இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0551 குறள் திறன்-0552 குறள் திறன்-0553 குறள் திறன்-0554 குறள் திறன்-0555
குறள் திறன்-0556 குறள் திறன்-0557 குறள் திறன்-0558 குறள் திறன்-0559 குறள் திறன்-0560

கொடுங்கோன்மையாவது கொடுங்கோன்மையால் வரும் குற்றங் கூறுதல். அது முறைமை செய்யாமையும். அருள் செய்யாமையும், பிறர் நலியாமற் காவாமையும், முறைகெடச் செய்தலும் குடிகளுக்குத் தண்டனை ஆராயாது செய்தலும், அல்லவை செய்தலும், குடிகளை இரத்தலும் எனப் பலவகைப் படும்.
- மணக்குடவர்

நடுநிலையில்லாமல் ஆளும் ஆட்சியின் தன்மையைச் சொல்வது கொடுங்கோன்மை. நீதி தவறாத ஆட்சியின் சிறப்பு முந்தைய செங்கோன்மை அதிகாரத்தில் கூறப்பட்டது. எதிர்மறை முகத்தால் அதன் மேன்மை இவ்வதிகாரத்தில் உணர்த்தப்படுகிறது-கல்வி அதிகாரத்தின் பின் கல்லாமை யென்னும் அதிகாரத்தை வைத்தது போன்று. அரசு தன்னுடைய அதிகாரத்தை முறையாகச் செலுத்தி மக்களுக்கு நம்பிக்கையையும், நல்லெண்ணத்தின் பாற்பட்டதும் பாதுகாப்பானதுமான நல்வாழ்க்கையையும் வழங்குவது செங்கோல் ஆட்சி. அவ்வாறில்லாமல் மக்களை வருத்தித் துன்புறுத்தும் அரசு கொடுங்கோல் அரசு.

கொடுங்கோன்மை

நேர்மையில்லா ஆட்சி வளைந்த கோல் போலிருத்தலால் கொடுங்கோல் எனப்படுகிறது. கொடுங்கோலின் தன்மை கொடுங்கோன்மை. அநீதியான ஆட்சி கொடுங்கோலாட்சியாம். இவ்வதிகாரம் கொடுங்கோலரசன் இயல்பும், கொடுங்கோன்மையால் அரசுக்கு வருந்தீங்குகளும், அதனால் குடிகட்கும் நாட்டிற்கும் வரும் நலிவும் கூறுகிறது.
கொடுங்கோல் ஆட்சியாளன் நீதிக்கும் தண்டனைக்கும் உரிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவன். பொது வாழ்வின் நன்மையைக் கருதிக் குற்றவாளிகள் சிலரைத் தண்டித்தல் தலைவனுடைய கடமை. ஆனால் அவனே தன் கடமையையும் பொறுப்பையும் மறந்து, ஆற்றலையும் அதிகாரத்தையுமே நினைந்து, பலரையும் வருத்தத் தொடங்கிக் கொடுமை செய்தால், அவன் கொலையாளிகளைவிடக் கொடியவன் ஆவான். மனம்போன போக்கில் ஒழுகுவதால் அவன் கொலைகாரனைவிடக் கொடியனாகிறான். மக்கட்கு உண்டாகும் சுமையை எண்ணாமல் கொடுங்கோல் அரசு ஆடும் வெறியாட்டத்திற்கு எல்லாம் செல்வம் வேண்டும் என்று வழிப்பறிக் கொள்ளையன் போன்று வரி விதிக்கும் கொள்கையால் நாடு செழிக்காது. நன்கொடை என்ற பெயரில் பொருள் இரப்பதும் கொடாவிடில் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தால் ஒருவர் கொடுப்பதும் பகற்கொள்ளையாகவே முடியும். நாட்டில் என்ன தீங்கு நடக்கிறது என்று அன்றாடம் ஆராயாத அரசு நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டு போகும். கொடுங்கோல் ஆட்சி நடைபெறும் நாட்டைவிட்டு மக்கள் வேறுநாடு செல்வர்; அதனால் அந்நாட்டுச் செல்வமும் அழியும். மேலும் அவ்வரசின் செல்வத்தைக் கொடுங்கோன்மை கண்ட குடிமக்களின் கண்ணீரே படையாகி அழித்துவிடும். ஆட்சியாளன் மற்ற வகையில் ஏதாவது புகழ் கொண்டிருந்தாலும் அது அவனது கொடுங்கோன்மையால் மங்கும். மழை இல்லாத உலகம் எப்படியிருக்குமோ அதுபோல ஆட்சியாளன் கொடுங்கோலனாக இருக்கும்போது நாடு பாலைவனமாகித் துன்பம் தரும். எப்பொழுது தன் செல்வம் அரசால் கவரப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் கொடுங்கோலன் ஆட்சியில் செல்வம் உடைமையும் ஒருவர்க்குத் துன்பம் உடைமையாக மாறிவிடும். முறைதவறிய ஆட்சியாளனது நாட்டில் இயற்கையும் முறை தவறும்; மேகம் மழை பொழிதலத் தவிர்க்கும். தொழில் முனைவோர்க்கு ஆகும் பயன் உண்டாகாது; அவர்கள் ஊக்கம் குன்றுவர், தொழில் அறிவை மறப்பர்.

