இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0557துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்
அளிஇன்மை வாழும் உயிர்க்கு

(அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:557)

பொழிப்பு: மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி

மணக்குடவர் உரை: உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது; அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு.
இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: 'துளி' இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும், அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு.
(சிறப்புப்பற்றி 'துளி' என்பது மழைமேல் நின்றது. 'உயிர்' என்பது குடிகள்மேல் நின்றது. மேல் 'வான் நோக்கி வாழும்' என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.)

சி இலக்குவனார் உரை: மழை பெய்யாமல் இருத்தல் உலகத்திற்கு எத்தகைய துன்பத்தைக் கொடுக்குமோ; அத்தகைய துன்பத்தை அரசனுடைய இரக்கம் இன்மை நாட்டு மக்கட்குக் கொடுக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன் அளிஇன்மை வாழும் உயிர்க்கு.


துளிஇன்மை ஞாலத்திற்கு எற்று:
பதவுரை: துளி-மழை; இன்மை-இல்லாதிருத்தல்; ஞாலத்திற்கு-உலகத்துக்கு; எற்று-எத்தன்மையது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது;
பரிதி: மழை இல்லாதபோது பூமி எப்படித் துயருறும்;
காலிங்கர்: பருவத்து வந்து பெய்யும் மழையில்லாமை இவ்வையகத்துக்குப் பெருமையில்லாதது எத்தன்மைத்து, மற்று அத்தன்மைத்து;
பரிமேலழகர்: மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும்;
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்புப்பற்றி 'துளி' என்பது மழைமேல் நின்றது.

'மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மழையின்றேல் உலகம் என்னாகும்?', 'மழையில்லாமை உலக உயிர்க்ளுக்கு எவ்வகைத் துன்பம் தருமோ', 'உலகத்துக்கு மழையில்லாமை எப்படியோ', 'மழை இல்லாமை உலகத்தார்க்கு எவ்வாறு துன்பம் பயக்குமோ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மழை இல்லாமை உலகத்துக்கு எவ்வாறு துன்பம் பயக்குமோ என்பது இப்பகுதியின் பொருள்.

அற்றே வேந்தன் அளிஇன்மை வாழும் உயிர்க்கு:
பதவுரை: அற்றே-அத்தன்மைத்தே; வேந்தன்-மன்னவன்; அளி-அருள்; இன்மை-இல்லாதிருத்தல்; வாழும்-வாழ்கின்ற; உயிர்க்கு-உயிருக்கு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.
பரிதி: அத்தன்மையின் அரசன் செங்கோல் கோணின் மண்டலம் என்றவாறு.[மண்டலம் - பூமி]
காலிங்கர்: யாது எனின் வேந்தனது தண்ணளி இல்லாமையாகிய கொடுங்கோன்மை. மற்று ஈண்டு வாழும் உயிர்கட்கு என்றவாறு.[தண்ணளி-அருள்]
பரிமேலழகர்: அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு.
பரிமேலழகர் குறிப்புரை: 'உயிர்' என்பது குடிகள்மேல் நின்றது.மேல் 'வான் நோக்கி வாழும்' என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.

'அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசனது அன்பின்றேல் குடிகள் வாழுமா?', 'அவ்வகைத் துன்பம் தரும், அரசனது அருளில்லாமை நாட்டில் வாழும் குடிமக்களுக்கு', 'அப்படிப்பட்டது அரசனுடைய அன்பின்மை அவனுடைய குடிகளுக்கு', 'அவ்வாறே, அரசன்கீழ் வாழும் உயிர்களுக்கு அவன் அருள் இல்லாதிருப்பது துன்பம் பயக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவ்வாறே, ஆட்சியாளன் அருள் இல்லாதிருப்பது அந்நாட்டில் வாழும் உயிர்களுக்குத் துன்பம் பயக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மழைஇல்லாமை உலகத்திற்கு எத்தகைய துன்பம் தருமோ, ஆட்சியாளனின் அருளில்லாத் தன்மை அத்தகைய துன்பம் குடிகளுக்குத் தரும்.

மழை இல்லாமை உலகத்துக்கு எவ்வாறு துன்பம் பயக்குமோ அவ்வாறே, ஆட்சியாளன் அளியின்மை குடிகளுக்குத் துயரம் தரும் என்பது பாடலின் பொருள்.
'அளியின்மை' குறிப்பது என்ன?

துளியின்மை என்ற சொல்லுக்கு மழை இல்லாமை என்பது பொருள்.
ஞாலத்திற்கு என்ற சொல் உலகத்துக்கு என்ற பொருள் தரும்.
எற்று அற்றே என்ற தொடர் எத்தகையதோ அத்தகையது என்ற பொருள் தருவது.
வேந்தன் என்றது ஆட்சியாளன் குறித்தது.
வாழும் உயிர்க்கு என்ற தொடர் வாழ்கின்ற குடிகளுக்கு எனப்பொருள்படும்.

