அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:443)
பொழிப்பு (மு வரதராசன்): பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
|
மணக்குடவர் உரை:
செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்.
பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.
பரிமேலழகர் உரை:
பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்,
அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது.
(உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.)
இரா சாரங்கபாணி உரை:
பெரியவர்களைப் போற்றித் தமக்குச் சிறந்தவராகத் துணையாகக் கொள்ளுதல் செயற்கரிய செயல்கள் எல்லாவற்றுள்ளும் அரிய செயலாகும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பெரியாரைப் பேணித் தமராக் கொளல் அரியவற்றுள் எல்லாம் அரிதே.
பதவுரை: அரியவற்றுள்-அருமையானவற்றுள், (அருமையான பேறுகளுள்); எல்லாம்-அனைத்தும்; அரிதே-அருமையானதே; பெரியாரை-பெருமையுடையவரை; பேணி-விரும்பி, நலன்பாராட்டி, உவப்பன செய்து; தமர்-தம்மவர்; தமக்கு நெருக்கமான உறவினர், தமக்குச் சிறந்தாராக; கொளல்-கொள்க.
|
அரியவற்றுள் எல்லாம் அரிதே:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே;
பரிப்பெருமாள்: செய்தற்கரியன வெல்லாவற்றினும் செய்தலரிது;
பரிதி: அரிதான காரியம் ஒரு மலையையெடுத்து ஒரு மலைமேலே வைத்தல். ஒரு கடுகிலே ஏழுகடலை அடக்கல். இதிலும் பெரியது எது என்னில்;
காலிங்கர்: கீழ்ச் சொன்ன கல்வியும் கேள்வியும் அறிவுடைமையும் குற்றங் கடிதலும் பிறவும் ஆகிய செயற்கரிய எல்லாவற்றுள்ளும் பெரிதும் அரிது யாதுஎனின்;
பரிமேலழகர்: அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது.
பரிமேலழகர் குறிப்புரை: உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி. [இப்பேறு- பெரியாரைத் துணையாகக் கொள்ளும் பேறு; அவை எல்லாம்- உலகத்து அரியன எனப் பேசப்பெறும் பொருள்களனைத்தும்]
'செய்தற்கரியன எல்லாவற்றினும் செய்தல் அரிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அரிய செயல்களுள் எல்லாம் அரியது', 'பெறுதற்கருமையான பாக்கியங்களிலெல்லாம் மிகவும் பெரிய பாக்கியம்',
'அருமையான செய்திகள் யாவற்றினும் அருமையானதே அல்லது அரிய பேறுகள் யாவற்றினும் அரிதே', 'அடைவதற்குரிய செல்வங்கள்
எல்லாவற்றுள்ளும் பெரியது ஆகும்' என்ற பொருளில் உரை தந்தனர்.
அருமையான செய்திகள் யாவற்றினும் அருமையானதே என்பது இப்பகுதியின் பொருள்.
பெரியாரைப் பேணித் தமராக் கொளல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்.
மணக்குடவர் குறிப்புரை: பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.
பரிப்பெருமாள்: தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கூட்டிக் கொள்ளுதல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரை.அவரைத் தேடிக் கூட்டுதல் அரிது என்றது.
பரிதி: பெரியோரைத் துணைக்கோடல் என்றவாறு.
காலிங்கர்: முழுதும் உணர்ந்த பெரியோரை ஓம்பித் தமக்குத் துணையாகக் கோடல் என்றவாறு.
பரிமேலழகர்: அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்.
'பெரியோரை ஓம்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பெரியவர்களைப் போற்றி உறவு கொள்வதே', 'பெரியவர்களை அண்டி அவர்கள் எப்போதும் நமக்கு ஆதரவாக
இருக்கும்படி செய்து கொள்வது', 'பெரியவர்களைத் தழுவி அவரைத் தமக்கு உற்றாராகப் பெற்றுக் கொள்ளுதல்', 'பெரியவர்களை விரும்பித்
தமக்குரிய சுற்றத்தாராகக் கொள்ளுதல்' என்றபடி பொருள் உரைத்தனர்.
பெரியோரை விரும்பித் தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அருமையான செய்திகள் யாவற்றினும் அருமையானதே பெரியோரை விரும்பித் தமராக் கொளல் என்பது பாடலின் பொருள்.
'தமராக் கொளல்' என்றால் என்ன?
|
பெரியாரின் உறவு கிடைத்தற்கரியது.
பெரியாரை விருப்பத்துடன் ஏற்று தம் சுற்றத்தவருள் ஒருவராகக் கொள்ளுதல் அரிய செல்வங்களுள் அரியது கிடைக்கப்பெற்றது போன்றதாகும்.
செயற்கரிய செய்வார் பெரியர்; செயற்கரிய செய்பவர் என்றதாலே அவர் கிடைத்தலும் அரிது என்பது எளிதில் அறியப்படும். அத்தகையோரை நாடித் தமது சுற்றத்தினராக ஆக்கிக் கொள்க என்கிறது பாடல்.
இவ்வதிகாரத்தில் பெரியார் என்ற சொல் ஒவ்வொரு துறையிலும் அறனறிந்து மூத்த அறிவுடையவராயிருப்பவர்களைக் குறிக்கும்.
