இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0483



அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:483)

பொழிப்பு: (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ?

மணக்குடவர் உரை: அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்.

பரிமேலழகர் உரை: அருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்¢தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின்.
(கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: ஆற்றலோடு காலமும் அறிந்து செய்யின் செய்தற்கு அரியதென ஏதும் உண்டோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
கருவியான். காலம் அறிந்து செயின் அருவினை என்ப உளவோ


அருவினை என்ப உளவோ:
பதவுரை: அருவினை-அரிதான செயல்; என்ப-என்று சொல்லப்படுபவை; உளவோ-இருக்கின்றனவா.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ?
பரிப்பெருமாள்: அரிய வினையென்று சொல்லப்படுவனவும் உளவோ?
பரிதி: வெல்லுவதற்கரிய வினை என்பது இல்லையே; .
காலிங்கர்: வேந்தர்க்குச் செய்தற்கு அரிய கருமங்கள் என்பனவும் சில உளவோ? இல்லை; மற்று எப்பொழுது எனின்;
பரிமேலழகர்: அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ,

'செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' அவனுக்குச் செயற்கரிய செயல்கள என்று சொல்லப்படுவன உளவோ? (இல்லை)' 'முடியாத காரியங்களும் உண்டா? இல்லை', 'செய்தற்கு அரியன என்பனவும் உளவோ? (இல்லை) ', 'செய்தற்கரிய செயல்கள் என்பன உளவோ? இல்லை ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செய்தற்கரிய செயல்கள் என்று சொல்லப்படுவன உளவோ? என்பது இப்பகுதியின் பொருள்.

கருவியான் காலம் அறிந்து செயின்:
பதவுரை: கருவியான்-சாதனத்தால்; காலம்-பொழுது; அறிந்து-தெரிந்து; செயின்-செய்தால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்
பரிப்பெருமாள்: முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முடியாத வினையில்லை என்றது.
பரிதி: காலமறிந்து காரியம் செய்வானாகில் என்றவாறு.
காலிங்கர்: ,தாம் தொடங்குவதோர் கருமம் கடைபோவதற்கு ஏற்கும் உபாயத்துடனே அடுத்த காலத்தைக் குறிக்கொண்டு செய்வாராயின் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: கருவி என்பது உபாயம் என்றது; சாதுரங்கம்1 என்றுமாம். பரிமேலழகர்: அவற்றை முடித்¢தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின்.
பரிமேலழகர் குறிப்புரை (கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.

'முடித்¢தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் வினை முடித்தற்குரிய கருவிகளுடனே ஏற்ற காலத்தையும் அறிந்து செயற்படுவானாயின்', '(ஒரு காரியத்தைச் செய்து முடிக்க அவசியமான கருவிகளுக்குள்) தகுந்த காலம் என்பதும் ஒரு கருவியாகும். அதை அறிந்து செய்தால்', 'தக்க உபாயங்களோடு ஒன்றைச் செய்தற்கு உரிய காலம் அறிந்து செய்தால்', 'ஒரு செயலை செய்து முடிப்பதற்குரிய கருவிகளோடு செய்தற்குரிய காலத்தையும் நன்கு அறிந்து செய்தால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

உரிய கருவிகளோடு ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தகுந்த கருவியுடன் பொருந்திய காலத்தில் செய்தால் முடியாத செயல் என்று ஒன்றும் இல்லை என்று சொல்லும் பாடல்.

உரிய கருவியான் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால் செய்தற்கரிய செயல்கள் என்று சொல்லப்படுவன உளவோ? என்பது பாடலின் பொருள்.
'கருவியான்' குறிப்பது என்ன?

அருவினை என்ப என்ற தொடர்க்கு செய்வதற்கு அரிதான செயல்கள் என்று சொல்லப்படுவன என்பது பொருள்.
உளவோ என்ற சொல் உள்ளனவா என்ற பொருள் தருவது.
காலம், அறிந்து என்ற தொடர் 'ஏற்ற காலம் என்பது தெரிந்து' எனப் பொருள்படும்
செயின் என்ற சொல்லுக்கு செய்தால் என்று பொருள்.

செய்வதற்கு ஏற்ற காலம் அறிந்து செய்து முடித்தற்குரிய கருவிகளுடன் செயலாற்றுவோர்க்கு செய்தற்கரிய செயல்கள் இல்லை.

எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெற காலம் கருதிச் செய்ய வேண்டுவது இன்றியமையாதது. அதையும் முறையான கருவிகளைக் கையாண்டு செய்தால் ஆற்றல் பெருகி அரிய செயல்களை முடிக்க முடியும்.. தகுந்த காலம் அறிந்து உரிய கருவிகளைத் தேர்வு செய்து அவற்றை இயக்கும் வழிமுறைகளை உணர்ந்து செயல் புரிந்தால் அரிய சாதனைகளைச் செய்யமுடியும்.
வேளாண்மை, தொழில், மருத்துவம், போக்குவரத்து, நிதி என அனைத்துத் துறைகளிலிலும் புதுப்புது கருவிகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. , கருவிகள் காலத்துக் காலம் மாறும் தன்மையன. வங்கிகளிலிருந்து பணம் பெற்றுக் கொள்ள, பணம் செலுத்த தானியங்கி கருவிகள் வந்துவிட்டன. .மேற்கொண்ட செயலுக்கு ஏற்ற வகையில் இன்றைய செயலை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும் என்பது காலத்தையும் கருவியையும் இணைத்துச் சொல்வதாம்..
கருவி என்பது சாதனத்தை மட்டும் குறிப்பதல்ல. செயல் நிறைவேறக் கையாளப்படும் உத்தியையும் ஆற்றலையும் அது குறிக்கும். வெல்லும் காலத்தை உணர்ந்து சாதனங்கள், உத்திகள், ஆற்றல், இவற்றைக் காலத்துக்கேற்றவகையில் பயன்படுத்தினால் அரிய செயல்களைச் சாதிக்க முடியும்.

இக்குறட்கருத்து ஊழிற் பெருவலி யாவுள... என்ற மற்றொரு குறட்பாவின் (380) கருத்துக்கு எதிர்நிலையானது என்று காட்டுவர். ...:

'கருவியான்' குறிப்பது என்ன?

கருவி என்பதற்கு பழைய உரையாசிரியர்களில் மணக்குடவர்/பரிப்பெருமாள் முடித்தலாம் கருவி அதாவது செயல் முடித்தற்கேற்ற கருவி என்று பொருள் கூறினர். காலிங்கர் கடைபோவதற்கு ஏற்கும் உபாயம் என்றுரைத்தார். பரிமேலழகர் கருவி என்பதை அறிவு, ஆற்றல், ஆண்மை என்ற மூவகை ஆற்றலும் - தான, சாம, பேத, ,தண்டம் என்ற நால்வகை உபாயம் இவற்றைக் குறிக்கும் என்றார்.
இன்றைய ஆசிரியர்களில் வ சுப மாணிக்கம் கருவி என்பதற்கு ஆற்றல் எனப் பொருள் கூறுகிறார். பாவாணர் ஐவகையாற்றலும் (வினைவலி, தன்வலி, மாற்ரான் வலி, துணைவலி, பொருள் வலி), நால்வகை ஆம்புடைகளுமாம் (சாம, தான, பேத, தண்டம்) எனா உரைக்கிறார். ஜி வரதராஜன் கருவியாவன பொருள், இடம் துணை முதலாயின எனக் கூறினார்.
நாமக்கல் இராமலிங்கம் காலமே ஒரு கருவி எனக் குறிக்கிறார். மு கோவிந்தசாமி காலம் அளக்கும் கருவிகளான கடியாரம் போன்றவை என்கிறார். இவர்கள் இருவரும் கருவியையும் காலத்தையும் ஒன்றாக்கிக் கூறினர். கருவி வேறு காலம் வேறு ‘கருவியாற் காலம் அறிந்து.. என்று வள்ளுவரே பிரித்துத்தான் காண்கிறார்.

கருவி என்பது சாதனம், உத்தி, ஆற்றல் இவற்றைக் குறிக்கும்.

'

உரிய கருவியான் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால் செய்தற்கரிய செயல்கள் என்று சொல்லப்படுவன உளவோ? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தக்க காலத்தில் உரிய கருவிகளுடன் அரிய செயல்களைச் செய்யமுடியும் எனச் சொல்லும் காலமறிதல்பாடல்.

பொழிப்பு

உரிய கருவிகளுடனே ஏற்ற காலத்தையும் அறிந்து செயற்படுவாராயின் ஒருவர்க்குச் செயற்கரிய செயல்கள என்று சொல்லப்படுவன உளவோ? (இல்லை)