இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0530



உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்

(அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:0530)

பொழிப்பு: தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித் திரும்பி வந்தவனை, அரசன், அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்

மணக்குடவர் உரை: தன்னிடத்தினின்று நீங்கி ஒரு காரணத்தால் வந்தவனை அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்துப் பின்பு காரியமானபடி யெண்ணி அதற்குத் தக்கபடி கூட்டிக் கொள்ளுக.

பரிமேலழகர் உரை: உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை - காரணம் இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்துபோய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை, வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல் - அரசன், அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க.
(வாளா உழைப்பிரிந்து என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற் காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து போய்ப் பகையோடு கூடும் ஆகலின், இழைத்திருந்து என்றும், அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின், எண்ணிக் கொளல் என்றும் கூறினார். பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய் அதனை ஒழிய வருவானும், அது செய்யாமற் போய்ப் பின் நன்மைசெய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: இருந்து பிரிந்து ஒரு நோக்கத்தோடு வந்தவனை அரசன் பொறுத்துப்பார்த்து ஏற்றுக் கொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல்.


உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை:
பதவுரை: உழை-இடம்; பிரிந்து-நீங்கி; காரணத்தின்-காரணத்தால்; வந்தானை-வந்தவனை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னிடத்தினின்று நீங்கி ஒரு காரணத்தால் வந்தவனை;
பரிப்பெருமாள்: தன்னிடத்தினின்று நீங்கி ஒரு காரணத்தால் வந்தவனை;
பரிதி: பலனற்றால் கைவிட்டுப்போய் மீண்டு வந்தும் இப்படியேயுள்ள பேரையும் அறிக என்றவாறு.
காலிங்கர்: தன் முதுகுரவர் மாட்டினின்று நீங்கி மற்று யாதானும் ஒரு காரணத்தினால் தன்மாட்டு வந்தான் ஒருவனை; [முதுகுரவர் - தாய்தந்தையர் ஆசிரியர் முதலிய பெரியோர்கள்]
காலிங்கர் குறிப்புரை: உழைப்பிரிந்து என்பது தன் முதுகுரவர் மாட்டினின்று நீங்கி என்றது.
பரிமேலழகர்: காரணம் இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்துபோய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை;
பரிமேலழகர் குறிப்புரை: வாளா உழைப்பிரிந்து என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம்.

'தன்னிடத்தினின்று நீங்கி ஒரு காரணத்தால் வந்தவனை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் மட்டும் முதுகுரவரிடமிருந்து நீங்கி என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேந்தனிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒரு காரணம் கருதி வந்த சுற்றத்தானுக்கு', 'தன்னுடன் உறவாக இருந்து தன்னைவிட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதாவது ஒரு காரணத்துக்காக மீண்டும் தன்னுடன் சேர வந்தால்', 'காரணமில்லாது தன்னிடமிருந்து பிரிந்துபோய்ப் பின் ஒரு காரணங்கருதி மீண்டு வந்த உறவினனை', 'காரணம் இல்லாமல் தம்மிடமிருந்து பிரிந்துபோய்ப் பின் காரணம் கருதி வந்தவனை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன்னிடத்தினின்று பிரிந்து சென்று பின் ஒரு நோக்கத்துடன் மீண்டும் வந்த சுற்றத்தானை என்பது இப்பகுதியின் பொருள்.

வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல்:
பதவுரை: வேந்தன்-மன்னவன்; இழைத்துஇருந்து-செய்து வைத்து; எண்ணி-நாடி; கொளல்-கொள்க.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்துப் பின்பு காரியமானபடி யெண்ணி அதற்குத் தக்கபடி கூட்டிக் கொள்ளுக
பரிப்பெருமாள்: அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்துப் பின்பு காரியமானபடி யெண்ணி அதற்குத் தக்கபடி கூட்டிக் கொள்ளுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: எண்ணிக் கோடலாவது அவன் வந்த காரணத்தை எண்ணுதலும், ஒருவனாகில் அதற்குத் தக்கவும், பலர் உண்டாகில் அதற்குத் தக்கவும் எண்ணுதலும் இது, மீண்டு வந்த இராஜபுத்திரனோடு செய்யும் திறன் கூறிற்று.
பரிதி: அரசனிடத்திலே பலனுண்டாகில் சூழ்ந்திருந்து.
காலிங்கர்: மற்று அம்மன்னனானவன் யாது செய்யற்பாலதோ எனின், அவன் தன்மையைப் பலபடியும் ஆராய்ந்தமைந்து பின்னையும் கடிதின் தேறாது கசடற விசாரித்துத் தகும் எனின் தம் சுற்றத்தோடு ஒக்கத் தழீஇக் கொள்ளினும் கொள்க; அல்ல எனின் அது செய்யாதொழிக என்றவாறு.[கசடற - குற்றமற; ஒக்கத்தழீஇ - ஒருசேரத் தழுவிக் கொள்ளினும்]
பரிமேலழகர்: அரசன், அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க.
பரிமேலழகர் குறிப்புரை: வருதற் காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து போய்ப் பகையோடு கூடும் ஆகலின், இழைத்திருந்து என்றும், அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின், எண்ணிக் கொளல் என்றும் கூறினார். பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய் அதனை ஒழிய வருவானும், அது செய்யாமற் போய்ப் பின் நன்மைசெய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.

'அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்துப் பின்பு காரியமானபடி யெண்ணி அதற்குத் தக்கபடி கூட்டிக் கொள்ளுக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'எண்ணிக் கொளல்' என்பதற்குக் காலிங்கர் மாறுபாடாக 'கசடற ஆராய்ந்து தகும் எனின் தழுவிக் கொள்க; அல்ல எனின் விடுக' என்று பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவன் வேண்டியதை நிறைவேற்றிக் கொடுத்துப் பின் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்', 'அரசன் நுணுக்கமாகவும் நிதானத்தோடும் ஆராய்ந்து எண்ணிப் பார்த்துத்தான் அவனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்', 'அரசன் அவனுக்கு வேண்டியதைத் தெரிந்துசெய்து தழுவிக் கொள்ளக்கடவன்', 'அரசன் அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து (அவன் உண்மை நிலையை அறிந்து) சேர்த்துக் கொளல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

முற்ற ஆராய்ந்து தழுவிக் கொள்ளினும் கொள்க; அல்லாவிட்டால் விடுப்பினும் விடுக்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இடம்பெயர்ந்து தன்னைவிட்டுச் சென்றவன் மீண்டும் ஒரு நோக்கம் கருதி வந்தால் தலைவன் அவன் தன்மையைப் பலபடியும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பான்.

தன்னிடத்தினின்று பிரிந்து சென்று பின் ஒரு நோக்கத்துடன் மீண்டும் வந்த சுற்றத்தானை முற்ற ஆராய்ந்து தழுவிக் கொள்ளினும் கொள்க; அல்லாவிட்டால் விடுப்பினும் விடுக்க என்பது பாடலின் பொருள்.
'இழைத்திருந்து' என்பதன் பொருள் என்ன?

உழைப்பிரிந்து என்றதற்கு இடத்தினின்று நீங்கி என்பது பொருள்.
காரணத்தின் என்ற சொல் ஒரு நோக்கத்தோடு என்ற பொருள் தரும்.
வந்தானை என்ற சொல்லுக்கு வந்தவனை என்று பொருள். இங்கு திரும்பவும் வந்தவனைக் குறிக்கும்.
வேந்தன் என்றது அரசன் என்ற பொருள் தருவது.
எண்ணிக் கொளல் என்ற தொடர் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் எனப்பொருள்படும்.

தன்னிடமிருந்து பிரிந்துபோய்ப் பின் ஒரு நோக்கத்தோடு மீண்டும் வந்த சுற்றத்தானை வேந்தன் அவனுக்கு வேண்டியதை ஆராய்ந்தமைந்து ஏற்றுக்கொள்க; அல்லது விடுக்க.

சென்ற குறள் காரணமின்றி திரும்பி வந்த சுற்றத்தான் பற்றியது. இப்பாடல் ஒரு காரணத்தோடு திரும்பி வருபவன் தொடர்பானது. சுற்றம் பல சூழ இருக்கும் மன்னவனிடமிருந்து சிலர் போவர் வருவர். அவர்களில் சிலர் நோக்கம் கருதி திரும்புவர். அந்நோக்கத்தை நிறைவேற்றி சேர்த்துக் கொள்க என்றும் நோக்கத்தை ஆராய்ந்தறிந்து முடிவெடுக்க எனவும் இரு வேறுவிதமாக இப்பாடலுக்குப் பொருள் கூறினர். நோக்கத்தை நிறைவேற்றி என்பதைவிட ஆராய்ந்தறிந்து முடிவு செய்க என்பது பொருத்தமானது.

