இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0558இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்

(அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:558)

பொழிப்பு: முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப்பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

மணக்குடவர் உரை: நல்குரவினும் செல்வம் துன்பமாகும்: முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின் கீழே குடியிருக்கின்.
இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின.

பரிமேலழகர் உரை: முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின், இன்மையின் உடைமை இன்னாது - யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது.
(தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: நல் ஆட்சிமுறையில் ஆளாத அரசனின் ஆட்சியில் இருந்தால் பொருளுடைமை வறுமையைவிடத் துன்பம் தருவதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின்.


இன்மையின் இன்னாது உடைமை:
பதவுரை: இன்மையின்-இல்லாமையைவிட; இன்னாது-கொடியது; உடைமை-உடையனாக இருப்பது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்குரவினும் செல்வம் துன்பமாகும்;
பரிதி: மிடியிலும் பொல்லாது; [மிடி-வறுமை]
காலிங்கர்: உலகத்தோர்க்கு இன்னாதது யாதோ எனின், இல்லாமை அன்றே. மற்று அதனினும் சால இன்னாதது உடைமை;
பரிமேலழகர்: யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது.

'நல்குரவினும் செல்வம் துன்பமாகும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருளின்மையினும் உடைமை கேடுதரும்', 'ஒருவனது பொருளுடைமை பொருளில்லாத வறுமையைக் காட்டிலும் துன்பம் தரும்', 'ஏழையாக இருப்பதைக் காட்டிலும் செல்வமுடையவனாக இருப்பது துன்பம் உண்டாக்கக் கூடியது', 'வறுமையைப் பார்க்கிலுஞ் செல்வம் உடைமை துன்பந் தருவது ஆகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருளின்மையினும் செல்வம்உடைமை துன்பம் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

முறைசெய்யா மன்னவன் கோல் கீழ்ப்படின்:
பதவுரை: முறை-நீதி; செய்யா-செய்யத; மன்னவன்-வேந்தன்; கோல்-(கொடிய)ஆட்சி; கீழ்-உள்ளாக; படின்-வாழின்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின் கீழே குடியிருக்கின்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின.
பரிதி: கொடுங்கோல் மன்னவன் மண்டலத்திற் குடிகள் மிடைப்படுவது.[மிடைப்படுவது - செறிந்திருப்பது]
காலிங்கர்: அது எவ்விடத்து எனின் முறைமை செய்யாத மன்னவனது கொடுங்கோலிடத்தகப்பட்ட குடிகட்கு என்றவாறு.
பரிமேலழகர்: முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின்.
பரிமேலழகர் குறிப்புரை: தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.

'முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின் கீழே குடியிருக்கின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நீதியில்லா மன்னனது ஆட்சிக்கு உட்படின்', 'முறை செய்யாத அரசனது கொடுங்கோல் ஆட்சியின் கீழே வாழ நேர்ந்தால்', '(அரசன் செய்யவேண்டிய முறையாகிய) காவல் செய்யாத மன்னவனுடைய ஆட்சியின் கீழ் இருந்தால்', 'முறை செய்யாத அரசனது கொடுங்கோலின் கீழ் வாழ்ந்தால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

முறை செய்யாத அரசின் கொடுங்கோலின் கீழ் வாழ நேர்ந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முறை செய்யாத கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழும்போது பொருளுடைமைகூட வறுமையினும் துன்பம் தரும்.

முறை செய்யாத அரசின் கொடுங்கோலின் கீழ் வாழ நேர்ந்தால், பொருளின்மையினும் உடைமை இன்னாது என்பது பாடலின் பொருள்.
'உடைமை' ஏன் 'இன்னாது' என்ற் சொல்லப்பட்டது?

இன்மையின் என்ற சொல்லுக்கு இல்லாமையைவிட என்பது பொருள். இல்லாமையை பொருளில்லாமை அல்லது வறுமை எனக் கொள்வர்.
முறைசெய்யா என்ற தொடர் நீதிமுறை செய்யாத என்ற பொருள் தரும்.
மன்னவன் என்றது ஆட்சியாளன் குறித்தது.
கோல் என்ற சொல் ஆட்சிக் கோல் என்ற பொருளது. அதிகாரம் நோக்கி இது கொடுங்கோல் எனப்பொருள்படும்.
கீழ்ப்படின் என்ற தொடர்க்கு கீழே வாழ நேர்ந்தால் என்று பொருள்.

நீதி செலுத்தாத கொடுங்கோல் ஆட்சியில் வாழ நேர்ந்தால், வறுமையைவிட பொருள்உடைமை துன்பம் தரும்.

