இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0442உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:442)

பொழிப்பு (மு வரதராசன்): வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

மணக்குடவர் உரை: அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க.
பெற்றியாரென்று பொதுப்படக்கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை: உற்ற நோய் நீக்கி - தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி ; உறாமை முற்காக்கும் பெற்றியார் - பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை; பேணிக்கொளல் - அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க. (தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும், காற்று தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாம பேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறிந்து அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றுள் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம் ; ஆகவே புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் - குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் - குறிப்பின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன - நன்கு மதித்தல் முதலியன. இவை இரண்டு பாட்டானும் பெரியாரது இலக்கணமும், அவரைத் துணையாகக் கோடல் வேண்டும் என்பதூஉம்,கொள்ளுமாறும் கூறப்பட்டன.)

சி இலக்குவனார் உரை: தமக்கு வந்துள்ள துன்பத்தை நீக்கி, பின் அவை தம்மை வந்து அடையாமல் முன் அறிந்து காப்பாற்றவல்ல இயல்பினை உடையாரை விரும்பித் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.

பதவுரை: உற்ற-நேர்ந்த; நோய்துன்பம்; நீக்கி-விலக்கி; உறாஅமை-வாராவண்ணம்; முன் -(வரு)முன்னால்; காக்கும்-காப்பாற்றும்; பெற்றியார்-தன்மையுடையார், இயல்புடையர்; பேணி-நலன்பாராட்டி, உவப்பன செய்து; கொளல்-கொள்க.


உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல;
பரிப்பெருமாள்: அரசர்க்கு உற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்பே காக்கவல்ல;
பரிதி: ஒரு விதனம் வருமுன்னே விதனம் வராமல் காத்து அப்படிக்கு விதனம் வந்தால் அந்த விதனத்தை நீக்கும் உபாயஞ் செய்யும்;
காலிங்கர்: வேந்தரானவர் தாம் யாதானும் ஒருவழியால் உற்றது ஓர் இடர் உளராயின் மற்று அதனையும் துடைத்துப் பின் ஓர் இடர் உறாதவாறு முன்னுறத் தேர்ந்து காக்கும்;
பரிமேலழகர்: தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கிபின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல;
பரிமேலழகர் குறிப்புரை: தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும், காற்று தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாம பேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறிந்து அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றுள் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம். [தீப்பிணி - நெருப்பும் நோயும்; தக்கோர்- கல்வி, அறிவு, ஒழுக்கங்கள் நிரம்பியோர்; சாந்தி- குற்றங்கள் நீங்கச் செய்யப்படும் மந்திர செபம். அர்ச்சனை, வழிபாடு போன்றன; சாமம்-அமைதி முயற்சி; பேதம் - சேர்ந்திருப்பார் இருவரைப் பிரித்து வைத்துச் செயல் சாதிப்பது; தானம் - பொருள் கொடுத்துச் செய்தல்; தண்டம் - படை கொண்டும், பலங்கொண்டும் வருத்திச் செயல் ஆற்றுதல்; உற்பாதம்- பின்வரும் தீங்கை முன்னர் அறிவிக்கும் அடையாளங்கள்]

தமக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கிப் பின் அத்துன்பம் வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் தனது விரிவுரையில் தெய்வத்தான் வரும் துன்பங்களைப் போக்கக் கூறும் தீர்வுகளான 'கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகள்' என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை.

இன்றைய ஆசிரியர்கள் 'வந்த துயரைப் போக்கி வருமுன் காக்கும்', 'தனக்கு வந்த துன்பங்களை நீக்கிப் பின் அத்தகைய துன்பங்கள் வராமல் முன் அறிந்து காக்கும்', 'தனக்கு வந்த துன்பங்களை நீக்கி மேல் வரக்கூடிய துன்பங்களை வராமல் முன் அறிந்து காக்கவல்ல', 'ஒருவனுக்கு வந்து விட்ட துன்பங்களுக்கு உடனே வேண்டிய பரிகாரங்களைச் செய்து இனி அப்படித் துன்பங்கள் வராதிருப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கையான ஏற்பாடுகளையும் செய்ய' என்ற பொருளில் உரை தந்தனர்.

