இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0447இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:447)

பொழிப்பு (மு வரதராசன்): கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உடையவர் யார் இருக்கின்றனர்?

மணக்குடவர் உரை: குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர்.
இது கேடில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசரை, கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்?
(தீயன: பாவங்களும் நீதியல்லனவும் துணையாம் தன்மையாவது , தமக்கு அவையின்மையும், அரசன்கண் அன்புடைமையும் ஆம். அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின், அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம். 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தீயன கண்டால் அஞ்சாது இடித்துக் கூறும் துணையாம் தன்மை உடையாரைப் பெற்றிருக்கின்றவர்களைக் கெடுக்கும் வலிமையுடயவர் யார்? ஒருவருமிலர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்.

பதவுரை: இடிக்கும்-நெருக்கிச் சொல்லும்; துணையாரை-துணையாந் தன்மையுடையவரை; ஆள்வாரை-ஆள்கின்றவரை, உடையவரை; யாரே-எவரே, யார்தான்; கெடுக்கும்-அழிக்கும்; தகைமையவர்-பெருமையுடையவர்.


இடிக்கும் துணையாரை ஆள்வாரை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரை;
மணக்குடவர் கருத்துரை: இது கேடில்லை யென்றது.
பரிப்பெருமாள்: குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரை;
பரிப்பெருமாள் கருத்துரை: இது கேடில்லை யென்றது. இதனானும் தம்மிற் பெரியராக மதித்து வைக்கப்படும் என்று கண்டு கொள்க.
பரிதி: சிரிக்கச்சொல்லிக் கொடுக்காமல் அடிச்சுப்புத்தி சொல்லுகிறபேர் வார்த்தை கேட்டுத் துணையாகக் கொண்டிருப்பாரை;
காலிங்கர்: மறந்தும் உணர்ந்தும் தகாதன செய்யுமிடத்து நமக்கு இது இயல்பல்ல என்று கழறி நெருக்கும் பெரியோரை ஆள்வாரை;
பரிமேலழகர்: தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசரை;
பரிமேலழகர் குறிப்புரை: தீயன: பாவங்களும் நீதியல்லனவும். துணையாம் தன்மையாவது, தமக்கு அவையின்மையும், அரசன்கண் அன்புடைமையும் ஆம்.

'குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் துணையாகக் கொண்டிருப்பாரை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.பரிதி 'சிரிக்கச்சொல்லிக் கொடுக்காமல் அடிச்சுப்புத்தி சொல்லுகிறபேர்' என்று பேச்சு நடையில் எழுதியது படிக்கச் சுவையாக உள்ளது.

இன்றைய ஆசிரியர்கள் 'கடிந்துரைக்கும் நண்பர் உடையவரை', 'செவி வெறுக்கும்படி இடித்து அறிவுரை கூறும் பெரியாரைத் துணையாக ஏற்றுக் கொள்பவரை', 'தீயன கண்டால் அவற்றை ஒழிக்கும் வண்ணம் கடிந்து கூறும் தன்மையுடையாரைப் போற்றி வாழ்கின்றவரை', 'இடித்துக் கூறி அறிவு சொல்லும் பெரியவர்களைத் துணைவர்களாகக் கொண்டு குற்றமில்லாமல் நடந்து கொள்ளுகிறவர்களுக்கு' என்ற பொருளில் உரை தந்தனர்.

குற்றங் கண்டால் கழறி நெருக்கும் பெரியோரை ஆள்வாரை என்பது இப்பகுதியின் பொருள்.

யாரே கெடுக்கும் தகைமை யவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர்.
பரிப்பெருமாள்: கெடுக்குந் தகைமையுடையார் இவ்வுலகத்து யாவர்.
பரிதி: யாராலே கெடுக்கலாம் என்றவாறு.
காலிங்கர்: மற்று யாரேதான் வந்து கெடுக்கும் தகைமைப் பாட்டினை உடையார் யாரும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்?
பரிமேலழகர் கருத்துரை: அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின், அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம் . 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது.

'கெடுக்கும் தகைமைப் பாட்டினை உடையார் யாரும் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாரும் கெடுக்க முடியுமா?', 'எத்தகைய பெருமை வாய்ந்த பகைவரும் கெடுக்க முடியாது', 'கெடுக்கும் வலிமை உடையவர் உலகத்து யாவருளர்? (ஒருவரும் இல்லை.)', 'கெடுதி செய்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

கெடுக்கும் தகைமை உடையவர் யாவர்? (ஒருவரும் இல்லை) என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இடிக்கும் துணையாரை ஆள்வாரைக் கெடுக்கும் தகைமை உடையவர் யாவர்? (ஒருவரும் இல்லை) என்பது பாடலின் பொருள்.
'ஆள்வார்' என்ற சொல் குறிப்பது என்ன?

இடித்துரைப்பவரையும் சூழ்வாராகக் கொண்டு ஆள்தல்.

