இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0552



வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு

(அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:552)

பொழிப்பு: ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி நின்ற கள்வன் 'கொடு' என்று கேட்பதைப் போன்றது.

மணக்குடவர் உரை: தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல்.
கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.

பரிமேலழகர் உரை: வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத்தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், இடு என்றது போலும் - ஆறுசெல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடுஒக்கும், கோலொடு நின்றான் இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல்.
('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால்ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மைஆயிற்று,இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையதுகுற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: கோலுடைய அரசன் குடிகளிடம் பொருள் கேட்டல் வேலுடைய திருடன் கெஞ்சுவதை ஒக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கோலொடு நின்றான் இரவு வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் .

பதவுரை:
வேலொடு-வேலுடன் (வேலாயுதத்துடன்); நின்றான்-நின்றவன்; இடு-தா; என்றது-என்று வேண்டுதல்; போலும்-போன்றது; கோலொடு - (ஆட்சிக்கோலை ஏந்தி)ஆட்சி அதிகாரத்தோடு; நின்றான்-நின்றவன்; இரவு-வேண்டுதல்.


வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்;
பரிப்பெருமாள்: தனியிடத்தே வேலொடு நின்றவன் நின் கையிலுள்ளன தா வென்றல்போலும்;
பரிதி: வேல்கொண்டு நடுக்காட்டிலே பறிக்கிற வேடற்கு ஒக்கும்;
காலிங்கர்: தான் கைப்பற்றிய மூவிலை வேலொடு நின்றான் ஒரு மூர்க்கன் அதனை ஓங்கி, 'வேலே கடிதின் கொணர்ந்திடுபலி' என்றதனை ஒக்கும்;
பரிமேலழகர்: ஆறலைக்கும் இடத்துத்தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், ஆறுசெல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடுஒக்கும்;

'தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா என்றல் போலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் மட்டும் முற்றிலும் மாறுபாடான உரை ஒன்று தருகிறார்- வேலொடு நின்றான் என்பதை வெறியாடும் வேலன் எனக் கருதியதால்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேலைக் கையிலே கொண்ட ஆறலை கள்வன் வழிப்போக்கனிடம் 'உன் கைப்பொருளைக் கொடு' என்று சினந்து கேட்டல் போலும்', 'ஆயுத பலத்தோடு மறைந்து நின்ற வழிப்பறிக்காரன் திடீரென்று தோன்றி உள்ளதையெல்லாம் போடு என்று கேட்பதற்குச் சமானம்', 'தனி வழியிலே வேல் வைத்துக் கொண்டு நின்ற கள்வன் வழிச்செல்வானை நோக்கி நின் பொருளைத் தா வென்று கேட்டது போலாகும்', 'வழிப்பறி செய்யும் திருடன் தனி இடத்தில் வேலொடு நின்றுகொண்டு 'உன் கைப்பொருளைக் கொடு' என்று கூறுதலோடு ஒக்கும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வழிப்பறி செய்யும் கள்வன் வேல் என்னும் கொலைக்கருவியோடு நின்றுகொண்டு 'இருப்பதைப் போடு' என்று சொல்வதோடு ஒக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

கோலொடு நின்றான் இரவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல்.
மணக்குடவர் குறிப்புரை: கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.
பரிப்பெருமாள்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பானோடு ஒக்குமென்றவாறு.
பரிதி: கொடுங்கோல் மன்னவன் கொள்ளுகிற கடமை.
காலிங்கர்: யாது எனின், தான் கைக்கொண்டு செலுத்துகின்ற கொடுங்கோலோடு நின்ற மூர்க்கனாகிய அரசன் மற்று ஒருவனை, 'நீ எமக்கு இத்துணைப்பொருள் தரவேண்டும்' என்று இரக்கும் இரவானது என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மற்றும் உலகத்துச் சிலர் தாம் வேறு பலி வேண்டுதலும் இடுபலி அடுதலும் முறைமையாகலான், அதுபோல அரசரும், தாம் பெறு கடன் வேண்டுதலும், இடுகடன் இடுதலும் முறைமையாகலான், இவ்வாறு அன்றி ஒருவன் வந்து வலிதின் அடர்த்தலும், பிறர் அஞ்சி வந்து ஒன்று இடுதலும் போலும், ஆறில் ஒன்றாகிய செங்கோல்நெறி அன்றி அயிதம் கொள்ளும் கொடுங்கோன்மையும் என்பது பொருளாயிற்று என அறிக.
பரிமேலழகர்: ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால்ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மைஆயிற்று,இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையதுகுற்றம் கூறப்பட்டது.

'முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோரும் 'கொடுங்கோல் மன்னவன் கொள்ளுகிற கடமை' என்று பரிதியும் கொடுங்கோல் அரசன் 'நீ எமக்கு இத்துணைப்பொருள் தரவேண்டும்' என்று இரக்கும் இரவு' என்று காலிங்கரும் 'ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல்' என்று பரிமேலழகர் என்றும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முறை செய்தலை மேற்கொண்ட மன்னன் குடிமகனிடம் வரிக்குமேல் பொருள் வேண்டுதல்', 'அரசாட்சியின் பலங்களோடு கூடிய கொடுங்கோல் மன்னவன் தன் குடிகளிடத்தில் திடீரென்று பொருள் கேட்பது', 'தண்டிக்கும் முதன்மையுடைய அரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல்', 'ஆளும் அரசன் தன் ஆணையால் பொருள் கொள்ள வேண்டுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆட்சிக்குரிய கோலை ஏந்தியுள்ள அரசு குடிமக்களிடம் பொருள் வேண்டுவது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆட்சிக்குரிய கோலை ஏந்தியுள்ள அரசு குடிமக்களிடம் பொருள் இரந்து கேட்பது வழிப்பறி செய்யும் கள்வன் வேல் என்னும் கொலைக்கருவியோடு நின்றுகொண்டு 'இருப்பதைப் போடு' என்று சொல்வதோடு ஒக்கும் என்பது பாடலின் பொருள்.
'இரந்து' கேட்பது எப்படிக் கொடுங்கோன்மையது குற்றம் ஆகும்?

ஆட்சியதிகாரம் கொண்டுள்ள அரசு முறைகேடாகக் குடிமக்களிடம் பொருள் கெஞ்சிக் கேட்பது வேலைக் கையிலே கொண்டு வழிப்பறி செய்பவன் 'இருப்பதைப் போடு' எனச் சொல்வது போன்றது.

வேல் என்ற கொலைக்கருவியுடன் வழிப்பறி செய்வதைப் போன்றது ஆட்சிக்கோலை ஏந்தியுள்ள அரசு மக்களிடம் முறையற்ற வகையில் பொருள் பெறுவது.
அரசு நிர்வாகத்திற்குப் பொருள் தேவை. மக்கள் நலம் பேணுவதற்காகவே அப்பொருள் பயன்படுத்தப்படுவதால் அது மக்களிடமிருந்தே பெறப்படும். அதைப் பெறுவதற்கு, முறையான வரி, தீர்வை போன்ற முறைமைகள் உள்ளன. பொதுவாக இது ஒருவரது வருவாயில் ஆறில் ஒரு பங்காக இருக்கும். இது குடிமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசுக்குச் செலுத்தப்படும். ஆனால் வறிதே ஆள்வோரது ஆடம்பரச் செலவுகளுக்காகவும், கேளிக்கைகளுக்காகவும் குறிக்கோளும் பயனும் இன்றி கருவூலத்தைக் கரைத்துவிட்டு பொருள் தேவைக்காக, அரசுக்குரிய வரி போன்றவற்றை செலுத்திவிட்ட பின்னரும் மக்களிடம் சென்று இருப்பதைக் கொடுங்கள் என்று இரந்து நிற்கும் அரசை என்னவென்று சொல்வது? அதை ஒரு உவமைவழி இக்குறளில் வள்ளுவர் விளக்குகிறார். அப்படி பொருள் வேண்டுவது வேலைக் கையில் ஏந்தி வழிச் செல்வோருடன் 'உள்ளதைக் கொடு' என்று வழிப்பறிக்காரன் சொல்வது போல் இருக்கிறதாம். அதாவது அது பயமுறுத்தி பணம் கறக்கும் செயல் ஆகும். கையில் கொலைக்கருவியை வைத்துக் கொண்டு யாரும் பிச்சை கேட்கமாட்டர்கள். உன்கையில் உள்ளதைக் கொடுக்காவிட்டால் துன்புறுத்தப்படுவாய் என்ற அச்சுறுத்தலின் பேரிலேயே பொருள் வேண்டுகிறான் வேலொடு நின்றவன். அது போலவே அரசு கேட்பதைத் தராவிட்டால் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற மறைமுக எச்சரிக்கையுடன் 'நன்கொடை' என்ற பெயரில் அரசு குடிகளிடம் பணவேட்டையாடுவதும் ஓர் கொடுங்கோல் செயல்தான் எனச் சொல்கிறார் வள்ளுவர்.

