தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்
(அதிகாரம்:சுற்றந்தழால்
குறள் எண்:0529)
பொழிப்பு: முன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.
|
மணக்குடவர் உரை:
முன்பு தனக்குத் தமராகி வைத்துத் தன்னை விட்டுப் போனவர் பின்பு வந்து சுற்றமாதல் அவர்மாட்டு அமராமைக்குக் காரணம் இன்றி யொழுக வரும்.
இது தன்னை விட்டுப்போன இராஜபுத்திரரைக் கூட்டிக் கொள்ளுமாறு கூறிற்று.
பரிமேலழகர் உரை:
தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் - முன் தமராய்வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல், அமராமைக் காரணம் இன்றி வரும்-அவ்வமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம்.
('அமராமைக் காரணம் இன்றி' என்றதனான் முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம்'. அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்' வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனையொழிய ஒழியும், ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்துகொள்ளவேண்டா, பழைய இயல்பாய் நிற்கும் என்பார் 'வரும்' என்றார்.)
நாமக்கல் இராமலிங்கம் உரை:
தனக்குச் சுற்றமாக இருந்து உறவு பொருந்தாமல் தன்னைவிட்டுப் பிரிந்து போகிறவர்களும் உண்டு. (அப்படிப் பிரிந்து அவர்களே போய்விடுவது) தன்னிடத்தில் ஒரு குற்றமும் இல்லாமலும் நிகழ்வதுண்டு.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும்.
|
தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம்:
பதவுரை: தமர்-சுற்றத்தார்; ஆகி-ஆய்; தன்-தன்னை; துறந்தார்-பிரிந்தவர்; சுற்றம்-கிளைஞர்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்பு தனக்குத் தமராகி வைத்துத் தன்னை விட்டுப் போனவர் பின்பு வந்து சுற்றமாதல்;
பரிப்பெருமாள்: முன்பு தமக்குத் தமராகி வைத்துத் தன்னை விட்டுப் போனவர்கள் சுற்றமாதல்;
பரிதி: உறவின் முறையானைக் காரியங்கண்டு சேர்த்தலும் காரியங்கண்டு பிரித்தலும் செய்வானாகில்;
காலிங்கர்: குரவர் முதலிய மூத்தோர் யாவர், மற்று இவர் தாம் தகாதன செய்யின் தகாது என்று அடித்தலும், கல்லாது இகழின் கல்லென்று கழறலும் செய்தால், நமக்கு இவை உபதேசம் என்றும் கொள்ளாது செய்யின்
காலிங்கர் குறிப்புரை: தமராகி என்பது தமக்கு உரியராகி என்றது; தற்றுறந்தார் என்பது தன்னைத் துறந்தார் என்றது; கல்லுதலாவது, அடித்துச் சொல்லுதல்.
பரிமேலழகர்: முன் தமராய்வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல்;
மணக்குடவர்/பரிப்பெருமாள் 'முன்பு தமராகிப் பிரிந்துபோய் பின்பு வந்து சுற்றமாதல்' என்றும் பரிதி 'ஏதோ ஒரு காரியங்கண்டு சேர்த்தலும் பின்பு அவன் செயல்கண்டு பிரித்தலும் செய்தால்' என்றும் காலிங்கர் 'தீயன செய்யாதே என்று கண்டித்தாலும், நமக்கு நல்லதுதானே சொல்லுகிறார்கள் என்று எண்ணாமல்' என்றும் பரிமேலழகர்
'பிரிந்து போனவர் மீளவந்து சுற்றமாவாராகில்' என்றும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கிளையாகிப் பிரிந்தவரும் அவர் உறவினரும்', 'முன் தனக்கு உதவியாக இருந்து ஒரு காரணத்தால் தன்னைவிட்டு விலகிச் சென்றவர் பின்வந்து சுற்றமாதல்', 'முன்பு தம்மவராயிருந்து பின் தம்மைப் பிரிந்து போனவர்கள்', 'தன் சுற்றதாராக இருந்து தம்மை விட்டு நீங்கியவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கிளைஞராகிப் பின் பிரிந்து மீண்டும் சுற்றமானால் என்பது இப்பகுதியின் பொருள்.
அமராமைக் காரணம் இன்றி வரும்:
பதவுரை: அமராமை-பொருந்தாமை; காரணம்-அடிப்படை; இன்றி-இல்லாமல்; வரும்-உண்டாம்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர்மாட்டு அமராமைக்குக் காரணம் இன்றி யொழுக வரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது தன்னை விட்டுப்போன இராஜபுத்திரரைக் கூட்டிக் கொள்ளுமாறு கூறிற்று.
பரிப்பெருமாள்: தான் அவர்மாட்டு அமராமைக்குக் காரணம் இன்றி யொழுக வரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: காரணம் இன்றி ஒழுகுதலாவது, அவனுடைய சுற்றத்தோடு மேவி ஒழுகுதலும் அதுபோல்வனவும். இது விட்டுப்போன புத்திரரைக் கூட்டிக் கொள்ளுமாறு கூறிற்று.
