இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0449முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:449)

பொழிப்பு (மு வரதராசன்): முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

மணக்குடவர் உரை: முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போலத் தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை.

பரிமேலழகர் உரை: முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம், மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை.
(முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.)

சி இலக்குவனார் உரை: முதல் இல்லாதவர்க்கு இலாபம் இல்லை; அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணை இல்லாதவர்க்கு நிலைத்திருக்கும் தன்மை இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்பிலார்க்கு நிலை இல்லை.

பதவுரை: முதல்-முதற்பொருள், முன்பணம் அதாவது மூலதனம்; இலார்க்கு-இல்லாதவர்க்கு; ஊதியம்-வருவாய், இலாபம், பேறு, ஆக்கம்; இல்லை-இல்லை; மதலை-முட்டுத்தூண், பாரந்தாங்கும் தூண், உத்தரம், வன்மையுடையது; ஆம்-ஆகும்; சார்பு-துணை; இலார்க்கு-இல்லாதவர்க்கு; இல்லை-இல்லை; நிலை-நிலைபேறு, சலியாது நிற்றல்.


முதலிலார்க்கு ஊதியம் இல்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போல;
பரிப்பெருமாள்: முதலில்லார்க்கு இலாபமில்லையாயினாற் போல;
பரிதி: முதற்பொருள் இல்லாற்கு லாபமில்லாதது போல;
காலிங்கர்: முன்னம் தமக்கு நெஞ்சுறுதியாகிய முதற்பொருள் (இல்லாதார்க்கு) மற்று அஃதடியாகப் பின்பு பொலிந்து வரும் இலாபம் யாதும் இல்லையன்றே;
பரிமேலழகர்: முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம்; [அதனால்-முதற் பொருளால்]

'முதற்பொருள் இல்லாதவர்க்கு இலாபமில்லாதது போல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முதலில்லாதவர்க்கு ஊதியம் உண்டோ?', 'முதலீடு செய்யப் பொருளில்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம்(இலாபம்) இல்லை', 'பெரியவர்களுடைய ஆதரவு வியாபாரிக்கு மூலதனம் போலவும் குழந்தையின் அணைப்புப் போலவும் உதவுவது. மூலதனம் இல்லாத வியாபாரிக்கு இலாபம் இல்லை', 'முதல் இல்லாத வணிகருக்கு மிச்சம் இல்லை' என்ற பொருளில் உரை தந்தனர்.

முதல் இடாதவர்களுக்கு ஊதியம் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை.
பரிப்பெருமாள்: தாங்குதலாகிய சார்பு இல்லாதவர்க்கு அரசு நிலை நிற்றல் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: பெரியாரைத் துணையாகக் கொள்ளாதார்க்கு வரும் குற்றம் கூறுகின்றார். ஆதலின் முற்படப் பொருட்கேடுண்டாம் என்று கூறினார்.
பரிதி: பிள்ளையில்லாதாற்கு நிலைமையில்லை என்றவாறு.
காலிங்கர்: மற்று அதுபோல தமது நீதி தளராமல் தாங்கும் தாணுவாகிய சார்வில்லாதார்க்கு நிலை இல்லை என்றவாறு. [தாணுவாகிய- தூண் போன்ற].
பரிமேலழகர்: அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை. [அதனான் - துணையால்]
பரிமேலழகர் குறிப்புரை: முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல். [பாரம்- அரசுரிமைப் பொறுப்பு]

'தாங்குதலாகிய சார்பு இல்லாத அரசுக்கு நிலைநிற்றல் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துணை இல்லாதவர்க்கு ஒரு நிலை உண்டோ?', 'அதுபோலத் தம்மைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு நல்ல நிலை இல்லை', 'குழந்தையை அணைத்து ஆறுதல் செய்து அறிவு சொல்லும் தாய் போன்ற பெரியவ்ரகளுடைய ஆதரவில்லாதவர்களுக்கு நல்ல நிலைமை இருக்காது', 'கட்டிடத்தைத் தாங்கும் கொடுங்கை போல அரசினைத் தாங்குந் துணிவரில்லாதவர்க்குச் சலியாது நிற்கும் நிலை இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

தம்மைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு நல்ல நிலை இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முதல் இடாதவர்களுக்கு ஊதியம் இல்லை; தம்மைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு நல்ல நிலை இல்லை என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

வல்லுநரைத் துணைக்கொள்ளாத ஆட்சிமுறை சீர் பெறாது.

