இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0444தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:444)

பொழிப்பு: தம்மை விட, (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் சுற்றத்தாராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

மணக்குடவர் உரை: தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல், வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி.

பரிமேலழகர் உரை: தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல், வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு . எல்லா வலி உடைமையினும் தலை.
(பொருள், படை, அரண்களான் ஆய வலியினும் இத்துணைவலி சிறந்தது என்றது. இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.)

வ சுப மாணிக்கம் உரை: நம்மினும் பெரியவர் நம்மவராக நடப்பது எல்லா வன்மையினும் ஏற்றமானது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை.

பதவுரை: தம்மின்-தம்மைக்காட்டிலும், தம்மைவிட; பெரியார்-பெருமையுடையவர்; தமரா-தம்மவராக, சுற்றமாக; ஒழுகுதல்-நடந்து கொள்ளல்; வன்மையுள்-வலிமையுள், வல்லமையுள்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை, சிறந்தது.


தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல்;
பரிப்பெருமாள்: தம்மின் மிக்க அறிவையுடையார் தமக்குத் தமராகி ஒழுகுதல்;
பரிதி: செல்வம், கல்வி, அறிவு தம்மிலும் பெரியாரைத் தமக்கு உறவாகப் பண்ணிக்கொள்ளுதல்;
காலிங்கர்: குலத்தாலும் குணத்தாலும் கல்வியானும் தம்மின் சிறந்த பெரியோரை இவ்வரசர்க்குத் துணையாகக் கொண்டு ஒழுகுதலே;
பரிமேலழகர்: அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல்;

இப்பாடலின் முதலடியிலுள்ள 'தம்மின் பெரியார்' என்பதை விளக்குவதில் தொல்லாசிரியர்கள் வேறுபடுகின்றனர். 'தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் கூறினர். 'செல்வம், கல்வி,அறிவு இவற்றில் தம்மைவிடப் பெரியாரை உறவாகப் பண்ணிக்கொள்லல்' என்று பரிதி எழுதினார். 'குலம், குணம், கல்வி ஆகியவற்றில் தம்மின் சிறந்த பெரியோரைத் துணையாகக் கொண்டு ஒழுகுதல்' என்றார் காலிங்கர். 'அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல்' என்று பரிமேலழகர் உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம்மைக் காட்டிலும் பெரியவர்களைத் தமக்குச் சிறந்தவராகக் கருதித் துணையாகக் கொண்டு அவர்வழி நடத்தல்', 'தம்மைக் காட்டிலும் அறிவு, அனுபவம் திறமை முதலியவற்றில் பெரியவர்கள் தமக்கு எப்போதும் துணைவராக இருக்கப் பெறுவது', 'அறிவினால் தம்மைப் பார்க்கிலும் பெரியவராய் இருப்பவரைத் தம் உற்றாராகக் கருதி, அவர் வழி நடத்தல்', 'அறிவு முதலியவற்றால் தம்மைவிட மிக்கார் தமக்குச் சுற்றத்தாராக அவர் வழி நடந்து கொள்ளுதல்' என்ற பொருளில் உரை தந்தனர்.

தம்மைக் காட்டிலும் திறன் மிகக்கொண்டவர்கள் தமக்குச் சுற்றமாக நடந்துகொள்வது' என்பது இப்பகுதியின் பொருள்.

வன்மையுள் எல்லாம் தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி.
பரிப்பெருமாள்: வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவர்கள் உண்டாகவே யானை குதிரை, படையினால் உண்டான வலியினும் மிக வலியுடையவனாவன் என்றது.
பரிதி: வன்மைக்குள் வன்மை என்றவாறு.
காலிங்கர்: வன்மையுள் எல்லாம் தலைப்பாடுடைய வலியாவது என்றவாறு.
பரிமேலழகர்: அரசர்க்கு எல்லா வலி உடைமையினும் தலை.
பரிமேலழகர் குறிப்புரை: பொருள், படை, அரண்களான் ஆய வலியினும் இத்துணைவலி சிறந்தது என்றது. இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின். [இத்துணைவலி-பெரியாரைத் துணைக் கொள்ளுதலாகிய இத்துணைவலி; அவற்றான் நீக்கப்படாத- பொருள், படை அரண்களால் நீக்கப்படாத; முதலியனவும்- மக்களான் வருந் துன்பங்களையும் எனச் சேர்த்து கொள்க]

'வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி' என்றப பொருளில் பழைய ஆசிரியர்கள் ஈற்றடிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வலிமைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய வலிமையாம்', 'தமக்குள்ள எல்லா வல்லமைகளிலும் சிறந்த வல்லமையாகும்', 'அரசருக்கு எல்லாவற்றிலும் முதன்மையான வலியாகும்', 'வலிமைகள் எல்லாவற்றுள்ளும் முதன்மையான வலிமையாகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

தமக்குள்ள எல்லா வலிமைகளிலும் தலையாய வலிமையாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்மைக் காட்டிலும் திறன் மிகக்கொண்டவர்கள் தமரா ஒழுகுதல் தமக்குள்ள எல்லா வலிமைகளிலும் தலையாய வலிமையாம் என்பது பாடலின் பொருள்.
'தமரா ஒழுகுதல்' குறிப்பது என்ன?

தன்னைவிடச் சிறந்தவரைத் துணையாகக் கொள்ளுதலால் குறைவு ஒன்றும் இல்லை.

தம்மைக் காட்டிலும் மிக்காராக இருக்கும் பெரியார் தனக்குச் சுற்றத்தவராக இருந்து நடந்து கொள்ளுதல் தமக்குள்ள வன்மைகள் பலவற்றுள்ளும் தலையானதாகும்.
'தம்மிற் பெரியார்' என்றதற்கு அறிவாற் பெரியார், செல்வம், கல்வி, அறிவு இவற்றான் தம்மிற் பெரியார், குலத்தானும் குணத்தானும் கல்வியானும் தம்மிற் பெரியார், அறனறிந்து மூத்த அறிவாற் பெரியார், அறிவு முதலியவற்றால் பெரியோர், அறிவாலும் அனுபவத்தாலும் பெரியார் என்றவாறு பொருள் கூறினர். கல்வி கேள்வி ஆய்ந்தறியும்திறம் பட்டறிவு போன்றவற்றால் தம்மைவிடச் சிறந்தார் தம்மிற் பெரியார் ஆவார்.