பரிதி: அந்தச் சுற்றம் ஓரிடத்திலும் நிலைபெறுதலின்மை காரணமின்றியே வரும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அச்சுற்றத்தாரது பொருந்தாமையால் தம்மைக் கைவிடுதல் காரணம் இன்றி வரும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அமராமை என்பது பொருந்தாமை.
பரிமேலழகர்: அவ்வமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அமராமைக் காரணம் இன்றி' என்றதனான் முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம்'. அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்' வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனையொழிய ஒழியும், ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்துகொள்ளவேண்டா, பழைய இயல்பாய் நிற்கும் என்பார் 'வரும்' என்றார்.
மணக்குடவர்/பரிப்பெருமாள் ''முன்பு எதனால் நம்மைவிட்டுப் பிரிந்து போனானோ அந்தக் காரணம் மீண்டும் தம்மிடை நிகழ்ந்து விடாதபடி நடந்தால்'- (தானே சுற்றம் உண்டாம்)' என்றும் பரிதி 'அந்தச் சுற்றம் ஓரிடத்திலும் நிலைபெறாது; காரணமின்றியே பிரியும்; வரும்' என்றும் காலிங்கர் 'அத்தகைய சுற்றத்தாரைக் காரணமின்றிக் கைவிடுதல் நிகழலாம்' என்றும் பரிமேலழகர் 'அப்போது அவர் பிரிதற்குக் காரணமான குற்றம் இப்போது அரசனிடம் இல்லாமையே யாகும்' என்றும் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வெறுப்பு நீங்கியபின் விரும்பிவந்து கூடுவர்', 'தன்னைப் பிரிந்ததன் காரணம் தன்னிடம் இல்லாதொழியவே உண்டாகும்', 'அங்ஙனம் பிரிந்து போனதற்கு ஏற்பட்ட காரணம் ஒழிந்துவிட்டால், மீண்டும் பழைமை பாராட்டி உறவினராகச் சூழ்ந்திருப்பர்', 'அவர் நீங்குவதற்குரிய காரணம் தம்மைவிட்டு நீங்கியபோது தானே வந்து சேர்ந்து கொள்வர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
காரணமில்லாமலே நாம் அவரை விரும்பாமை வரும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தம்மவராக இருந்து தம்மை நீங்கிச் சென்ற சுற்றத்தார், காரணம் இல்லாமலே மீளவும் வரும்போது அவர்மீது விரும்பாமை உண்டாகும்.
கிளைஞராகிப் பின் பிரிந்து மீண்டும் சுற்றமானால் காரணமில்லாமலே அமராமை வரும் என்பது பாடலின் பொருள்.
'அமராமை' என்றால் என்ன?
|
தமர்ஆகி என்ற தொடர்க்கு தமக்கு நெருக்காக இருந்து என்பது பொருள்.
தன்துறந்தார் என்ற தொடர் தன்னை விட்டுப் பிரிந்து போனவர் என்ற பொருள் தரும்.
சுற்றம் என்ற சொல் சுற்றத்தாராதல் என்று பொருள்படும்.
காரணம் இன்றி என்ற தொடர்க்கு காரணம் இல்லாமல் என்று பொருள்.
வரும் என்ற சொல் வந்துவிடும் என்ற பொருளது.
|
முன்பு தம்மவராயிருந்து பின் தம்மைப் பிரிந்து போனவர்கள், மீண்டும் பழைமை பாராட்டி உறவினராகச் சூழ்ந்திருப்போர் மீது விருப்பம் உண்டாகாது.
இக்குறளுக்குப் பல்வேறு வகையான உரைகள் காணப்படுகின்றன. 'முன்பு நெருங்கிய சுற்றமாக இருந்தவன்; பிரிந்து போனான்; மீண்டும் வந்தான்; அவன் மறுபடியும் நீங்காமலிருக்க, முன்பு எதனால் நம்மைவிட்டுப் பிரிந்து போனானோ அந்தக் காரணம் மீண்டும் தம்மிடை நிகழ்ந்து விடாதபடி நடக்கவேண்டும்' என்றும் 'தண்டித்ததாலும், தீயன செய்யாதே என்று இடித்துரைத்தலாலும், தமக்கு நல்லதுதானே சொல்லுகிறார்கள் என்று எண்ணாமல் விரும்பாமையால் கைவிடுதல் நிகழலாம்' என்றும் 'பிரிந்து போனவர் மீளவந்து சுற்றமாவாராகில், அப்போது அவர் பிரிதற்குக் காரணமான குற்றம் இப்போது அரசனிடம் இல்லாமையே யாகும்' என்றும் 'தமக்கு உறவாகி யிருந்த சுற்றத்தார் தம்மைவிட்டு நீங்குதல் யாது காரணத்தால்? சுற்றத்தார் நீங்கு மென்றால் அரசனிடத்தில் அடக்கமில்லை யென்றால் நீங்கும்; அடங்கி நடந்தானாகில் நீங்கின சுற்றமும் வரும்' என்றும் 'தனக்குச் சுற்றமாக இருந்து உறவு பொருந்தாமல் தன்னைவிட்டுப் பிரிந்து போகிறவர்களும் உண்டு. (அப்படிப் பிரிந்து அவர்களே போய்விடுவது) தன்னிடத்தில் ஒரு குற்றமும் இல்லாமலும் நிகழ்வதுண்டு' என்றும் 'தனக்கு வேண்டியவர் தன்னை விட்டுப் பிரிந்து போய்விடுவாரானால் தன்னையறியாமலே ஒரு காரணமும் இல்லாது மனத்துக்கு அமைதியின்மை உண்டாகும். அதனால் கூடியவரை வேண்டியவர் பிரிந்து போகாமல் நடந்து கொள்ளவேண்டும்' என்றும் வேறுவேறு விதமாகப் பொருள் கூறப்பட்டது.
