இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0523அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று

(அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:523)

பொழிப்பு: சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

மணக்குடவர் உரை: கலக்கப் படுவாரோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை, குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும்.
இது சுற்றந் தழுவாக்கால் செல்வங் காக்கப்படாதென்றது. இத்துணையும் சுற்றத்தாரெல்லாரோடும் ஒழுகுந் திறங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதாவன் வாழ்க்கை, குளவளாக் கோடுஇன்றி நீர் நிறைந்தற்று -குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற்போலும்.
(சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக் கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவது ஆகலின், 'அளவளாவு' என்பது ஆகுபெயர்.'வாழ்க்கை' என்றதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை. 'நிறைதல்' என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம் இல்லாதான்செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத்துப் போம் என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: சுற்றத்தோடு மனம் கலந்து பேசி உறவாடாதவன் வாழ்க்கை, குளப்பரப்பு கரையின்றி நீர்நிறைந்தது போலும். (குளம் நீர் நிறையாது. வாழ்க்கை வளம் பெறாது.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந்தற்று.


அளவளாவு இல்லாதான் வாழ்க்கை:
பதவுரை: அளவு-(நலம் உசாவுதல்); அளாவு-நெஞ்சு கலத்தல்; இல்லாதான்-இல்லாதவனது; வாழ்க்கை-வாழ்தல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கலக்கப் படுவாரோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை;
பரிப்பெருமாள்: கலக்கப் படுவானோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை;
பரிதி: அளவுக்களவாகச் செலவழியாதான் பெற்ற செல்வம்;
காலிங்கர்: அரசர்க்கு வரம்பாகிய செல்வமானது இவ்வாறு சுற்றம் சூழ்தல்; இவை இன்றித் தனித்துடைய அரசர் வாழ்க்கையானது எத்தன்மைத்தோ எனின்;
பரிமேலழகர்: அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதாவன் வாழ்க்கை;
பரிமேலழகர் குறிப்புரை: சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக் கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவது ஆகலின், 'அளவளாவு' என்பது ஆகுபெயர்.'வாழ்க்கை' என்றதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை.

'சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதாவன் வாழ்க்கை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி அளவு என்பதற்குச் செல்வத்தின் அளவு எனக் கொள்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கலந்து பழகாதவன் வாழ்க்கை பெருகாது', 'குலவி மகிழ உற்றார் உறவினர்கள் இல்லாதவனுடைய வாழ்க்கை செல்வம் நிறைந்திருந்தாலும்', 'சுற்றத்தாரோடு நெஞ்சு கலவாதவனுடைய வாழ்க்கையானது', 'சுற்றத்தோடு நெஞ்சு கலந்து உறவாடாதவன் வாழ்க்கை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சுற்றத்தோடு கலந்து பழகாதவன் வாழ்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.

குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று:
பதவுரை: குள-குளத்தினது; வளா-பரப்பு; கோடு-கரை; இன்றி-இல்லாமல்; நீர்-நீர்; நிறைந்து-நிரம்பினால்; அற்று-அத்தன்மைத்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும்.
மணக்குடவர் குறிப்புரை: இது சுற்றந் தழுவாக்கால் செல்வங் காக்கப்படாதென்றது. இத்துணையும் சுற்றத்தாரெல்லாரோடும் ஒழுகுந் திறங் கூறிற்று.
பரிப்பெருமாள்: குளமாகிய வளைவு கரையின்றி நீர் நிறைந்தாற் போலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சுற்றந் தழுவிக் கொள்ளாததால் செல்வங் காவல்படாது என்றது. இத்துணையும் சுற்றத்தாரெல்லாரோடும் ஒழுகுந் திறங் கூறிற்று.
பரிதி: கட்டுக்கரையும் கொடியும் காவலுமில்லாத குளம் நீர் நிறைந்ததற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்றுஅது உலகில் குளச் சூழலானது சூழ்ந்து நின்று பாதுகாக்கும் கரை இன்றி நீர் வந்து நிறைந்த அத்தன்மைத்து என்றவாறு.
பரிமேலழகர்: குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற்போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'நிறைதல்' என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம் இல்லாதான்செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத்துப் போம் என்பதாம்.

'குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குளம் கரையின்றி நீர் நிரம்புமா?', 'கரையில்லாத ஏரியில் நீர் நிறைவது போலப் பயனற்றதும் பாதுகாப்பற்றதுமாக வீணாகிவிடும்', 'குளப்பரப்பு கரையில்லாமல் நீர் நிறைந்தாற்போலும்!', 'குளப்பரப்புக் கரையில்லாமல் நீர் நிறைந்தால் போன்றதாகும். (கரையில்லாக் குளத்தில் நீர் நிலைத்து நில்லாதவாறு சுற்றமில்லாதவன் செல்வம் பாதுகாக்கப் படாமல் அழிந்து விடும். இங்குச் சுற்றம் என்பது சுற்றியிருந்து பணிபுரிவோரைக் குறிக்கும்.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

குளப்பரப்புக் கரையில்லாமல் நீர் நிறைந்தால் போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சுற்றத்தோடு மனம் கலந்து உறவாடாதவன் வாழ்க்கை கரையில்லாத குளத்தில் நீர் 'நிறைந்தால்' போல் தோன்றி எப்பொழுதும் நிரம்பாமல் வெறுமையாகவே இருக்கும்.

சுற்றத்தோடு கலந்து பழகாதவன் வாழ்க்கை குளப்பரப்புக் கரையில்லாமல் நீர் நிறைந்தால் போன்றது என்பது பாடலின் பொருள்.
கரையில்லாமல் நீர் எப்படி நிறையும்?

அளவு என்ற சொல்லுக்கு வரை அல்லது எல்லை என்று பொருள். இங்கு நலம் (அளவு) உசாவுதலை(கேட்டலை)க் குறித்தது.
அளாவு என்ற சொல் மனம் கலந்து பேசுதல் என்ற பொருள் தரும்.
இல்லாதான் என்ற சொல்லுக்கு இல்லாதவன் என்பது பொருள்.
வாழ்க்கை என்ற சொல் வாழ்தலைக் குறிப்பது.
குளவளா என்ற தொடர் குளத்துப் பரப்பு என்ற பொருளது.
கோடின்றி என்ற தொடர் கரையில்லாமல் எனப் பொருள்படும்.
நீர் நிறைந்தற்று என்ற தொடர் நீர் நிறைந்தது போலும் என்ற பொருள் தருவது.

சுற்றத்தோடு மனம் கலந்து பழகாதவன் வாழ்க்கை கரையில்லாத குளத்தில் நீர் நிறையாதது போன்று வெறுமையாக இருக்கும். தனித்து வாழ்பவன் சுற்றமின்றி தானும் வருந்திக் கொண்டு பிறர்க்கும் பயன்படமாட்டான்.

அளவுதல் அளாவுதல் இரண்டும் கலந்தற்பொருளைத்தரும் தனிப்பகுதிகள்; அவையிரண்டும் கூடி அளவளாவு ஆயிற்று. 'அளாய கூழ்' என்பது இன்றும் வழக்கிலுள்ள சொல் அது போல் அளவுதல் கலத்தற்பொருளது. அளாவுதலும் கலத்தல் என்ற பொருள் தருவது. அளவளாவு என்பது நன்றாகக் கலந்து என்னும் பொருளில் மிகுதிக்கண் இரட்டித்தது. ‘அளவளாவுதல்’ என்பது மனம் கலந்து பேசுதலைக் குறிக்கும் நலம்பற்றிக் கலந்துரையாடுதல் எனவும் பொருள்படும் ஓர் மரபுச்சொல். அளவளாவுதல் என்பதற்கு நலந்தீங்குக்ளைக் கேட்டு ஆய்ந்து அறிதல் (அளவு-நலந்தீங்குகளின் அளவு. அளாவுதல்-கேட்டு அறிதல்)எனவும் பொருள் கொள்வர். அளவளாவு என்றது மனம் விட்டு ஒன்றையும் ஒளியாது பேசிக் கொள்ளுதலை உணர்த்துவது. இங்ஙனம் நெஞ்சு கலந்து பேசுதல் என்பது நலம் கேட்பது போன்றவற்றையும் உள்ளடக்கிய இனிய சூழலில் நடப்பது; சுற்றத்துடன் மனம் விட்டு நெருக்கமாகப் பழகி ஒருவர்க்கொருவரது நலன்கள், குறைகள், விருப்பங்கள், இன்ப-துன்பங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் ஆகும். அளவளாவுதல் இல்லாவிட்டால் வாழ்க்கை சுற்றம் நிரம்பாமல் போய் வறண்டு காட்சி அளிக்கும்.
இதை விளக்க குளமில்லாத கரையில் நீர் நிரம்பியதை ஒக்கும் என்ற உவமை கூறப்பட்டது. குளம் என்பது வயல்கட்கும் தோட்டங்கட்கும் பாய்ச்சுவதற்குத் தேக்கி வைக்கப்படும் நீர் நிலை ஆகும். மழைக்காலத்தில் குளத்துள் நீர் பெருகி வெளியில் பாயாமல் காக்கக் கரை பயன்படும். நீர் நிறைந்தால் மிகை நீர் வெளியேற முடியாமல் கரை மீது வழியும். பெருமழையில் இக்கரைகள் உடைந்து குளத்து நீர் புறம் போய்விடும். கரையில்லாத குளத்திலே விழுந்த தண்ணீர் அதிலே நிற்காது என்பது போல ஒருவன் தன்னுடைய சுற்றத்தை நற்சூழலில் வைத்துக்கொள்ளாவிடில் அவர்கள் அவனை விட்டு நீங்கிவிடுவர். சுற்றம் குறைந்து ஒரு சுற்றமும் இல்லாமல் போய்விடும்.

