இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0287களவென்னும் காரறி வாண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்

(அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:287)

பொழிப்பு (மு வரதராசன்): களவு என்பதற்குக் காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

மணக்குடவர் உரை: களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை.
இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.

பரிமேலழகர் உரை: களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை.
(இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவென்னும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்றல்' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: நெறிபட வாழும் உறுதியுடையவர் இடத்துத் திருடும் பெரும்பேதமை இராது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
களவென்னும் காரறி வாண்மை அளவுஎன்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்.

பதவுரை:
களவு-திருட்டு; என்னும்-என்கின்ற; கார்- கருமையுடைய, இருண்ட, மயங்கிய; அறிவு-அறிவு; ஆண்மை-திட்பம்; அளவு-அளவு; என்னும்-என்கின்ற; ஆற்றல்-திறன்; புரிந்தார்கண்-பொருந்தினவரிடத்தில்; இல்-இல்லை.


களவென்னும் காரறி வாண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: களவாகிய பொல்லா அறிவுடைமை;
பரிப்பெருமாள்: களவாகிய பொல்லா அறிவுடைமை;
பரிதி: களவாகிய அஞ்ஞானம் விசாரித்ததில்;
காலிங்கர்: மற்றக் களவினைக் கருதுகின்ற அறியாமையானது துறவுநெறி உடையார்மாட்டு யாதானும் ஒரு காரணத்தால் ஒருகால் ஒரு களவியல் கருதத் துணியுமாயின் மற்றது பெரிதும் அறிவின்மை ஆகலான்;
பரிமேலழகர்: களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்;
பரிமேலழகர் குறிப்புரை: இருள் - மயக்கம்.

'களவாகிய பொல்லா அறிவுடைமை/அஞ்ஞானம்/பெரிதும் அறிவின்மை/இருண்ட அறிவினை உடையராதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'களவு என்னும் இருண்ட அறிவுடையராதல்', 'திருட்டு என்ற இருட்டறிவு', 'களவு என்னும் அறிவு மயக்கம் காணப்பட மாட்டாது', 'திருட்டு என்று சொல்லப்படும் இருண்ட அறிவினை உடையராதல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

களவு என்னும் இருள்அறிவின் அடர்ப்பு என்பது இப்பகுதியின் பொருள்.

அளவுஎன்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.
பரிப்பெருமாள்: நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.
பரிதி: அளவாகிய யாக்கை நிலையாமை கண்டாரிடத்து இல்லை என்றவாறு.
காலிங்கர்: அளவு என்கின்ற நன்னெறி உடையார்மாட்டு எஞ்ஞான்றும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவென்னும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்றல்' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.

'அளவுஎன்னும் ஆற்றல்' என்றதற்கு 'நேராகிய பெருமை' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் பொருள் கூறினர்; பரிதி அளவாகிய யாக்கை நிலையாமை' என்றார். காலிங்கர் 'அளவு என்கின்ற நன்னெறி' என்றும் பரிமேலழகர் 'உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமை' என்றும் உரை செய்தனர். 'புரிந்தார்கண் இல்' என்ற தொடர்க்கு இவர்கள் முறையே 'பொருந்தினார்மாட்டு இல்லை', 'கண்டாரிடத்து இல்லை', 'உடையார்மாட்டு எஞ்ஞான்றும் இல்லை', 'பெருமையை விரும்பினார்கண் இல்லை' என உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அளவறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பியவர்களிடத்து இல்லை', 'அளவோடு வாழ்க்கை நடத்தக்கூடிய மனவலிமை உள்ளவர்களிடத்தில் இருக்காது', 'வரம்பினுள் நிற்றலாகிய திறமையை விரும்பிப் பெற்றுக் கொண்டவர்களிடத்தே இல்லை', 'அறநெறியில் செல்லுதல் என்னும் வலிமையை உடையவர் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அளவறிந்து வாழ்தலாகிய திறனைப் பொருந்தியவர்களிடத்து இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
களவு என்னும் இருள்அறிவின் அடர்ப்பு அளவறிந்து வாழ்தலாகிய திறனைப் பொருந்தியவர்களிடத்து இல்லை என்பது பாடலின் பொருள்.
'காரறிவாண்மை' என்றால் என்ன?

எல்லைக்குள் நின்று வாழ்ந்தால் இருள்உலகத்தில் புக வேண்டிய தேவை இல்லை.

அளவறிந்து வாழக்கூடிய வல்லமை உள்ளவர்களிடம் திருட்டுத்தனம் என்னும் இருள்அறிவின் அடர்ப்பு இல்லை.
தம்மிடம் ஒன்றும் இல்லை என்று சொல்லிச் சிலர் திருடுகின்றனர். இதுவும் குற்றம்தான். சிலர் தங்கள் தேவைகளைப் பெருக்கிக்கொண்டு அதை எதிர்கொள்ள மேன்மேலும் பொருளை நாடி அலைந்து பின்னர் எல்லாவகையான களவின்கண்ணும் செல்கின்றனர். இது வறுமைகாரணமாகக் களவு செய்வதைவிட மன்னிக்க முடியாத கொடிய குற்றமாம். அறிவற்றவர்களே இவ்வொழுக்கத்தை மேற்கொள்வர்.

