கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து
(அதிகாரம்:கொடுங்கோன்மை
குறள் எண்:551)
பொழிப்பு (மு வரதராசன்): குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன்.
|
மணக்குடவர் உரை:
கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன், அலைத்தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன்.
பரிமேலழகர் உரை:
கொலை மேற்கொண்டாரின் கொடிது - பகைமை பற்றிக் கொல்லுதல்தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன், அலைமேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும்வேந்து - பொருள்வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறைஅல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன்.
(அவர் செய்வது ஒருபொழுதைத் துன்பம், இவன் செய்வது எப்பொழுதும்துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால்மயக்கு உறழ்ச்சி .'வேந்து' என்பது உயர்திணைப்பொருட்கண் வந்த அஃறிணைச் சொல். 'அலை கொலையினும் கொடிது'என்பதாயிற்று.)
வ சுப மாணிக்கம் உரை:
குடிகளை வருத்தித் தீமை புரியும் வேந்தன் கொலையாளியினும் கொடியவன்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து, கொலைமேற்கொண்டாரின் கொடிதே .
பதவுரை: கொலை மேற்கொண்டாரின்-கொலை செய்து வாழ்பவரை விட; கொடிதே-கொடியதே; அலை மேற்கொண்டு-துன்புறுத்தலை மேற்கொண்டு; அல்லவை-முறையல்லாதவை, நீதி அல்லாதவை; செய்து-இயற்றி; ஒழுகும்-நடந்து கொள்ளும்; வேந்து-அரசு.
|
கொலைமேற்கொண் டாரின் கொடிதே:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன்;
பரிதி: கொலைத்தொழிற் மேலான வேடரினும் கொடியன்;
காலிங்கர்: அதனைப் பிறர் நோவுக்கு இரங்காது கொலைத் தொழிலை என்றும் கொண்டொழுகும் கொடுவினையாளரினும் சாலக் கொடிதே; [நோவுக்கு-துன்பத்திற்கு: சால-மிக]
பரிமேலழகர்: பகைமை பற்றிக் கொல்லுதல்தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன்;
'கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி கொலைத்தொழில் மேற்கொண்ட வேடர் எனக் குறிக்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'கொலைத் தொழிலை மேற்கொண்டொழுகுவானை விடக் கொடியவன்', 'கொலைகாரர்களைக் காட்டிலும் கொடியவன்', 'கொலைத் தொழிலைச் செய்தொழுகுவாரைப் பார்க்கிலுங் கொடியன்', 'கொல்லுதல் தொழிலை மேற்கொண்டாரைவிடக் கொடியன் ஆவான் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கொலைத்தொழில் புரிந்து வாழ்வு நடத்துவதைக் காட்டிலும் தீயதே என்பது இப்பகுதியின் பொருள்.
அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அலைத்தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன்.[அலைத்தல்-வருத்துதல்]
பரிதி: குடிகளை மிடைசெய்யும் அரசன் என்றறிக; [மிடைசெய்யும்-வருத்தும்]
பரிதி குறிப்புரை: எப்படி என்றால் வேடன் பறித்துக் கொண்டு விட்டுவிடுவன்; இவன் தண்டங் கொண்டும் பிழைக்கிற வாக்கிலே போகவொட்டாமல் காவல் செய்கையால் என்றவாறு. [பிழைக்கிற வாக்கிலே-பிழைக்கிற வழியிலே]
காலிங்கர்: யாது எனின், தன் கோல்கீழ் வாழும் குடிகளை அவர்கள் நோவு அறியாது அலைத்தலை ஏன்றுகொண்டு முறையல்லனவற்றைச் செய்து அங்ஙனம் ஒழுகும் வேந்தனானவன் என்றவாறு.[ஏன்றுகொண்டு-ஏற்று]
பரிமேலழகர்: பொருள்வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறைஅல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன்.
பரிமேலழகர்: அவர் செய்வது ஒருபொழுதைத் துன்பம், இவன் செய்வது எப்பொழுதும்துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால்மயக்கு உறழ்ச்சி .'வேந்து' என்பது உயர்திணைப்பொருட்கண் வந்த அஃறிணைச் சொல். 'அலை கொலையினும் கொடிது' என்பதாயிற்று.