சென்ற குறள் அரிய செய்திகளுள் அரியதானது பெரியாரை சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் என்றது. இப்பாடல் அப்பெரியார் துணைகொள்வானை சுற்றத்தாராக ஏற்றுக் கொள்வது முதன்மையான வலிமை ஆகும் என்கிறது.
தான் அடைந்த புகழ் மங்கிவிடும் அல்லது அவர்கள் தம்மை மிஞ்சிவிடுவர் என்பதால், தம்மினும் ஆற்றல் மிக்கவரை அணுக்கத்தில் வைத்துக்கொள்வதைப் பலர் விரும்புவதில்லை; ஆனால் தம்மினும் பெரியாரைத் தனக்குச் சுற்றமாகக் கொண்டு அவர் அறிவுரை கேட்டு நடந்துகொள்வது ஒருவரது வலிமையைக் கூடுதலாக்கும் என்கிறார் வள்ளுவர் இங்கு. அந்த வலிமை எல்லா வலிமையிலும் தலையாயது எனவும் கூறுகிறார். பெருமை பொருந்தியவர் பெரியார். அவர்க்கென்று ஒரு தனி மதிப்பு இருக்கிறது. அவர் அனைவரிடமும் சமமாகப் பழகுபவர் அல்லர். எனவே அவர் ஒருவருடன் தமராகப் பழகுகிறார் என்றால் அது சிறப்பே; அப்பெருமை கிடைத்தற்கு அரிய பொருள் ஆகும். அத்தகைய பெரியாரது அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்வது பெரும்பேறு ஆகும்.
பெரியார் தம் சுற்றாராக நடந்து கொள்ளுதல் தமக்கு உண்டான வலிமைகளில் எல்லாம் தலையாய வலியாகும் என்று சொல்லப்பட்டது.
ஒருவற்குப் பொருள் வலி, படைவலி, அரண்வலி போன்று எத்துணை வலிமை இருந்தாலும் அவ்வன்மைகள் அனைத்தும் அறிவு, செயலாற்றுந் திறம் கொண்ட பெரியோர் ஏவ இயங்குவனவே. பெரியோரின் உறவு துணை கொள்வானது மன வலிமையைக் கூட்டவும் உதவும். துணைக்கொள்வானுடன் அப்பெரியார்க்கு உறவு உண்டானது என்ற செய்தியைக் கேள்விப்படும் அவனது பகைவர்களுக்கு அது நற்செய்தியாகாது. பெரியாரது துணை, வேண்டிய காலத்தில் அறிவையும், ஆற்றலையும், ஊக்கத்தையும், சூழ்ச்சித் திறனையும் தந்து துணையாய் நிற்பதால், வலிமையில் தலையாய வலிமை ஆகிறது.
இக்குறளுக்கு ஏற்ற காட்டாக மகாபாரதப் போரில் கண்ணன் அர்ச்சுனனுக்குத் துணையானதைச் சொல்வர்.

'தமரா ஒழுகுதல்' குறிப்பது என்ன?

'தமரா ஒழுகுதல்' என்ற தொடர்க்குத் தமக்குத் தமராக ஒழுகுதல், தமக்குத் தமராகி ஒழுகுதல், தமக்கு உறவாகப் பண்ணிக்கொள்ளுதல், இவ்வரசர்க்குத் துணையாகக் கொண்டு ஒழுகுதல், தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல், தமக்கு நல்ல உறவாகப் பண்ணிக்கொள்ளுதல், தமக்குத் துணையாகத் தம் வழி ஒழுகுதல், தமக்குச் சுற்றத்தாராகுமாறு நடத்தல், தமக்கு வேண்டியவர்களாகக் கொண்டு வாழ்தல், நம்மவராக நடப்பது, தமக்குச் சிறந்தவராகக் கருதித் துணையாகக் கொண்டு அவர்வழி நடத்தல், தமக்குத் துணையாக காரியங்களை நடத்துவது, தமக்கு உறவுடையவராகுமாறு நடந்து கொள்ளுதல், தம் உற்றாராகக் கருதி அவர்வழி நடத்தல், தமக்குச் சுற்றத்தாராக அவர் வழி நடந்து கொள்ளுதல், தனக்குச் சுற்றத்தவராக இருக்கும்படி நடந்து கொள்ளுதல், தமக்குச் சுற்றமாக அமைவது, தமக்குத் துணைவராமாறு அவர் வழிநின் றொழுகுதல், துணையாக அடைந்து அவரைப் போல் அவர் சொற்படி நடப்பது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தமர் என்ற சொல்லுக்குச் சுற்றம் என்பது பொருள். சுற்றம் என்பது சூழ்ந்திருத்தலைக் குறிப்பது. நாடாள்பவர்க்கு வேண்டிய சமயத்தில் தக்க அறிவுரை தந்து துணை புரிவதற்கு அவரைச் சுற்றி அமைச்சர், படைத் தலைவர், புலவர் போன்றோர் எப்பொழுதும் இருப்பர். இவர்களே சூழ்ந்தார் அல்லது சுற்றத்தார் எனப்படுவர். தமரா என்பது தமராக என்னும் பொருளில் இங்கு பயன்[படுத்தப்பட்டுள்ளது. தமராக ஒழுகுதல் என்பது சுற்றமாக நடந்து கொள்ளுதல் எனப் பொருள்படும். இச்சொல்லுக்குத் தம்மவர், தம்முடையவர், தமக்கு நெருக்கமான உறவினர் என்றும் பொருள் கூறுவர். இவையாவும் 'தமரா ஒழுகுதல்' என்பது பெரியாரைத் தம்மவராகச் செய்து கொண்டு நெருங்கி உரிமையுடன் நடந்து கொள்ளுதலைச் சொல்வதாகிறது.
தமரா ஒழுகுதல் என்பது அப்பெரியாரைத் தம்மிடம் உரிமை பாராட்டும் சுற்றமாகப் பண்ணிக்கொள்ளுதலும் அவரது அறிவுரையைக் கேட்டு நடத்தலைக் குறிக்கும். உரிமைபாராட்டுதலானது அப்பெரியவர்களே துணைக்கொள்வான் செயல்களைத் தம்முடைய செயல்களாக முன்னால் நின்று நடத்துவதாம்.
துணைக்கொள்வோனும் பெரியாரும் ஒருவருக்கொருவர் உற்றாராக நடந்து கொள்கின்றனர் என்பது கருத்து.