முதற் பொருள் இல்லாத வணிகருக்கு ஆதாயம் உண்டாவது இல்லையாவதுபோல் இடர் வந்துற்றபோது தாங்கக்கூடிய துணையாகிய பெரியோரை இல்லாதவர்க்குக் நிலைத்திருக்கும் தன்மை இல்லை.
இக்குறளின் முற்பகுதியான 'முதலிலார்க்கு ஊதியம் இல்லை' என்பது உவமத் தொடர். முதல் என்பது முதற்பொருள் அல்லது முன்பணம் என்ற பொருள் தருவது. வாணிகத்திற்கு முதல் இன்றியமையாதது. முதற்பொருளே ஒரு தொழிலைத் தாங்கி நின்று ஊதியம் ஈட்டித்தரும். வாணிகம் செய்வோர் முதல் போட்டுத் தம் தொழிலைத் தொடங்குவர். முதற்பொருளின் அடியாகப் பின்பு விரிவாக்கம் பெற்று வருவது ஆதாயம். அதாவது முதற்பொருளின் விளைபயன் ஆதாயம் அல்லது ஊதியம் எனப்படுகிறது; மிகுதல் பொருளது. முதல் இல்லாதவர்களுக்கு ஊதியம் இல்லை. கைமுதல் இல்லாத வணிகன் கடைத்தேற முடியாது தளர்ச்சியுறுவான்.
சிலர் வணிகருக்குப் பொருள், அறிவு, உழைப்பு இம்மூன்றும் முதற்பொருள் ஆகும் என்றனர்.
'ஊதியம்' என்பது பெருவழக்குச் சொல்லாக இன்று உள்ளது. ஊதியம் என்பதற்கு இலாபம், ஆக்கம், பயன் என்ற பொருள்கள் உண்டு. வணிகர்கள் மொழியில் ஊதியம் என்பது ஆதாயம் அதாவது இலாபம் என்றும் அறியப்படும். இங்கு அச்சொல் இலாபம் என்ற பொருளில் ஆளப்பட்டது.
மதலை என்ற சொல் பாரம் தாங்கக்கூடிய வலிமை கொண்டது எனப்பொருள்படும்.
வாணிகத்தில் ஆதாயப் பொருள் பெறுவதற்கு முதற்பொருள் இன்றியமையாதது. முதல் வைத்தே வணிகர் ஊதியம் ஈட்டுவர். முதற் பொருளின்றேல் ஊதியம் என்கிற பெருக்கம் இல்லை. தன் கைப்பொருளை வைத்து வாணிகம் செய்வோரே நல்ல நிலையான ஆதாயம் பெறுவர். அக்கைப்பொருளே வணிகத்தை நிலைநிறுத்தப் பெரிதும் உதவுவது. இடையில் இடர்ப்பாடு நேரும்போது வணிகர் மேலும் முதலை உள்நிறுத்த வேண்டியிருக்கும். செயல்மூலதனக் குறைபாட்டால் பல வாணிக முயற்சிகள் தோல்வியுறுகின்றன. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை (பொருள்செயல்வகை 758 பொருள்: தன் கையில் பொருள்வைத்து ஒருவன் செய்யும் செயல், குன்றின்மேல் ஏறியிருந்து யானைப்போரைக் கண்டது போலும்) எனப் பிறிதோரிடத்தில் தன்கையில் தேவையான பொருளிருந்தால் மகிழ்ச்சியாகச் செயலாற்றலாம் என்று கூறப்பட்டது.

பாடலின் பிற்பகுதியான 'மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை' என்பது பொருள் வாக்கியம். இதிலுள்ள மதலை என்னும் சொல் 'தாங்கலை' உணர்த்துகிறது. இங்கு தாங்கும் தூண் என்ற இயற்பொருளிலே பயன்பட்டது. சார்பிலார் என்பது தாங்குவார்இல்லாதாரைச் சுட்டிய சொல். சார்பு என்ற சொல் சார்ந்திருத்தல் எனப் பொருள்படும். நிலை என்ற சொல் வீழ்ந்துவிடாமல் நிற்றல் என்ற பொருள் தருவது; எந்தவொரு செயலாட்சி முறையிலும் சோர்வு ஏற்படும்போது தூண்போல் தாங்கிப் பிடித்து நிலைபெறச் செய்பவர்கள் இல்லாதவர்கள் சார்பிலார் எனக் குறிக்கப் பெறுகின்றனர். எவ்விதம் முதலில்லாத வணிகம் நிலை நிற்க முடியாதோ, அதுபோல முட்டுக்கொடுத்துத் தாங்கி உதவக்கூடிய பெரியார் இல்லாத செயலாட்சி நிலைக்க முடியாது.
தேவையான முதலீடு செய்பவர்க்கே தொழில் ஆதாயம் கிடைப்பது போல, ஆட்சி நிலை நிற்றலுக்கு வல்லுநர் என்னும் பெரியார் துணை தேவை. அதாவது ஆட்சியாளர் 'பெரியாரில் முதலீடு' செய்தால் நிலைநிற்றல் என்ற ஊதியம் கிடைக்கும்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