இவர்களது துணையைப் பெறும்போது அவர்கள் அவ்வத் துறைகளில் பெருங்குற்றங்கள் நிகழா வண்ணம் காப்பர்.
அப்படிப்பட்ட உறவு கிட்டுமாயின் அது அருமையிலும் அருமையான செய்தியாகும்.
அரியவை என்றது பெறுதற்கரிய பேறுகளைக் குறிப்பது. காட்டாக செல்வம், கல்வி, நன்மக்கள், துய்ப்பு, புகழ், அறிவு, அழகு, பெருமை, நோயில்லாவாழ்நாள் போன்றனவாம்.
நாட்டுத் தலைவன் அரிய பேறுகள் எல்லாவற்றையும் கொள்வதற்கு உரியவன். அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் அவனுக்குக் கிடைக்கத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் சிறந்தது என்கிறார் வள்ளுவர் இங்கு.
அரசியல், சமூகம், அறிவியல், கலை, போர், போன்ற பல துறைகளிலும் பெரியார்களாக விளங்குபவர்களைப் போற்றிக் கொண்டாடுவது பேணுதலாம். பேணுதல் என்பதில் உரிய சிறப்புச் செய்தல் முதலாயின அடங்கும். பேணுதலும் தமராக்கொளலும் பெரியாரின் பெருமையை உயரச்செய்வதற்கானவை.
அந்தந்தத் துறையில் செயற்கரிய செய்யும் பெரியோரை அணுகி அவர்களைத் தமக்கு உற்றாராக மேன்மைப்படுத்தி துணையாக்கிக் கொள்ளச் சொல்கிறது இப்பாடல்.
வாழ்க்கையின் தலையான பொருள்களைக் குறள் பலவிடங்களில் கூறுகிறது. அதுபோலவே சிறந்த பொருள்களுள்ளும் சிறந்த பொருள்கள் இவை என்ற பொருளில் நன்றென்றவற்றுள்ளும்.நன்றே... (குறள் 715), பேதைமையுள் எல்லாம் பேதைமை.... (குறள் 832) என்று சில இடங்களில் காட்டப்படுகின்றன. 'அரியவற்றுள் அரிது' என்பது இங்கு கூறப்படுகிறது. அரியனவற்றுள் அரிது என்றதால் பெரியாரைத் துணைக்கோடலுக்கு வள்ளுவர் தரும் முதன்மை நன்கு புலப்படும்.
|
'தமராக் கொளல்' என்றால் என்ன?
'தமராக் கொளல்' என்றதற்குத் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல், தமக்குச் சுற்றமாகக் கூட்டிக் கொள்ளுதல், தமக்குத் தூனையாகக் கோடல், தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், தமக்கு மெத்த சினேகிதராகப் பண்ணிக்கொள்ளுகிறது, தமக்குத் தமராய்க் கொள்ளுதல், தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், தமக்கு வேண்டியவர்களாக ஆக்கிக்கொள்ளுதல், சுற்றமாகக் கொள்ளுதல், உறவு கொள்வது, தமக்குச் சிறந்தவராகத் துணையாகக் கொள்ளுதல், துணைவர்களாகப் பெறுவது, தமக்கு உறவினராகக் கொள்ளுதல், தமக்கு உற்றாராகப் பெற்றுக் கொள்ளுதல். தமக்குரிய சுற்றத்தாராகக் கொள்ளுதல், தம் சுற்றத்தவருள் ஒருவராகக் கொள்ளுதல், உறவாக்கிக் கொள்ளுதல், தம்மவர் ஆக்கிக்கொள்வது என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.
'தமர்' என்ற சொல் சுற்றம் என்ற பொருள் தரும். இச்சொல்லுக்குத் தம்மவர், தம்முடையவர், தமக்கு நெருக்கமான உறவினர் என்ற பொருள்களும் உண்டு.
தமராக் கொளல் என்பது சுற்றமாகக் கொள்ளுதல் எனப் பொருள்படும்.
நாட்டுத் தலைவருக்கு வேண்டிய சமயத்தில் தக்க அறிவுரை தந்து துணை புரிவதற்கு அவரைச் சுற்றி அமைச்சர், படைத் தலைவர், புலவர் போன்றோர் எப்பொழுதும் இருப்பர். இவர்களே சுற்றத்தார் எனப்படுவர்.
'தமராக் கொளல்' தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல் என்று பரிமேலழகரும் தமக்கு உற்றாராகப் பெற்றுக் கொள்ளுதல் எனக் கா சுப்பிரமணியம் பிள்ளையும் பொருள் கூறுவர்.
தமராக்கொளல் என்பது உற்றாராக மேனிலைக்குக் கொண்டுவருதல் என்ற பொருளில் இங்கு வந்தது.
'தமராக் கொளல்' என்ற தொடர் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் எனப் பொருள்படுவது.
|
அருமையான செய்திகள் யாவற்றினும் அருமையானதே பெரியோரை விரும்பித் தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல் என்பது இக்குறட்கருத்து.
பெரியாரைத் துணைக்கோடல் பெறுவனவற்றுள் அரிய பேறாம்.
அருமையான செய்திகள் யாவற்றினும் அருமையானதே பெரியவர்களைப் போற்றித் தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்.
|