இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0521 குறள் திறன்-0522 குறள் திறன்-0523 குறள் திறன்-0524 குறள் திறன்-0525
குறள் திறன்-0526 குறள் திறன்-0527 குறள் திறன்-0528 குறள் திறன்-0529 குறள் திறன்-0530

தம்மைச் சுற்றியிருப்போரைத் தழுவிக்கொள்ளுதல். அவர்களுடன் விருப்பாய் நடந்து தம்மை விரும்புமாறு செய்தல். அரசர்க்கும், அரசியல் தலைவர்க்கும் ஏனையோர்க்கும் பொருந்தும்.
- சி இலக்குவனார்

சுற்றம் என்பது சூழ்ந்திருத்தல் ஆகும். சுற்றந்தழாலாவது ஒருவர் தன் சுற்றத்தாரைப் பேணிக் கொண்டு தன்னிடத்திலிருந்து நீங்காமல் இருக்கச் செய்தலைச் சொல்வது. பிறப்பு(உறவு)ச்சுற்றம், இனச்சுற்றம், நட்புச் சுற்றம், தொழில்முறை(வினை)ச் சுற்றம் எனப் பல சுற்றங்கள் உண்டு. இங்கு பேசப்படுவது, இவற்றோடு, பொதுவாழ்வில் தலைவன் பழகுகின்ற அரசியல் சுற்றம் பற்றியதுமாம். குளத்திற்குக் கரை எவ்வளவு இன்றியமையாததோ அதுபோல் ஒருவர்க்கு இச்சுற்றத்தார் மிகவும் தேவை; இவர்கள் பாதுகாவலாகவும் அளவளாவுதற்குத் துணையாகவும் அமைவர். தலைவன் சுற்றத்தை கொடை கொடுத்தும் இன்சொல்பேசியும் சினந்து கொள்ளாமலும் அணைத்துக் கொள்வான். அரசியல் சுற்றத்துள் வந்து போய்க்கொண்டிருக்கிறவர்களைப்பற்றி விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் சொல்கிறது இவ்வதிகாரம். இத்தொகுப்பில் உள்ள பாடல் கருத்துக்கள் அரசனுக்கு மட்டுமன்றி ஏனையோருக்கும் பொருந்தும்.

சுற்றந்தழால்

சுற்றந்தழால் என்பதற்குச் சுற்றம் தழுவுதல் அல்லது ஆதரித்தல் என்பது பொருள். சுற்றத்தார் இயல்பு, அவரைப் பேணும் விதம், பேணுவதன் பயன், பிரிந்த சுற்றத்தை ஏற்றுக் கொள்ளுகிற முறைமை போன்றவற்றை இவ்வதிகாரம் விளக்குகிறது.
நல்ல காலத்திலும் சரி கெட்ட காலத்திலும் சரி வந்து சுற்றி நிற்பவர் சுற்றத்தினர் ஆவர். சுற்றம் ஆக்கம் தரும். பக்கபலமாக இருக்கும். மாந்தர் அனைவர்க்கும் சுற்றம் உண்டு. உறவினர், நண்பர் அல்லாதவர்களும் இதனுள் அடங்குவர். ஒருவரது வாழ்வின் உள்வட்டத்தில் இருந்துகொண்டு அவரது செயல்பாட்டில் பங்கு கொள்வோர் அனைவரும் சுற்றமே. தமக்குள் கொள்ளல் கொடுத்தல் உறவு இல்லாமலிருந்தும், இவர்கள் தலைவனுக்கு உண்மையாகவும் பாதுகாவலாகவும் விளங்குவர். இவர்கள் தலைவனது செல்வம், செல்வாக்கு நீங்கிய காலத்திலும் அவனிடம் பழைமை பாராட்டுபவர்கள்.
சுற்றந்தழால் என்பது ஒருவர் சுற்றத்தாரை அணைத்துச் செல்வதும், சுற்றம் தன்னைத் தழுவ ஒருவர் நடந்து கொள்வதும் ஆகும். உள்வட்டத்திலிருந்து சுற்றம் வெளியேறாமல் தடுப்பதற்கான ஒரு அரசியல் தந்திரமாகவும் சுற்றம்தழுவுதல் அதாவது சுற்றம்தாங்குதல் கையாளப்பெறும்.
'சுற்றம் சூழ வாழ்தல் ஒருகலை. சுற்றம் பேணி வாழ்தலுக்கு இடையறாத அன்பு, நினைவில் வைத்துப் பாராட்டுதல், அன்பு காட்டுதல், ஒத்துப் போதல், குற்றம் பாராட்டாது இருத்தல் ஆகியன தேவையானது. நாடாள்வோருக்கும் சரி, தனி ஒருவராய் வெற்றி பொருந்திய வாழ்க்கை நடத்த விரும்புவோருக்கும்சரி சுற்றம் தேவை' (குன்றக்குடி அடிகளார்)
ஒருவர் நிறையச் சுற்றம் சூழ இருந்து வாழ்வதை வள்ளுவர் விரும்புகிறார் என்று இவ்வதிகாரப் பாடல்களிலிருந்து அறிய முடிகிறது.

