இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0281



எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

(அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:281)

பொழிப்பு (மு வரதராசன்): பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன், எத்தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்கவேண்டும்

மணக்குடவர் உரை: பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன் யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்க.
இது களவு ஆகாதென்றது.

பரிமேலழகர் உரை: எள்ளாமை வேண்டுவான் என்பான் - வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், எனைத்து ஒன்று கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க.
('எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும்,நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: பிறரால் தான் இகழப்படாதிருத்தலை விரும்புகிறவன், பிறரை வஞ்சித்து யாதொரு பொருளையும் கொள்ளக் கருதாதபடி தன் நெஞ்சினைத் தடுத்துக் கொள்ளவேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க.

பதவுரை: எள்ளாமை-இகழப்படாமை; வேண்டுவான்-விரும்புபவன்; என்பான்-எனப்படுபவன்; எனைத்தொன்றும்-எதையும், யாதொரு பொருளையும்; கள்ளாமை-வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை; காக்க-காத்துக்கொள்க; தன்-தனது; நெஞ்சு-உள்ளம்.


எள்ளாமை வேண்டுவான் என்பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன்;
பரிப்பெருமாள்: பிறரா லிகழாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன்;
பரிதி: பர சமயத்தார் தந்த வசை இகழாமல் வேண்டுமாகில்;
காலிங்கர்: அறநூலாலும் சான்றோராலும் எஞ்ஞான்றும் இகழாமை வேண்டுவான் என்பான் ஒருவன்;
காலிங்கர் குறிப்புரை: எள்ளாமை என்பது இகழாமை.
பரிமேலழகர்: வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான்;
பரிமேலழகர் குறிப்புரை: 'எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும்,நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல். [களிப்பு-மதம்]

'பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'பர சமயத்தார் தந்த வசை இகழாமல் வேண்டுமாகில்' என்கிறார். பரிமேலழகர் 'வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான்' என்று வீட்டை இணைத்துப் பொருள் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வசைவேண்டாம் என்பவன்', 'பிறரால் இகழப்படாமையை விரும்புபவன் எனப்படுவான்', 'தனக்கு இகழ்ச்சி வரக்கூடாதென்று விரும்புகின்ற ஒருவன்', 'பிறரால் இகழப்படாமையை விரும்புவான் என்று சொல்லப்படுபவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறரால் இகழப்படாமையை விரும்புபவன் என்று சொல்லப்படுபவன் என்பது இப்பகுதியின் பொருள்.

எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்க.
மணக்குடவர் குறிப்புரை: இது களவு ஆகாதென்றது.
பரிப்பெருமாள்: யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்கா.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது களவு ஆகாதென்றது.
பரிதி: கபடுள்ளது விடுக.
காலிங்கர்: உலகத்து யாதானும் ஒன்றினையும் தனது நெஞ்சமானது கள்ளாதவண்ணம் காக்க; எனவே அதனை யாண்டும் செல்லாமை மீட்க என்றே பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க.
பரிமேலழகர் குறிப்புரை: ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.

'யாதானும் ஒன்றினையும் தனது நெஞ்சமானது கள்ளாதவண்ணம் காக்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிகச் சிறுதும் கள்ளமின்றித் தன் நெஞ்சைக் காக்க', 'யாதொரு பொருளையும் வஞ்சித்துக் கொள்ளாமல் மனத்தினைக் காப்பானாக', 'எந்தப் பொருளையும் திருடி எடுத்துக் கொள்வதைத் தன் மனம் நினைக்காமலிருக்கும்படி காக்க வேண்டும்', 'யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்து அடைய நினையாத வகையில் தன் நெஞ்சினைக் காப்பற்ற வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

யாதொரு பொருளையும் பிறரிடமிருந்து களவாடி அடைய நினையாத வகையில் தன் மனத்தினைத் தடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறரால் இகழப்படாமையை விரும்புபவன் என்று சொல்லப்படுபவன் எனைத்தொன்றும் பிறரிடமிருந்து களவாடி அடைய நினையாத வகையில் தன் மனத்தினைத் தடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'எனைத்தொன்றும்' என்றதன் பொருள் என்ன?

பிறர் பொருளைக் களவாடக் கருதுபவன் இளக்காரமாக நோக்கப்படுவான்.

