இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0490



கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து

(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:490)

பொழிப்பு (மு வரதராசன்): பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல் அமைதியா இருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்கவேண்டும்.



மணக்குடவர் உரை: காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க, வினை செய்தற்கு வாய்த்த காலம் வந்தவிடத்து அக்கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல் விரைந்து செய்க.
இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம் காலம் வந்தால் தப்பாமை விரைந்து செய்ய வேண்டுமென்பதூஉம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேற்செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறு போல இருக்க, மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க -மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி, அது செய்து முடிக்குமாறு போலத் தப்பாமல் செய்து முடிக்க.
(மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்து எய்தும்துணையும் முன்அறிந்து தப்பாமைப்பொருட்டு உயிரில்லதுபோன்று இருக்கும் ஆகலானும், எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பேவிரைந்து குத்தும் ஆகலானும், இருப்பிற்கும் செயலிற்கும் கொக்குஉவமையாயிற்று. 'கொக்கு ஒக்க' என்றாராயினும், 'அதுகூம்புமாறு போலக் கூம்புக' என்றும் 'குத்து ஒக்க' என்றாராயினும் அது 'குத்துமாறுபோலக் குத்துக' என்றும் உரைக்கப்படும். இது தொழிலுவமம் ஆகலின் உவமை முகத்தான் இருப்பிற்கும் செயலிற்கும் இலக்கணம் கூறியவாறாயிற்று.)

நாமக்கல் கவிஞர் உரை: (காலத்துக்காகக் காத்திருப்பதும், வாய்ப்பு நேர்ந்தால் உடனே செய்வதும் எப்படியிருக்க வேண்டுமென்றால்) ஒரு கொக்கு தன் இரைக்காகக் காலங்கருதி சிறுதும் அசைவில்லாமல் வாடியிருப்பது போல் இருக்க வேண்டும். வாய்ப்பு வந்தவுடன் அந்தக் கொக்கு நறுக்கென்று மீனைக் கொத்திக் கொள்வதைப் போல் காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க, மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க.

பதவுரை: கொக்கு-கொக்கு என்னும் பறவை; ஒக்க-ஒத்திருக்க; கூம்பும்-(வாய்ப்பு) ஒடுங்கிய; பருவத்து-காலத்தில்; மற்று-அவ்வாறன்றி (ஆனால், பின்); அதன்-அதனுடைய; குத்து=கொத்துதல்; ஒக்க-ஒத்திருக்க; சீர்த்த இடத்து-வாய்த்த காலத்தில்.


கொக்குஒக்க கூம்பும் பருவத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க,;
பரிப்பெருமாள்: காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க;
பரிதியார்: மடைவாயிற் கொக்குப்போலே தனக்குத் தாயமாகிற வேளை வருமளவும் தூங்குக; [மடை-வாய்க்காலிற் தண்ணீர் பாயும் வழி; தாயமாகிற- உரிய]
காலிங்கர்: தாம் கருதிய கருமம் முடிவதற்கு ஒரு பருவம் வாய்க்கும் அளவும் உள் ஒடுங்கி இருக்கும் குருகின் தன்மை போலேயும்;
பரிமேலழகர்: வினைமேற்செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறு போல இருக்க;

'காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இருக்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒடுங்கிய காலத்துக் கொக்குப் போல்க', 'வினைமேற் செல்லாதிருக்கும்போது இரை நோக்கிக் காலம் பார்த்துக்காத்திருக்கும் கொக்குப் போல இருக்க', 'வினை செய்வதற்குக் காலம் ஒத்துவராமையல் ஒடுங்கி இருக்க வேண்டிய காலத்திலே கொக்குப் போல அடங்கி இருத்தல் வேண்டும்', 'தமக்கு முடியாதிருக்கும் காலத்தில் 'ஓடுமீன் ஓட, உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்கு இருப்பதுபோல இருக்கவும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வாய்ப்பு ஒடுங்கிய காலத்தில் கொக்கு போல இருக்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றுஅதன் குத்துஒக்க சீர்த்த இடத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினை செய்தற்கு வாய்த்த காலம் வந்தவிடத்து அக்கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல் விரைந்து செய்க.
மணக்குடவர் குறிப்புரை: இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம் காலம் வந்தால் தப்பாமை விரைந்து செய்ய வேண்டுமென்பதூஉம் கூறிற்று
பரிப்பெருமாள்: வினை செய்தற்கு சீர்த்த காலம் வந்தவிடத்து கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல் செய்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றி இகழ்ந்தார் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம் காலம் வந்தால் தப்பாமல் விரைந்து செய்யவேண்டுமென்பதூஉம் கூறிற்று.
பரிதியார்: மீன் தனக்கு நேர் பட்டளவில் கொக்குக் குத்தின முறைமைபோலத் தாயமானால் காரியஞ் செயங்கொள்க என்றவாறு.
காலிங்கர்: முடிவதற்கு ஒரு பருவம் வாய்த்த இடத்து மற்று அக்குருகு எறியும் தன்மை போலவும் காலம்கருதி இருக்க வேண்டும் அரசர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி, அது செய்து முடிக்குமாறு போலத் தப்பாமல் செய்து முடிக்க.
(பரிமேலழகர் குறிப்புரை மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்து எய்தும்துணையும் முன்அறிந்து தப்பாமைப்பொருட்டு உயிரில்லதுபோன்று இருக்கும் ஆகலானும், எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பேவிரைந்து குத்தும் ஆகலானும், இருப்பிற்கும் செயலிற்கும் கொக்குஉவமையாயிற்று. 'கொக்கு ஒக்க' என்றாராயினும், 'அதுகூம்புமாறு போலக் கூம்புக' என்றும் 'குத்து ஒக்க' என்றாராயினும் அது 'குத்துமாறுபோலக் குத்துக' என்றும் உரைக்கப்படும். இது தொழிலுவமம் ஆகலின் உவமை முகத்தான் இருப்பிற்கும் செயலிற்கும் இலக்கணம் கூறியவாறாயிற்று. [கூம்புக-அடங்கியிருக்க]