இடித்துக் கூறித் திருத்தவல்ல பெரியாரைத் துணையாகக் கொண்டவரையும் ஆளத்தெரிந்தவரைக் கெடுக்கக்கூடிய பெருமை பொருந்தியவர் எவரும் இலர்.
தெரிந்தும் தெரியாமலும் தகாதன செய்யும் தலைவனிடத்து இது நல்லதல்ல என்று கழறி நெருக்கும் பெரியோரை ஆள்வாரை யாரும் கெடுக்க முடியாது. தம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் தம் புகழ்பாட வேண்டும்; தம் சொற்களை அனைவரும் கேட்கவேண்டும் என்பது பொதுவாக நாடோள்வரின் விருப்பமாக இருக்கும். இத்தன்மையுடைய தலைவனின் குற்றங்களை யாரும் சுட்டிக் காட்ட முன்வர மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில், சுற்றியுள்ளவர்களும் தவறு செய்யத் துணிந்து விடுவதால் குற்றங்கள் மேலும் மிகும்.
தலைவனிடம் குற்றம் காணும்போது, அதை ஆதரிப்பவன் நல்ல துணயாக இருக்கமாட்டான். இச்சகம் மட்டுமே பேசும் சூழ்வார், தலைவனைத் தவறான வழியில் கொண்டு செல்வார்கள். தீயன நேரும் சமயங்களில் நெருக்கிக் கழறுபவரே உண்மையான துணையாவார். அவரே, உரிய நேரத்தில் தலைவன் என்றும் தயங்காது, அஞ்சாமல் அவனை இடித்துரைத்து, தவறை அவன் உணரும்படி செய்து, மேலும் தொடர்ந்து அத்தவறைச் செய்யாதபடி, நல்லாற்றுப் படுத்தும் பெற்றியார் ஆவர். இவர் தலைவனிடம்தான் பேசுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் பொதுநலனையே கருத்தில் கொண்டு நடுநிலையிலிருந்து, தவறுகண்டபோது நல்லன இவை தீயன இவை என எடுத்துச் சொல்வார்.
இடிக்குந் துணையார் என்றதற்கு 'கழறி நெருக்கும் பெரியோர்' எனவும் 'நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையார்' எனவும் உரைத்தனர். இவற்றுள் 'நெருக்கி' என்பது இப்படிச் செய்யற்க என இடித்துரைத்து என்பதையும், 'நெருங்கி' என்பது அருகில் சென்று என்பதையும் உணர்த்துவதாகவும் உள்ளன. இடித்துரைத்தல் என்பதற்கு நெருக்கி அறிவுரை கூறுதல் என்பதே ஏற்றமாக உள்ளது.

தன்னை நெருக்கிச் சொல்ல உரிமை பெற்றுள்ள பெரியாரும் தன் அணுக்கத்தைப் பயன்படுத்தி தனக்கே ஆதாயம் தேடித் தலைவனுக்கு இழுக்கு செய்திடாவண்ணம் அவரையும் ஆள்தல் வேண்டும். இத்தகைய ஆளுமை கொண்ட தலைவனை யாரும் கெடுக்க முடியாது. அப்படி எவரும் கெடுத்தால் அவர் பெருமைக்குரியவரே; ஆனால் அத்தகையவர் உலகத்து எவரும் இல்லை என்கிறார் வள்ளுவர்.

'ஆள்வார்' என்ற சொல் குறிப்பது என்ன?

'ஆள்வார்' என்ற சொல்லுக்குத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லார், ஆள்வார், இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசர், தனக்குச் சிறந்த தோழராக உடைய ராசா, இவர் நமக்குத் துணையென்றாளும் அரசர், நடப்பவர், உடையவர், ஏற்றுக் கொள்பவர், தம்மவராகக் கொண்டு வாழ்கின்றவர், போற்றி வாழ்கின்றவர், பெற்றிருக்கின்றவர், ஆட்சி புரியும் அரசர், பெற்றிருக்கும் தலைவன், தமக்குச் சிறந்தவராகக் கொண்டொழுகும் அரசர் என்றவாறு உரையசிரியர்கள் பொருள் கூறினர்.

இச்சொல்லுக்குப் பெரியார்களைத் துணைவராகக் கொண்டு ஆட்சி புரிபவர் அல்லது துணையாகக் கொண்டவர் எனப் பெரும்பான்மையர் கூறினர். இடிக்கும் துணையார் என்பது நெருங்கிச் சொல்லும் உரிமையுள்ளவர் என்ற பொருள் தருவது. இவர் அரசின் வல்லமை, தண்டனை முறைகள் முதலியன கண்டு அஞ்சாது, தயங்காது, அவன் திருந்தும்படி செய்யும் பேராற்றல் உடையவர். ஒருவர் தம்மையோ அல்லது தம் செயற்பாடுகளையோ முறையன்று என்று மறுத்தால், அவற்றைப் பற்றி ஆராய மனமில்லாமல், சொல்பவர் மீது சினம் தோன்றுதல் பொதுவான இயல்பு. பெரியாரின் இடித்துரை கேட்கும் தலைவனுக்கும் அவ்வாறு சினம் உண்டாகி, அவரைச் சூழ்வார் வட்டத்திலிருந்து நீங்கிப் போகும்படி செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். தலைவனைச் சுற்றியுள்ள மற்றவர் இச்சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயலலாம். ஆனால் இவற்றையெல்லாம் புறக்கணித்து, அப்பெரியாரை தன்னருகிலேயே வைத்துக் கொண்டு தலைவன் அவரையும் ஆள்வான்.

மணக்குடவர் ஆள்வார் என்றதற்குத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லார் எனப் பொருள் கொண்டார். இதைத் தழுவி பரிமேலழகர் 'இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசர்' எனப் பொருளுரைத்தார். இவர்கள் இருவரும் கூறுவது தன்னை இடித்துரைப்பவரையும் தனது உள்வட்டத்தில் கொண்டுவந்து மேலாண்மை செய்யும் வல்லமை கொண்ட தலைவர் என்பது. இவை சிறந்த பொருள் தருபவை.

குற்றங் கண்டால் கழறி நெருக்கும் பெரியோரை ஆள்வாரைக் கெடுக்கும் தகைமை உடையவர் யாவர்? (ஒருவரும் இல்லை) என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இடித்துரைக்கும் பெரியாரைத் துணைக்கோடல் தலைவனின் ஆளும்திறனுக்குச் சிறப்பு.

பொழிப்பு

கடிந்துரைக்கும் பெரியாரையும் ஆளுகை செய்பவரைக் கெடுக்கவல்லவர் யாவர்?