இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0286அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

(அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:0286)

பொழிப்பு (மு வரதராசன்): களவு செய்து பிறர்பொருள் கொள்ளுதலின் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

மணக்குடவர் உரை: களவின்கண்ணே மிக்க ஆசையையுடையவர் நேரின்கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார்.
இது நேர் செய்ய மாட்டாரென்றது.

பரிமேலழகர் உரை: அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார், களவின்கண் கன்றிய காதலவர் - களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார்.
(உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உற்ற விளைவுகளையும் அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.)

இரா சாரங்கபாணி உரை: களவு செய்வதில் மிகுந்த வேட்கையுடையவர் அளவு அறிந்து சிக்கனமாக அடங்கி ஒழுகுதலைச் செய்யமாட்டார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காதலவர்.

பதவுரை:
அளவின்கண்-வரம்பில்; நின்று-நின்று; ஒழுகல்-நடந்து கொள்ளுதல்; ஆற்றார்-மாட்டார்; களவின்கண்-திருட்டுத் தொழிலில்; கன்றிய-மிக்க; காதலவர்-ஆசையுடையவர்.


அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நேரின்கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார்;
மணக்குடவர் குறிப்புரை: இது நேர் செய்ய மாட்டாரென்றது.
பரிப்பெருமாள்: நெறியின்கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நேர் செய்ய மாட்டாரென்றது.
பரிதி: தவநெறியிலே நிற்கமாட்டார்;
காலிங்கர்: தமக்கு ஒத்த நீதியின் மரபிலே நின்று ஒழுகுதலை அறியார்;
பரிமேலழகர்: உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார்,
பரிமேலழகர் குறிப்புரை: உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உற்ற விளைவுகளையும் அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.

'நேரின்கண்/நெறியின்கண்/தவநெறியிலே/ஒத்த நீதியின் மரபிலே/ அளத்தலாகிய நெறியின்கண் ஒழுகமாட்டார்' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அளவிலே நின்று வாழ்க்கை நடத்தார்', 'தங்களுடைய நிலைமைக்குத் தகுந்த வரையறையோடு அடங்கி வாழ்க்கை நடத்த மாட்டார்கள்', 'தமக்குரிய வரம்பிற்குள் நின்று வாழ முடியாதவர் ஆவர்', 'அற நெறியில் நின்று அதற்கேற்ப ஒழுகமாட்டார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அளவு அறிந்து அடங்கிய வாழ்க்கை நடத்த மாட்டாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

களவின்கண் கன்றிய காத லவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: களவின்கண்ணே மிக்க ஆசையையுடையவர்.
பரிப்பெருமாள்: களவின்கண்ணே மிக்க ஆசையையுடையவர்.
பரிதி: கபட புத்தியிலே மிகுந்தவர் என்றவாறு.
காலிங்கர்: யாரோ எனில் களவின்மாட்டு அழுந்திய காதலை உடையோர் என்றவாறு.
பரிமேலழகர்: களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார்.

'களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'களவிலே மிக்க சுவை கண்டவர்கள்', 'திருடுவதில் அதிகமான ஆசை கொண்டு விட்டவர்கள்', 'களவின்கண் மிகுந்த ஆசையுடையவர்கள்', 'திருட்டுத் தொழிலில் மிகுந்த விருப்பம் உடையவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

களவின்கண் மிகுந்த வேட்கையுடையவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அளவு அறிந்து அடங்கிய வாழ்க்கை நடத்த மாட்டாதவர் களவின்கண் மிகுந்த வேட்கையுடையவர்கள் என்பது பாடலின் பொருள்.
'அளவின்கண் நின்று' என்ற தொடர் குறிப்பதென்ன?

வரம்பில்லாத வாழ்வுநெறி மேற்கொள்பவர் களவிலிருந்து விடுபடமாட்டாதவர் ஆகிறார்.

இருப்பதை வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கை இன்பமாக அமையும். வரம்பிற்குள் வாழ அறியாதவர்கள் பிறர் பொருளைக் களவு செய்தலிலிருந்து மீண்டு வர இயலாதவாறு அடிமைப்பட்டு போகிறார்கள்.
வருவாய்க்குத் தகுந்த அளவில் செலவு செய்து வாழ்க்கை நடத்துபவர்கள் தங்களது தேவைகளைச் சுருக்கியோ விரித்தோ சரிப்படுத்திக் கொள்வர். பொருள் ஒழுக்கம் இல்லாதவர்கள் எல்லை கடந்து வாழ்ந்து எப்பொழுதும் தங்கள் தேவைகள் மிக்கவே இருக்கக் காண்பர். தேவைகள் மிகுந்தால் அதற்கான பொருளுக்கு எங்கு போவது? எனவே அவர்கள் வஞ்சகம் செய்து பொருளீட்டுவதே எளிதான வழி என்று முடிவு கட்டி அதில் ஆழமாகக் கால்பதித்து அழுந்துவர். இவ்வாறு அளவின்கண் நின்றொழுக முடியாதவர் களவு-தேவை - திருட்டில்முதிர்ந்த வேட்கை-தேவைஇன்னும்மிகுதல் என்ற நச்சுச் சுழலில் சிக்கிக்கொள்வர். அதாவது எல்லைக்குள் நின்று வாழமுடியாதவர்கள்தாம் களவில் காதல் உடையவர்கள் ஆகிறார்கள். தங்களது வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்வது ஒன்றுதான் இதிலிருந்து மீள்வதற்கான வழி. தனது பொருளியல்புக்கேற்றவாறு அடக்கமாக வாழ்தல் வேண்டும். அளவு அறிந்து வாழப் பயில்பவர்களிடத்தில் தமக்கு உரியன அல்லாதவற்றை களவுசெய்து கொள்தல் என்னும் குற்றம் காணப்படாது.

