இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0484ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்

(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:484)

பொழிப்பு (மு வரதராசன்): (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

மணக்குடவர் உரை: உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின்.
இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது

பரிமேலழகர் உரை: ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம், காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்.
('இடத்தான்' என்பதற்கு மேல் 'கருவியான்' என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க, கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம்: உரை: காலமும் இடமும் கணித்துச் செய்யின் உலகமே வேண்டினும் கிடைக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காலம்.கருதி இடத்தால் செயின் ஞாலம் கருதினும் கைகூடும்

பதவுரை: ஞாலம்-உலகம்; கருதினும்-நினைத்தாலும், விரும்பினாலும்; கைகூடும்-கைவரப் பெறும், எளிதிற் கிடைக்கும், நிறைவேறும், கையகத்ததாம்; காலம்-காலம், பொழுது; கருதி-அறிந்து; இடத்தான்-இடத்தோடு பொருந்த; செயின்-செய்தால்.


ஞாலம் கருதினும் கைகூடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்;
பரிப்பெருமாள்: உலகமெல்லாம் பெறுதற்கு நினைந்னாயினும் பெறலாம்;
பரிதி: பூலோகமெல்லாம் ஆளவேணும் என்றாலும் கைகூடும்;.
காலிங்கர்: வேந்தரானோர் சிலநாள் ஆண்டிருத்தலே அன்றி இவ்வுலகம் முழுவதும் ஒருவர்தாமே ஆளக் கருதினும் கைகூடும், எங்ஙனமோ எனின்;;
பரிமேலழகர்: ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம்; [கையகத்தது - அவன் கையிலுள்ளதாம். இஃது ஒரு வழக்குத்தொடர்]

'உலகமெல்லாம் ஆளவேண்டும் என்று நினைத்தானாயினும் கைகூடும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகமெல்லாம் ஆட்சி செய்யக் கருதினாலும் அதுவும் நிறைவேறும்', 'உலகம் முழுவதையும் வசப்படுத்த விரும்பினாலும் முடியும்', 'உலகம் முழுதும் கைக்கொள்ளக் கருதினாலும் அதுவும் கைகூடவல்லதே', 'உலகம் முழுவதையும் அடையக்கருதினாலும் அக்கருத்து நிறைவேறும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உலகமெல்லாம் பெறுதற்கு நினைந்தானாயினும் கிடைக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

காலம் கருதி இடத்தான் செயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது
பரிப்பெருமாள்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லாப் பொருளும் மெய்துமென்றது. இனி இடனறிதல் கூறுகின்றாராதலின் அது இடன் பின் கூறப்பட்டது.
பரிதி: காலமும் இடமும் அறிந்து செய்வானாகில் என்றவாறு.
காலிங்கர்: தான் செய்யும் காரியத்துக்கு ஏற்ற பருவத்தைக் குறிக்கொண்டிருந்து மற்று அது வந்து எய்தியபொழுது பழுதுபடாமல் பருவத்தின் கண்ணே வினைசெய்யின் என்றவாறு.
பரிமேலழகர்: அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: இடத்தான்' என்பதற்கு மேல் 'கருவியான்' என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க, கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.

'காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏற்ற காலத்தை நோக்கியிருந்து இடத்தோடு பொருந்த ஒருவன் வினை செய்யின்', 'காலம்.கருதி காத்திருந்து வாய்ப்பான காலம் வந்தவுடன் காரியத்தைச் செய்தால்', 'காலம் அறிந்து இடம் அறிந்து இரண்டிற்கும் ஏற்றவாறு முயற்சி செய்தால்', 'செய்யும் செயலை அதற்குரிய காலத்தோடு இடத்தினையும் அறிந்து பொருந்தச் செய்தால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

காலத்தோடு இடத்தினையும் அறிந்து பொருந்தச் செய்தால்' என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காலம் அறிந்து ஏற்ற இடத்தாற் செயின் உலகமெல்லாம் பெறுதற்கு நினைந்தானாயினும் கிடைக்கும் என்பது பாடலின் பொருள்.
'இடத்தாற் செயின்' என்றால் என்ன?

காலமும் இடமும் பொருந்தச் செய்தால் மலைக்க வைக்கும் பயன் விளையும்.

செய்யவேண்டிய காலம் அறிந்து, ஏற்ற இடத்திலே செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்.
எக்காலத்தில் எவ்விடத்தில் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு ஒரு குறிக்கோளைத் தொடங்கினால் அது எதுவானாலும் தவறாமல் நிறைவேறும். ஒரு செயலைச் செய்வதற்கேற்ற காலத்தை எண்ணி செய்யும் இடத்தையும் அறிந்து செய்தால் இந்த உலகத்தையே அடைய வேண்டுமென்று விழைந்தாலும் அதுவும் கைகூடும்.