சுற்றத்துடன் அளவளாவி வாழாதான் வாழ்க்கையில் ஐயமும் சூழ்ச்சியும் பகையும் தோன்றும். அவன் பாதுகாப்பின்று உணர்வான். சுற்றத்தார் இருந்தால் கரைபோல் இருந்து அவனுக்கு உதவுவர். தன் இனம் தன்னைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும் என்பது பழமொழிப் பாடல். சுற்றம் குளநீர்க் கரைக்கு ஒப்பாகக் கூறப்பெற்றிருப்பதால் அதன் இன்றியமையாத தன்மை விளங்கும். கரையில்லாக் குளத்தில் நீர் நில்லாது போல சுற்றந் தழுவாதபோது அவனிடம் சுற்றத்தார் கலந்து தங்கி இருக்க மாட்டார். கரையின்மையால் குளம் நிறைவது இல்லை; கலந்து பழகாதவன் வாழ்வில் சுற்றம் நிற்பதில்லை.

'அளவளா' என்பதற்கேற்பத் தொடை நோக்கிக் 'குளவளா' என்ற சொல் அமைந்துள்ளது. குளவளா என்றது குளம்+வளா என்று விரிந்து குளப்பரப்பு என்ற பொருள் தரும்.

கரையில்லாமல் நீர் எப்படி நிறையும்?

ஏரி அல்லது கண்மாயாக இருந்தால் நீர்க்கட்டுப்பாட்டுக்கு கலிங்கு அல்லது மதகு எனப்படும் மரக்கதவு இருக்கும். ஆனால் குளத்து நீரைத் தேக்கிப் பாதுகாக்க மண்ணாலான கரை மட்டுமே உண்டு. அப்படி அந்த கரையுமில்லாவிட்டால் அது குளமே அல்ல. அது எப்படி நிரம்ப முடியும்? குளப்பரப்பு கரையின்றி நீர்நிறைந்தது போலும் என்றது குளம் நீர் நிறையாது; சுற்றம் நிரம்பாது என்ற கருத்தைச் சொல்வதற்காக வந்தது.
உள்ளன்புடன் பழகாதவனுடன் சுற்றம் நில்லாது நீங்கும். கோடில்லாக் குளத்தில் நீர் நிறைவதுமில்லை. அதுபோல அளவளாவில்லாதவன் வாழ்க்கையில் சுற்றம் சேர்வதுமில்லை என்ற நிகழாநிகழ்ச்சியை விளக்கவே கரையில்லாமல் நீர் நிறைந்தது போலும் எனப்பட்டது.

சுற்றத்தோடு கலந்து பழகாதவன் வாழ்க்கை குளப்பரப்புக் கரையில்லாமல் நீர் நிறைந்தால் போன்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

குளத்து நீரைக் கரையளாவுதல் போல ஒருவர், தனித்து நிற்காமல், சுற்றமளாவ வேண்டும் என்னும் சுற்றந்தழால் பாடல்.

பொழிப்பு

சுற்றத்தோடு மனம் கலந்து பழகாதவன் வாழ்க்கை குளப்பரப்பு கரையின்றி நீர்நிறைந்தது போலும்.