தமக்கு வந்த பேரிடர் போக்கி மீண்டும் பெருந்துயர் வாராமல் காக்கவல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

பெற்றியார்ப் பேணிக் கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்மையுடையாரை விரும்பிக் கொள்க.
மணக்குடவர் குறிப்புரை: பெற்றியாரென்று பொதுப்படக்கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று.
பரிப்பெருமாள்: தன்மையுடையாரை விரும்பிக் கொள்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற் பெரியாரென்று பொதுப்படக்கூறினமையால், அவருள் மந்திரியைக் கூட்டுமாறு கூறிற்று.
பரிதி: உபாயஞ் செய்யும் பெரியோரைப் பேணிக்கொள்வான்.
காலிங்கர்: பெரியோரைப் பேணித் துணையாக கொள்க.
பரிமேலழகர்: தன்மையினையுடையாரை அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க.
பரிமேலழகர் குறிப்புரை: ஆகவே புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் - குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் - குறிப்பின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன - நன்கு மதித்தல் முதலியன. இவை இரண்டு பாட்டானும் பெரியாரது இலக்கணமும், அவரைத் துணையாகக் கோடல் வேண்டும் என்பதூஉம்,கொள்ளுமாறும் கூறப்பட்டன.

'தன்மையுடையாரை விரும்பிக் கொள்க' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'திறமுடையவரைத் தழுவிக் கொள்க', 'திறனுடையவர்களைப் போற்றித் துணையாகக் கொள்க', 'தன்மையுடையாரைப் போற்றித் துணையாக அரசன் கொள்ளல் வேண்டும்', 'வல்லவர்கள் ஆகையால் அவர்களைத் தேடி அடையவேண்டும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

திறனுடையவர்களைப் போற்றித் துணையாகக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வந்த இடர் போக்கி மீண்டும் பெருந்துயர் வாராமல் காக்கவல்ல திறனுடையவர்களைப் பேணிக் கொளல் என்பது பாடலின் பொருள்.
'பேணிக் கொளல்' என்றது ஏன்?

பேரிடர் மேலாண்மை ஆற்றலர்களின் நட்பு தேவை.

நேர்ந்துள்ள துன்பங்களைப் போக்கக் கூடியவராயும் இனியும் துன்பம் வாராதபடி முன்னதாக அறிந்து அதனைக் காக்கவல்ல தன்மையுடையவராகவும் உள்ளோரைப் போற்றித் துணையாகக் கொள்ள வேண்டும்.
உற்றநோய் என்ற தொடர் நேர்ந்துள்ள துன்பத்தைக் குறிப்பது. நாட்டில் அவ்வப்பொழுது நெருக்கடிநிலை எதிர்பாராமல் நேர்வது உண்டு; அவ்வேளைகளில் துன்பங்கள் மிகையாக உண்டாகும். இயற்கையாலும் மனிதர்களாலும் ஏற்படும் நெருக்கடிநிலை உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் தீங்கு விளைவிப்பது. இதுபோன்ற நிலை உடனடிக் கவனிப்புக்குரிய ஒன்றாகும். ஓர் அரசு பேரிடர் மேலாண்மைக்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருந்து அதற்கான வல்லுநர்களைத் தம்முடன் வைத்துக்கொண்டிருக்க வேண்டும்.
மழையின்மையால் ஏற்படும் வறட்சி, பெருமழை காரணமான வெள்ளம், கடுங்காற்று, கொள்ளைநோய்/தொற்றுநோய், நிலநடுக்கம், நிலச்சரிவு, ஆழிப்பேரலை முதலியன இயற்கையால் ஏற்படும் பேரிடர்கள் ஆகும். இவை உண்டாவதைத் தடுக்க இயலாது. ஆனால் அவற்றால் விளையும் பேரழிவுகளை மட்டுப்படுத்தவும் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்கவும் செய்ய முடியும்.
மனிதர்களால் வருந்துன்பங்களாவன: பகைவர் செய்யும் போர், கலகக்காரர்களாலும், கொள்ளைக்காரர்களாலும் விளையும் தீமைகள் முதலியன. நீர்விநியோகத்தில் குறைபாடு, மின்தடை, உணவுத் தட்டுப்பாடு, நோய் பரவாமல் தடுக்கத் தவறியமை போன்றவையும் மனிதரால் உண்டாகக் கூடியவை. இவைகளை உற்றுணர்ந்து வராமல் முற்காக்க முடியும்.
நோய் பரவாது தடுக்கவல்ல/பிணி தீர்க்கும் மருத்துவ அறிஞர், நாட்டின் பாதுகாப்புக்கான போர்த்துறை அறிவு மிக்கோர், உணவுப் பஞ்சம் ஏற்படாதவாறு உற்பத்தியைப் பெருக்க வல்ல பயிர்த்தொழில் வல்லுநர் போன்றோரே ‘உற்ற நோய் நீக்கி உறா அமை முற்காக்கும் பெற்றியார்' எனலாம். துயர் உண்டானதற்கான காரணங்களை ஆய்ந்து. இனிவர இருப்பவற்றை வருமுன் காக்கும் ஆற்றல்கொண்ட பெரியோர்கள் இவர்கள். இவர்கள் தத்தம் துறை அறிவோடு அரசியலறிவும் தெரிந்து, மக்களுடைய இயல்பினையும், செயல்களையும் அவர்களுடைய உள்ளமறிந்தும், உளவியலறிவு கொண்டும் ஆய்ந்து தீர்வுகள் காண்பர். புதியவகையான இடையூறுகளையும் களையவல்லவராயிருப்பர் இவர்கள்.