தான் இகழப்படாதிருக்க விரும்புகின்றவன், பிறரது எந்தப் பொருளையும் வஞ்சித்து கவர்ந்து கொள்ள நினையாதவாறு தன் மனத்தை முதலில் காத்துக்கொள்ள வேண்டும்.
ஏச்சும் பேச்சும் கேட்க விரும்பாதவன் என அறியப்பட வேண்டுபவன் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள எண்ணமாட்டான். கள்ளுதல் என்பது கள்ளக் கருதுதலையும் குறித்து நின்றது, கவர்ந்துகொள்ள நினைத்தலும்‌ செய்தலோடு ஒக்கும் என்பதால்.
எண்ணத்தில் உருவாவதுதான் செயலில் முடியும். தூய்மையான மனதில் பிறரை வஞ்சித்தல் என்னும் கள்ளம் தோன்றாது. எனவே, மனதைத் தூய்மையாக வைத்திருங்கள் என்ற பொருளில் கள்ளாமை காக்க தன் நெஞ்சு எனச் சொல்லப்பட்டது. இதனால் பிறர் பொருளைக் களவிற் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எழும் மனநிலையிலேயே அது தடுக்கப்படும்.
இகழ்ச்சியை எவரும் விரும்பமாட்டார். பிறர் பொருளைக் களவாடும் எண்ணமே எழாதவண்ணம் எவர் மனதைக் காப்பாரோ, அவர் இகழ்ச்சியடையார். களவு செய்வதற்கான காரணங்கள் பல இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் தனக்கு உரிமையில்லாத எந்த ஒரு பொருளையும்- சிறிதோ பெரிதோ மதிப்பு உள்ளதோ அற்றதோ- கவர்ந்து கொள்ள விரும்பாமல் தன் மனதைக் காத்துக் கொள்ள வேண்டும். மனத்தை அடக்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை மிக இனிதாய் அமைந்துவிடும். களவு செய்யும் பண்பு ஒருவனுக்கு வாய்த்துவிடுமானால் அவனை உலகோர் எள்ளி இகழ்வர்.
பின்வரும் விளைவை எண்ணாமல், களவுத் தொழில் செய்து சமுதாயத்தில் இகழ்ச்சிக்குரியவனாக வாழ வேண்டுமா என்பதை எண்ணுக என்று கள்வாரைப் பார்த்துக் கேட்கிறார் வள்ளுவர்.

உரைகாரர்களில் கள்ளாமையை இல்லறத்தார்க்குரிய நெறியாகக் கொண்டவர்கள் “எள்ளாமை” என்பதற்குப் “பிறர் இகழாது இருத்தல்’ எனப்பொதுமையிலும் துறவறத்திற்குரியதாக எண்ணியவர்கள் 'தவத்தோர்' எனவும் பொருள் கண்டனர்.

'எனைத்தொன்றும்' என்றதன் பொருள் என்ன?

'எனைத்தொன்றும்' என்ற தொடர்க்கு யாதொரு பொருளையும், யாதானும் ஒன்றினையும், எத்தன்மையான பொருளையும், எந்த ஒரு பொருளையும், பொருள் யாதொன்றையும், மிகச் சிறுதும், எந்தப் பொருளையும், எத்தகைய பொருளையும், எவ்வளவு சிறிய பொருளானாலும், எவ்வகைப் பொருளையும், எந்த வகையான சிறிய பொருளையும், எல்லா நிலைகளிலும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எவ்வகைப் பொருளையும் களவு செய்தல் கூடாது என்கிறது பாடல். பரிமேலழகர் 'அறிவுக்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியரை வஞ்சித்துக்கொள்ளின் அதாவது கல்வி கற்றுக் கொண்டு, அவருக்கு உரிய தொகையை கொடுக்காமல் இருப்பதும் களவாம் என்றார், மற்றவர்கள் எள்ளின் பிளவையொத்த மிகமிகச் சிறிய அளவினதாயினும், ஆவிற்கு நீர் என்றாலும் என இத்தொடர்க்குப் பொருளுரை கூறுவர். வணிகர் ஈட்டும் கொள்ளை ஆதாயம், பிறர் கூலியைத் திருடல், அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகொடாமல் ஏமாற்றுதல் ஆகியனவும், அறிவு போன்ற கருத்துப் பொருளும் 'எனைத்தொன்றும்' என்பதில் அடங்கும்; மேலும் 'அறிவார்ந்த உடைமைத் திருட்டு' (Intellectual property (IP) theft), தரவு திருட்டு (data theft) போன்றவையும் இதில் அடங்கும்.

எனைத்தொன்றும் என்ற தொடர் யாதொரு பொருளையும் என்ற பொருள் தரும்.

பிறரால் இகழப்படாமையை விரும்புபவன் என்று சொல்லப்படுபவன் யாதொரு பொருளையும் பிறரிடமிருந்து களவாடி அடைய நினையாத வகையில் தன் மனத்தினைத் தடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வசைபடவேண்டாம் எனக் கருதுபவர் கள்ளாமை கடைப்பிடிப்பர்.

பொழிப்பு

இகழப்படவேண்டாம் என்று எண்ணுபவன் பிறரது எந்தப் பொருளையும் வஞ்சித்துக் கொள்ளாமல் மனத்தினைக் காப்பானாக