இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0441 குறள் திறன்-0442 குறள் திறன்-0443 குறள் திறன்-0444 குறள் திறன்-0445
குறள் திறன்-0446 குறள் திறன்-0447 குறள் திறன்-0448 குறள் திறன்-0449 குறள் திறன்-0450

பிற்கால உரையாசிரியர்களைப் போலப் பொதுவகையாற் கூறின், அரசன் அவ்வப்போது அதில் தகுதியுடையாரைத் துணைக்கோடல் ஆம் என்பது பெறப்படும்.
- ச தண்டபாணி தேசிகர்

செயற்கரிய செய்யும் பெரியாரைத் தமக்குத் துணைவர்களாக இருக்கச் செய்து கொள்ளுதலைச் சொல்லும் அதிகாரம். பெரியார் என்றது அறிவிலும், ஆயாய்ச்சியிலும் அனுபவத்திலும், ஆற்றலிலும் மேம்பட்டவர்களை குறித்தது. இவர் குற்றங்கள் நிகழா வண்ணம் காப்பர். பொதுத் தன்மையில் பலருக்கு உரியதாகும் இவ்வதிகாரத்துக் குறட்கருத்துக்கள் மன்னன் எனக் குறிப்பிட்டதால் சிறப்பாக ஆட்சியாளருக்குக் கூறப்பட்டுள்ளன. பெரியாரைத் துணைக் கொள்ளுதலின் சிறப்பினையும் பயனையும் கூறி அவரைத் துணைக் கொள்ளாத வழி வரும் குற்றத்தினையும் எடுத்துச் சொல்கிறது.

பெரியாரைத் துணைக்கோடல்

தலைவன் எல்லாவற்றையும் தானே கண்டு ஆராய முடியாது. ஆராய்ந்து கூறவல்ல பெரியவர்களை அவன் நாடி, அவர்களின் ஆராய்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஆகையால், அவர்கள் அவனுக்குக் கண் போன்றவர்கள். அவ்வாறு தக்க பெரியோர்களிடத்தில் க்லந்து ஒழுக வல்ல தலைவனுக்கு ஒரு தீங்கும் வராது. அறிவிலும் ஆள்வினைத் திறத்திலும் உயர்ந்து விளங்கும் பெரியோர் ஒருவரைத் துணையாகக் கொண்டால் வெற்றி யாவர்க்கும் எளிதாகும். நாட்டுத் தலைவனுக்கு பெரியோர் துணை. இன்றியமையாதது. தலைவன் ஓர் அரும்பெரும் வினையைச் செய்யமுயலும் முன் அத்தொழில்முறை நூலறிவோடு நுண்ணறிவும் அமையப்பெற்ற பெரியாருடன் கலந்தெண்ணியே முடிவு எடுப்பான். பெரியோர் தம் ஆய்வுரைகளும் இடிப்புரைகளும் குற்றங்களை விலக்கிக் கொள்ளவும், அவை நிகழாத வண்ணம் தடுத்துக் கொள்ளவும் வழிவகுக்கும். அறிவுடன் செயல்திறன் கொண்ட பெரியவர் துணையாயிருந்தால், அவ்வறிவையும் திறனையும் தனதாக ஒருவர் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அறனறிந்த மூத்த அறிவுடையார், முற்காக்கும் பெற்றியார், பெரியார், தம்மிற் பெரியார், சூழ்வார், தக்கார், இடிக்கும்துணையார், இடிப்பார், மதலையாம்சார்பு, நல்லார் என்ற சொற்களால் வள்ளுவர் பெரியாரை குறிப்பதால் அவர் பல்திற வல்லார் என அறியலாம். இவரும் துணைகொள்வோரும் ஒருவர்க்கொருவர் உரிமையுடன் கூடிய உறவு கொண்டவர்கள் என்பதும் தெரிகிறது.
அரசியல் அறிஞர் மட்டுமன்றி பேரிடர் மேலாண்மை, வணிகம், நிதி என்று அந்தந்தத் துறையில் சிறந்தாராக உள்ளவரே பெரியார் எனப்படுகிறார். இவரை அவர்தம் துறையில் தனித்திறன் பெற்ற வல்லுநர் (expert/specialist) என்று அறியமுடியும்.
அமைச்சரும், படைத்தலைவரும் அரசின் அங்கங்கள் ஆவதாலும் அமைச்சு, படை போன்ற அதிகாரங்கள் தனியே அமைக்கப்பட்டதாலும் பெரியார் என்று இங்கு குறிப்பிடப்படுபவர்களில் அவர்கள் போன்றோர் அடங்க மாட்டா.