கொடுங்கோன்மை அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 551ஆம் குறள் குடிகளைத் துன்புறுத்தலைச் செய்து, முறையற்று ஒழுகும் அரசு, கொலைபுரிந்து வாழ்பவரை விடக் கொடிது என்கிறது.
  • 552ஆம் குறள் ஆட்சியதிகாரம் கொண்டுள்ள அரசு முறைகேடாகக் குடிமக்களிடம் பொருள் கெஞ்சிக் கேட்பது வேலைக் கையிலே கொண்டு வழிப்பறி செய்பவன் 'இருப்பதைப் போடு' எனச் சொல்வது போன்றது எனக் கூறுவது.
  • 553ஆம் குறள் ஒவ்வொரு நாளும் நாட்டின் நிகழ்வுகளை மீள்நோக்குற்று முறை செய்யாத ஆட்சியாளரின் நாடு நாளுக்கு நாள் கெட்டுப் போகும் என்பதைச் சொல்வது.
  • 554ஆம் குறள் ஏந்திய கோல் கோணும்படி, உரியவர்களுடன் கலந்து எண்ணாமல், தன் மனம் போனபடி ஆட்சி நடத்துபவனது அரசு, பொருள்களையும் பற்றாய குடிமக்களையும் ஒருசேர இழக்கும் என்கிறது.
  • 555ஆம் குறள் ஆற்றிக் கொள்ள வகையில்லாமல் ஆள்வோரால் துன்புறுத்தப்பட்டு அழுததன் கண்ணீரே அரசின் செல்வத்தைத் தேய்க்கும் கருவியாய் விடும் எனக் கூறுவது.
  • 556ஆம் குறள் அரசு நிலைபெற்று நிற்பது நல்லாட்சியினால்தான். அவ்வாறு இல்லாவிடின், அதன் புகழ்கள் மங்கும் என்கிறது.
  • 557ஆம் குறள் மழைஇல்லாமை உலகத்திற்கு எத்தகைய துன்பம் தருமோ, ஆட்சியாளனின் அருளில்லாத் தன்மை அத்தகைய துன்பம் குடிகளுக்குத் தரும் எனச் சொல்கிறது.
  • 558ஆம் குறள் முறை செய்யாத கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழும்போது பொருளுடைமைகூட வறுமையினும் துன்பம் தரும் என்கிறது.
  • 559ஆம் குறள் முறைசெய்யா ஆட்சியாளன் நாட்டில் பருவ மழை பெய்தலும் முறை மாறும் எனக் கூறுகிறது.
  • 560ஆவது குறள் ஆட்சியாளர் குடிமக்களைக் காக்கத்தவறினால் அவர்களுக்கு உண்டாகும் பயன் குறைந்துபோகும்; எத்தொழில் புரிவோரும் அவரவர் தொழில் அறிவினை இழப்பர் என்கிறது.