பரிதி 'உறவின் முறையானைக் காரியங்கண்டு சேர்த்தலும் காரியங்கண்டு பிரித்தலும் செய்வானாகில் அந்தச் சுற்றம் ஓரிடத்திலும் நிலைபெறுதலின்மை காரணமின்றியே வரும்' என்றார். இவ்வுரை காரணமின்றியே பிரிந்து மீண்டும் சேரும் இச்சுற்றம் ஓரிடத்திலும் நிலைபெறாத தன்மையது; இவர்போன்ற சுற்றத்திடம் விருப்பம் ஏற்படாது; அவரிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்கிறது. இது குறள் நடைக்கு பொருந்திவராவிட்டாலும் கருத்தளவில் ஏற்கலாம்.
இதுவரை தமராயிருந்து பின் பிரிந்தவர்கள் சுற்றமாயின் காரணமில்லாமலே விரும்பாமை உண்டாம் என்பது குறட்கருத்து.
என்னதான் உறவுகளுடன் இணக்கமாக இருந்தாலும், அவர்களுக்கு உதவியாக நாம் இருந்தாலும் அவரவர் மனத்தில் எதிர்பார்ப்புகள் வேறு வேறாக இருக்கிறது. எனவே உறவுகளில் சிக்கல் வருவதும் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. தம்மை விட்டு ஏதோ ஒரு காரணம் பற்றி நீங்கிச்சென்ற சுற்றம் அக்காரணம் பொய்த்த வேளையில் தாமாக மீண்டும் வந்து சூழ்ந்து கொள்ளும். சுற்றத்தார் ஏதோ காரணம் காட்டியும் காரணமில்லாமலும் பிரிவு கொள்வதும், சேர்வதும் உலகில் நிகழ்வதே. ஆனால் தன்பால் அன்புள்ளவர் பிரிய நேர்ந்தால் போகட்டும் என விட்டுவிடக்கூடாது; அவர்களைத் தக்கவைக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதே வள்ளுவர் கூற வருவது.
அதிகாரம் சுற்றம்தழால் என்பதால், சுற்றத்தின் இயல்பைக் கூறி, அவ்வியல்பை மனதில் கொண்டு அவர் நீங்காமல் தம்முடன் வைத்துக் கொள்வதற்காகச் செயல்படவேண்டும் என்று இக்குறள் அறிவுறுத்துவதாகக் கொள்ளலாம்.
|
'அமராமை' என்றால் என்ன?
அமராமை என்ற சொல்லுக்கு விரும்பாமை என்று பொருள். இதற்கு மனம்கலவாமை, பொருந்தாமை என்றும் பொருள் கூறுவர்.
அமர்தல் பொருந்துதல் அல்லது அன்பு கூர்தல் எனச் சொல்வார் தேவநேயப்பாவாணர். 'அமராமைக் காரணமின்றி' என்பதால், முன்பு அது நேர்ந்தமை அறியப்படும் எனக் கூறுவார் பரிமேலழகர். தலைவனது தவறான ஒழுக்கத்தினாலோ அவன் தமக்கு ஏற்காதன செய்ததனாலோ அவனை விட்டுப் பிரிந்துபோவதால் அமராமை உண்டாகிறது.
'அமராமை' என்பதற்கு விரும்பாமை என்பது பொருள்.
|
கிளைஞராகிப் பின் பிரிந்து மீண்டும் சுற்றமானால் காரணமில்லாமலே நாம் அவரை விரும்பாமை வரும் என்பது இக்குறட்கருத்து.
சுற்றத்தார் கூடுவர்; பிரிவர் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்னும் சுற்றந்தழால் பாடல்.
கிளையாகிப் பிரிந்தவர் திரும்பிவந்து கூடினால் காரணம் இல்லாமலே விரும்பாமை உண்டாகும்.
|