இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0522விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்

(அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:522)

பொழிப்பு: அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: அன்பறாத சுற்றம் ஓரிடத்தே பொருந்தி யொழுகு மாயின், அது கிளைத்தலறாத ஆக்கமாகிய பலவற்றையுந் தரும்.

பரிமேலழகர் உரை: விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
(உட்பகையின் நீக்குதற்கு 'விருப்புஅறாச் சுற்றம' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம் என்றும், விசேடித்தார். தொடை நோக்கி விகார மாயிற்று. 'இயையின' என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர். பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேல் கிளைக்கும் என்பது கருத்து.)

வ சுப மாணிக்கம் உரை: அன்பு குறையாத சுற்றம் இருப்பின் வளர்ச்சி குறையாத முன்னேற்றம் வரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும்.


விருப்புஅறாச் சுற்றம் இயையின்:
பதவுரை: விருப்பு-அன்பு; அறா-நீங்காத; சுற்றம்-கிளைஞர்; இயையின்-எய்தினால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்பறாத சுற்றம் ஓரிடத்தே பொருந்தி யொழுகு மாயின்;
பரிப்பெருமாள்: அன்பறாத சுற்றம் ஓரிடத்தே பொருந்தி யொழுகு மாயின்;
பரிதி: தன்மேலே விருப்பமுள்ள சுற்றமுண்டாகில்;
காலிங்கர்: தம்மாட்டு உள்ளத்தால் விரும்புதலை அறாச்சுற்றமானது தம்பொருள் கொண்டு நுகரின்;
பரிமேலழகர்: அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின்;

'அன்பு நீங்காத சுற்றம் எய்துமாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பு நீங்காத சுற்றம் ஒருவருக்குக் கிடைக்குமானால்', '(அடிக்கடி சந்திக்காவிட்டாலும் மனத்தில் அன்பு விட்டுப் போகாதிருந்தால்) விருப்பம் விட்டுப் போகாத உறவு', 'எந்நிலையிலும் பற்றுதல் நீங்காத சுற்றம் ஒருவனுக்கு அமையுமானால்', 'அன்பு நீங்காத சுற்றத்தார் ஒருவனுக்கு அமைவாரானால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அன்பு நீங்காத சுற்றம் அமையுமானால் என்பது இப்பகுதியின் பொருள்.

அருப்பறா ஆக்கம் பலவும் தரும்:
பதவுரை: அருப்பு-கிளைத்தல்; அறா.நீங்காத; ஆக்கம்-செல்வம்; பலவும்-பலவும்; தரும்-கொடுக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது கிளைத்தலறாத ஆக்கமாகிய பலவற்றையுந் தரும்.[கிளைத்தலறாத - மேன்மேலும் வளர்தல் ஒழியாத-மரத்திற்குக் கிளைகள் போல ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றி வளர்தல்].
பரிப்பெருமாள்: அது கிளப்பறா ஆக்கமாகிய பலவற்றையுந் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பிள்ளைகளை வேறு வேறு இடத்து நிறுத்த வேண்டும் என்பது சில ஆசாரியார் மதம். அதனை மறுத்து மக்களை ஓரிடத்தே கொண்டிருக்க வேண்டும் என்பதூஉம் அதனானே குலம் வளரும் என்பதூஉம் கூறிற்று.
பரிதி: கொழுந்துவிட்டுப் படருகிற பயிர்போல வருகிற செல்வமாகிய ஆக்கமுண்டாம் என்றவாறு.
காலிங்கர்: மற்று அது மேன்மேலும் வந்து அரும்பித் தோன்றுதலறாத செல்வம் பலவற்றையும் கொடுக்கும்.
காலிங்கர் குறிப்புரை: எனவே, அவர் நுகர்தலின் மறுமைப் பயனும் மற்று ஈண்டு அவரால் ஆகும் ஆக்கமும் பலவுள. ஆகலின் இருமைப் பயனின் விரிவாகிய ஆக்கம் பலவும் தமக்கு எய்தும் என்றவாறு.
பரிமேலழகர்: அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: உட்பகையின் நீக்குதற்கு 'விருப்புஅறாச் சுற்றம' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம் என்றும், விசேடித்தார். தொடை நோக்கி விகார மாயிற்று. 'இயையின' என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர். பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேல் கிளைக்கும் என்பது கருத்து.

