தனது முயற்சியினாலும், உழைப்பினாலும் ஆக்கம்பெற வேண்டியவன், பிறர் பொருளை மறைவாகக் கவர்ந்து பொருள்செய்கிறான். இது களவு எனப்படுகிறது.
ஆள்வலிமையாலும் தோள் வலிமையாலும் வன்முறைகள் பிறவற்றாலும் களவு மேற்கொள்ளப்படுகிறது.
பண்டைக்காலத்திலிருந்து களவு பெருங்குற்றமாகவே கருதப்பட்டு வந்திருக்கின்றது. கள்வனைக் கோறல் கடுங்கோலன்று; வெள்வேற் கொற்றம் என்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூற்று (சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் வழக்குரை காதை - 64 - 5 பொருள்: கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோன்மைப் பாற்பட்டதன்று மேலும் அதுவே அரச நீதியுமாகும்.) களவுக்குக் கொலைத்தண்டனையும் அன்று இருந்தது என்பதைக் காட்டுகிறது.
ஒருவர் பொருளை அவர் உடன்பாடின்றிக் பறித்துக்கொள்ளுதல் வெளிப்படைக் களவாகும். ஏமாற்றுதல், பிறர் உரிமைகளில் ஊடுருவல், கடமைகளைச் சரிவரப் புரியாமை, பொறுப்புகளைப் புறக்கணித்தல், சூழ்ச்சிகள் போன்றவை மறைமுகக் களவு என அறியப்படுவனவாகும்.
பொருள்திருட்டு, வஞ்சித்து ஈட்டல், கந்து வட்டி வாங்குதல், கலப்படம்செய்தல், கள்ளச்சந்தை வணிகம், உழைப்பவரின் அறியாமை, வறுமை போன்றவற்றைப் பயன்படுத்திக் கூலியைத் திருடல், கொள்ளை, கொள்கையில்லா அரசியல், செய்யும் தொழிலில் உண்மையின்மை, கையூட்டுப்பெறல், முறைகேடுகளில் ஈடுபடுதல் போன்ற நேர்மையற்ற செயல்களால் ஈட்டிய செல்வம் களவினால் ஆகிய ஆக்கம் எனக் கருதப்படும்.
அறிவார்ந்த ஏமாற்றுதலும் களவின்பாற்படும். கருத்துப் பொருள் திருட்டு (Intellectual property (IP) theft) என்று அறியப்படுவதும் தரவு திருட்டு (data theft) முதலியனவும் களவுக்கு இனமானவையே.
பிறருடைய பொருளை வஞ்சகமாகச் சாத்திரம், சமயம் போன்றவைகளைப் பயன்படுத்தியும் கொள்கின்றனர். இவையும் ‘கள்ளத்தால் கள்வது’தாம். பரிதி என்ற பழம் உரையாசிரியர் 'தவம் செய்வார்க்குப் பர்த்தாக்கள் இரங்கிக் கொடுக்கும் பொருள் அன்றியிலே, ஒரு திருப்பணி போல காட்டி வாங்குதலை'த் தனது குறளுரையில் (282) குறித்துள்ளார். கோயில் கட்டுதல், குடமுழுக்கு, கல்விநிறுவனம், திக்கற்றோர் இல்லம் முதலியவற்றுக்கு உதவுதல் என்ற பெயரால் ஏமாற்றிப் பணம் திரட்டும் கொடியவர்களை இன்றும் காண்கிறோம்.
'துறவுக் கோலத்தாலும் மந்திரங்கள் உச்சரிப்பதாலும் நன்மை அல்லது தீமை இயலும் என்ற மனப்பான்மையைத் தம்மை அணுகுவாரிடத்தில் உண்டாக்கியும் அவர்களின் அறிவின்மையாலும் அவலங்களாலும் பாதிக்கப்பெற்ற நிலையில் பொருள்களைக் காணிக்கை என்ற பெயரில் கவர்தலும் கள்ளத்தனமாகக் கவர்தலோடு ஒக்கும். நடக்கக் கூடாதவைகளை நடக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்கிப் பொருள்களைப் பெறுதல் களவாகும்' என்கிறார் குன்றக்குடி அடிகளார்.
அறத்துப்பாலில் காணப்படும் இல்லறவியல் துறவறவியல் என இவ்விரண்டையும் ஒரே இயலாகக் கருதி வாசித்தாலும் பொருளில் வேறுபாடு பெரிதும் இல்லை. கள்ளாமை அதிகாரத்தைத் துறவறவியலில் வைத்துள்ளனர். கள்ளாமை அதிகாரப் பாடல்கள் அனைத்தும் இல்லறத்தார், துறவறத்தார் அனைவர்க்கும் பொருந்துவதாகவே உள்ளதால் இது ஏன் துறவறவியலில் வைக்கப்பட்டுள்ளது என்பது தெளியப்படவில்லை. களவினாலாகிய ஆக்கம், எல்லாம் துறந்தவர்க்கு எங்கே வந்தது? மணக்குடவர் வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளாமை என்னும் அதிகாரங்களை இல்லறவியலில் அமைத்திருக்க, ஏனைய தொல்லாசிரியர்கள் அவற்றை துறவறவியலில் அமைத்துள்ளார்கள். பிற்கால உரையாசிரியர்களில் வ உ சிதம்பரம் கள்ளாமை அதிகாரத்தை இல்லறவியலில் கொண்டிருக்கிறார். துறவறவியலில் 'கள்ளாமை' இருப்பதால், பல உரையாசிரியர்கள் துறவிகளை இணைத்தே இவ்வதிகாரப் பாடல்களுக்கு உரை செய்துள்ளனர். இவை ஏற்குமாறு இல்லை. கள்ளாமை அதிகாரத்தை இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் பொதுவாகப் பார்ப்பதே பயனளிக்கும்.