இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0521



பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள

(அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:521)

பொழிப்பு: ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.

மணக்குடவர் உரை: பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழுகுதல் சுற்றத்தார்மாட்டே யுளவாம்.
இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது.

பரிமேலழகர் உரை: பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள், சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன.
(சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின்,ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: அன்பு நீங்கிய போதும் பழமையைக் கூறிப் பாராட்டுதல் சுற்றத்தாரிடம் உள (அரசரோ தலைவரோ தம் சுற்றத்திடம் பற்றுதல் கொள்ளாமல் இருந்தாலும் சுற்றத்தார் உறவு முறை கொண்டாடுதல் உலகியல்.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள.


பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்:
பதவுரை: பற்று-பற்று; அற்ற கண்ணும்-நீங்கிய பொழுதும்; பழைமை-பழைய உறவை; பாராட்டுதல்-போற்றி மகிழ்தல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழுகுதல்;
பரிப்பெருமாள்: பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழிதல்;
பரிதி: உறவின் முறையாற்கு அரசனிடத்திலே பற்றற்ற இடத்திலும் பழைமை பாராட்டிச் சூழ்ந்திருப்பது;
காலிங்கர்: அரசரானவர் வையம் காவல் பற்றிக்கொண்டு வாழும் காலம் வாழ்தலேயும் அன்றி மற்று அவர் பற்றுஅற்ற இடத்தும் பழைமையை மேற்கொண்டு அவரைக் கைவிடாது நிற்றலும்;
பரிமேலழகர்: ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள்;
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின்,ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது.

'பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழுகுதல்' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதியின் 'அரசனிடத்திலே பற்றற்ற இடத்திலும் பழைமை பாராட்டிச் சூழ்ந்திருப்பது' என்னும் உரையை காலிங்கர் வழிமொழிகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பற்றில்லாத போதும் பழைய உறவைப் போற்றுதல்', 'தம்மிடத்தில் அன்பில்லாதவரிடத்தும் பழைய உறவுமுறைகளைக் கூறிப் பலவாறு கொண்டாடுதல்', '(அடிக்கடி சந்திக்கின்ற) தொடர்பு விட்டுப் போனாலும் பழைய உறவுகளை மறந்துவிடாமல் பாராட்டிக் கொண்டிருக்கிற இயல்பு', 'ஒருவன் செல்வந் தொலைந்து வறியவனான போதும் அவனோடு அவன் செல்வமாயிருந்த காலத்திற்போலவே நட்புக்கொண்டு அளவளாவுதல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நலிவுற்ற நிலையிலும் முன்பிருந்த நட்பைப் போற்றி மகிழ்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

சுற்றத்தார் கண்ணே உள:
பதவுரை: சுற்றத்தார்கண்ணே-உறவினர் மாட்டே; உள-இருக்கின்றன.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சுற்றத்தார்மாட்டே யுளவாம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது.
பரிப்பெருமாள்: சுற்றத்தார்மாட்டே யுளவாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இல்லாத காலத்தும் விடாரென்றது.
பரிதி: சுற்றத்தாரிடத்தில் உண்டு என்றவாறு.
காலிங்கர்: சுற்றத்தார் மாட்டே உளவாம் என்றவாறு.
பரிமேலழகர்: சுற்றத்தார்மாட்டே உள ஆவன.
பரிமேலழகர் குறிப்புரை: இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.

'சுற்றத்தார்மாட்டே உள ஆவன' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சுற்றத்தாரிடமே உண்டு', 'சுற்றத்தாரிடத்தே உள்ளனவாம்', 'சுற்றத்தார்களிடத்தில்தான் உண்டு', 'உறவினரிடத்தே காணப்படும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

சுற்றத்தாரிடமே உண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செல்வம், செல்வாக்கு இழந்த நிலையிலும் முன்புபோலவே அன்புள்ளம் கொண்டு பழகுதல் சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

பற்றற்ற கண்ணும் முன்பிருந்ததுபோலவே நட்புக்கொண்டு அளவளாவுதல் சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு என்பது பாடலின் பொருள்.
'பற்றற்ற கண்ணும்' என்பது குறிப்பது என்ன?

பழைமை என்ற தொடர்க்கு பழைய உறவை, பழைய நிலைமையை, பழைய தொடர்பை என்று பொருள் கூறுவர்.
பாராட்டுதல் என்றதற்குக் கொண்டாடுதல், எண்ணிப் போற்றுதல் எனப் பொருள் கொள்வர்.
சுற்றத்தார் கண்ணே என்ற தொடர்க்குச் சுற்றத்தின் இடத்தே என்பது பொருள்.
உள என்ற சொல் உண்டு என்ற பொருள் தரும்.

ஒருவன் செல்வமும் செல்வாக்கும் இழந்து பற்றற்று நிற்கும் நிலையிலும் அவனோடு அவன் முன்பிருந்த காலத்திற்போலவே உறவுகொண்டு போற்றுதல் சுற்றத்தார் இயல்பாகும்.