தனக்குச் சேரவேண்டிய வரி அல்லாத பிற பொருள்களை அரசு மக்களிடத்தில் வேண்டிப் பெறுவது கொடுங்கோன்மை ஆகும் என்பது இக்குறளின் பொருள். ஆட்சியர் குடிமக்களிடம் முறையோடு இறுக்கும் இறையன்றி வேறு பொருளை எதிர்பார்த்தல் தகாது என்பதைப் படிப்போரின் உள்ளத்தில் பொருத்தமான உவமைவழி நன்றாக பதியவைத்து, கொடுங்கோலாட்சியின் இழிசெயலான இரத்தலையும் சாடிற்று. வேலொடு நின்றான், கோலொடு நின்றான் இருவருமே காக்கும் கருவியேந்தியவர்தாம் என்றாலும், மக்கள் தராதிருந்தால் அவர்களுக்குத் துன்பம் தரவும் தயங்காத கொடிய உள்ளம் கொண்டவர்கள்; கொடாவிடில் துன்புறுத்துவோம் என்பதில் மட்டுமல்ல; கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைக்காது என்பதிலும் வேலொடு நின்ற கள்வனும், கோலொடு நின்ற மன்னனும் செயலொடு ஒத்து நிற்பது உய்த்துணரத் தக்கது.
மக்களை அச்சுறுத்தி வருவாய் தேடும் ஆட்சியாளரைக் கள்வர் என்கிறது இக்குறள். கள்வனும் குடிமக்களிடமிருந்து பொருள்களை நாடும் அரசியலாரும் ஒருநிலையில் வைக்கப்படுகின்றனர். கள்வன் தண்டிக்கப்படவேண்டியவன் ஆவான். அதே போன்று அரசினர் குடிமக்களிடமிருந்து தம்முடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொருளைப் பெறுவாராயின் அது குற்றத்தின் பாற்படுவதாகும் என்பதும், அவரும் தண்டனைக்குரியவரே என்பதும் மறை பொருளாக உள்ளது.

'இரந்து' கேட்பது எப்படிக் கொடுங்கோன்மையது குற்றம் ஆகும்?

இப்பாடலிலுள்ள 'இரந்து' என்ற சொல்லுக்கு நின்று இரத்தல், 'நீ எமக்கு இத்துணைப்பொருள் தரவேண்டும்' என்று இரக்கும் இரவு, பொருள் வேண்டுதல், பகுதியில்லாமலப் பொருள்களைக் கேட்கிறது, மேன்மேலும் பொருளை இரந்து நிற்பது, கெஞ்சுவது, சினந்து கேட்டல், பயமுறுத்திக் கேட்பது, கேட்டது, யாசிப்பது என உரையாளர்கள் பொருள் கூறினர்.

ஆட்சியில் உள்ளோர் செவ்வை செய்வாரைப் போன்று நின்று வருவோர் போவோரிடம், கையிருப்புகளைத் தந்துவிட்டுச் செல்லுமாறு இரப்பதாக உள்ளது பாடல். கையில் வேல் கொண்டு நின்று வழிச் செல்வோரிடம் 'உன்னிடமுள்ள பொருளை வெளியே எடுத்துவை' என்று கேட்பது இரவு என்றா ஆகும்? அல்ல. அஃது அச்சுறுத்தித் துன்பம் தரும் வழிப்பறியேயாம். அதுபோலத்தான் அதிகாரம் பெற்றுள்ள அரசு குடிமக்களிடம் நெருக்கி 'இரந்து' கேட்பதும். கொடுக்காவிட்டால் அவர்கள் குடியை அரசு கெடுத்துவிடும் என்ற பயத்தால் கையில் இருப்பதைக் கொடுத்துவிடுவார்கள்.
அரசு மக்களிடம் கொடுங்கோன்மையாற் பெற்ற செல்வம் எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும், அது இரந்து பெற்ற இழிந்த செல்வமேயாகும் என்கிறார் வள்ளுவர். முறையற்று மக்களிடம் பெறும் பொருளை 'இரவு' என்ற சொல்லாற் குறிப்பிட்டு, கருத்தால் அதனைக் 'களவு' என்று காட்டுகிறார் அவர். இரவு என்றதனால் இறைப் பொருள் (வரி) அல்லவாயிற்று. பல்லெலாந் தெரியக் கெஞ்சுவதுபோல் வேண்டிக் கேட்டாலும் தராவிட்டால் ஒறுக்கப்படுவோம் என்ற அச்சுறுத்தல் குறிப்பால் அறியப்படுதலால் இரத்தலும் கொடுங்கோலாயிற்று. முறை விடுத்து அரசியலார் செல்வர்/செல்வமில்லாதார் என்ற பாகுபாடின்றி நேரடிப் பொருள் கேட்பது கொடுங்கோன்மை எனப்பட்டது.

ஆட்சிக்குரிய கோலை ஏந்தியுள்ள அரசு குடிமக்களிடம் பொருள் வேண்டுவது வழிப்பறி செய்யும் கள்வன் வேல் என்னும் கொலைக்கருவியோடு நின்றுகொண்டு 'இருப்பதைப் போடு' என்று சொல்வதோடு ஒக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வருவாய்க் கொள்கை கொள்ளைபோல் தோன்றினால் அது கொடுங்கோன்மைக் கூறாகிவிடும்.

பொழிப்பு

ஆட்சிக்குரிய கோலை ஏந்தியுள்ள அரசு குடிமக்களிடம் பொருள் இரப்பது வழிப்பறி செய்யும் வேலுடைய கள்வன் 'இருப்பதைக் கொடு' என்று சொல்வதோடு ஒக்கும்.