'காலம் வாய்த்த இடத்து அக்கொக்கு குத்துவதுபோலத் தப்பாமல் விரைந்து செய்க' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறந்த காலத்து அதன் குத்துப் போல்க', 'காலம் வாய்த்தவிடத்து அக்கொக்கு இரையைத் தவறாது குத்திச் செயலை முடிக்குமாறு தவறாது செயலை முடிக்க', 'இடம் செம்மையாக வாய்த்தபோது கொக்கு தப்பாது மீனைக் குத்துவது போலக் காரியத்தை விடாது செய்து முடித்தல் வேண்டும்', 'வெல்வதற்குரியனவெல்லாம் பொருந்தியவிடத்து எதிர் பாரத்த மீன் வந்தபொழுது கொக்கு குத்துதல்போல தப்பாமல் செய்க' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

வாய்த்த காலத்து கொக்கு விரைந்து (மீனைக்) குத்துவது போல் செயல்படவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
வாய்ப்பு ஒடுங்கிய காலத்தில் கொக்கு ஒக்க இருக்க வேண்டும்; காலம் கூடி வருகின்ற பொழுது அக்கொக்கு மீனை விரைந்து சென்று தப்பாது குத்திக் கொள்வது போல செயலாற்ற வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'கொக்குஒக்க' என்றால் என்ன?

ஓடுமீன் ஓடட்டும்; உறுமீன் வந்தவிடத்து விரைந்து குத்திக் கொண்டு போ.

வாய்ப்பு ஒடுங்கிய காலத்தில் கொக்கைப் போல அமைதியாக இருந்து, காலம் வாய்த்தவிடத்து கொக்கு மீனைக் குத்தினாற் போல விரைந்து செய்து முடிக்க வேண்டும்.
இக்குறள் செயல் முடித்தற்குத் தகுந்த காலத்திற்காக எவ்விதம் காத்திருக்க வேண்டும் என்பதையும் வாய்ப்பு நெருங்கியவுடன் எவ்வாறு விரைந்து செயலாற்ற வேண்டும் என்பதையும் நாம் அடிக்கடி நீர்நிலைகளில் காணும் காட்சியைக் கண்முன் நிறுத்தி மனதில் நன்கு பதியுமாறு காட்சிப்படுத்துகிறது. கொக்கு தன் இரைக்காக நீர்ப்பகுதிகளில் காத்திருக்கும்போது உள் ஒடுங்கி வாய்ப்பான வேளைக்காகப் பொறுமையாகவும் உள்ளே ஆயத்தநிலையுடன் விழிப்புடனும் காத்திருக்கும். அதுபோல் ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு அதற்கு உரிய காலத்திற்காகக் காத்திருக்கும்போது ஒடுங்கி இருக்க வேண்டும், தான் எண்ணிக்கொண்டிருந்த பெரியமீன் தென்பட்டவுடன் கொக்கு சிலிர்த்தெழுந்து அதைச் செங்குத்தாகக் குறி தவறாமல் குத்தி அதைத் தப்பவிடாமல் கவ்விக் கொள்ளும். வாடியிருந்த கொக்கா இவ்வாறு குத்தியது என்று வியக்கும்வண்ணம் ஓடுகிற மீனின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுப் பாய்ந்து கவ்வும். மீன் பிடிபட்டாலும் வழுவிக் கொண்டு ஓடக்கூடிய தன்மை கொண்டது அதைத் தப்பவிடாத அளவு கொக்கு பிடித்துவைத்துப் பறந்து செல்லும். அதுபோல் காலம் கூடியதை அறிந்து கொண்டவுடன், விரைந்து தவறின்றிச் செயல்பட்டு மேற்கொண்ட முயற்சியை முடித்துக் கொள்ள வேண்டும்.
காலம் கனியும் வரைப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்; கனிந்தவுடன் விரைந்து மின்னல் வேகத்தில் செயல்பட்டு செயலாற்ற வேண்டும் என்ற செய்திகள் சொல்லப்படுகின்றன. குறிக்கோளை அடையப் பொறுமையுடன் காத்திருக்கும்போது நம் கவனம் சிதறிவிடக்கூடாது என்ற கருத்தும் பெறப்படுகிறது.

