இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0448இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:448)

பொழிப்பு (மு வரதராசன்): கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.மணக்குடவர் உரை: கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும்.
இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது.

பரிமேலழகர் உரை: இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன், கெடுப்பார்இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும்.
('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கெடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.)

தமிழண்ணல் உரை: தன்னை இடித்துக்கூறித் திருத்தவல்ல பெரியவர்களின் துணை இல்லாத, பாதுகாவலற்ற மன்னன், பகையாய்த் தன்னைக் கெடுப்பார் யாரும் இல்லாவிட்டாலும் தானே கெட்டழிவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பார்இலானும் கெடும்.

பதவுரை: இடிப்பாரை-கடிந்துரைப்பாரை, கழறுதற்கு உரியவரை; இல்லாத-இல்லாத; ஏமரா-காவலற்ற, பாதுகாப்பு இல்லாத, ஏமம் மருவாத; மன்னன்-நாட்டுத் தலைவன்; கெடுப்பார்-கேடு விளைப்பவர்; இலானும்-இல்லையாயினும்; கெடும்-அழியும்.


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன்; [சுழறுதல் - இடித்துக் கூறுதல், உறுதிச் சொல் உரைத்தல்]
பரிப்பெருமாள்: கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன்;
பரிதியார்: அடிச்சுப் புத்தி சொல்லுகிற பெரியோரையல்லாமல் தன் விபரீத புத்தியினாலே மிகுந்த மன்னவன்; [விபரீத புத்தி-மாறுபட்ட அறிவு]
காலிங்கர்: தனக்குத் தகாதன காரியங்கள் செய்யுமிடத்துக் கழறி நெருக்கும் பெரியோரைத் தனக்கு இல்லாததனால் நல்லுறுதி பெறாத வேந்தன்;
பரிமேலழகர்: சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன்;
பரிமேலழகர் குறிப்புரை: 'இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு.

'கழறுவார் இல்லாத காவலற்ற மன்னவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இடித்துரைப்பதற்கு மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் ஆகிய நால்வரும் கழறுதல் என்று பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கடிந்துரைப்பார் இல்லாத தனி மன்னன்', 'அறிவுரையால் இடித்துரைக்கும் பெரியாரைத் துணையாகப் பெறாத பாதுகாப்பில்லாத அரசன்', 'தனது குற்றத்தினைக் கடிவாரைத் துணையாகப் பெறாத பாதுகாப்பற்ற அரசன்', 'இடித்து இடித்து அறிவுரை கூறும் துணைவரைப் பெற்றிராத காவலற்ற அரசன்' என்ற பொருளில் உரை தந்தனர்.

இடித்துக் கூறவல்ல பெரியவர்களின் துணை இல்லாத, காவலற்ற, நாட்டுத்தலைவன் என்பது இப்பகுதியின் பொருள்.

கெடுப்பார் இலானும் கெடும்.:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும்.
மணக்குடவர் கருத்துரை: இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது.
பரிப்பெருமாள்: தன்னைப் பகைவர் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும்.
பரிதியார்: கெடுப்பார் இல்லாதபோதும் தானே கெடுவான் என்றவாறு.
காலிங்கர்: மற்றுந் தன்னைக் கெடுப்பார் ஈண்டு இல்லையாயினும் தனது மறவியானும் செல்வச் செருக்கினானும் தானே கெடும் என்றவாறு. [மறவியானும்-மறதியானும்]
பரிமேலழகர்: பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும்.
பரிமேலழகர் கருத்துரை: கெடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.

'பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறு ஒழுகிக் கெடும்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோரும் 'கெடுப்பார் இல்லாதபோதும் தானே கெடுவான்' என்று பரிதியும் 'கெடுப்பார் இல்லையாயினும் தனது மறவியானும்3 செல்வச் செருக்கினானும் தானே கெடும்' என்று காலிங்கரும் 'பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர் இன்றியும் கெடுவான்', 'கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் கெடுவான்', 'தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவன்', 'கெடுப்பதற்குரிய பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான்' என்றபடி பொருள் உரைத்தனர்.

கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடுவான் என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
இடிப்பாரை இல்லாத, காவலற்ற, நாட்டுத்தலைவன் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடுவான் என்பது பாடலின் பொருள்.
'இடிப்பார்' எப்படிக் காவல் ஆகிறார்?

இடிப்புரை கூறும் பெரியார் இல்லாத அரசு தானாகவே கேடுறும்.

குற்றங்குறை கண்டவிடத்து அறிவுரை சொல்லக்கூடிய பெரியோர்களைத் தனக்குத் துணையாகக் கொள்ளாத காவல்இல்லாத ஆட்சித்தலைவன் தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாவிட்டாலும் தானே அழிந்து போவான்.
அதிகாரம் குவிந்திருக்கும் தலைவனிடம் இறுமாப்பும் சினமும் குடி கொண்டிருக்கும். அவனை நெருங்கிச் செல்லவே அனைவரும் அஞ்சுவர். அவனை யாரும் எதுவும் கேட்கக் கூடாது; அவன் சொல்வதை யாரும் மறுக்கக் கூடாது என்ற மனப்பான்மை அவனிடம் இருக்கும். இத்தலைவன் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவான்.
ஆனால் தான் அடங்கி நடக்கக்கூடிய துணையானவர் தன்னைச் சுற்றி இருக்கக் கொண்டால், அப்பெரியார் தலைவனை நெருக்கி உரைக்கும் உரிமை பெற்றவராயிருப்பாரேயானல் அதுவே அவனுக்கு ஒரு காவல் போல் அமையும். இப்பெரியார் உண்மை சுடும் என்று பாராமல், தலைவன் கேட்க விரும்பவற்றையே சொல்லாமல் அவனைக் கடிந்து கூறி உணரவைத்து ஒழுகச் செய்வார். இவரே இடிப்பார் எனப்படுபவர்.
கடிந்துரைப்பார் இல்லாத தனியான தலைவன் யாரும் ஊறு செய்யாமலே தானே கெட்டுவிடுவான்.

நாகரிகங்கள் பலவற்றில், அரசன் என்பவன் கடவுள் அல்லது ஆள்வதற்காகப் படைக்கப்பட்டவன் என்று கருதப்பட்டான். அரசன் என்பவன் இறைவன் என்றால், அவனைக் குறைசொல்ல முடியாது; கூடாது. ஆனால், வள்ளுவர் அரசன் என்பவன் குடிமக்கள் குறைகள் கேட்டு முறையாக ஆட்சி செய்தாலே அரசனாகக் கருதப்படுவான் என்னும் கருத்துக் கொண்டவர். நல்லுரை சொல்வோர் மொழி கேட்டு அரசன் தன்னைக் கட்டுப்படுத்தி சமநிலை பெற்று செம்மையான ஆட்சி நடாத்தவேண்டும் என்ற நோக்கிலேயே பெரியோர் துணைக்கோடலை வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.
அரசனைக் கடிந்துரைக்கும் வகையில் இன்னொரு பாடலில் அவர் சொல்வது: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. (இறைமாட்சி 389 பொருள்: குறைகூறுவோரின் சொற்களைச் செவி கைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.)

இலங்கையை ஆண்ட இராவணன் அழிந்தது அவனை நெறிப்படுத்தும் 'இடிக்குநர்' அவன் அவையில் இல்லாததால்தான் என்று சீதையின் வாயிலாகக் கம்பர் உணர்த்துவார்:
கடிக்கும்வல் லரவும் கேட்கும்
மந்திரம் களிக்கின் றோயை
அடுக்கும்ஈ தடாதென்று ஆன்ற
ஏதுவோடு அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை; உள்ளார்
எண்ணிய தெண்ணி உன்னை
முடிக்குநர் என்ற போது
முடிவின்றி முடிவ துண்டோ?
(கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: காட்சிப் படலம்: 5311)
((பொருள்: கொடிய நாகமும் அமைச்சர் ஆணையிட்டால் அடங்குமே! நெஞ்சில் கொடுமையுள்ள உன்னை நெறிப்படுத்தவல்ல அமைச்சர்கள் இந்நாட்டில் இலரே! மயங்கித் திரிகின்றாய் நீ! செய்யத்தக்கது இது, செய்யத்தகாதது இது என்று ஆராய்ந்து உனக்கு இடித்துரைப்பவர் எவரும் இலர்; இந்த நாட்டில் அமைச்சர் என்று பெயர் படைத்தவர்கள் நீ எண்ணியபடியே எண்ணும் அடிமையுள்ளம் உடையவர்கள். அன்னாரை அமைச்சர்களாகக் கொண்ட உனக்கு அழிவு வரும் என்பதில் ஐயம் உண்டோ! )