ஒருவரது வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி வருவது இயல்பு. தாழ்ந்த காலத்தில், கூட இருந்து துய்த்த மற்றவர்கள் எல்லாம் மறைந்து விடுவர்; சுற்றத்தார் மட்டும் பழைய நிலை மறவாது முன்புபோலவே தம்முடன் பழகுவர் என்கிறது பாடல். ஒருவரது நிலைமை தாழ்ந்து தொடர்பு நீங்கிய இடத்தும் பழைய உறவைப் போற்றும் சுற்றத்தின் பண்பு பேசப்படுகிறது. இக்கருத்தை மூதுரைப் பாடல் ஒன்று நன்கு விளக்கும்:
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு
(மூதுரை 17 பொருள்: நீர்வற்றிய குளத்தினின்றும் நீங்குகின்ற நீர்வாழ் பறவைகள்போல வறுமை வந்தபொழுது நீங்குவோர் உறவினராகார்; அந்தக் குளத்திலுள்ள கொட்டியும் அல்லியும் நெய்தலும் போல, நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே உறவினராவர்).
'கெட்டார்க்கு நட்டார் இல்லை' என்பது முதுமொழி. ஆனால் எந்த நிலையிலும் தொடர்பைத் தொடர நினைப்பவர்கள் சுற்றத்தவர் ஆவார் என்று வள்ளுவர் கூறுகின்றார். இச்சுற்றத்தாரைத் 'தொலையாக் கொள்கைச் சுற்றம்' (ஏழாம் பத்து 10:) அதாவது குன்றாத கோட்பாட்டினையுடைய சுற்றத்தார் என பதிற்றுப்பத்து வாழ்த்தும். உயர்ந்த நிலையில் ஒருவன் வாழும் போது, அவனைப் பாராட்டவும், அவனது செயலுக்குக் கை கொடுக்கவும் பலபேர் வருவார்கள். ஒரு நிலையும் இல்லாது எல்லோரும் கைவிட்டபோதும் சுற்றத்தார்தான் தொடர்பு கருதிப் பாராட்டுவர்.

நலிவுற்றுத் தொடர்பற்று வாழும் நிலையில் இருந்தாலும் பழைமை பாராட்டும் நற்குணம் சுற்றத்தார் மாட்டே உண்டு என்று சுற்றத்தின் சிறப்பியல்பு கூறி அவரைத் தழுவி நிற்றல் வேண்டும் என்று இக்குறட்பா கூறுகிறது.

'பற்றற்ற கண்ணும்' என்பது குறிப்பது என்ன?

இத்தொடர்க்கு பொருளற்ற கண்ணும், (அரசனிடத்திலே) பற்றற்ற இடத்திலும், (அரசரானவர்) பற்றுஅற்ற இடத்தும், செல்வம் தொலைந்து வறியனாய வழியும், செல்வமனைத்தும் இழந்து வறியவனான காலத்திலும், தம்மிடத்து உள்ள பற்றை நீக்கிக் கொண்டாராயினும், பற்றில்லாத போதும், தம்மிடத்தில் அன்பில்லாதவரிடத்தும், தொடர்ச்சி விட்டுப்போன காலத்திலும், எத்தகைய தொடர்பும் அற்றுவிட்ட பொழுதும், செல்வந் தொலைந்து வறியவனான போதும், அன்பு நீங்கிய போதும், செல்வமும் செல்வாக்கும் இழந்த காலத்திலும், செல்வமிழந்து வறியவனானபோதும், செல்வம் அல்லது அதிகாரம் தொலைந்து வறியனானதின் விளைவாகத் தொடர்பு நீங்கிய விடத்தும், பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும் என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.
இவ்வுரைகள் செல்வம் இழந்த நிலையிலும், அன்பில்லாத போதும் சுற்றத்தார் பழைமை பாராட்டி உறவாடுவர் என்று பொதுமையில் அதாவது ஒருவர்க்கு அவரது சுற்றத்தாரிடம் உள்ள உறவு பற்றியது என்று பொருள் கூறுகின்றன. பரிதியும் காலிங்கரும் அரசனிடத்தில் சுற்றத்தார் கொள்ளும் உறவு பற்றிப் பேசுகின்றனர்.
'அரசன் வறியன் ஆவது இல்லை; ஆதலால், பற்றற்ற என்பதற்கு செல்வம் இழந்த நிலை பொருந்தாது; பற்றென்பது அன்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஒருவர்க்கு ஒருவரிடை நிகழும் அன்புளமாகிய குணத்தைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். ஆனால் இக்குறள் வேந்தனுக்கு இருக்க வேண்டிய சிறப்பியல்பாக சுற்றத்தாரிடம் பழைமை பாராட்டுதல் என்னும் பண்பு' என்று சொல்லி 'ஆதலால் சுற்றத்தார் பற்றற்ற கண்ணும், அரசன் பழைமை பாராட்டுதல் அரசற்குச் சுற்றத்தார் கண்ணே உள ஆகும் செயல் என்ற கருத்துடைய உரைகள் இயலுக்கும் அதிகாரத்திற்கும் ஏற்புடையன' என்று தண்டபாணி தேசிகர் மறுதலையான விளக்கம் தருகிறார். இயல் (அரசியல்), அதிகார (சுற்றந்தழால்) இயைபு நோக்கியே இவ்விதம் கொள்ளவேண்டும் என்றும் கூறுகின்றார் இவர். ஆனால் அரசன் சுற்றத்திடம் பழைமை பாராட்டுதல் என்பதைவிட சுற்றத்தார் ஒருவரிடம் பழைமை கொண்டாடுதல் என்பது அதிகார இயைபுடன் குறள்நடைக்கு ஏற்பவும் உள்ளது.

பொருள், அன்பு இல்லாதவிடத்தும் அல்லது நலிவுற்ற காலத்தும் என்பது 'பற்றற்ற கண்ணும்' என்பதற்குப் பொருளாகும்.

பற்றை இழந்த நிலையிலும் முன்பிருந்ததுபோலவே நட்புக்கொண்டு அளவளாவுதல் சுற்றத்தாரிடமே உண்டு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நலிவுற்ற வேளையிலும் பழைமை கருதி அளவளாவும் சுற்றந்தழால் வேண்டும்.

பொழிப்பு

பற்றில்லாத போதும் பழைய உறவுமுறைகளை எண்ணிக் கொண்டாடுதல் சுற்றத்தாரிடமே உண்டு.