இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0486ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து

(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:486)

பொழிப்பு (மு வரதராசன்): ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்னே கால்வாங்குதலைப் போன்றது

மணக்குடவர் உரை: மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும்.
இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.

பரிமேலழகர் உரை: ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து.
(உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: செயல் புரிவதில் மனக்கிளர்ச்சி உடையவன் தக்க காலம் வாய்க்கும் வரை ஒடுங்கி இருத்தல் சண்டை இடும் ஆட்டுக் கடா எதிரே வரும் கடாவைத் தாக்குவதற்காகக் காலம் பார்த்துப் பின்னே கால்வாங்குதல் போன்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து.

பதவுரை: ஊக்கம்-மனமிகுதி; உடையான்-உடைமையாகக் கொண்டவன்; ஒடுக்கம்-ஒடுங்கியிருப்பது, பதுங்கியிருப்பது, காலம் பார்த்திருக்கின்ற இருப்பு; பொருதகர்-சண்டைச் செம்மறிக்கடா; தாக்கற்குப்-வலிமிகத் தாக்குவதற்கு, பாயும்பொருட்டு; பேரும்-பின்னாகக் கால்வாங்கும்; தகைத்து-தன்மையுடையது.


ஊக்கம் உடையான் ஒடுக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல்; [மன மிகுதி - மன எழுச்சி]
பரிப்பெருமாள்: மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல்;
பரிதி: விசாரமுள்ளவன் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பான். எப்படி என்றால்;
காலிங்கர்: ஒரு கருமம் செய்ய நெஞ்சின்கண் மேற்கோள் உடையனாகிய வேந்தனானவன் மற்று அதற்கு அடுத்த பருவம் வந்து எய்தும் துணையும் மற்று அதன்கண் முயலாது ஒடுங்கியிருக்கின்ற ஒடுக்கமாவது எத்தன்மைத்தோ எனின்;
பரிமேலழகர்: வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு.

'மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊக்கம் உடையவன் ஒடுங்கி இருப்பது', 'ஊக்கமுடையவன் (காலங் கருதிக் கலங்காமல்) அடங்கியிர்ப்பது', 'ஊக்கம் உடையவன் பகைமேல் செல்லாது காலம் பார்த்து ஒதுங்கியிருத்தல்', 'மன எழுச்சியுடையான் செயலின்றி ஒடுங்கியிருப்பது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனஎழுச்சியுடையவன் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பது என்பது இப்பகுதியின் பொருள்.

பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும். [தகர்- ஆட்டுக்கிடா]
மணக்குடவர் குறிப்புரை: இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.
பரிப்பெருமாள்: போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.
பரிதி: கிடாயானது பின் வாங்குவது போல என்றவாறு. [கிடா-எருமை, ஆடு இவற்றின் ஆண்பாற் பெயர் கடா, கிடா, கிடாய்]
காலிங்கர்: மேற்கொண்டு நிற்கின்ற போர்(கிடாய்) பொட்டெனத் தலையொடு தலை முட்டுதற்பொருட்டுச் சிறிது நீங்கிச் செவ்வி பார்த்து நிற்கும் தகைமைத்து என்றவாறு. [பொட்டென- விரைவாக]
பரிமேலழகர்: பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து. [தன்பகைகெட - தன்பகையான ஆட்டுக்கடா அழியும் பொருட்டு]
பரிமேலழகர் குறிப்புரை: உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது. [அவ் விருப்பு - காலம் பார்த்து இருக்கும் இருப்பு]

'பொருதுகின்ற கிடாய் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பின் வாங்குவது போல' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சண்டைக்கடா பின்வாங்கும் குறிப்பாகும்', 'சண்டையிடுகிற ஆட்டுக்கடா எதிரியைத் தாக்கப் பின்புறமாக நகருவதைப் போன்றது', 'போர்செய்யும் ஆடானது எதிராட்டின்மேல் நன்றாகப் பாய்வதற்குப் பின்னே கால்வாங்குவதைப் போலும்', 'பொருகின்ற ஆட்டுக்கிடாய் எதிர் ஆட்டை வெல்வதற்குரிய முறையில் பாய்வதற்காகப் பின்னே செல்லும் தன்மையைப் போன்றது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

சண்டை ஆட்டுக்கிடா எதிர் ஆட்டின்மேல் பாய்வதற்கு முன், வலிபெறும்பொருட்டு, பின்னே கால்வாங்குவதைப் போல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனஎழுச்சியுடையவன் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பது, சண்டை ஆட்டுக்கிடா எதிர் ஆட்டின்மேல் பாய்வதற்கு முன், வலிபெறும்பொருட்டு, பேரும் தகைத்து என்பது பாடலின் பொருள்.
'தாக்கற்குப் பேரும் தகைத்து' என்றால் என்ன?