கொடுங்கோலாரின் ஆட்சியிலே செல்வம் இல்லாததைவிட பொருள் உள்ளது துன்பமே என்கிறது இக்குறள். நீதி நெறி தவறாத ஆட்சியில் நாட்டுத்தலைவன் ஏந்திய கோல் செங்கோல் எனப்படும். கொடுங்கோல் ஆட்சியாக இருந்தால், ஆள்பவன் ஏந்தியது வெறும் 'கோல்' தான். முறை செய்யாத கொடிய ஆட்சியினிடத்தகப்பட்ட குடிகட்கு வாழ்வதே துன்பம்தான். அக்குடிகளிடத்துள் இல்லாதவரிடம் எடுத்துக்கொள்ள எதுவுமில்லையாததால், பொருளால் அவர்க்கு மேலும் வருந்துன்பம் ஒன்றுமில்லை. ஆனால் அக்குடியுள் செல்வம் உள்ளவர்க்கு, இன்பம் தரும் தமது உடைமைகளை, எக்கணமும், அரசு நீதியில்லாமல் பறித்துக் கொள்ளுமே என்ற அச்சம் இருப்பதால், இழக்கப்போகிறோம் என்ற எண்ணத்தால் உண்டாகின்ற துன்பம் எக்காலமும் இருந்துகொண்டே இருக்கும். இதனால் பொருள்உடைமை கொடுங்கோல் ஆட்சியில் கூடுதல் துன்பமாகி விடும். முறைகேடான அரசு தகாத வழிகளில் பொருளுடையாரைத் துன்புறுத்திப் பொருளைக் கொள்ளும் என்பது கருத்து.

'உடைமை' ஏன் 'இன்னாது' என்ற சொல்லப்பட்டது?

......இன்மையின் இன்மையே இன்னாதது (நல்குரவு 10420 பொருள்: வ்றுமை போல வறுமையே கொடியதாகும்) என்று சொல்வார் வள்ளுவர். அவரே இங்கு வறுமையினும் கொடிது தீயோன் ஆட்சியில் ஒருவன் திருவுடையவனாக வாழ்வது என்கிறார். ஏன்? கொடுங்கோலாட்சியில் அரசு செலவழிப்பதற்குப் பொருள் தேவையென்றால் மக்கள் எல்லாரிடமும் யார் எவர் என்று பாராமல் நிதி திரட்டும். வேண்டிய பணம் கிடைக்கவில்லையென்றால் சொத்துள்ள செல்வரிடம் மீண்டும் செல்லும். அவர் ஏதும் தராவிட்டால் கொடுக்கும் வரை கொடுமை செய்யும். இவ்வாறு செல்வமுடையவர் எந்த் நேரமும் துன்பத்தை எதிர்நோக்கி இருப்பதால உடைமை இன்னாதது எனப்பட்டது.
ஏன் உடைமை இன்மையினும் இன்னாது என்பதற்குப் பரிமேலழகர் 'பொருளுடையார்க்கே கைந்நோவயாப்புண்டல் அதாவது கைகள் வருந்துமாறு கட்டப்படுதல் நேரும் என்பதால்' என்றும், பிறர் 'அரசு கேட்கும் பணம் தராவிடில் அடித்தல், குத்தல், உதைத்தல், கையில் ஊசி ஏற்றுதல், கண் பறித்தல், கை குறைத்தல், கொலை முதலிய அனைத்தும் முதலிய நிகழ்தலால்' என்றும், தேவநேயப் பாவாணர் 'உடல் வருந்தப் பாடுபட்டுத் தேடிய செல்வத்தைக் கொடுங் கோலரசன் எளிதாய்க் கேட்டமட்டிற் கொடாவிடின், சிறைகாவற்கும் நையப்புடைப்பிற்கும் மட்டுமன்றிக் கொலைத் தண்டத்திற்கும் ஆளாக நேருமாதலின்' என்றும் விளக்கம் த்ந்தனர்.

பாதுகாவல் தரவேண்டிய பொறுப்பில் உள்ள அரசே குடிகளிடம் பக்ற்கொள்ளையடிப்பதுபோல் பணம் பறிப்பதால் செல்வம் வைத்திருந்து, அச்சத்திலே வாழ்ந்து, அதை இழப்பதைக் காட்டிலும் பொருள் ஒன்றும் இல்லாமலே இருத்தல் பெருந்துன்பந் தருவது இல்லை ஆதலால் நீதியில்லா அரசின் ஆட்சிக்கு உட்படின் உடைமை இன்மையின் இன்னாததாயிற்று.

முறை செய்யாத அரசின் கொடுங்கோலின் கீழ் வாழ நேர்ந்தால், பொருளின்மையினும் செல்வம்உடைமை துன்பம் தரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கொடுங்கோன்மை ஆட்சியில் அரசாலேயே குடிகளது உடைமைகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை உண்டாகிறது.

பொழிப்பு

முறை செய்யாத அரசின் கொடுங்கோல் ஆட்சியின் கீழே வாழ நேர்ந்தால், செல்வம் உடைமை பொருளில்லாமையைக் காட்டிலும் துன்பம் தரும்.