இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0481 குறள் திறன்-0482 குறள் திறன்-0483 குறள் திறன்-0484 குறள் திறன்-0485
குறள் திறன்-0486 குறள் திறன்-0487 குறள் திறன்-0488 குறள் திறன்-0489 குறள் திறன்-0490

எவ்வளவு வலிமை, ஆற்றல், வசதி படைத்தவரானாலும் காலமறிந்து ஒரு காரியம் செய்யாவிட்டால் பயன்படாது. இது போர்த்தொழிலுக்கு மட்டுமன்றிப் பொதுவாகவும் கருதப்பட வேண்டியதாகும். ஆடிப்பட்டம் தேடிவிதை காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' வெயிலுள்ளபோதே உலர்த்திக்கொள் எல்லாம் காலமறிதல் அல்லவா?
- தமிழண்ணல்

.காலம் கருதாமல் மேற்கொள்ளப்படும் எந்த் முயற்சிக்கும் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு. காலம் அறிதல் என்பது செயலுக்கேற்ற காலத்தை உணர்தலைக் குறிப்பது. இது ஓடிக்கொண்டிருக்கும் காலத்தில் வாய்ப்பான நேரம் காண்பதைப் பற்றியது. பருவகாலங்களின் அதாவது கொடியவெயில், பெருமழை, கடுங்குளிர், வேகமானகாற்று போன்றவற்றின் இடையீடுகள் , செயல்படுவதற்கான சுற்றுச் சூழல்கள் இவற்றைக் கணித்தல் காலமறிதலில் அடங்கும்..மாறிக்கொண்டேவரும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப செயல் மேற்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லும் அதிகாரம்.

காலமறிதல்

செய்வதற்குரிய காலம் அறிந்து செய்து முடித்தற்கான கருவிகளுடன் செய்பவர்க்கு செய்தற்கரிய செயல்களில்லை என இவ்வதிகாரம் கூறுகிறது.
சுஈலப்பொழுதினால் பெறும் வெற்றி,, கஈலமறிதலால் வரும் பயன், கஈலம் வாய்க்காவிட்டால் பொஈறுத்திருத்தல், பொறுத்திருப்பதால் வரும் சிறப்பு, பொறுத்திருக்கும் பருவத்தில் தன் நோக்கம், உணர்ச்சிகள் ஆகியவற்றை வெளிக்காட்டாமை,, கா'லம் கூடியபொழுது வினரந்து செயல்படுதல், அச்செயல்முறை விளக்கம் இவற்றை சொல்வது காலமறிதல் அதிகாரம்..
காலத்துடன் இடமும் இணக்கமாக் அமைந்துவிட்டால் உலகமே கைகூடும் என்கிறது ஒரு பாடல். காலத்திற்காகச் சிலவேளைகளில் காத்திருக்க வேண்டி இருக்கும். அச்சமயங்களில் பதற்றமின்றிச் செயல்படவேண்டும். த்ம்முடைய குறிக்கொள்களை வெளிக்காட்டிக் கொள்ளாம்ல் ஒடுங்கி இருக்க வேண்டும். சீண்டும் மாற்றாரின் நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் எதிவினை காட்டாம்ல் அசைவற்றுத் தோற்றமளிக்க வேண்டும். அவ்விதம் ஒடுங்கி இருத்தல் இகழ்வாகக் கருதப்படமாட்டாது. இவ்விதம் பொறுமை காப்பது பெரும் பயனளிக்கும். தம் காலம் வரும்போது எல்லாம் தலைகீழாகிவிடும். பணியச் செய்தவர் பணிவர். காலம் இயைந்தபொழுது அரிய செயல்களைச் செய்து முடித்துவிடவேண்டும். பதுங்கி இருந்தவர், காலம் கூடியபொழுது பாய்ந்து விரைந்து திருத்தமாகச் செயலாற்றி வெற்றி காண்பர்.. இவை இந்த அதிகாரத்தில் அடங்கியுள்ள செய்திகளாகும்.

காலமறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 481 ஆம்குறள் வலிய ஆந்தையை காகம் பகலில் வெல்லமுடியும்; ஆட்சியாளர்க்கு மாறுபாடு கொண்டோரை வெல்வதற்கான காலம் உணர்தல் இன்றியமையாதது எனச் சொல்கிறது.
  • 482 ஆம்குறள் பருவத்தோடு இயைந்து இருந்தால் மேற்கொண்ட முயற்சி தொடர் வெற்றி கண்டு செல்வம் நீங்காமல் தங்கும் என்கிறது.
  • 483 ஆம்குறள் தகுந்த உத்தியுடன் பொருந்திய காலத்தில் செய்தால் முடியாத செயல் என்று ஒன்றும் இல்லை எனச் சொல்வது.
  • 484 ஆம்குறள் எக்காலத்தில் எவ்விடத்தில் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு ஒரு குறிக்கோளைத் தொடங்கினால் அது எதுவானாலும் தவறாமல் நிறைவேறும் எனக் கூறுகிறது.
  • 485 ஆம்குறள் காலம் வரும்வரை காத்திருந்து பதற்றமின்றி தெளிந்த மனத்துடன் செயல்பட்டால் உலகை வெல்லலாம் எனச் சொல்கிறது..
  • 486 ஆம்குறள் பதுங்கி இருப்பது பருவம் பார்த்துப் பாய்வதற்காகவே என்கிறது.
  • 487 ஆம்குறள் சீண்டிப் பார்ப்போர் மீது அங்கேயே சினம் கொள்ளமால் அவர்களை வெல்லும் காலம் கருதிக் காத்திருப்பர் கூர்த்த அறிவுத்திறன் கொண்டவர் என்கிறது.
  • 488 ஆம்குறள் இன்று பணியச் செய்து நிமிர்ந்து செல்லும் பகைவன் காலம் மாறும்போது தலை குப்புறக் கவிழ்வான் என்பதைச் சொல்வது.
  • 489 ஆம்குறள் கிடைக்காத காலம் வாய்த்தபொழுது செய்யவேண்டிய அரிய செயல்களைச் செய்து முடித்துக் கொள்ள அறிவுறுத்துவது.
  • 490 ஆவதுகுறள் காலம் கூடியபொழுது எப்படி விரைந்து தவறில்லாமல் செயலாற்ற வேண்டும் எனச் சொல்வது.

காலமறிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்

ஆந்தை, காக்கை, சண்டைக் கிடா, கொக்கு என நாம் நாளும் காணும் உயிரினங்களையும் அவற்றின் செயல்பாடுக்ளையும் கொண்டு கலமறிதலுக்கான உவமைப் பொருள்கள் எளிதாக மனதில் நிற்கும்படி இவ்வதிகாரத்தில் விளக்கப்பட்டன.

காலத்தோடு இடமும் வாய்க்கப் பெற்று ,கலங்காமல் செயல்பட்டால் ஞாலத்தையே விரும்பினாலும் அது கைகூடும் என்கிறது இங்குள்ள பாடல்கள்.

மிகுந்த சினம் மூட்டும் வகையில் மாற்றார் நடந்துகொண்டாலும் சீற்றம் கொள்ளாமல் அமைதியாக எதிர்கொண்டு காலம் கனிவதற்காகக் காத்திருக்க வேண்டும்; வெற்றி கிட்டும்வரை பணிவைக் காட்டுக; காலம் வாய்த்தவுடன் சீறிப்பாய்ந்து செயல்பட்டு முயற்சியை முடித்துக் கொள்க என்பது போன்ற வெற்றி பெற்றுத் தரும் உத்திகள் சொல்லப்பட்டுள்ளன இத்தொகுதியில்.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை என்ற ஆற்றல் மிகுந்த கவிதை இவ்வதிகாரகத்தில் உள்ளது.




குறள் திறன்-0481 குறள் திறன்-0482 குறள் திறன்-0483 குறள் திறன்-0474 குறள் திறன்-0485
குறள் திறன்-0486 குறள் திறன்-0477 குறள் திறன்-0488 குறள் திறன்-0489 குறள் திறன்-0490