'குடிகளை வருத்தி நீதியல்லாதனவற்றை செய்து ஒழுகுகின்ற அரசன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொருளை விரும்பிக் குடிமகனை வருத்தித் தீமை புரிந்தொழுகும் அரசன்', 'குடிகளைத் துன்பப்படுத்திக்கொண்டு அரசனுக்குத் தகாத காரியங்களைச் செய்து வாழும் வேந்தன்', 'குடிகளை வருத்துந் தொழிலை மேற்கொண்டு நீதி இல்லாதவற்றைச் செய்தொழுகும் வேந்தன்', 'மக்களை வருத்தும் தொழிலை மேற்கொண்டு முறை அல்லாதனவற்றைச் செய்து ஆளும் அரசன் ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
குடிமக்களை வருத்துவதைஏற்று முறை அல்லாதனவற்றைச் செய்வதை ஒழுக்கமாகக் கொண்ட அரசு என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
குடிமக்களை வருத்துவதைஏற்று அல்லவை செய்தொழுகும் அரசு கொலைத்தொழில் புரிந்து வாழ்வு நடத்துவதைக் காட்டிலும் தீயதே என்பது பாடலின் பொருள்.
'அல்லவை செய்தொழுகும்' குறிப்பது என்ன?
|
தன் நாட்டு மக்களைத் துன்புறுத்தலை வழக்கமாகக் கொண்டுள்ள ஆட்சியாளனும் கொலைகாரனும் ஒன்றுதான்.
குடிகளை வருத்தி முறையில்லாத செயல்களைச் செய்து நடந்துகொள்ளும் அரசு கொலைகாரர்களை விடக் கொடியது ஆகும்.
எந்த உயிரையும் கொல்லுதல் அறமல்லாத செயல்; மனித உயிரை உடம்பின் நீக்குதல் தீச்செயல்.
கொல்லுதலையே வாழ்க்கைமுறையாக மேற்கொள்ளுதல் கொடியது; அதனினும் கொடியது குடிமக்களை வாட்டி வதைக்கும் அரசின் செயல்பாடுகள் என்கிறது இக்குறள்.
இங்கு வேந்து, கொடிது என்று அஃறிணையாகக் கூறப்பட்டது. வேந்து என்பது அரசு அதாவது நாட்டுத்தலைவன், அமைச்சர்கள், அரசுப்பணி செய்யும் சிறு பெரு ஊழியர்கள் அனைவரையும் ஒருங்கு சேர்த்த அரசுமுறையைக் குறிக்கும். இக்குறள் கொடுங்கோன்மை அதிகாரத்துள்ளது. கொடுங்கோன்மை என்று அறியத்தக்க செயல்களை நாட்டுத் தலைவன் ஒருவனால் மட்டும் செய்யமுடியாது. ஆனால் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க வேண்டியவன் அவனே. மேலிடத்திலிருந்து நீர்மம் கீழ்நிலைக்குக் கடந்து ஊறிப்பரவுவது போல ஆட்சியாளனது குணப்பண்புகளும் அரசு வினைஞர்களுக்குள்ளும் ஊடுருவியே நிற்கும். அரச அமைப்பே முறையற்றுச் செயல்படும்போது அது கொடுங்கோன்மை ஆகிறது. இது முடியாட்சி, குடியாட்சி என எந்த ஆட்சிமுறைக்கும் பொருந்தும். அரசு தொடர்பான எந்தப் பணியாளரும் முறைதவறி நடக்கும்போது அது நடுவுநிலை பிறழ்ந்து கொடுங்கோன்மைக் கூறாக உருவெடுக்கும். ஆள்பவரே தம் கடமையையும் பொறுப்பையும் மறந்து, அரசின் ஆற்றலையும் அதிகாரத்தையுமே நினைந்து, பலரையும் வருத்தத் தொடங்கிக் கொடுமை செய்தால், அவர் கொலைசெய்து ஒழுகுபவரைவிடக் கொடியவர் ஆகிறார்.
இப்பாடலில் 'அலை' என்பது இன்று நாம் 'அலைக்கழித்தல்' என்ற சொல்லை எவ்வாறு புரிந்துகொள்கிறோமோ அப்பொருளில் வந்துள்ளது. அலைத்தல் அதாவது 'வருத்துதல் அல்லது கொடுமைப்படுத்துதல் என்ற பொருள் பொருந்தும்.
