்டுள்ளது. பொதுவாக காரிகை என்பது அழகான பெண்ணையே குறிக்கும். கண்ணோட்டத்தைக் காரிகையாக உருவகித்தது உலகு அமைந்து வருவதற்கு ஏதுவாக இருப்பதாலும் அவளே உலக வழக்கத்தைப் பெற்று வளர்க்கின்றாளென்பதைக் குறிப்பதற்காகவுமாம்.
பரிமேலழகர் அழகு என்று பொருள் கூறி அதனை 'உயிர் அழகு' எனச் சுட்டி 'உயிருக்கு உறுப்பு அது' என நிலைபேறும் கூறுகிறார்.

ஒரு பொருளைக் குறித்து வரும் பல சொற்கள் ஒரு பொருட் பன்மொழி எனப்படும். இங்கு அழகு என்னும் பொருளுடைய காரிகை என்பதற்கு அடுக்கிவந்த கழி, பெரும் என்னும் ஈரடை சிறப்பு என்னும் ஒரு பொருளைக் குறித்து நின்றமையின் கழி, பெரும் என்னும் இரு சொற்களும் ஒரு பொருட் பன்மொழியாயின என்பர். கழி பெரும் காரிகை என்பது மிகச் சிறந்த அழகு எனப் பொருள்படும்.

‘காரிகை’ என்பதற்கு அழகு என்று பொருள்.

இரக்கம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருப்பதனால் இவ்வுலகம் இருக்கின்றது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கண்ணோட்டம் உலகத்தைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது.

பொழிப்பு

இரக்கம் என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு இருத்தலால்தான் இவ்வுலகம் இருக்கின்றது.