சுற்றத்தான் ஒரு நோக்கத்தோடு திரும்ப வரும்போது காரணத்தை மனத்துளடக்கி வருவான். உள்ளத்தில் ஒன்றும் சொல்லில் ஒன்றும் இருக்கக்கூடும் எனவே அதன் உண்மைத்தன்மையை எண்ணியும் திரும்ப வருபவனை அவன் மனம் மாறிவிட்டானா என்று நன்கு ஆராய்ந்தும் அவனை ஏற்கவா வேண்டாமா என்று முடிவு செய்வான் வேந்தன். பிரிந்தவனை எளிதாக மறுபடியும் எடுத்துக் கொளவது அரசனுக்கு உகந்தது அல்ல என்று வள்ளுவர் கருதுகிறார். ஏன் எனில் தனக்குத் துணைவனாக இருந்த ஒருவன் காரணமின்றித் தன்னைவிட்டுப் பிரிந்திருந்து மீண்டும் தன்னோடு உறவு கொண்டாட வந்தால் அதில் பகையரசர்களுக்கு உளவாக வந்த சதி போன்ற காரணங்கள் இருக்கலாம். சுற்றமாய் அமைதலும் பிரிதலும் நிகழின் அன்புக்கு மாறாகப் பகை மிகுவதற்கு வாய்ப்பு உண்டு. விருப்பில்லாத சுற்றத்தின் அன்பில் பகையும் சேரின் துன்பமே விளையும். அதனால் அவன் நோக்கத்தை 'இழைத்து, இருந்து, எண்ணி, கொளல்' வேண்டும். அதாவது நுணுக்கமாகவும் அமைதியுடனும் ஆராய்ந்து பொறுத்துப்பார்த்துத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

'இழைத்திருந்து' என்பதன் பொருள் என்ன?

இழைத்திருந்து என்ற தொடர்க்கு செய்துவைத்து என்றும் ஆராய்ந்தறிந்து என்றும் வேறுபடப் பொருள் கூறப்பட்டது. மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் 'செய்து வைத்து' என்று உரை செய்தனர். அதாவது திரும்பிவந்தவன் என்ன காரணத்துக்காக வந்தான் என்று அறிந்து அதை நிறைவேற்றிச் சேர்த்துக் கொள்க எனப் பொருள் கூறினர். காலிங்கர் இழைத்திருந்து என்பதற்கு 'பலபடியும் ஆராய்ந்தமைந்து பின்னையும் கடிதின் தேறாது கசடற விசாரித்துத் தகும் எனின் தம் சுற்றத்தோடு ஒக்கத் தழீஇக் கொள்ளினும் கொள்க; அல்ல எனின் அது செய்யாதொழிக' என்று விரிவாகப் பொருள் கூறினார். இவர் உரைப்படி இழைத்திருந்து என்பதற்கு ஆராய்ந்தமைந்து அதாவது நுண்ணியதாக ஆராய்ந்து வைத்து என்பது பொருள். என்னதான் இன்றியமையாதவனாக இருந்தாலும் ஒரு வேந்தன் திரும்பி வந்தவனது தேவைக்குப் பணிந்து நிறைவேற்றி வைத்து உடனடியாக அவனை ஏற்றுக் கொள்ள மாட்டான். எனவே காலிங்கர் உரையே பொருத்தமானது.

'இழைத்திருந்து' என்பதற்கு ஆராய்ந்தறிந்து என்பது பொருள்.

தன்னிடத்தினின்று பிரிந்து சென்று பின் ஒரு நோக்கத்துடன் மீண்டும் வந்த சுற்றத்தானை முற்ற ஆராய்ந்து தழுவிக் கொள்ளினும் கொள்க; அல்லாவிட்டால் விடுப்பினும் விடுக்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பயன்கருதித் திரும்பவரும் சுற்றத்தானைத் தீர ஆராய்க என்னும் சுற்றந்தழால் பாடல்.

பொழிப்பு

வேந்தனிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒரு நோக்கத்தோடு திரும்ப வரும் சுற்றத்தானை ஏற்பதுபற்றிப் பொறுத்துப்பார்த்துத்தான் முடிவெடுக்க வேண்டும்.