இக்குறளில் கூறப்பட்ட கருத்து எல்லாக் காலத்துக்கும் எந்த வகை அரசுக்கும் பொருந்தும். எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் இன்று இடிப்பார் பொறுப்பை ஏற்பவராக இருக்கின்றனர். இவர்களே இன்று ஆட்சி என்னும் தேர் தடம்புரண்டு விடாமல் தடுக்குமாறு அவர்களை விமர்சித்துத் தட்டிக் கேட்டு, அதை உரிய பாதையிற் செலுத்தத் துணை புரிய வல்லவராயிருப்பவராவர்.

'இடிப்பார்' எப்படிக் காவல் ஆகிறார்?

இப்பாடலின் திரண்ட கருத்து இடித்துரைக்கும் பெரியவர் அரசுக்குக் காவலாக அமைவார் என்பது. அவர் எவ்வகையில் காவலாக அமைகிறார்?

சில ஆட்சித்தலைவர்கள் தம்மையொத்த அல்லது தம்மினும் மிக்க அறிவுடையாரைத் துணையாகக் கொள்ள விரும்புவதில்லை. தாம் இட்ட பணிகளைச் செய்யக்கூடியவர்களையும் நகைச்சுவையாளர்களையும் மட்டுமே அருகில் வைத்துக்கொள்ள விழைவர். இவர்கள் தீயன கண்டபோது கடிந்து சொல்ல மாட்டாதவர்கள். இடித்துரைக்கும் துணை ஏற்காத தனித் தலைவன் தான் வேண்டியவாறு ஒழுகி இழப்புகளை உண்டாக்குவான். யாரையும் கலந்து எண்ணாமல் எடுக்கும் எந்த முடிவுகளும் தவறாகச் செல்வதற்கு வாய்ப்புகள் மிகை. பெரியார் என்பவர் ஆட்சிக்கு அரணாக இருந்து அறிவுரை கூறி நல்வழிப்படுத்தக் கூடியவர்கள். அவர்களது இடித்துரையால் தலைவன் தன் வினை முடிவுகளை ஆராயவும்/மறுஆய்வு செய்யவும் வழியுண்டு. இடிப்பார் உறுதியுரைக்கும்போது அச்சொற்கள் சினமூட்டுவதாக இருந்தாலும், அதுவே பின்னால் நன்மை பயப்பதாக அமையும். ஆதலால் தவறுகளால் விளையக்கூடிய தீயனவற்றைத் தடுத்து இழப்புகள் ஏற்படாமல் காக்க முடியும்; அரசனைக் கட்டுப்படுத்தவும் சிக்கல்களைச் சீர்தூக்கி ஆராயவும் பெரியார் அறிவுரை உதவும்; பரிமேலழகர் உரையில் கண்டபடி, நெறியல்லா நெறிச் செல்லும் யானையைப் பாகன் தடுத்து வழிப்படுத்துவது போல முறைதவறி ஆட்சி செய்யும் மன்னனைப் பெரியார் அறிவுரை காக்கும்.
தவறு கண்ட இடத்துக் கடிந்து உரைக்கும் தகுதிபடைத்த பெரியோர்கள், இவ்விதம், காவலாக, அமைகின்றனர்.

இடித்துக் கூறவல்ல பெரியவர்களின் துணை இல்லாத, காவலற்ற, நாட்டுத்தலைவன் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடுவான் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

கழறி நெருக்கும் பெரியாரைத் துணைகோடல் அரசுக்குப் பாதுகாவல் என்னும் குறட்பா.

பொழிப்பு

இடித்துரைக்கும் பெரியாரைத் துணையாகப் பெறாத பாதுகாப்பில்லாத தலைவன் கெடுப்பார் இல்லையாயினும் அழிவான்.