மலர்தலுக்கு எதிர்ச் சொல் கூம்புதல். கூம்பும் பருவத்து என்பதற்கு வாய்ப்புக் குறுகிய காலத்து என்று பொருள்.
காலிங்கர் கொக்கு என்பதற்கு குருகு என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். அது விரைந்து செயல்படுதலை 'அக்குருகு எறியும் தன்மை போல' எனக் குறிக்கிறார்.
இப்பாடலில் கொக்கொக்க குத்தொக்க என ஓசை நயமும் பொருள் நயமும் பொருந்துமாறு நடைப்பாங்கு அமைந்திருப்பது எண்ணியெண்ணி இன்புறுதற்குரியது என்பார் இ சுந்தரமூர்த்தி.

கொக்குஒக்க' என்றால் என்ன?

கொக்குஒக்க என்பதற்கு கொக்கைப் போல என்று பொருள். 'கொக்கொக்க' என்ற உவமை பருவம் அறிதலுக்காகச் சொல்லப் பெற்றது.
கொக்கு, மீன்கள் துள்ளிக் குதித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரின் உட்பகுதிகளில் கண்களை ஓட்டி, தான் குறிகொண்ட மீன் கிடைக்கும்வரை அசைவற்று அமைதியாகக் காட்சி அளித்துக் காத்திருக்கும். கொக்கு ஆரவாரமில்லாமல் இருப்பதால் மீன்களுக்கு அது உயிருள்ள பறவை என்று தோன்றாது. இதை இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் என்பார் மணக்குடவர். பரிப்பெருமாள் இன்னும் மேலே போய் இகழ்ச்சியின்றி இகழ்ந்தார் போல இருத்தல் வேண்டும் என்கிறார். 'கொக்கொக்க' என்பது இந்த இருப்பிற்கு உவமானமாகச் சொல்லப்பட்டது.
யாதொரு நோக்கமில்லாதது போல். அசையாமல் கலங்காமல் இருந்த கொக்கு வாய்ப்பான மீன் வந்தவுடன் அதைத் தப்பவிடாமல் குத்திக் கவ்விச் சென்றுவிடுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் அந்த மீன் நீருக்குள் ஓடிக்கொண்டிருந்தது. மீன் வருவது, அதைக் கொக்கு குத்தி எடுத்தது எல்லாம், இடைவெளி இன்றி, கண் மூடிக் கண் திறப்பதற்குள் நடந்தேறிவிட்டன. எவ்வளவு கூர்மையான பார்வை. குறிதவறாத திறன், விரைவான குத்துதல், கொக்குக்கு! அதனால்தான் 'கொக்கொக்க' எனச் சொல்லப்பட்டது.

கொக்காக இருந்ததும் குத்தாக விரைந்ததும் இரண்டும் கொக்கின் செயல்கள்தான். 'கொக்கு ஒக்க' என்பது இரண்டுக்கும்தானே இருக்க வேண்டும். ஏன் 'கொக்கு ஒக்க', 'குத்து ஒக்க' என இரண்டாக்கிச் சொல்லப்படுகிறது? இதைப் பரிமேலழகர் 'கொக்கு ஒக்க' என்றாராயினும், 'அதுகூம்புமாறு போலக் கூம்புக' என்றும் 'குத்து ஒக்க' என்றாராயினும் அது 'குத்துமாறுபோலக் குத்துக' என்றும் உரைக்கப்படும் என்று தெளிவுபடுத்துகிறார்.

வாய்ப்பு ஒடுங்கிய காலத்தில் கொக்கு போல இருக்க வேண்டும்; காலம் கூடி வருகின்ற பொழுது அக்கொக்கு மீனை விரைந்து சென்று தப்பாது குத்திக் கொள்வது போல செயலாற்ற வேண்டும் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

செயலாற்ற வாய்ப்பான காலம் அறிதல் வேண்டும்.

பொழிப்பு

வாய்ப்பு ஒடுங்கிய காலத்தில் கொக்கைப் போல இருக்க; காலம் கூடிவரும் பொழுது அக்கொக்கு மீனைத் தப்பாமல் குத்திக் கொள்வதைப் போல் விரைந்து செயலாற்றுக.