ஒழுகுதல் என்பதற்கு 'வழிநின்று ஒழுகுதல்' என்று பொருள் கொண்டதால் 'பெரியார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல்' என்று துணைகொள்வோன் பெரியோர் வழி நடத்தல் என்று பரிமேலழகர் உரை செய்தார்.
காலிங்கர் 'தம்மின் சிறந்த பெரியாரை இவ்வரசர்க்குத் துணையாகக் கொண்டு ஒழுகுதலே' என உரைத்தார்.
கு ச ஆனந்தன் 'பெரியார் தமர்' என்பதற்குத் 'தம்மைவிடப் பெரியவர்கள் தம்முடையவராக ஒழுகுதல்' என்றார்.
'பெரியார் தமரா ஒழுகுதல்' என்றதற்கு பெரியோர்கள் தாமாகவே வந்து தம்முறவுபோல் நடத்தல் என்பார் மு கோவிந்தசாமி.
இவ்வாறாக 'ஒழுகுதல்' என்றதற்கு அரசன் ஒழுகுதல் என்றும் பெரியார் ஒழுகுதல் என்றும் வேறுவேறுவகையான உரைகள் அமைந்தன. ஒழுகுதல் என்றது துணைக் கொள்வோன் ஒழுகுதலையா? அல்லது பெரியார் ஒழுகுவதையா? இவ்வினாவிற்கு விடை தருவார் போல 'துணைக் கொள்வோன், பெரியோர் தம் பேணுதலானும் பிறவற்றானும் என்றும் தம்மவராகவே நடந்து கொள்ள ஒழுகுதல், என்ற கருத்தினதாகும் உரைகளே இயலுக்கும் அதிகாரத்திற்கும் ஏற்புடையதாகும்' என்பார் தண்டபாணி தேசிகர். இதை வழிமொழிந்து 'பெரியவர் தம்வழி ஒழுகுவர் எனின் பெரியாரைத் துணைக் கோடல் என்னும் அதிகாரத்துக்குப் பொருந்தாமை காண்க' என்பார் சாரங்கபாணி.

'தமரா ஒழுகுதல்' என்ற தொடர் தம்மைவிடப் பெரியோர் தமராக தாம் அவர் அறிவுரை கேட்டு நடத்தல் என்று பொருள்படும்.

தம்மைக் காட்டிலும் திறன் மிகக்கொண்டவர்கள் தமக்குச் சுற்றமாக நடந்துகொள்வது தமக்குள்ள எல்லா வலிமைகளிலும் தலையாய வலிமையாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெரியாரைத் துணைக்கோடல் பெரும் வலிமை சேர்க்கும்.

பொழிப்பு

தம்மைக் காட்டிலும் திறம் மிக்கப் பெரியவர்கள் தமக்குச் சுற்றமாக நடந்துகொள்வது தமக்குள்ள எல்லா வலிமைகளிலும் தலையாய வலிமையாம்.