காலம் அறிந்து என்பது காலத்தின் சிறப்பு, அதன் பயன், காலம் கனியாத பொழுது பொறுத்திருத்தல் காலம் வாய்க்கும்போது விரைந்து செயற்படுதல் போன்றவற்றைக் குறிக்கும். பெரிதான முயற்சிகளை மேற்கொள்வோர்க்குக் காலம் அறிதல் போலவே இடம் அறிதலும் இன்றியமையாதது. தக்க காலத்தில் தக்க இடத்தில் செய்தால் அரிய பெரிய செயல்களில் வெற்றி காண முடியும்
ஏற்ற காலம், பொருந்திய இடம் எது என்று ஆராய்ந்து தேர்ந்தெடுத்து செயல்பட்டால் உலகத்தையே வசப்படுத்தும் அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்று உயர்வு நவிற்சியாகச் சொல்லப்பட்டது. ஞாலம் கைகூடுதல் என்பதற்கு உலகில் எல்லோரினும் மேம்பட்டு வாழ்தல் எனவும் பொருள் கூறுவர். காலம் அறிந்து செயல்படுவோர் வெற்றி காண்பர்; காலம்கருதாது செயல்படுவோர் தோல்வியைத் தழுவுவர் என்பதை நாம் கண்கூடாக நாளும் பார்த்துவருகிறோம். எந்தப் பொருளை விரும்புகிறோமோ அதை எய்த முடியும்; காலம், இடம் என்ற இரண்டையும் கருதும்போது ஆற்றல் பெருகுவதால் கைகூடாதனவும் கைகூடும் என்பது பாடலின்செய்தி.

இடமும் காலமும் இணைத்துப் பழம் நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே (பொருளதிகாரம் 4) என்று தொல்காப்பிய நூற்பா கூறும். முதற்பொருள் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இருக்கும் நிலமும் பொழுதும் ஆகும். (நிலம் முதலிய இடத்தாலும் காலம் முதலியவற்றாலும் தோற்றம் கொள்ளும் பொருள்களைக் கருப்பொருள் என்று குறிப்பிடுவர்.)
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நீளம், அகலம், உயரம் என்ற முப்பரிமாணங்களுடன் நேரத்தையும் கூட்டிக் கணிக்க வேண்டும் என்று வெளி (இடம்) மற்றும் நேரம் என்பவற்றை ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவரும் ஒரு கணித வரைவை - வெளிநேரம் (spacetime)- என்பதை இன்றைய அறிவியலில் (இயற்பியல்)உருவாக்கினார். இக்குறள் செயல் ஆற்றுவதில் மேலாண்மைத்திறன் பற்றிச் சொல்வதானாலும் காலமும் இடமும் அறிவியலின் முக்கிய நுட்பங்கள் என்ற ஐன்ஸ்டைனின் கோட்பாட்டையும் நினைக்கச் செய்கிறது.

'இடத்தான் செயின்' என்றால் என்ன?

இத்தொடர்க்கு செய்யும் இடத்தைக் கணித்துச் செய்தால் அதாவது பொருத்தமான அல்லது வாய்ப்பான இடம் தேர்ந்து செய்தல் என்பது பொருள்.
முந்தைய குறளில் காலமும் கருவியும் தெரிந்து செயலாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. இங்கு காலம் அறிதலுடன் வெல்லும் இடமும் அறிந்து செயலாற்றினால் உலகையே வெல்லலாம் எனச் சொல்லப்படுகிறது.
இடனறிதல் என்றொரு அதிகாரம் அடுத்து வருகிறது. அங்ஙனமாயிருக்க காலமறிதல் அதிகாரத்தில் இடம் பற்றி ஏன் சொல்லப்படுகிறது? இதைச் சுட்டிக் காட்டிய நாமக்கல் இராமலிங்கம் இங்கு இடத்தான் என்பதற்கு, தகுந்த இடம்அறிந்து என்று கொள்ளாமல், வாய்ப்பறிந்து எனப் பொருள் கொள்ளவேண்டும் என்றார். ஆனால் இடனறிதல் என்ற அதிகாரம் தனியே பின்னே வந்தாலும் இப்பாடல் அவ்வதிகாரத்துக்குத் தோற்றுவாயாக அமைந்ததாகக் கொள்வர். எனவே இத்தொடர்க்குப் பொருத்தமான இடத்தில் செய்தால் என்று பொருள் கொள்வதே பொருத்தம்.

காலத்தோடு இடத்தினையும் அறிந்து பொருந்தச் செய்தால்' உலகமெல்லாம் பெறுதற்கு நினைந்தானாயினும் கிடைக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காலமறிதல் உலகத்தை உன் கையில் வைக்கும்.

பொழிப்பு

ஏற்ற காலத்தில் பொருத்தமான இடத்தில் செயல் புரிந்தால் உலகமே வேண்டினும் கிடைக்கும்.