'கிளைத்தல் நீங்காத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அஃது அவருக்கு எப்பொழுதும் கிளைத்துச் செழிக்கும் செல்வம் பலவற்றையும் கொடுக்கும்', 'ஈரம் அற்றுப் போகாத மரம் புதுப்புதுத் தளிர்விடுவதைப் போல் புதுப்புது நன்மைகளை உண்டாக்கிக் கொண்டேயிருக்கும்', 'பலவகையாலும் வளர்ச்சி நீங்காத நலங்கள் பலவற்றையும் அது தரும்', 'அஃது அவனுக்கு மேன்மேல் வளருஞ் செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

வளர்ச்சி நீங்காது செழிக்கும் செல்வம் பலவற்றையும் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்பு குறையாத சுற்றம் கிடைக்குமானால், ஒழியாது மேன்மேலும் வளரும் செல்வங்கள் பலவற்றையும் அச்சுற்றம் கொடுக்கும்.

அன்பு நீங்காத சுற்றம் அமையுமானால், அருப்பறா ஆக்கம் பலவற்றையும் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.
'அருப்பறா ஆக்கம்' என்றால் என்ன?

விருப்புஅறா என்ற தொடர்க்கு அன்பு நீங்காத என்பது பொருள்.
சுற்றம் இயையின் என்ற தொடர் சுற்றத்தார் பொருந்தி இருப்பின் என்ற பொருள் தரும்.
பலவும் தரும் என்ற தொடர்க்கு பலவற்றையும் கொடுக்கும் என்று பொருள்.

அன்பு நீங்காத சுற்றம் அமைந்தால், அஃது ஒருவற்கு மேன்மேல் வளருஞ் செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

நலிவுற்ற காலத்தும் சுற்றத்தார் பழைய அன்புடன் பழகுவர் என்று இதற்கு முந்தைய குறளில் சொல்லப்பட்டது. இங்கு அன்பு மாறாத சுற்றத்தை எய்துதல் அரிது; அத்தகைய சுற்றத்தார் ஒருவனுக்கு வாய்க்குமானால், கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவும் கிடைக்கும் என்று கூறுகின்றார். சுற்றத்தாராக இருந்தாலும், மனத்தளவில் ஒட்டாதவர்களும் இருக்கிறார்கள். அன்பு நீங்காத சுற்றம் அமைந்தால என்று வள்ளுவர் கூறும் போதே, அமைவது அரிது என்னும் குறிப்புப் பொருளும் கிடைக்கிறது. அன்பு அகலாத சுற்றம் வாய்த்த ஒருவருக்கு, செல்வம் குன்றாமல் அரும்பிக்கொண்டே இருக்கும்-கிளைத்துக்கொண்டே இருக்கும். உள்ளன்புடைய சுற்றத்தால் ஒருவனுக்கு எல்லா நலங்களும் பெருகும் என்பது இக்குறளின் திரண்ட கருத்து.
அன்பு நீங்காத சுற்றம் என்பதை விருப்பறாச் சுற்றம் என்கிறது குறள். விருப்பறாச் சுற்றம் என்ற தொடர்க்கு உட்பகை சிறுதும் இல்லாத சுற்றம், செல்வமும் சிறப்பும் உள்ள காலத்தும் இல்லாத காலத்தும் அன்பு குறையாத சுற்றம் எனவும் பொருள் கூறுவர்.
அன்பு நீங்காமைக்கு பொறாமை இல்லாத குணமும் தன்னலம், பேதைமை இவற்றல் பிறர் சொற் கேட்டு மனமாற்றம் கொள்ளாமையும் காரணங்கள் என்பர்.

