இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0288அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு

(அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:0288)

பொழிப்பு (மு வரதராசன்): அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம்போல், களவுசெய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.

மணக்குடவர் உரை: நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்: களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும்.
இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்த்தல் முடியாதென்றது.

பரிமேலழகர் உரை: அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் - அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும், களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை.
(உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: தம் நிலையறிந்து வாழ்ந்தார் நெஞ்சத்து அறம் நிற்றல் போல், களவறிந்தார் நெஞ்சத்தில் கரவு நிற்கும். அளவறிந்தார் நெஞ்சத்து அறம் நிற்றலால் அவர்தம் சிந்தனை செயல் அனைத்தும் அறமாய் அமையும். களவறிந்தார் நெஞ்சத்துக் களவே நிற்பதால் இவர்தம் சிந்தனை செயல் அனைத்தும் வஞ்சனையாகவே அமையும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு.

பதவுரை:
அளவு-அளவு; அறிந்தார்-தெரிந்தவர்; நெஞ்சத்து-உள்ளத்தில்; அறம்-அறம்; போல-ஒக்க; நிற்கும்-நிலைத்திருக்கும்; களவு-திருட்டு; அறிந்தார்-பயின்றவர்; நெஞ்சில்-உள்ளத்தில்; கரவு-வஞ்சனை.


அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்;
பரிப்பெருமாள்: நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்;
பரிதி: யாக்கை நிலையாமை கண்டவர் மனத்தில் தன்மம் போலே நிலைபெற்று நிற்கும்;
காலிங்கர்: நீதியினொத்த மரபு உணர்ந்தோர் உள்ளத்துத் துறவறமாகிய அறம் குறிக்கொண்டு நிற்குமாப் போல் நிலை நிற்கும்;
பரிமேலழகர்: அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும்;

'நேரறிந்தவர்/யாக்கை நிலையாமை கண்டவர்/நீதியினொத்த மரபு உணர்ந்தோர்/அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெறியாளர் நெஞ்சு அறத்துக்கு இருப்பிடம்', 'தம் பொருளின் அளவறிந்து சிக்கனமாக வாழ்வார் நெஞ்சில் அறம் நிற்றல் போல', 'தாம் மேற்கொண்ட அறத்தின் அளவோடு காரியங்களைச் செய்யத் தெரிந்தவர்களுடைய மனதில் அந்த அறம் இருந்து கொண்டேயிருக்கும்', 'அற நெறி அளவுகளை அறிந்தார் நெஞ்சத்தில் அறம் நிலை பெற்றுள்ளது போல நிலைத்து இருக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அளவறிந்து வாழ்வார் நெஞ்சில் அறம் நிலை பெற்றுள்ளது போல நிற்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும்.
மணக்குடவர் குறிப்புரை: இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்த்தல் முடியாதென்றது.
பரிப்பெருமாள்: களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது களவு காண்பாரைத் தவிர்த்தல் முடியாதென்றது.
பரிதி: களவாகிய கவடும் களவறிந்தாரிடத்து என்றவாறு.
காலிங்கர்: அது யாது எனில், களவினை அறிந்தோர் மாட்டு நரகமானது என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: கரவு என்றது களவு என்று சொல்லுவாரும் உளர்.
பரிமேலழகர்: களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை.
பரிமேலழகர் குறிப்புரை: உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.

'களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் கரவு என்பதற்கு நரகம் என்று பொருள் கூறி சிறப்புரையில் களவு என்று சொல்லுவாரும் உளர் எனச் சொல்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'திருடர்கள் நெஞ்சு மறைவுக்கு இருப்பிடம்', 'திருட்டினைச் செய்பவர் நெஞ்சில் வஞ்சனை நிற்கும்', 'அந்த அளவுக்கு மீறித் திருடப் பழகினவர்கள் மனதில் அந்த அறம் மறைந்துவிடும் (கரந்து கொள்ளும்)', 'திருட்டுத் தொழிலை அறிந்தவர் நெஞ்சில் வஞ்சனை,. (நல்லோர் நெஞ்சில் அறமும், தீயோர் நெஞ்சில் வஞ்சனையும் நிலைபெறும் என்பதாம்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

திருடப் பழகினவர்கள் மனதில் வஞ்சனை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அளவறிந்து வாழ்வார் நெஞ்சில் அறம் நிலை பெற்றுள்ளது போல நிற்கும் திருடப் பழகினவர்கள் மனதில் கரவு என்பது பாடலின் பொருள்.
'கரவு' என்ற சொல்லின் பொருள் என்ன?