சுற்றந்தழால் அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 521ஆம் குறள் செல்வம், செல்வாக்கு இழந்த நிலையிலும் முன்புபோலவே அன்புள்ளம் கொண்டு பழகுதல் சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு என்கிறது.
  • 522ஆம்குறள் அன்பு குறையாத சுற்றம் கிடைக்குமானால், ஒழியாது மேன்மேலும் வளரும் செல்வங்கள் பலவற்றையும் அது கொடுக்கும் எனச் சொல்கிறது.
  • 523ஆம் குறள் சுற்றத்தோடு மனம் கலந்து உறவாடாதவன் வாழ்க்கை கரையில்லாத குளத்தில் நீர் 'நிறைந்தால்' போல் எப்பொழுதும் வெறுமையாகவே இருக்கும் எனச் சொல்வது.
  • 524ஆம் குறள் செல்வம் பெற்றதனால் ஒருவன் பெறும் பயனாவது, சுற்றத்தாரால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி நடந்து கொள்ளுதல் என்கிறது.
  • 525ஆம் குறள் கொடுத்துதவும் தன்மை கொண்டவனாயும் இனியசொல் பேசுபவனாகவும் ஒருவன் வாழ்ந்தால், ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வருகிற சுற்றக் கிளைகளால் அவன் சூழ்ந்து கொள்ளப்படுவான் என்பதைக் கூறுவது.
  • 526ஆம் குறள் அள்ளி வழங்குவான் சிறுதும் சினம் கொள்ளான் என்றால் அவனைவிட சுற்றத்தினரை உடையார் உலகத்தில் வேறு யாருமில்லை என்கிறது.
  • 527ஆம் குறள் காக்கை தன் சுற்றத்தை அழைத்து உண்ணும்; அத்தன்மை கொண்டவர்க்கே சுற்றப் பெருக்கம் உண்டாகும் என்கிறது.
  • 528ஆம் குறள் தகுதிபார்த்துச் சிறப்பு செய்பவனை அச்சிறப்பு பெறுவதற்காக பல சுற்றத்தார் அவனை விடாது அவனுடன் தங்கி இருப்பர் என்பதைச் சொல்வது.
  • 529ஆம் குறள் தம்மவராக இருந்து தம்மை நீங்கிச் சென்ற சுற்றத்தார், காரணம் இல்லாமலே மீளவும் வரும்போது அவர்மீது விரும்பாமை உண்டாகும் எனக் கூறுவது.
  • 530ஆவது குறள் இடம்பெயர்ந்து தன்னைவிட்டுச் சென்றவன் மீண்டும் ஒரு நோக்கம் கருதி வந்தால் தலைவன் அவன் தன்மையைப் பலபடியும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பான் என்கிறது.

சுற்றந்தழால்

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று என்னும் குறள் (523) சுற்றத்துடன் மனம் கலந்து பேசி உறவாடாதவன் வாழ்க்கை வெறுமையாக இருக்கும் என்கிறது. அளவளாவுகை என்ற சிறந்த வாழ்வியல் முறையைப் பின்பற்றச் சொல்கிறது இப்பாடல்.

காக்கை தன் இனத்தைக் கூட்டி உண்ணுவது போல சுற்றத்தாரை அழைத்து அரவணைத்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லும் காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள என்ற குறட்பா (527) நாம் அன்றாடம் காணும் காட்சிகொண்டு சுற்றப் பெருக்கம் காண வழி சொல்கிறது.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர் என்ற பாடல் (குறள் 528) சுற்றத்தாரின் தகுதிக்கேற்ப சிறப்புகளை அளித்து அவர்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்னும் இன்றைய மேலாண்மைக் கோட்பாட்டுடன் ஒத்த கருத்தைத் தருவது .




குறள் திறன்-0521 குறள் திறன்-0522 குறள் திறன்-0523 குறள் திறன்-0524 குறள் திறன்-0525
குறள் திறன்-0526 குறள் திறன்-0527 குறள் திறன்-0528 குறள் திறன்-0529 குறள் திறன்-0530