இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0284களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்

(அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:0284)

பொழிப்பு (மு வரதராசன்): களவுசெய்து பிறர்பொருள் கொள்ளுதலின் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும்போது தொலையாத துன்பத்தைத் தரும்.

மணக்குடவர் உரை: களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும்.
இது நரகம் புகுத்தும் என்றது.

பரிமேலழகர் உரை: களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும்.
(கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: களவில் அடிப்படப் பழகிய மறைமுக ஆசைஒருவனுக்கு ஏற்படின், அது பின்னைய விளைவில் நீங்காத பெருங்கேட்டைத் தரும். களவு அத்துணை மறைமுகமான ஆசைப் பெருக்கத்தை உண்டாக்குமாதலின் அதைக் காதல் என்று கூறியுள்ளார். ஒருமுறை திருடிவிட்டால் பிறகு கையும் மனமும் நிற்கவே மாட்டா. களவு வழியில் மனம் சென்று பழகிவிட்டால், அது பிறகு திருந்துவது கடினம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.

பதவுரை:
களவின்கண்-திருட்டுத் தொழிலில்; கன்றிய-மிக்க; காதல்-வேட்கை; விளைவின்கண்-பயனாக; வீயா-தொலையாத; விழுமம்-துன்பம்; தரும்-கொடுக்கும்.


களவின்கண் கன்றிய காதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: களவின்கண்ணே மிக்கஆசை;
பரிப்பெருமாள்: களவின்கண்ணே மிக்கஆசை;
பரிதி: கபட புத்தி இருக்கையிலே;
காலிங்கர்: இது நமக்குத் தகாது என்று கருதாது களவின் மாட்டு அழுத்திய ஆசையானது;
பரிமேலழகர்: பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை;

'களவின்கண்ணே மிக்க ஆசை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'களவிலே மிகுந்த ஆசை இருப்பது', 'திருடுதலில் உள்ள மிக்க வேட்கை', 'திருடுவதில் ஆசை வளர்ந்துவிட்டால்', 'பிறர் பொருளை வஞ்சித்து அடைவதன் முயற்சியில் கொண்டுள்ள மிகுந்த விருப்பம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

களவிலே கொண்ட மிகுந்த வேட்கை என்பது இப்பகுதியின் பொருள்.

விளைவின்கண்வீயா விழுமம் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது நரகம் புகுத்தும் என்றது.
பரிப்பெருமாள்: பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நரகம் புகுத்தும் என்றது.
பரிதி: எத்தனை தன்ம தானம் பண்ணினாலும், உவர் நிலத்திலே இட்ட பயிராம்.
காலிங்கர்: விளைவினிடத்து எஞ்ஞான்றும் ஒழியாத நரகத்துள் வீழ்ந்து அழும் துன்பத்தைத் தரும்.
பரிமேலழகர்: அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.

'பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கடைசியில் நீங்காத துன்பம் தரும்', 'அப்பொழுது இனியதாகத் தோன்றினாலும் முடிவில் அழியாத துன்பம் தரும்', 'அதன் பயனாக ஓயாத துன்பங்கள் வரும்', 'பயனைத் தருங்கால் அழியாத துன்பங்களைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

விளைவாக விட்டுத்தொலையாத துன்பத்தைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
களவிலே கொண்ட மிகுந்த வேட்கை விளைவாக வீயா விழுமம் தரும் என்பது பாடலின் பொருள்.
'வீயா விழுமம்' என்ற தொடர் குறிப்பது என்ன?

களவிலே கொள்ளும் ஆசை தொடர்ந்து இன்னல்களைத் தரும்.

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத வேட்கை, அதன் விளைவுகளால், நீங்காத துன்பத்தை உண்டாக்கும்.
பிறர்பொருளை வஞ்சித்துக் கொள்வதில் உண்டாகும் பேரவாவை வள்ளுவர் 'களவின்கண் கன்றிய காதல்' என்கிறார் இங்கு. காதல் என்றதால் களவிலேயே மூழ்கிக்கிடத்தல் குறிக்கப்பெறுகிறது. களவுத் தொழிலில் உண்டாகும் ஆசையை தொடக்கத்திலேயே அடக்காவிட்டால் அதற்கு அடிமையாகிவிடும் நிலைக்கு இட்டுச் செல்லும். அந்த நிலையில் களவு செய்வோர் நிழல்போல் தொடரும் நீங்காத இடும்பைகளுக்கு ஆளாவர்; சட்டம் துரத்திக் கொண்டே இருக்கும்; பொருளையும் அமைதியையும் இழப்பர்; நட்பாய் இருந்தவர் விலகி நிற்பர்; பகைவர் கண்ணுக்கு அவர் எளியராய் ஆகிவிடுவார்; களவுக் குற்றவாளியை மற்றவர் வெறுப்பர்.
ஒறுத்தலினால் திருட்டை ஒழிக்க முடியாது. திருடராய்ப் பார்த்துத் தான் திருந்த வேண்டும். இதனாலேயே களவினால் உண்டாகும் தீமைகளை எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.

'வீயா விழுமம்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'வீயா விழுமம்' என்றதற்குக் கேடில்லாத நோய், எஞ்ஞான்றும் ஒழியாத நரகத்துள் வீழ்ந்து அழும் துன்பம், தொலையாத இடும்பை, தொலையாத துன்பம், நீங்காத பெருங்கேடு, நீங்காத துன்பம், அழியாத துன்பம், ஓயாத துன்பம், தீராத துன்பம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வீயா என்ற சொல்லுக்கு தொலையாத, நீங்காத, அழியாத என்பது பொருள். இப்பாடலின் கருத்துள்ள மற்றொரு குறள் தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று (தீவினையச்சம் 208 பொருள்: தீயசெயல்கள் செய்தவர் கேடுறுவர் என்பது ஒருவனுடைய நிழல் விடாது அவனது அடிக்கீழ்த் தங்குவது போன்றது).
விழுமம் என்ற சொல்லுக்கு சிறப்பு என்றும் துன்பம் என்றும் இரு வேறுபட்ட பொருள்கள் உள்ளன. இங்கு துன்பம் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.

வீயா விழுமம் என்றது நீங்காத துன்பம் என்ற பொருள் தரும்.

களவிலே கொண்ட மிகுந்த வேட்கை, விளைவாக, விட்டுத்தொலையாத துன்பத்தைத் தரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கள்ளாமை மேற்கொள்வார்க்கு இடும்பை இல்லை.

பொழிப்பு

களவிலே மிகுந்த ஆசை கொள்வது விட்டுத்தொலையாத இடும்பையைத் தரும்.