கொடுங்கோன்மை அதிகாரச் சிறப்பியல்புகள்

உலகை வெல்ல வேண்டும் என்ற ஆசை உடைய ஆட்சியாளர்கள் அதற்காகப் படைகளைப் பெருக்குவதற்காக பொருளை வலிந்து பறிப்பர். மற்றும் ஆடம்பரத்துக்காகவும் விளம்பரத்துக்காகவும் பொருள் வேண்டித் தகாத முறையில் மக்களிடம் வழிப்பறி போன்று செல்வத்தை இரந்தும் நிற்பர். வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் கோலொடு நின்றான் இரவு(552) என்ற குறள் இதைச் சொல்கிறது. முறையற்று மக்களிடம் பெறும் பொருளை 'இரவு' என்ற சொல்லால் இழிவாகக் குறிப்பிட்டு, கருத்தால் அதனைக் 'களவு' என்கிறது பாடல்.

ஆட்சித் தலைவன் தீயவனாக அமைந்துவிட்டால், முறையான ஆட்சி இல்லாமல் போய்விடும். அரசியலார் தவறான முறைகளைக் கையாண்டு பொருள் தேட முனைவர். மேலிடத்திலிருந்து திரவம் கீழ்நிலைக்கு கசிந்து ஊறிப்பரவுவது போல, அரசு வினைஞர்களும் ஆள்வோரைச் சார்ந்தவர்களும் சேர்ந்து மக்களைச் சுரண்டுவர். இந்த மாதிரி சூழ்நிலையில் குடிகளுக்கு அழுது புலம்புவதைத் தவிர வேறொன்றும் செய்யமாட்டாதவர்களாகி விடுவர்.ஆனால் திக்கற்று வாடும் மக்களின் கண்ணீரே வலிமையுற்றுப் பெரும்படையாகி முறை தவறிய அரசின் வளங்களை அழித்து விடும் என்கிறார் வள்ளுவர். அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை(555) என்பது குறள். கண்ணீரின் ஆற்றலை உணர்த்துவதற்காக அதையே படை என்று எனக் குறிப்பிட்டார் அவர்

கொடுங்கோல் அரசு, பொருள் உடையவரையே தான் விரும்பும் யாவும் தரும்படி வருத்தும். அவர் பொருள் தாராராயின் அக்கொடிய அரசு அவர்களுக்கு அல்லல் பல செய்யும். ஆதலால் 'இன்மையின் இன்னாது உடைமை' என்றார். இனிமைக்கு ஏதுவாய உடைமையும் கொடுங்கோல் மன்னன் நாட்டில் இன்னாததாகி விடுகிறது. குடிகளுக்கு நன்மையைச் செய்யவேண்டிய அதனைச் செய்யாமல் துன்பம் செய்தால், அவ்வாட்சியாளன் கோல்கீழ் வாழ்வதிலும் கடும்புலி வாழும் காட்டில் வாழ்தலே நன்று என எண்ணத் தொடங்குவர். இதை இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின்(558) என்ற பாடல் விளக்குகிறது.

நாட்டில் நல்ல ஆட்சி உள்ளபோது மழை பொழிந்து உதவும் என்று இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு(545) என்ற வள்ளுவர், ஆட்சிமுறை தவறினால் பருவ மழையும் தவறும் என்றும் நம்புகிறார். எனவே முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்(559) என்ற குறள்.




குறள் திறன்-0551 குறள் திறன்-0552 குறள் திறன்-0553 குறள் திறன்-0554 குறள் திறன்-0555
குறள் திறன்-0556 குறள் திறன்-0557 குறள் திறன்-0558 குறள் திறன்-0559 குறள் திறன்-0560