உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்
(அதிகாரம்:கள்ளாமை
குறள் எண்:282
பொழிப்பு (மு வரதராசன்): குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே; அதனால் பி்றன் பொருளை அவன் அறியாத வகையால், `வஞ்சித்துக் கொள்வோம்’ என்று எண்ணாதிருக்க வேண்டும்.
|
மணக்குடவர் உரை:
பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்; ஆதலால் அதனை மறைவினாலே கள்வேமென்று முயலாதொழிக.
இது களவு தீதென்றது.
பரிமேலழகர் உரை:
உள்ளத்தால் உள்ளலும் தீதே - குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம், பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் - ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று கருதற்க.
('உள்ளத்தால்' என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. உள்ளலும் என்பது
இழிவு சிறப்பு உம்மை. 'அல்' விகுதி வியங்கோள் 'எதிர்மறைக்கண்' வந்தது. இவை இரண்டு பாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃது
என்பதூஉம் அது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.)
சி இலக்குவனார் உரை:
தீய செயல்களை நெஞ்சால் நினைத்தலும் தீங்கு தருவதாகும். ஆதலால் பிறன் பொருளை வஞ்சனையால் கொள்வோம் என்று நினைக்காதே.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் உள்ளத்தால் உள்ளலும் தீதே.
பதவுரை:
உள்ளத்தால்-நெஞ்சத்தால்; உள்ளலும்-நினைத்தலும்; தீதே-கொடிதே; பிறன்-மற்றவன்; பொருளை-உடைமையை; கள்ளத்தால்-திருட்டால்; கள்வேம்-வஞ்சித்துக் கொள்வோம்; எனல்-என்று நினையற்க.
|
உள்ளத்தால் உள்ளலும் தீதே:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்;
பரிப்பெருமாள்: பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்;
பரிதி: தவம் செய்வார்க்குப் பர்த்தாக்கள் இரங்கிக் கொடுக்கும் பொருள் அன்றியிலே;
காலிங்கர்: துறவோனாகிய ஒருவன் பிறனொருவன் வழங்கிய பொருளையும் விரும்பாமல், நெஞ்சினால் நினைத்தலும் தீதே;.
பரிமேலழகர்: குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம்;
பரிமேலழகர் குறிப்புரை: 'உள்ளத்தால்' என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. உள்ளலும் என்பது
இழிவு சிறப்பு உம்மை.
'பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம்' என்பது பரிமேலழகர் உரை. பரிதி, காலிங்கர், பரிமேலழகர் மூவரும் இப்பாடல் துறவறம் கொண்டோர்க்கு என்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறன் பொருளை மனத்தால் நினைப்பதும் தீது', 'பிறன் பொருளை மனத்தால் நினைத்தலும் தீமையேயாம்', 'நெஞ்சில் நினைத்தாலும் கெடுதல் உண்டாகும்', 'குற்றங்களை மனத்தால் நினைத்தலும் பாவமே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
மனத்தில் நினைப்பதுங் கூட தீமையேயாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலால் அதனை மறைவினாலே கள்வேமென்று முயலாதொழிக.
மணக்குடவர் குறிப்புரை: இது களவு தீதென்றது.
பரிப்பெருமாள்: ஆதலால் அதனை மறைவினாலே கள்வேமென்று முயலாதொழிக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது களவு தீதென்றது.
பரிதி: ஒரு திருப்பணி போல காட்டி வாங்குதல் கனவிலும் நினைப்பதல்ல என்றவாறு.
காலிங்கர்: பிறன் பொருளைக் கள்ளத்தாற் கள்வோம் என்று கருதுதல் என்றவாறு.
பரிமேலழகர்: ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று கருதற்க.
பரிமேலழகர் குறிப்புரை: 'அல்' விகுதி வியங்கோள் 'எதிர்மறைக்கண்' வந்தது. இவை இரண்டு பாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃது என்பதூஉம் அது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.
'பிறன் பொருளைக் கள்ளத்தாற் கள்வோம் என்று கருதுதல்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி உரை உலகியல் கருதிச் சொல்லப்பட்டது. எனல் என்ற சொல்லுக்கு மற்றவர்கள் எதிர்மறையில் பொருள் கொள்ள காலிங்கர் உடன்பாட்டுப் பொருள் கொண்டார்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆதலின் திருடிப் பறிக்க எண்ணாதே', 'ஆதலால் அப்பொருளை அவன் அறியாமல் வஞ்சித்துக் கொள்வோம் என்று எண்ணக்கூடாது', 'இன்னொருவனுக்குச் சொந்தமான பொருளை திருடிக் கொள்ளலாம் என்று', 'ஆதலாற் பிறனது பொருளைச் சூழ்ச்சியாக அவன் அறியாதபடி திருடுவோமென்று மனத்தில் நினையாதிருக்க வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பிறருக்குச் சொந்தமான பொருளை வஞ்சித்துத் திருடிக் கொள்ளலாம் என்று எண்ணற்க என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
மனத்தில் நினைப்பதுங் கூட தீமையேயாகும், பிறருக்குச் சொந்தமான பொருளை வஞ்சித்துத் திருடிக் கொள்ளலாம் என்று எண்ணற்க என்பது பாடலின் பொருள்.
'எனல்' என்ற சொல்லின் பொருள் என்ன?
பிறர் பொருளை அவர் அறியா வண்ணம் சூழ்ச்சியால் களவாடிக் கொள்வோம் என்று ஒருவன் நினைப்பதே தீதாம்.