பதுங்கி இருப்பது பருவம் பார்த்து வலிமை கூட்டிப் பாய்வதற்காக.

மனஎழுச்சியுடையவன் காலம் பார்த்து ஒடுங்கியிருப்பது சண்டையிடும் ஆட்டுக்கிடாய் எதிர் ஆட்டை வலியதாகத் தாக்கும் பொருட்டுப் பின்வாங்கும் தன்மையது.
பெரிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளான் ஒருவன். அவன் மேலும் மேலும் முயலும் மனக்கிளர்ச்சி உடையவன் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்பொழுது ஒரு செயலுமின்றி அமைதியாகக் காணப்படுகிறான். அவன் சில பொழுது வாளா இருத்தல் சோம்பலின் பாற்பட்டன்று என்பதையும், தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளத் தயங்குகிறான் என்று பொருளல்ல என்பதையும் குறிக்கவே 'ஊக்கம் உடையான்' என்ற சொல் ஆளப்பட்டது. தாக்குவதற்கான தகுந்த காலத்துக்காகக் காத்திருந்து ஒரே பாய்ச்சலில் வலி மிகுத்து மாற்றானை வீழ்த்த எண்ணுகிறான் அவன். இது சண்டையிடும் கிடா பின்வாங்கி ஆற்றலைப் பெருக்கி எதிர்ஆட்டைத் தாக்க ஆயத்தமாவதற்கு ஒப்பாகும் என்கிறது பாடல்.

வலிமை உடையவன் சில நேரம் பின்வாங்கிக் கொள்வதுபோல் போக்குக் காட்டுவது வெற்றியைக் குறிக்கொண்டுதான் என்பதை விளக்க வந்த பாடல் இது. ஊக்கமிருந்தாலும், திட்டமிட்டு செயலாற்றுபவர்கள் தகுந்த நேரத்திலேதான் செயலாற்ற முனைவர். அக்காலம் வரும்வரை ஒடுக்கத்துடன் அடங்கியே இருப்பர். அப்படிக் காத்திருக்கும் நேரமெல்லாம் மாற்றானை முறியடிப்பதற்கான சிந்தனையில் கழிப்பர். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, இவர்கள் செயலற்றுப் போனார்கள் என்ற எண்ணம்கூடத் தோன்றலாம். ஆனால் அவர்கள் தங்கள் வலியைக் கூட்டிக் கொள்வதற்காகத்தான் இவ்விதம் ஒடுங்கி இருப்பார்கள். காலம் வாய்த்தவுடன் முழுப் பலத்துடன் ஒரே பொழுதில் ஒரே இடத்தில் செலுத்தி வெற்றிபெற விழைவர்.

தகர் என்ற சொல் ஆடு என்ற விலங்கைக் குறிக்கும். பொருதகர் என்றது பொருதும் அதாவது சண்டையிடும் ஆடு எனப்பொருள்படும். எருமை, ஆடு இவற்றின் ஆண்பாற் பெயர் கடா, கிடா, அல்லது கிடாய் என்பதாகும். இங்கு ஆட்டுக் கிடா சொல்லப்பட்டது. ஆடு, சேவல் ஆகியவற்றைப் பொரவிடும் வழக்கம் நாட்டுப்புறங்களில் உண்டு. மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள் ஒன்றையொன்று தாக்கிச் சண்டை செய்வதையும் அங்கு பார்க்கலாம். அப்படிச் சண்டை செய்யும்பொழுது கிடா பின்வாங்குவதுபோல் நகன்று வெற்றியைக் குறிக்கொண்டு தன் வலிமையைக் கூட்டிக் கொள்ளும். இந்த உவமையை ஒடுங்கியிருக்கும் ஊக்கம் உடையானுக்குப் பயன்படுத்தினார் வள்ளுவர்.

'தாக்கற்குப் பேரும் தகைத்து' என்றால் என்ன?

