இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0487



பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:487)

பொழிப்பு: அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்;(வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.

மணக்குடவர் உரை: கதுமென அவ்விடத்தே யுடம்பு வேரார்: தமக்குச் செய்யலாங் காலம் பார்த்து மனம் வேர்ப்பர் ஒள்ளியர்.
வேர்ப்பு பொறாமையால் வருவதொன்று. இது பகைவர் பொறாதவற்றைச் செய்தாலும் காலம் பார்க்கவேண்டுமென்றது. .

பரிமேலழகர் உரை: ஒள்ளியவர் - அறிவுடைய அரசர், ஆங்கே பொள்ளெனப் புறம் வேரார் - பகைவர் மிகை செய்த பொழுதே விரைவாக அவரறியப் புறத்து வெகுளார், காலம் பார்த்து உள் வேர்ப்பர் - தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும் உள்ளே வெகுள்வர்.
('பொள்ளென' என்பது குறிப்பு மொழி. 'வேரார்' 'வேர்ப்பர்' எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார், அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பாராகலின், 'புறம் வேரார்' என்றும் வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகை செய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள் வேர்ப்பர்' என்றும் கூறினார்.)

இரா சாரங்கபாணி உரை: அறிவுடையவர்கள் பகைவர் குற்றம் செய்தபோது அவர் அறியத் திடீரெனத் தம் சீற்றத்தைக் காட்ட மாட்டார்கள். பகையை வஎல்லுதற்குரிய காலம் பார்த்து மனத்துக்குள்ளே கொதித்து நிற்பர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
. ஒள்ளியவர் பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர்


பொள்ளென ஆங்கே புறம்வேரார்
பதவுரை: பொள்ளென-'சடக்கென; ஆங்கே-அப்போதே; புறம்-வெளிப்பட; வேரார்-வெகுளமாட்டார்; காலம்பருவம்;- பார்த்து-நோக்கி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கதுமென அவ்விடத்தே யுடம்பு வேரார்;
பரிப்பெருமாள்: கதுமென அவ்விடத்தே யுடம்பு வேரார்;
பரிதி: சடுதியிலே தம்முடைய நினைவைப் புறத்திலே சொல்லார்; .
காலிங்கர்: தாம் செய்யும் கருமம் வாய்க்கும் பருவம் வருங்காலம் தம்மேல் வியர்க்க வினை செய்ய முயலார்; மற்று என்செய்வர் எனின்;.
காலிங்கர் குறிப்புரை: புறம் வேரார் என்பது உடம்பு வேரார் என்றது
பரிமேலழகர்: பகைவர் மிகை செய்த பொழுதே விரைவாக அவரறியப் புறத்து வெகுளார்;
பரிமேலழகர் குறிப்புரை: பொள்ளென' என்பது குறிப்பு மொழி. '

'கதுமென அவ்விடத்தே யுடம்பு வேரார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவுடையார் வெளிப்படையாகக் கொதிப்படையார்', '(தமக்கு ஒருவன் பகையான காரியத்தைச் செய்துவிட்டாலும்) புத்திசாலிகள் சட்டென்று அப்போதே தம்முடைய கோபத்தைக் காட்டிவிடாமல்.', 'அறிவுடையோர்கள் பகைவர் கெடுதி செய்த்வுடனே வெளிப்படையாகச் சினங்கொள்ளாது', 'அறிவு மிகுதியுடையார் பிறருடைய தீமையைக் கண்டு உடனே வெளிப்படையாகச் சினங்கொள்ளமாட்டார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சடக்கென அப்போதே வெளிப்படையாகச் சினம் கொள்ளமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளியவர்:
பதவுரை: உள்-நெஞ்சம்;- வேர்ப்பர்-வெகுள்வர்; ஒள்ளியவர்-அறிவுடையர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்குச் செய்யலாங் காலம் பார்த்து மனம் வேர்ப்பர் ஒள்ளியர்.
மணக்குடவர் குறிப்புரை: வேர்ப்பு பொறாமையால் வருவதொன்று. இது பகைவர் பொறாதவற்றைச் செய்தாலும் காலம் பார்க்கவேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: தமக்குச் செய்யுங் காலம் பார்த்து மனம் வேர்ப்பர் ஒள்ளியர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: வேர்ப்பு பொறாமையால் வருவதொன்று. இது பகைவர் பொறாதவற்றைச் செய்தாலும் காலம் பார்க்கவேண்டுமென்றது.
பரிதி: காலம் பார்த்துக் காரியத்தை மனத்திலே கொண்டிருப்பர் என்றவாறு.
காலிங்கர்: அக்காலத்தைக் குறிக்கொண்டு நெஞ்சு புழுங்கி நிற்பார் அறிவுடை அரசர் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: உள் வேர்ப்பர் என்பது நெஞ்சு புழுங்கி நிற்பர் என்றது.
பரிமேலழகர்: அறிவுடைய அரசர், தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும் உள்ளே வெகுள்வர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'வேரார்' 'வேர்ப்பர்' எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார், அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பாராகலின், 'புறம் வேரார்' என்றும் வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகை செய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள் வேர்ப்பர்' என்றும் கூறினார்.

'வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும் உள்ளே வெகுள்வர் அறிவுடையார் ' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ';காலம் பார்த்து உட்கொதிப்பு அடைவர்', 'காலங்கருதி மனத்துக்குள்ளேயே கோபத்தை அடக்கிக்கொள்வார்கள்', 'அவரை வெல்லுங் காலம் பார்த்திருந்து அதுவரையும் உள்ளே வெகுண்டிருப்பர்', '.அவரை வெல்லுவதற்குரிய காலத்தினை எதிர்நோக்கி அது வருந்துணையும் உள்ளத்தின் உள்ளே வெகுண்டுகொண்டு இருப்பர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

காலங்கருதி மனத்துக்குள்ளேயே சினத்தை அடக்கிக்கொள்வார் கூரறிவுத்திறம் கொண்டவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சீண்டிப் பார்ப்போர் மீது அங்கேயே சினம் கொள்ளாமல் அவர்களை வெல்லும் காலம் கருதிக் காத்திருப்பர் கூர்த்த அறிவுத்திறன் கொண்டவர் என்னும் பாடல்.

கூரறிவுத்திறம் கொண்டவர் சடக்கென அப்போதே வெளிப்படையாகச் சினம் கொள்ளமாட்டார்; காலங்கருதி மனத்துக்குள்ளேயே சினத்தை அடக்கிக்கொள்வார் என்பது பாடலின் பொருள்.
'உள்வேர்ப்பர்' குறிப்பது என்ன?

பொள்ளென என்ற சொல்லுக்கு சடக்கென, விரைவாக, உடனே, அல்லது நொடியில் என்பது பொருள்
ஆங்கே என்ற சொல் அவ்விடத்தே என்ற பொருள் தரும். இங்கு அப்பொழுதே என்றும் கொளவர்.
புறம்வேரார் என்ற சொல் உடம்பால் அதாவது புறத்தே தெரியும்படி வியர்த்துப் போகார் குறித்தது. இவ்விடத்து வெளிப்படையாக வெகுளார் எனப் பொருள்படும்.
காலம்பார்த்து என்ற சொல் காலம் கருதி எனப் பொருள்படும்.
ஒள்ளியவர் என்ற சொல்லுக்கு மிகுந்த அறிவாற்றல் உடையவர் என்று பொருள்.

தெளிந்த அறிவுடையவர்கள் மாற்றார் தம்மைச் சீண்டும்போது அங்கேயே அப்பொழுதே தம் சீற்றத்தைக் காட்ட மாட்டார்கள். இகல் வெல்வதற்குரிய காலம் எதிர்நோக்கி உள்ளுக்குள்ளேயே புழுங்கி நிறபர்.

மாறுபாடு கொண்டோர் தம் மனம் பொறுக்காத செயல்களைச் செய்யும்போது, கூர்த்த அறிவுடையா உடனே சிலிர்த்தெழுந்து, உடம்பு வியர்க்க மூக்குவிடைக்க சினம் கொண்டு வன்சொல் பேசி வெலிப்படையாக உணர்வுகளைக் காட்ட மாட்டார். . ஆனாலும் அவர் வாளாவும் இருக்கவும் மாட்டார். அப்படி இருந்தால் பகைவர் மேலும் ஊறு செய்ய முற்படுவர். எனவே வெகுளியை மனத்துள் அடக்கி வைத்துக்கொண்டு சமயம் வரும்போது எதிர் செயல் நடத்த முற்படுவர்.. தான் கொண்ட சினத்தை புறத்தே காட்டிக்கொண்டால் பகைவர் இவன் சீற்றத்தை அறிந்து கொண்டு தன் பாதுகாப்பைப் பெருக்கிக் கொள்வார் அல்லது அவர் நாம் ஆயத்தமில்லாமல் இருக்கும்போது நம் மீது தாக்கலாம். எனவே அமைதி காத்து பகைமை உள்ளே கனன்று கொண்டிருக்க எதிர்த்தாக்குதலுக்குத் திட்டமிடத் தொடங்குவர்.
காலம் கருதி உள்ளும் புறமும் வேறுபட்டு நடந்துகொள்வது ஒருவர்க்குப் பொருந்துவதே என்பது பாடலின் கருத்து. .அறிவுடையோர் அடாது செயும் பகைவர் மேலுள்ள தனது சினத்தைக் கையாளும் திறம் கூறப்படுகிறது. பகைவர் குற்றம் செய்யும்போது தன் சினத்தை வெளிக்காட்டாமல் உள்ளடக்கி வைத்து பகையை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் செயல்படுவர் இவர். தவறான நேரத்தில் வெளிப்படுத்தப்படும் சினம், தனக்கே அழிவை உண்டாக்கலாம். முந்தைய குறளில் 'ஊக்கமுடையார் ஒடுக்கம் வெற்றிக்கே ஏதுவாம்' என்று சொல்லப்பட்டது இங்கு காலங்கருதி அவர் ஒடுங்கியிருப்பினும் அவருள்ளத்தில் வெகுளி ஒடுங்காது நிற்கும் என்று கூறப்படுகிறது.