'அளவின்கண் நின்று' என்ற தொடர் குறிப்பதென்ன?

'அளவின்கண் நின்று' என்ற தொடர்க்கு நேரின்கண்நின்று, நெறியின்கண்நின்று, தவநெறியிலே, தமக்கு ஒத்த நீதியின் மரபிலே நின்று, அளத்தலாகிய நெறியின்கண் நின்று, அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று, உயிரியல்பை அளவை முறைப்படி அளந்து அதன்படி அறிந்து, தமக்குரிய அளவின் கண்நின்று, அளவிலே நின்று, அளவு அறிந்து சிக்கனமாக அடங்கி, தங்களுடைய நிலைமைக்குத் தகுந்த வரையறையோடு அடங்கி, தமக்கு வேண்டிய தேவை என்னும் வரம்பில் நின்று, தமக்குரிய வரம்பிற்குள் நின்று, அற நெறியில் நின்று, நீதி நெறியின்படி, நேர்மையாய், தமக்குரிய ஒழுக்க வரம்பின்கண் நின்று, அறிவினால் பொருளின் தன்மையை ஆராய்ந்து அறிந்து அதன்வழி நடத்தல், தமக்குள்ள பொருளுக்குத் தக்க செலவின்கண் அளவையறிந்து அடங்கி, அளவுக் களவாயிருந்து ஆற்றும் லாபத்தை விரும்பி மோட்சமென்னும் தவநெறியில், சீவனுக்கு ஈடேற்றமாகிய விரத சீலங்களிலே நின்று, ஒழுக்கமாகிய எல்லையிலே நிலைத்து நின்று என்றவாறு பொருள் கூறினர்.

பரிமேலழகர் இக்குறளுக்கு விளக்கமாக, 'உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உற்ற விளைவுகளையும் அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப' எனக் கூறினார். இவர் அளவு என்றதற்கு அளவை (logic) எனப் பொருள் கொண்டார். அளவை என்பதற்குப் பிரமாணம் அல்லது அறிவுக் கோட்பாடு என்று பொருள். அளத்தல் என்பது காட்சி, கருத்து, நூல் என்ற மூன்றானும் உயிர், உலகு, மறுபிறப்பு, வினைத்தொடர்பு முதலியவற்றை வரையறை செய்து உள்ளவாறு அறிதலைக் குறிக்கும். அளவு நூல் வல்லார் கண்ணால் காணப்படாததை அனுமானத்தால் உணர்வர். பரிமேலழகர் இக்குறளுக்குக் கூறிய உரை இயல்பாக இல்லை.

மணக்குடவர் 'அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார்' என்றதற்கு 'நேரின்கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார்' எனப் பொருள் கூறினார். நேர்மையிலிருந்து விலகிச் சென்று ஒழுகுவர் என்பது இதன் பொருள். களவு என்பதே வஞ்சமாகச் செய்வதைத் தான் குறிக்கும். நேர்மை தவறி ஒழுகுவது என்பது ஒருவர் பொருளை உடன்பாடின்றிக் கவர்ந்துகொள்ளுதல் போன்ற வெளிப்படைக் களவை மட்டுமன்றி, ஏமாற்றுதல், கையூட்டுப் பெறுதல் முதலான மறைமுகக் களவையும் குறிக்கும். இவரது உரை சிறப்பானது.
மற்றவர்கள் கூறிய பொருள்களுள் எல்லை/வரம்பு, சிக்கனம், என்ற பொருள்கள் பொருத்தம். அளவறிந்து வாழாதான் வாழ்க்கை... (வலியறிதல் 479) என்னும் பாடலிலும் எல்லை என்ற பொருளிலே ஆளப்பட்டது.

'அளவின்கண் நின்று' என்ற தொடர் வரம்பின்கண் நின்று என்று பொருள்படும்.

அளவு அறிந்து அடங்கிய வாழ்க்கை நடத்த மாட்டாதவர் களவின்கண் மிகுந்த வேட்கையுடையவர்கள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வருவாய்க்குள் வாழ்வு கள்ளாமைப் பெருமை.

பொழிப்பு

அளவு அறிந்து அடங்கிய வாழ்க்கை நடத்தார் களவின்கண் மிகுந்த வேட்கையுடையவர்.