அதிகாரத்து முதலிரண்டு பாடல்களில் பெரியார் இயல்பும் அவரைத் துணையாகக் கொள்ளும் வழியும் கூறப்பட்டன. மூன்று நான்காம் பாடல்கள் துணைகொள்வோன் -பெரியாரை உறவு எப்படி இருக்க வேண்ண்டும் என்று இயம்புகிறது. ஐந்தாம் பாடல் பெரியரின் இன்றியமையாமை கூறி அவரைத் தேர்ந்தெடுக்கும் முறை கூறுகிறது. ஆறு, ஏழாம் பாடல்கள் பெரியாரைத் துணைக்கொள்வதால் உண்டாகும் பயன் கூறுவன. கடைசி மூன்று பாடல்களும் பெரியாரைத் துணைக்கொள்ளாத வழி வரும் குற்றத்தினைக் குறிக்கும்.

பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 441 ஆம்குறள் உறுபொருள் உரைப்போரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது பற்றிக் கூறுகிறது.
  • 442 ஆம்குறள் பேரிடர் மேலாண்மை ஆற்றலர்களைத் துணையாகக் கோடல் வேண்டும் என்பது.
  • 443 ஆம்குறள் செயறகரிய செய்வோரைத் தமக்குச் சிறந்தாராகக் கொள்ளல் மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படும் என்கிறது.
  • 444 ஆம்குறள் பெரியார் உரிமை எடுத்துத் துணை நிற்பது ஒருவரது வலியினைக் கூட்டும் எனச் சொல்கிறது.
  • 445 ஆம்குறள் தனது உள்வட்டத்தில் உள்ளோரைத் தலைவன் ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது.
  • 446 ஆம்குறள் பெரியார் சிந்தனையின் அலைவரிசையில் தானும் செயல்படும் தலைவனுக்குத் தீங்கு நேராது என்று பாடுவது.
  • 447 ஆம்குறள் இடித்துரைக்கும் அணுக்கம் கொண்ட பெரியாரும் தலைவனின் ஆளுதலுக்கு உட்பட்டவரே என்று சொல்வது.
  • 448 ஆம்குறள் இடிப்புரை கூறும் பெரியார் இல்லாத அரசு தானாகவே கேடுறும் என்று எச்சரிக்கிறது.
  • 449 ஆம்குறள் பெரியாரைத் துணைக் கொள்ளாத நிதி நிர்வாகம் சீர் கேடுறும் என்று குறிக்கிறது.
  • 450 ஆவதுகுறள் பெரியாரின் தொடர்பைத் தொடராமல் விடுவது பெருந்துன்பம் விளைக்கும் என்கிறது.

பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரச் சிறப்பியல்புகள்

பெரியாரைத் தலைவன் வணங்க வேண்டும் என்று கூறாமல் அவர்கள் ஒருவருக்கொருவர் தமராக ஒழுகவேண்டும் என்கிறது இவ்வதிகாரம். பெரியாரைத் தமராகக் கொள்ளுதல், தம்மைப் பெரியார தமரா ஒழுகுதல் (குறள் 443, 444) என வரும் பாடல்கள் துணைகொள்வோனுக்கும் பெரியார்க்கும் உள்ள கேண்மையின் தன்மை சிறப்பான ஒன்று என்பதைப் புலப்படுத்தும். பெரியார் தலைவனது குடும்பத்தில் ஒருவராக உலா வருபவர் என்பதும் துணைக்கொள்வோனும் பெரியோரும் ஒருவருக்கொருவர் உற்றாராக நடந்து கொள்கின்றனர் என்பதும் தெரிய வருகிறது.

கழறி நெருக்கும் பெரியாரைத் துணை கொள்ளவேண்டும் (குறள் 448) என்றதால் பெரியார் அனுபவிக்கும் பேச்சுரிமையும் தலைவனிடம் உள்ள நெருக்கமும் அறியப்படும். இன்றைய எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் இவற்றிற்கு உண்டான உரிமைகளும் சலுகைகளும் வள்ளுவரால் பெரியாருக்கு அளிக்கப்பட்டனவாகத் தோன்றுகிறது.

இடித்துரைக்கும் அணுக்கம் கொண்ட பெரியாரும் தலைவனின் ஆளுதலுக்கு உட்பட்டவரே என்று சொல்வது குறள் 447 (இடிப்பாரை ஆள்வார்). பெரியார் தலைவனைக் கட்டுப்படுத்துகிறார். ஆனாலும் தலைவனின் ஆளுகையின் கீழேயே பெரியார் பணி தொடர்கிறது. இவ்விதம் கட்டுப்பாடும் சமநிலையும் நிறுவப்படுவதைக் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.




குறள் திறன்-0441 குறள் திறன்-0442 குறள் திறன்-0443 குறள் திறன்-0444 குறள் திறன்-0445
குறள் திறன்-0446 குறள் திறன்-0447 குறள் திறன்-0448 குறள் திறன்-0449 குறள் திறன்-0450