முறைகோடி மன்னவன் செய்யின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முறைமைகோட மன்னவன் செய்வனாயின்;
பரிப்பெருமாள்: முறைமைகோட மன்னவன் செய்வனாயின்;
பரிதி: செங்கோல் முறைமை நடவாத அரசன்;
காலிங்கர்: உலகத்து வேந்தனானவன் நீதி வழுவி நெறியல்லன செய்யுமாயின்;
காலிங்கர் குறிப்புரை: முறைகோடி என்பது நீதி வழுவி என்றது.
பரிமேலழகர்: மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின்; [முறை தப்ப-நெறி தவற]
'முறைமை தப்ப மன்னவன் செய்வனாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மன்னவன் நீதிமுறையோடு ஆளாவிட்டால்', 'மன்னவன் முறை தவறி ஆட்சி செய்தால்', 'மன்னவன் தன்னுடைய முறை தவறி ஆட்சி நடத்தினால்', 'அரசன் நெறி தவறி ஆட்சி செய்தால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஆட்சியாளன் முறை தவறி நீதி செலுத்தினால் என்பது இப்பகுதியின் பொருள்.
உறைகோடி ஒல்லாது வானம் பெயல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.
பரிப்பெருமாள்: மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, முறைமை கோடினால் வரும் குற்றம் கூறிற்று.
பரிதி: மண்டலத்துக்கு மழை பெய்ய நாணும் என்றவாறு.
காலிங்கர்: கொண்டலானது பருவம் கோடி மற்று ஈண்டு மழை பெய்தலைச் செய்யாது என்றவாறு. [கொண்டல்- மேற்குப் பருவமழை; கோடி-மாறுபட்டு]
காலிங்கர் குறிப்புரை: உறை என்பது மழைத்துளி என்றது. ஒல்லாது என்பது அதனைச் செய்யாது என்றது வானம் என்பது கொண்டல் என்றது.
பரிமேலழகர்: அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது.
பரிமேலழகர் குறிப்புரை: இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.
'பருவம் கோடி மழை பெய்தலைச் செய்யாது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மழை பருவமுறையோடு பெய்யாது போம்', 'பருவமழை தவறும். மேகம் மழை பொழியாது', '(அவனுடைய நாட்டில்) வானமும் தன்னுடைய பெருமையான முறையில் தவறி மழை பொழிய இணங்காது', 'மழை மாறி வேண்டுங் காலத்தே மேகம் பொழிதலைச் செய்யாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பருவமழை பொய்த்துப் பெய்யாது போகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|