பெரியாரைத் துணையாகக் கொள்ளாதார்க்கு வரும் குற்றம் கூறும் பாடல். வணிக உலகச் சொற்களான முதற்பொருள், வருவாய் இவற்றைச் சார்பிலாருடன் (துணைகொள்ளாருடன்) தொடர்புபடுத்தி அக்குற்றத்தை உய்த்துணர வைக்கிறது இது.
மாந்தர்க்குச் சார்புத் துணை வேண்டும் என்பது உலகியல். ஆட்சியாளர்களுக்கும், செயலாட்சி நிலைநிற்க, தம்மைத் தாங்கும்படியான துணையைக் கொள்ளவேண்டும்; தன்முயற்சியை மிகவும் வலியுறுத்தும் வள்ளுவர், எத்துணை திறனுடையவராயிருந்தாலும் இத்தகைய துணையுமிருந்தால்தான் ஆட்சியர் நிலைபெற முடியும் என்று இங்கு கூறுகிறார். தேவையான முதற்பொருள் தன் கையகத்தில்லாமல் வாணிகம் செய்தால், இடையூறு நேர்ந்துழி அதை எதிர்கொள்ள இயலாமல் நிலைதடுமாறி ஆதாயம் கிடைக்காதுபோய் வாணிகமும் கெடுவதுபோல, செயலாட்சியில் வல்லுநர்களின் சார்பு இல்லாவிடில் அது நிலை கொள்ளாது துவண்டு போகும் எனக் கூறப்படுகிறது.

குறளின் சொல்லாட்சிகளை நோக்கும்போது வள்ளுவர் நிதி மேலாண்மை (Financial Management) பற்றியே இங்கு பேசுகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. பெரியரைத் துணைக் கொள்ளாதார்க்கு வருந்தீங்குகளைக் காட்டும் முகத்தான் வள்ளுவர் பொருட்கேடும் அதன்வழி பிற கேடுகளும் உண்டாகும் என்பதை உணர்த்துகிறார். 'நிலை' என்பது செயலாட்சி நிலைபெறுதலைக் குறிக்குமாதலின் அது நிலைபெறுதற்குரியது வல்லுநர் என்னும் பெரியார் கையில் உண்டாம் என்பது கருத்து.
இக்குறள் தனிப்பட்டவர்களும் தங்களைக் காக்கவல்ல துணைவலியைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்வதாக உள்ளது என்றாலும் இது அரசாட்சிக்குச் சிறப்பாகக் கூறப்பட்டதாக அமைகிறது. நிதி நிர்வாகத்திற்குத் தகுதியான வல்லுநர் இல்லாவிட்டால் அரசின் நிதி நிலை குலையும்; நிதிநிலை சீர்கெட்டால் அரசே நிலை தடுமாறும் என்பது குறள் கூறவரும் செய்தி ஆகலாம். வணிகவியல் சொற்கள் இதனாலேயே அமைந்தன எனலாம். பரிப்பெருமாள் கூறவரும் பொருளும் இதுவாக இருக்கலாம். 'சார்பிலார்க்கு நிலை இல்லை' என்ற தொடர் ஆட்சியாளர் தகுதியான நிதிமேலாளரைத் தன்னருகில் வைத்துக்கொள்ளவில்லையானால். நிதி நிலை முறையாகக் காக்கப்படாது சீர் குலையும். நெருக்கடி நேரத்தில் உதவும் பெரியார் (இங்கு பொருள் வல்லுநர் )துணை இல்லாத அரசின் நிதிநிலை ஆக்கம் குன்றி செயலாட்சி நிலையற்றுக் கெட்டுப்போம்.

ஊதியப்பேற்றிற்கு முதலீடு போல அரசு நிலைபேற்றிற்கு பெரியார் துணை இன்றியமையாதது; ஆட்சிப் பொறுப்பிற்குச் சோர்வுகள் வரும்பொழுது தாங்கிப் பிடிக்கும் பெரியார் அங்கு இருத்தல் வேண்டும்; அத்தகைய பெரியாரைத் துணைகோடல் இடையூறுகள் உண்டாகும்போது தாங்கிப் பிடிக்கும் நல்ல சார்பாக அமையும்; வல்லுநர் என்ற துணைவலி இருக்கும்போது செயலின் நோக்கம் எளிதில் நிறைவுறும்; தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்குச் சலியாது நிற்கும் நிலை இல்லை.
இவை இக்குறள் கூறும் செய்திகள்.

முதல் இடாதவர்களுக்கு ஊதியம் இல்லை; தம்மைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு நல்ல நிலை இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெரியாரைத் துணைகோடல் இல்லாத ஆட்சி நெருக்கடி நேரும்போது நிலை தடுமாறும்.

பொழிப்பு

முதல் இடாமல் ஊதியம் இல்லை; தாங்கும் துணையில்லாதவர்க்கு நிலை இல்லை.