அன்பு குறையாத சுற்றத்தால் வளர்ச்சி குன்றாத நன்மைகள் பலவும் உண்டாகும்.

'அருப்பறா ஆக்கம்' என்றால் என்ன?

'அருப்பறா ஆக்கம்' என்ற தொடர்க்குக் கிளைத்தலறாத ஆக்கம் (அதாவது மேன்மேலும் வளர்தல் ஒழியாத-மரத்திற்குக் கிளைகள் போல ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றி வளர்தல்), கொழுந்துவிட்டுப் படருகிற பயிர்போல வருகிற செல்வமாகிய ஆக்கம், மேன்மேலும் வந்து அரும்பித் தோன்றுதலறாத செல்வம், கிளைத்தல் அறாத செல்வம், வளர்ச்சி குறையாத முன்னேற்றம், கிளைத்துச் செழிக்கும் செல்வம், அரும்புதல் அற்றுப் போகாத நன்மைகள், மேன்மேலுங் கிளரும் பல்வகைச் செல்வம் என்று உரைகாரர்கள் பொருள் கூறினர்.

அரும்பு என்ற சொல் முதல் சீரிலுள்ள விருப்பு என்ற சொல்லுடன் தொடைநோக்கி (எதுகை நயம் தோன்றுவதற்காக) அருப்பு என்றாயிற்று என்பர். அரும்பு அருப்பு என வலிந்தது. அரும்புதல் என்ற சொல்லுக்குக் கிளைத்தல், ஒன்று பலவாதல், தோன்றுதல் என்பது பொருள். அரண் எனப்பொருள்படும் அருப்பம் என்ற சொல் அருப்பு ஆயிற்று என்று சொல்லி 'அருப்பறா ஆக்கம்' என்ற தொடர்க்கு 'காவல் நீங்காத ஆக்கம்' என உரை செய்வார் கு ச ஆனந்தன். அருப்பறா ஆக்கம் என்பதற்குக் கிளைத்தல் அறாத செல்வம் என்று பதவுரை கூறி 'தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம்' என்று விளக்கவுரையில் கூறினார் பரிமேலழகர். தானே வளர்தலாவது நூற்றுக்கு மேல் ஊற்று என்றாற்போல, பிற செல்வங்களும் வளர்தற்குத் துணையாகும் (இரா சாரங்கபாணி. நூற்றுக்கு மேல் ஊற்று என்பதற்கு இணையாக இன்று 'முதல் நூறு ஆயிரம் சேர்ப்பதுதான் கடினம். நூறாயிரத்துக்கு மேல் பல நூறாயிரம் தானே வரும்' எனச் சொல்வர்).'அரும்புதல் அறாத' என்றது ஈரம் அறாத மரம் எனச் சொல்லி ஈரம் உள்ள வரையில் மரம் தளிர்க்கும். அரும்புதல் மாறாத (மரம் துளிர் விடுவது போல்) பல நன்மைகளைஉண்டாக்கும் (நாமக்கல் இராமலிங்கம்).
சுற்றமாகப் பலர் கூடி தொழில் செய்து வளர்த்தலின் காரணமாக செல்வம் பல்கிப் பெருகும் என்பது பொருள். சுற்றத்தார் சூழ்ந்திருத்தல் மேலும் வளர்ச்சிக்கு ஏதுவாகும் என்பது கருத்து.

மேன்மேற் கிளைத்து வளருஞ் செல்வம் 'அருப்பறா வாக்கம்' எனப்பட்டது.

அன்பு நீங்காத சுற்றம் அமையுமானால், வளர்ச்சி நீங்காது செழிக்கும் செல்வம் பலவற்றையும் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அன்பு நீங்காத சுற்றம் அமைந்தால் செல்வம் குறையாது என்னும் சுற்றந்தழால் பாடல்.

பொழிப்பு

அன்பு குறையாத சுற்றம் பொருந்தி இருந்தால் வளர்ச்சி குறையாத முன்னேற்றம் கிடைக்கும்.