ஏன் ஒருவன் தொடந்து திருட்டில் ஈடுபடுகிறான்? இருண்ட அறியாமை பற்றி வருவதே களவுக்குக் காரணம் என்கிறது குறள். நல்லனவற்றைச் சிந்திக்க முடியாத அவனது அறிவு இறுதியில் அவனைக் களவுத் தொழிலில் தள்ளுகிறது. களவில் ஈடுபடுபவன் அறிவை வள்ளுவர் காரறிவாண்மை அதாவது இருள் செறிந்த அறிவு என்கிறார். களவுக்குப் பயன்படும் அறிவு நல்லறிவாக இருக்க முடியாது. களவுச்செயல்கள், இருளில், மறைவில், பிறர் அறியாதிருக்கும் நிலையில் நிகழ்கின்றன என்பதுவும் அது இருள் அறிவு என அழைக்கப்படுவதற்குக் காரணமாகலாம். களவென்னும் காரறிவு என்பதில் காரறிவு காரணம், களவு காரியம்.
வரம்பு என்னும் ஆற்றலை விரும்பிப் பயின்றவரிடம் களவு என்னும் இருள் படர்ந்த மடமை தோன்ற வாய்ப்பில்லை.

'காரறிவாண்மை' என்றால் என்ன?

'காரறிவாண்மை' என்றதற்குப் பொல்லா அறிவுடைமை, அஞ்ஞானம், பெரிதும் அறிவின்மை, இருண்ட அறிவு, மயங்கிய அறிவு, இருண்ட அறிவினை ஆள்வது, இருள் தன்மையொத்த அறியாமை, பெரும்பேதமை, இருட்டறிவு, தீய அறியாமை, அறிவு மயக்கம், இருளுடைய அறிவு, அறியாமையோடு கூடிய வல்லமை, இருள்படிந்த சிந்தனை, இருண்ட அறிவுடைமை, அறியாமையாகிய இருட்டு என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்

கார் என்ற சொல்லுக்கு கருமை, இருள் என்று பல பொருள்கள் உள. இங்கு இருண்ட என்ற பொருளில் ஆளப்பட்டது. காரறிவு இருண்ட அறிவு எனப் பொருள்படும். மணக்குடவர் இத்தொடர்க்குக் “பொல்லா அறிவுடைமை” எனப் பொருள் கூறுவார். காரறிவாண்மை இருண்ட அறிவின் செறிவைக் குறிக்கும். இருண்ட அறிவு என்றதால் அது இழிந்த அறிவாம். களவே வாழ்வு என நடமாடுவரது அறிவு காரறிவேயாம். காரறிவு உடையார்க்கு, நல்லன வற்றையும் அல்லனவற்றையும் ஆராய்ந்து பார்க்க முடியாத, அவல வாழ்க்கைதான் அமையும். இழிந்த அறிவான களவினை ஆளும் தன்மை வாய்ந்தோர் வாழ்வு நல்லதாக இருக்காது.

பண்புப் பெயர்களாகப் பல்வேறு சொற்கள் திருக்குறளில் புதுமைப் பாங்குடன் மிளிர்கின்றன. ஆண்மை என்னும் சொல்லினை அடிப்படையாகக் கொண்டு பல சொற்கள் தோற்றம் பெற்றுள்ளமை பெரிதும் குறிப்பிடத்தக்கது. ஆற்றல். உடையராதல், வலிமை ஆளுந்தன்மை தளராமல் இருத்தல் முதலான பல்வேறு பொருள்களில் புதிய சொற்கள் உருவாகியுள்ளன. பேராண்மை (148), காரறிவாண்மை (287), புல்லறிவாண்மை (331), குடியாண்மை (609), மடியாண்மை (609), வினையாண்மை (904), நல்லாண்மை (1026, 1133, 1134), இல்லாண்மை (1026), ஒப்புரவாண்மை (480), தாளாண்மை (613, 614), வாளாண்மை (614), சான்றாண்மை (981, 989, 990), ஊராண்மை (779), ஏறத்தாழ இருபத்தியொரு சொற்கள் இவ்வகையில் அமைந்துள்ளன இங்கு காரறிவாண்மை உடையராதல் என்ற பொருளில் ஆளப்பட்டது (இ சுந்தரமூர்த்தி)

'காரறிவாண்மை' இருண்ட அறிவின் செறிவு என்ற பொருள் தரும்.

களவு என்னும் இருள்அறிவின் அடர்ப்பு அளவறிந்து வாழ்தலாகிய திறனைப் பொருந்தியவர்களிடத்து இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கள்ளாமை நல்லறிவாளரது உடைமை.

பொழிப்பு

களவு எனப்படும் இருண்ட அறிவின் அடர்ப்பு அளவறிந்து வாழும் திறன் பொருந்தியவர்களிடத்து இல்லை