மழை இல்லாது போனால் உயிர்கள் துன்புறும். அதுபோலவே ஆட்சியாளர் இரக்கம் இல்லாவிடில் மக்கள் மிக்க துயருறுவர்.

முந்தைய செங்கோன்மை அதிகாரத்தில் வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி (542) என்ற குறளில் மழையை நோக்கி வாழும் உலக உயிர்கள் போல், ஆட்சியாளன் செங்கோன்மையை நம்பி மக்கள் வாழ்கின்றனர் என்று சொல்லப்பட்டது. இங்கு அக்கருத்து எதிர் மறையில் கூறப்பட்டிருக்கிறது. அருளில்லாத ஆட்சியாளன் நாட்டில் வாழ்வது மழையில்லா நாட்டில் வாழ்வது போன்றது என்கிறது இப்பாடல். மக்களிடம் அருள் காட்டாத கொடுங்கோன்மை ஆட்சியானது மழை இல்லாத உலகு போன்றது என்று மழையும் அரசாட்சியும் இயைபுபடுத்தப்பட்டது. வான்மழை பொய்த்தால் உயிர்கள் வாடுவதைப்போல் கொடுங்கோல் ஆட்சியில் குடிகள் துன்புறுவர். ஆட்சியாளரது அளியின்மைக்குத் துளியின்மையைத் திருவள்ளுவர் உவமையாகக் காட்டியதால், நாட்டுத்தலைவன் இரக்கத்தால் பயன் கருதாது வழங்கவேண்டும் என்பது கருத்தாகிறது. 'மழையின்மையால் வையத்துப் பசி வருத்துவது போல, அளியின்மையால் உலகத்துப் பஞ்சமும் பிணியும் தீயர் செயலும் வருத்தும். மழை குன்றியதால் உழவர் செயல் செய்யாதவாறு போல, அளியின்மையால் குடிகள் தத்தம் தொழிலைச் சரிவரச் செய்யாமையான் நாட்டு வருவாய் குன்றும். தானம் தவம் இரண்டும் தங்கா; அளியின்மையால் மாதவர் நோன்பும் மடவார் கற்பும் இல்லை யாகும். அதனால், மழையின்மை வையத்திற்கு எற்று அற்று அளியின்மை' என்பது இக்குறளுக்கான் தண்டபாணி தேசிகர் கருத்துரை.

துளி என்பது நீரியப் பொருளின் சிறுபகுதியை உணர்த்துவது. இங்கு எந்தத் துளி என்று சொல்லப்படவில்லையென்றாலும், ஞாலத்திற்கு என்ற குறிப்பால் அது வான்துளியை அதாவது மழையையே சிறப்பாக உணர்த்திற்று. அதுபோலவே, உயிர் என்பது அனைத்துயிர்களையும் குறிக்குமாயினும் அரசின் கருணையைப் பெற்று மீள்பவர் மக்களேயாதலின் உயிர் என்ற சொல் குடிமக்களை உணர்த்தும்.

'அளியின்மை' குறிப்பது என்ன?

'அளியின்மை' என்ற தொடர்க்கு அருளிலனாதால், தண்ணளி இல்லாமையாகிய கொடுங்கோன்மை, தண்ணளியில்லாமை, தண்ணளியாம் கருணையின்மை, பேணுதலை இழந்த, அன்பில்லாத, அருளில்லாமை, அன்பின்மை, அருளில்லாத் தன்மை, அருள் இல்லாதிருப்பது, இரக்கம் இன்மை, கருணை இல்லாமை என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.
அளி என்பதற்கு அருள் அல்லது பெருங்கருணை என்பது பொருள். அருள் என்பது அன்பின் முதிர்ந்த நிலையைக் குறிப்பது. அளியின்மை என்பது கருணை இல்லாமை எனப்பொருள்படும்.
கொடுஞ்செயல்கள் புரிந்து மக்களைத் துன்புறுத்துவது கொடுங்கோன்மையாகும். அதுபோலவே குடிகளுக்குத் துன்பம் வந்துவிட்டபோது-காட்டாக இயற்கைப் பேரிடர் நேரும் சமயங்களில்- கருணை காட்டாமல் நாட்டுத்தலைவன வாளா இருந்துவிட்டால், அதுவும் கொடுங்கோன்மைச் செயலாகவே கருதப்படும்.

மழை இல்லாமை உலகத்துக்கு எவ்வாறு துன்பம் பயக்குமோ அவ்வாறே, ஆட்சியாளன் அருள் இல்லாதிருப்பது குடிகளுக்குத் துயரம் தரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

துன்புறும் குடிகளுக்குக் கருணை காட்டாதிருப்பதும் கொடுங்கோன்மைதான்.

பொழிப்பு

மழையில்லாமை உலகுக்கு எவ்வகைத் துன்பம உண்டாக்குமோ, அவ்வகைத் துன்பம் தரும், ஆட்சியாளரது அருளில்லாமை நாட்டில் வாழும் குடிமக்களுக்கு.