மனத்தை நிதானமாகவும் தன் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கவல்ல தெளிந்த அறிவுடையவர்களால் மட்டுமே பொறுமையாகச் செயல்பட முடியும். உணர்ச்சி வசப்படுகிறவர்களுக்கு இது கைகூடாது. காலம் பார்த்து செயல்புரிவதற்கும் பொறுக்கமுடியாத இடும்பை செய்யப்பட்டபோதும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் (ஒண்மை) அறிவு வேண்டும் என்பதால் ஒள்ளியவர் எனப்பட்டது. .
பொள்ளென' என்பது விரைவுப் பொருள் உணர்த்தும் சொல் . சோவென மழைபெய்தல், கோவென அழுதல், பளீரென மின்னுதல் போன்ற் நடையில் வாசிக்கவேண்டும். . கதுமென, சடுதியிலே திடீரென, நொடிக்குள் எனபன இதற்கு இணையான சொற்கள்..

'உள்வேர்ப்பர்' குறிப்பது என்ன?

உள்வேர்ப்பர் என்பதற்கு மனத்திற்குள்ளேயே வேர்ப்பர் அதாவது புழுங்குவர் என்பது பொருள்.
வேர்ப்ப என்பது வியர்க்க என்றும் கூறப்படும். வேர்த்தல்- வெகுளியின் வெளிப்பாடு. ஆனால் வெகுளார் வெகுள்வர் எனக் கூறாமல் வேர்ப்பர் வேரார் என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கு மிகுந்த சினம் உண்டாகும் சூழலைக் குறிக்க வேர்ப்பர் என்ற சொல் ஆளப்பட்டது..
உள்ளம் பொறுக்கமுடியாத சூழிநிலையில், மிகுந்த சினம் தோன்றும் நேரத்திலே, மனக்கொதிப்பு ஏற்பட்டு, உடம்பு படபடத்து வேர்ப்பு உண்டாகும். இது புறம்வேர்ப்பது ஆகும். அறிவுடையார் புறம்வேரார் என்கிறது பாடல். எப்படி புறம் வேர்ர்கும அளவு வெறுப்பூட்டும் செயலகளைப் பகைவன் செய்தானோ அதை எதிர்கொள்ள உள்ளக் கொதிப்பை- பகைவர் மேலிருக்கும் சினத்தீயை- எரிமலைபோல மனத்துக்குள்ளேயே மூடிவைத்துக் கொள்வதை உள்வேர்ப்பர் என்ற சொல் குறிக்கும். எரிமலை வெடித்தால் என்ன ஆகுமோ அதுபோல் காலம்வரும்போது உள்ளே கனன்று கொண்டிருந்த தீ வெளிப்பட்டு செயலில் காட்டப்படும். படபடவென்று செயல் மேற்கொள்ளாமல், காலம் பார்த்து நெஞ்சு புழுங்கியிருக்க வேண்டும் என்பது கருத்து...

'புறம் வேரார் எனவே அகம் வேர்ப்பர் என்பதும் பொள்ளென வேரார் எனவே காலம் பார்த்து வேர்ப்ப்பர் என்பதும் இக்குறளின் முற்கூற்றாலே பெறப்படுதலின் அதனைக் காலம் பார்த்து உள்வேர்ப்பர் என மீண்டும் ஏன் கூறப்பட்டது?, காலம் வாய்த்தாலும் மனப்புழுக்கத்தைச் செயலிற் காட்ட வேண்டுமேயன்றி வெகுளியை வெளிக்காட்டி வினையைக் கெடுக்ககூடாது என்ற உண்மையை உணரச் செய்கிறது' என்று தண்டபாணி தேசிகர் தெளிவுபடுத்துவார்..

கூரறிவுத்திறம் கொண்டவர் சடக்கென அப்போதே வெளிப்படையாக சினம் கொள்ளமாட்டார்; காலங்கருதி மனத்துக்குள்ளேயே சினத்தை அடக்கிக்கொள்வார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சினத்தை மனத்துகுள்ளேயே அடக்கிவைத்துக் கொண்டிருந்து காலம் பார்த்துச் செயல்படுவதைச் சொல்லும் காலமறிதல் பாடல்.

பொழிப்பு

கூரறிவு கொண்டோர் வெளிப்படையாகச் சினம் கொள்ளார்; காலம் பார்த்து மனத்துக்குள்ளே கொதித்து நிற்பர்