களவைப் பயின்றவர் மனத்தை மாற்றுதல் கடினம்.

அளவு அறிந்து வாழ்கின்றவர் உள்ளத்தில் அறச்சிந்தனைகள் நீங்காமல் நிலைபெறும்; களவுத் தொழிலைப் பயின்றவர் மனத்தில் வஞ்சனை தங்கி நிற்கும்.
வருவாயின் அளவிற்குமேல் செலவு செய்து பழகியபின் எவ்வாறேனும் பொருளைப் பெற வேண்டும் என்ற வேட்கை வளரும்; இவ்வாறு வாழ்கின்றவர்கள் பிறர்பொருளைக் கவரவும் தயங்காத நிலைமை அடைந்துவிடுவார்கள். கையூட்டுப் பெறுதல் போன்றவையும் களவில் அடங்கும். அளவு அறிந்து வாழ்கின்றவர்களின் நெஞ்சில் கள்ளாமையாகிய அறம் விளங்குவது போல், களவு நெஞ்சம் உடையவர்கள் எவ்வெவ் வஞ்சக வழிகளில் செல்வம் சேர்க்கலாம் என்றே சிந்தனையைச் செலுத்தி அதிலிருந்து மீளமுடியாமல் மறைவான வஞ்சனை உலகில் நிலைபெறவேண்டியவராகிறார்.
அளவு என்ற சொல்லுக்கு நெறி எனவும் அளத்தல் எனவும் பொருள் கொள்வர். அவ்விதம் கொண்டால் ‘அளவறிந்தவர்கள்’ எனப்படுவர் நன்மை எது, தீமை எது, இன்பம் பயப்பது எது, துன்பம் அளிப்பது எது என்ற வரையறையினை அறிவாலும் அனுபவத்தாலும் அறிந்தவர்கள் ஆவர். இவர்களது மனத்திலே அறவுணர்வு நிலைத்து நிற்கும். நெறியறிந்தார் நெஞ்சத்தில் நிற்பது அறம் என்பதுபோல, ஏமாற்றுதலையே தொழிலாகக் கொண்டவர் மனத்தில் கள்ளத்தனமே குடிகொண்டிருக்கும். அறன் என்ற சொல் இக்குறளில் இடம்பெற்றுள்ளதால் நன்மை தீமைகளை அளந்தறிந்து நடப்பார் நெஞ்சத்தில் அற நினைவே குடிகொண்டிருப்பதுபோல, களவு வாழ்க்கை நடத்துபவர் மனத்தில் வஞ்சக எண்ணங்களே ஊறிநிற்கும் என்ற இவ்வுரையும் ஏற்கத்தக்கதே.
அளவறிந்து வாழும் எளிய வாழ்க்கையை மேற்கொண்டவர்களிடத்து கரவு நெஞ்சம் அதாவது. மறைந்து ஒழுகும் தீயஎண்ணம் இல்லை என்கிறார் வள்ளுவர் இப்பாடலில்.

ஒரு நீதிக்கு ஒரு நீதியையே உவமாகக் காட்டி இருபயனை எய்த வைக்கும் பல குறள்களில் இதுவும் ஒன்று. அளவறிந்தார் நெஞ்சத்து அறம்; களவறிந்தார் நெஞ்சிற் கரவு என்ற நீதிகள் காட்டப்பட்டன

'கரவு' என்ற சொல்லின் பொருள் என்ன?

'கரவு' என்ற சொல்லுக்கு வஞ்சகம், நரகம், வஞ்சனை, வஞ்சம், ஏமாற்றும் வஞ்சனை, மறைவு, வஞ்சமென்னும் தீயெண்ணம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இச்சொல்லுக்கு வஞ்சனை என்றே பெரும்பான்மையர் பொருள் கூறினர். இதற்கு மறைவு என்ற பொருளும் உண்டு. களவு என்பது பிறன் பொருளை மற்றவர் அறியாமல் மறைந்துறைந்து கவர எண்ணுவது ஆதலால் மறைவு என்ற பொருளும் பொருந்தும்.

'கரவு' என்ற சொல்லுக்கு மறைவு என்பது பொருள்.

அளவறிந்து வாழ்வார் நெஞ்சில் அறம் நிலை பெற்றுள்ளது போல நிற்கும் திருடப் பழகினவர்கள் மனதில் வஞ்சனை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கள்ளாமை அறம் வஞ்சகச் சிந்தனையை நீக்கும்.

பொழிப்பு

அளவறிந்து வாழ்வார் நெஞ்சில் அறம் நிலைநிற்றல் போலத் களவு செய்பவர் மனத்தில் வஞ்சனை தங்கும்