இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0489



எய்தற்கு அரிய இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்

(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:489)

பொழிப்பு: கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்யவேண்டும்

மணக்குடவர் உரை: பெறுதற்கு அரிய காலம் வந்தால் அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க.
இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டு மென்றது

பரிமேலழகர் உரை: எய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகையை வெல்லக்கருதும் அரசர்,தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால், அந் நிலையே செய்தற்கு அரிய செயல் - அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற்செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.
(ஆற்றல் முதலியவற்றால் செய்து கொள்ளப்படாமையின் 'எய்தற்கு அரியது' என்றும், அது தானே வந்து இயைதல் அரிதாகலின், 'இயைந்தக்கால்' என்றும், இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், 'அந்நிலையே' என்றும் அது பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கு அரிய' என்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: தம்மால் பெறுதற்கரிய காலம் வந்து கூடினால் அது வந்த அப்பொழுதே செய்தற்கரிய செயல்களைச் செய்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
.எய்தற்கு அரிய இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல்


எய்தற்கு அரிய இயைந்தக்கால்:
பதவுரை: எய்தற்கு-அடைவதற்கு; அரியது-அருமையானது; இயைந்தக்கால்-கூடினால்..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெறுதற்கு அரிய காலம் வந்தால்;
பரிப்பெருமாள்: பெறுதற்கு அரிய காலம் வந்தால்;
பரிதி: ஒரு காலத்திலும் கூடாத காரியம் கூடினால்; .
காலிங்கர்: தாம் செய்வது ஓர் கருமத்திற்கு ஏற்குமாறு கிட்டுதற்கு அரிய பருவமானது வந்து கிட்டிய காலத்தும்; .
பரிமேலழகர்: பகையை வெல்லக்கருதும் அரசர்,தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால;

'பெறுதற்கு அரிய காலம் வந்தால்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி மட்டும் மாறுபாடாக 'காரியம் கூடி வந்தால்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கிடைத்தற்கு அரியது கிடைத்தால்', 'நாள் குறித்துள்ள காலத்துக்கு முன்னால் எதிர்பாராதபடி இதைவிட அருமையான வாய்ப்புக் கிடைக்காதென்ற சமயம் கிடைத்து விட்டால்', 'கிடைத்தற்கு அருமையான காலம் வந்து வாய்த்த இடத்து', 'அடைவதற்கு முடியாதது வந்து சேருமானால் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கிடைத்தற்கு அரிதான் காலம் வந்து சேருமானால் என்பது இப்பகுதியின் பொருள்.

அந்நிலையே செய்தற்கு அரிய செயல்:
பதவுரை: அந்நிலையே-அந்தப் பொழுதே; செய்தற்கு-செய்வதற்கு; அரிய அருமையானவைகளை; செயல்-செய்க.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க.
மணக்குடவர் குறிப்புரை: இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டு மென்றது
பரிப்பெருமாள்: அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காலம் வந்தால் அரிதென்று நாணாது செய்யவேண்டு மென்றது
பரிதி: ஒருவராலும் செய்து முடிக்க ஒண்ணாத காரியத்தைச் செய்வான் என்றவாறு.
காலிங்கர்: பின் சென்று கழியாமல் பருவத்தே செய்தற்கு அரியனவற்றைச் செய்து கொள்க என்றவாறு.
பரிமேலழகர்: அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற்செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: ஆற்றல் முதலியவற்றால் செய்து கொள்ளப்படாமையின் 'எய்தற்கு அரியது' என்றும், அது தானே வந்து இயைதல் அரிதாகலின், 'இயைந்தக்கால்' என்றும், இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், 'அந்நிலையே' என்றும் அது பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கு அரிய' என்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.

'அப்பொழுதே செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உடனே செய்தற்கு அரியதைச் செய்து கொள்க', 'பின்னால் அப்படிப்பட்ட வாய்ப்புக் கிடைக்கா தென்பதற்காக அப்போதே குறித்த காரியத்தைச் செய்துவிட வேண்டும்', 'அப்பொழுதே செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து முடித்தல் வேண்டும்', 'அதனையே துணையாகக் கொண்டு அச்சமயத்திலேயே செய்வதற்கு அரியனவாகிய செயல்களைச் செய்து முடிக்கவும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அப்பொழுதே செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கிடைக்காத காலம் வாய்த்தபொழுது செய்யவேண்டிய அரிய செயல்களைச் செய்து முடித்துக் கொள்க என்னும் பாடல்.

எய்தற்கு அரிய இயைந்தக்கால் அப்பொழுதே செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க என்பது பாடலின் பொருள்.
'எய்தற்கு அரிய இயைந்தக்கால்;' என்ற தொடர் குறிப்பது என்ன?

எய்தற்கு அரிய என்ற தொடர்க்கு பெறுதற்கு அரிதான என்பது பொருள். இங்கு கிடைப்பதற்கரிய காலத்தைச் சுட்டும்.
இயைந்தக்கால் என்ற சொல் கூடினால் என்ற பொருள் தரும்.
செய்தற்கு அரிய என்ற தொடர் செய்வதற்கு அரிதான எனப் பொருள்படும். இங்கு செயல்களைக் குறிக்கும்.
செயல் என்ற சொல்லுக்கு செய்க என்று பொருள்.

கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால் அதைப் பயன்படுத்தி அப்பொழுதே செய்தற்கரியனவற்றைச் செய்க.

காலம் என்பது நினைத்துப் பெறமுடியாதது. பொருள் கொடுத்து வாங்கக்கூடியதும் அல்ல அது. அரிய பெரிய முயற்சியில் ஈடுபடுவோர்க்கு காலம் அறிந்து செயல்படுவது இன்றியமையாதது. காலத்திற்காகக் காத்திருக்கும்போது சிலசமயம் செயல் முடித்தற்கான வாய்ப்பான காலம் தானாகவே கூடி வரும். அதாவது ஒருவரது ஆற்றலைப் பயன்படுத்தாமலேயே அவர் எதிர்பாராத வகையில் அது பொருந்திவரும். .அது எப்பொழுது வரும் எந்த அளவு வரும், திரும்பவும் அதுபோன்று வருமா என்று யாராலும் சொல்ல முடியாது. மேற்கொண்ட முயற்சியுடன் அப்படிப்பட்ட காலம் இயைந்து கொண்டால் அந்த எதிர்பாராத நல்வாய்ப்பாகும் காலம் நில்லாமல் ஓடிக்கொண்டேயிருப்பது. அது யாருக்காவும் எதற்காகவும் காத்திருக்காது. எனவே 'நல்ல காலம்' அமைந்திருக்கும்போதே அதன் துணையோடு விரைந்து செயலாற்றி அரியசெயல்களை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் வள்ளுவர்.
காலம் பார்த்திருப்பது எவ்வளவு இன்ரியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது அது வந்த உடனேயே செயல்படுவதும். இந்த விரைவையே 'அந்நிலையே' என்ற சொல் குறிக்கிறது. அந்நிலையே என்பதற்கு அப்பொழுதே என்பது பொருள். உரையாளர்கள் இச்சொல்லுக்கு காலம் வந்த அப்பொழுதே, ஒரு நொடிகூட்த் தாமதம் இன்றி, அப்பொழுதே, அது நீங்குவதற்கு முன்பாக, உடனே,, நேரத்தைக் கடக்கவிடாமல், (பிறகு செய்யமுடியாததனால் அப்போதே. அவ்வாய்த்த பொழுதிலேயே, அச்சமயத்திலேயே என்று பொருள் உரைத்தனர். இவை எல்லாம் ஒரு கருத்துடையனவே. பருவம் வந்ததும் நேரத்தை வீணாக்காது விரைந்து செயலாற்ற வேண்டும் என்பது செய்தி.

'எய்தற்கு அரிய இயைந்தக்கால்;' என்ற தொடர் குறிப்பது என்ன?

இத்தொடர்க்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் ''பெறுதற்கு அரிய காலம் வந்தால்'' எனப் பொருள் கூறினர். காலிங்கர் செயலுக்கேற்ற கிடைப்பதற்கு அரிய பருவம் வந்தால் எனக் குறிக்கிறார். பரிதி சற்று வேறுபாடாக 'ஒரு காலத்திலும் கூடாத காரியம் கூடினால்' என காலத்திற்குப் பதிலாக காரியம் பற்றிப் பேசுகிறார்.; பரிமேலழகர் தனது உரையில் குறளில் உள்ளபடியே 'எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால' என்று நேர் பொருள் தருகிறார். ஆனால் அவரது சிறப்புரை மிக விரிவாக உள்ளது: 'இச்செயல் முடித்த்ற்கான வாய்ப்பான காலம் மனித ஆற்றலினால் கொள்ள முடியாதபடி அரிது; அது தானே வந்து இயைவதும் அரிது; அப்படியே இயைந்தாலும் மிக் விரைவில் ஓடிவிடும்; எனவே உடனே செய்து முடிக்க; இக்காலம் கிடைக்காவிட்டல் அச்செயலை முடிக்க முடியாது என்பதால் அது அரிய செயல்' எனத் தெளிவான உரை வரைந்துள்ளார். பரிமேலழகர்.

எய்தற்கரிய (காலம்). இயைந்தக்கால் என்ற் சொற்கள் இப்பாடலில் உள்ளமை கொண்டு, ஊழ் அதிகாரத்தில் சொல்லப்பட்ட ஆகூழ் அதாவது இயற்கையால் விளையும் வாய்ப்பு பற்றியதாக இக்குறளைக் கொளவர் சிலர். சில அரிய செயல்களுக்கு அரிய நேரம் அதாவது 'நல்ல நேரம்' (Lady Luck) ஓரோவழித் தானாகவே அமைந்து செயல் நிறைவேறத் துணை செய்கிறது என்ற கருத்தைத் தெரிவிப்பதாகக் கூறுவர் இவர்கள். .

கிடைத்தற்கு அரிதான் காலம் வந்து சேருமானால் அப்பொழுதே செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதுபோல கிடைத்த நல்ல நேர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்னும் காலமறிதல் பாடல்.

பொழிப்பு

கிடைத்தற்கு அரிய காலம் வந்து கூடினால் அப்பொழுதே செய்தற்கரிய செயல்களைச் செய்க