கொலைமேற்கொண்டார் என்ற சொல் கொலைபுரிதலைத் தொழிலாகவோ பகைமையினாலோ மேற்கொண்டு ஒழுகுபவரைக் குறிக்கும்.
கொலைசெய்தொழுகுபவனை விட கொடுங்கோல் ஆட்சியாளன் தீயவன் என்கிறது பாடல். 'மேற்கொள்ளல்' என்பது ஏதாவதொரு தன்னல நோக்கம் எண்ணிப் புதிதாக ஏறிட்டுக் கொள்ளுதலைக் குறிப்பது. பகைமை, பொருள் முதலியன கருதிக் கொலை மேற்கொள்வாரினும், தன் விருப்பத்திற்காகக் குடிகளை வருத்துதலை மேற்கொள்ளுங் கொடுங்கோலன் கொடியன். கொலை செய்வோரால் நேரும் துன்பம் ஒரு பொழுதே. கொடுங்கோலரசு என்றும் துன்பம் தந்து வாழவிடாமல் செய்துவிடுவதால், கொலை மேற்கொண்டாரினும் அது கொடியது எனச் சொல்லப்பட்டது. கொடுங்கோல் ஆட்சியாளனுக்கு அறநெறி அறவே இல்லாமையால், அவன் செய்யும் கொடுமை பன்மடங்கு பெரிதாகின்றது.
|
'அல்லவை செய்தொழுகும்' குறிப்பது என்ன?
'அல்லவை செய்தொழுகும்' என்ற தொடர்க்கு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற, முறைஅல்லவற்றைச் செய்து ஒழுகும், முறையல்லனவற்றைச் செய்து அங்ஙனம் ஒழுகும், முறையல்லாதவற்றைச் செய்து ஒழுகுகின்ற, தீமை புரியும், தீமை புரிந்தொழுகும், (அரசு முறைக்குத்) தகாதவற்றைச் செய்வதே தொழிலாக உள்ள, தீமைகளைச் செய்துவாழும், நீதி இல்லாதவற்றைச் செய்தொழுகும், முறை அல்லாதனவற்றைச் செய்து ஆளும், நீதியற்ற செயல்கள் புரியும், அறமல்லாதவற்றைச் செய்து நாடாளும், முறையல்லாதவற்றைச் செய்தொழுகும், தீய காரியங்களைச் செய்யும் என உரைகாரர்கள் பொருள் கூறினர்.
அல்லவை என்பது முறையற்றவற்றையும், நெஞ்சு நடுங்கும் தீச்செயல்களையும் குறித்தது. 'அல்லவை செய்தொழுகும்' என்றது நினைத்து நினைத்து, இடைவிடாமல், தொடர்ந்து தீமைகளைச் செய்வதையே ஒழுக்கமாகக் கொண்ட என்ற பொருள் தரும்.
கடுமையான வரிச்சுமை, அடக்குமுறைகள், நடுநிலையற்ற தண்டனைகள், தேவையற்ற போர்கள் முதலியன அரசுவழி ஏற்படும் அல்லவைக்குக் காட்டுகளாகும்.
மனிதஉரிமை மீறும் செயல்களான தகுந்த காரணமின்றிக் குடிகளைக் கைது செய்தல், காரணம் விளக்கப்படாமை, நெருங்கிய தொடர்புடையார்க்கு அறிவிக்காதது, விசாரணை என்ற பெயரில் வன்கொடுமைகளுக்கு ஆளாக்குதல்/இறப்பு நேரிடல் போன்ற அஞ்சத்தக்க செயல்களும் 'அல்லவை' என அறியப்படும். ஆட்சியாளருக்குத் தகுதியில்லாத செயல்களைச் செய்வன எல்லாம் அல்லவை.
|
குடிமக்களை வருத்துவதை ஏற்று முறை அல்லாதனவற்றைச் செய்வதை ஒழுக்கமாகக் கொண்ட அரசு கொலைத்தொழில் புரிந்து வாழ்வு நடத்துவதைக் காட்டிலும் தீயதே என்பது இக்குறட்கருத்து.
குடிமக்களை கலக்கஞ் செய்து ஆள்வது கொடுங்கோன்மையாம்.
குடிமக்களை வருத்தி முறையற்றனவற்றை ஒழுக்கமாக ஏற்ற அரசு கொலைசெய்து உயிர்வாழ்வதைவிடக் கொடியது.
|