இக்குறட்கருத்தைத் தழுவிய கம்பர் பாடல் ஒன்று உளது. அது:
உற்றது கொண்டு, மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார் ; மற்றுஅது வினையின் வந்தது ஆயினும், மாற்றல் ஆற்றும் பெற்றியர்.... (கம்பராமாயணம், அயோத்தியா கண்டம், மந்திரப் படலம், 1409 பொருள்: நடந்ததைக் கொண்டு எதிர்காலத்து வந்து நேரத் தக்கவற்றை கணித்து அறியும் அறிவு வன்மையுடையவர்கள் அந்த வேண்டாத கேடு ஊழ்வினையினால் ஒருகால் வந்தாலும் அதனை மாற்றவல்ல முயற்சித்திறம்உடையவர்கள்.... )

'பேணிக் கொளல்' என்றது ஏன்?

'பேணிக் கொளல்' என்ற தொடர்க்கு விரும்பிக் கொள்க, பேணித் துணையாக கொள்க, அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க, போற்றி நட்புக் கொள்ள வேண்டும், போற்றி அவர்க்கு வேண்டுவன செய்து, நட்பாக்கிக்கொள்ளுதல் வேண்டும், அவர் மகிழ்வன செய்து கொள்க, தழுவிக் கொள்க, போற்றித் துணையாகக் கொள்க, நட்பைத் தேடி அடைய வேண்டும், உறவாகக் கொள்ளுதல் வேண்டும், விரும்பித் துணையாகக் கொள்ளுதல் வேண்டும், அவர் மகிழும் வண்ணம் உபசரித்து ஒருவன் தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும், அவர் மகிழ்வன செய்து அவர் துணையைப் போற்றிக் கொள்க, துணையை விரும்பிப் பெறவேண்டும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

'பேணிக் கொளல்' என்றது விரும்பித் துணையாகக் கொள்க என்ற பொருள் தருவது. துறை வல்லுநர்கள் படிப்பறிவும் அனுபவ அறிவும் கொண்டவர்களாய்த் தனித்தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். இடர் நீக்கும் ஆற்றல் பெற்றவர்கள் மிகவும் அருகியே காணப்படுவராதலால் அவர்கள் நெருக்கடிநேரத்தில் கிடைக்கமுடியாமலும் அணுகமுடியாமலும் போகலாம். எனவே இடர் மேலாண்மையாளர்கள் போன்ற வல்லுநர்கள் எப்பொழுதும் அரவணைத்து ஆதரித்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள் என்றும் அவர்களுடனான உறவைத் தக்க வைத்துக்கொண்டு நட்பு பாராட்ட வேண்டும் என்றும் இக்குறள் வலியுறுத்துகிறது. இதனால் பேணிக் கொளல் எனச் சொல்லப்பட்டது.

வந்த பேரிடர் போக்கி மீண்டும் பெருந்துயர் வாராமல் காக்கவல்ல திறனுடையவர்களைப் போற்றித் துணையாகக் கொள்க என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எதிரதாக் காக்கும் அறிவுரை தருவோரான பெரியாரைத் துணைக்கோடல் வேண்டும்.

பொழிப்பு

வந்த துயரைப் போக்கி வருமுன் காக்கும் திறமுடையவரைப் போற்றித் துணையாகக் கொள்க

.