'பேரும் தகைத்து' என்பதற்கு வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும், பின் வாங்குவது போல, பொட்டெனத் தலையொடு தலை முட்டுதற்பொருட்டுச் சிறிது நீங்கிச் செவ்வி பார்த்து நிற்கும் தகைமைத்து, தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து, பகையெல்லாந்தீரப் பாய்கிறதற்காகப் பின் இடைந்து போகிறதோடொக்கும், தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்னே கால்வாங்குதலைப் போன்றது, தன் பகைமீது தாக்குதற்பொருட்டுச் சிறிது பின்னே கால்வாங்கும் தன்மைத்தாகும், பின்வாங்கும் குறிப்பாகும், காலம் பார்த்துப் பின்னே கால்வாங்குதல் போன்றது, எதிரியைத் தாக்கப் பின்புறமாக நகருவதை ஒத்தது, வலுவாக முன்னேறித் தாக்குவதற்காகப் பின்வாங்கிச்செல்லும் தன்மையது, நன்றாகப் பாய்வதற்குப் பின்னே கால்வாங்குவதைப் போலும், வெல்வதற்குரிய முறையில் பாய்வதற்காகப் பின்னே செல்லும் தன்மையைப் போன்றது. வலிமையாய்த் தாக்குதற்குப் பின் வாங்கும் தன்மையது, வேகமாகத் தாக்குவதற்குப் பின் வாங்குவது போலாகும், பாய்வதற்கு முன் காலடியைப் பின்னே வைக்கும் ஆட்டுக் கிடாவின் செயலை நிகர்க்கும் அது என்றவாறு பொருள் கூறினர்.

தாக்கற்கு என்பது தாக்குவதற்கு என்றும் பேரும் என்ற சொல் பின்வாங்கும் என்றும் தகைத்து என்றது தன்மையது என்றும் பொருள்படும். 'தாக்கற்குப் பேரும் தகைத்து' என்றதற்கு தாக்குவதற்காகப் பின்வாங்கிச்செல்லும் தன்மையது என்பது பொருள்.
காலிங்கர் தனது உரையில் 'மேற்கொண்டு நிற்கின்ற போர்(கிடாய்) பொட்டெனத் தலையொடு தலை முட்டுதற்பொருட்டுச் சிறிது நீங்கிச் செவ்வி பார்த்து நிற்கும் தகைமைத்து' என்று இக்காட்சியை விளக்கினார். சண்டை ஆடு பின்வந்து பின் விரைந்து முன்சென்று தாக்கும்; பின்வருதலோடு காலம்பார்த்து நிற்றலை ’ஒடுக்கத்திற்கு’ விளக்கமாக வந்த உவமையிற் பொருத்தினார் காலிங்கர்.
உரையாசிரியர்கள் 'பேரும்' என்றதற்குப் பின் வாங்குவது, பின்னே கால் வாங்கும் எனப் பொருளுரைத்தனர். கால்வாங்குதல் என்பது பின்னாலே நகர்ந்து போதலைக் குறிப்பது. ஏன் பின்னாலே போகவேண்டும்? வலிகொண்டு தாக்குவதற்காகச் செம்மறிக்கடாய் பின்னால் சென்று விரைந்து ஓடிவந்து முட்டும். முட்டுக்கடா பின்வாங்குவது பகையாட்டை இன்னும் பலமாகப் பாய்ந்து முட்டிப் போர்செய்வதற்கே. ஒடுக்கத்தின் தேவையை தகர் பின்வாங்குதல் என்னும் உவமை விளக்கிற்று.
விமானங்கள் பறப்பதற்குமுன், தரையிலிருந்து உயர்ந்து வான்வெளியில் உயர்வதற்குத் தேவையான ஆற்றலைப் பெற ஓடுபாதையில் மிக விரைவாக ஓடும். அப்படி ஓடுவது மேலே எழும்புவதற்கான வலிமையைக் கூட்டிக்கொள்வதற்காவும், புவியீர்ப்பு ஆற்றல் அதைக் கீழே இழுத்துவிடாமல் எதிர்க்கவும் தேவையான ஆற்றலைப் பெறுவதற்காக. இது இக்குறட்கருத்துடன் ஒப்புநோக்கத் தக்கது.

'பேரும் தகைத்து' என்ற தொடர் வலுவாக முன்னேறித் தாக்குவதற்காகப் பின்வாங்கிச்செல்லும் தன்மையது என்ற பொருள் தரும்.

மனஎழுச்சியுடையவன் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பது சண்டை ஆட்டுக்கிடா எதிர் ஆட்டின்மேல் பாய்வதற்கு முன், வலிபெறும்பொருட்டு, பின்னே கால்வாங்குவதைப் போல என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

போரில் தாக்குதலுக்கான காலமறிதல் வேண்டும்.

பொழிப்பு

மனஎழுச்சியுடையவன் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பது சண்டை ஆட்டுக்கிடா எதிர் ஆட்டின்மேல் பாய்வதற்கு முன், வலிபெறும்பொருட்டு, கால்வாங்குவதைப் போல.