தமக்கு உரிமையில்லாத மற்றவர் பொருளை வஞ்சித்துக் கொள்ள உள்ளத்தால் நினைத்தல்கூட அதைச் செய்வதற்கு ஒப்பாகும் என்று ஒருவன் மனநிலையைச் செயலுக்கு நிகராக எண்ணுகிறார் வள்ளுவர். உள்ளம் எண்ணியபடியே செயல் அமையும். தீயொழுக்கம் உண்டாவதற்கு உள்ளமே காரணம். ஆகையால் குற்றம் இல்லாமல் வாழவேண்டுமானால் உள்ளத்தில் எண்ணுவதும் தீமை என்று உணர்ந்து வாழ வேண்டும். குற்றம் செய்வது மட்டும் அன்று, அதை எண்ணுவதும் கூடாது.
மனத்தால் பிறன் பொருளை அனுபவிக்க நினைத்தலும் தீதாய் முடியும். நெஞ்சத்தில் தீய நினைவு தோன்றாதபடி காப்பவனால், அத்தீய செயல் நிகழாதவாறு காக்க முடியும்.
பிறன்பொருள் என்றது தனிமனிதர் பொருள் மட்டுமன்றி அரசு அமைப்புகள், தொண்டு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றைச் சேர்ந்த பொருட்களையும் குறிப்பதாகும். இவை சார்ந்த பொருட்களையும் வஞ்சனையால் களவாடிக் கொள்ள நினைப்பதே தீமையாய் முடியும் என்பது கருத்து.
'தவம் செய்வார்க்குப் பர்த்தாக்கள் இரங்கிக் கொடுக்கும் பொருள் அன்றியிலே, ஒரு திருப்பணி போல காட்டி வாங்குதல் கனவிலும் நினைப்பதல்ல என்றவாறு' என்பது பரிதியார் உரையாகும். “ஒரு திருப்பணி போல காட்டி வாங்குதல்’ என்றதால் துறவிகள் திருப்பணி என்ற பெயரில் பொருள் திரட்டினர் என்றும் அப்படிப் பெறுவது வஞ்சித்துக் கொள்ளும் தவறாகும் என அவர் உரை சொல்கிறது.
’பிறன் பொருளை’ என்பதனை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு உள்ளத்தால் உள்ளலும் தீதே என்பதனோடு இயைத்துப் 'பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்; ஆதலால் அதனை மறைவினாலே கள்வேமென்று முயலாதொழிக' என்ற மணக்குடவர் உரை தெளிவாக உள்ளது.
'சொல்' எனலே வாயாற் சொல்லும் சொல் என்பது பெறப்படுதலின் வாய்ச்சொல் என்று 'வாய்' என வேண்டாது கூறினார் என்று குறள் 91 உரையில் கூறினார் பரிமேலழகர், அதுபோலவே இங்கும் 'உள்ளலும் தீது' என்று சொன்னாலே போதும். ''உள்ளத்தால்' என வேண்டாது கூறினார்' எனப் பரிமேலழகர் தனது சிறப்புரையில் குறிக்கிறார்,
இவ்வாறு வேண்டாது சொல்லும் சொல்லை 'விதப்புக் கிளவி' என்பர். 'விதப்புக் கிளவி' வேண்டியது விளைக்கும்' என்பது நூற்பா (ச.த) என்று விளக்கம் தருகிறார் இரா சாரங்கபாணி.
|
'எனல்' என்ற சொல்லின் பொருள் என்ன?
'எனல்' என்ற சொல்லுக்கு முயலாதொழிக, என்று கருதுதல், என்று கருதற்க, என்று எண்ணாதிருக்க வேண்டும், எண்ணாதே, என்று எண்ணக்கூடாது, என்று எண்ணாதே, மனத்தில் நினையாதிருக்க வேண்டும், என்று நினைக்காதே, என்று மனத்தாலும் நினையாதிருத்தல் வேண்டும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,
‘எனல்’ என்ற சொல்லுக்குச் 'சொல்லற்க' என எதிர்மறையாகவும், 'சொல்க' என உடன்பாட்டு நிலையிலும் பொருள் கொள்ளமுடியும். பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல். (பயனில சொல்லாமை 196 பொருள்: பயனற்ற சொற்களைப் பேசுகின்றவனை மனிதன் என்று சொல்லற்க; மனிதப் பதர் என்று சொல்க) என்ற ஒரே பாடலில் ஒரு சொல்லுக்கு இப்படி முரண்பட்ட பொருள் அமைத்து வள்ளுவர் பாடியுள்ளார். இங்கு எதிர்மறைப் பொருளில் கூறப்பட்டுள்ளதால் 'பிறன் பொருளைக் கவர இசைந்து வெளியிலே வாயாற் சொல்லுதல் குற்றம் ஆதலின், சொல்லற்க' என வை மு கோபாலகிருஷ்ணமாச்சாரியும் 'பிறர் பொருளைத் தன்னுடையதாகக் கருதிப் பேசுவது குற்றமாதலின் பேசற்க' என ஜி வரதராஜனும் உரைப்பர். ஆனால் 'களவு செய்யப் போவான் ஒருவன் இயல்பாகவே அதனைப் புறத்தே சொல்ல மாட்டான். ஆதலால், வெளியே சொல்லற்க என அறங்கூறுதற்கு இடமில்லை' என இவற்றைப் பொருந்த மறுப்பார் இரா சாரங்கபாணி.
இங்கு 'கள்வேம் எனல்’ என்பதிலிலுள்ள ‘எனல்’ என்பதற்கு 'என்று சொல்லற்க' என்று பொருள் கூறுவதினும் 'என்று நினையற்க' எனக் கூறுவது பொருந்துவதால் 'என்று நினையற்க', 'என்று எண்ணாதே', 'என்று கருதற்க' என்றவாறு பொருள் கொண்டனர்.
காலிங்கர் 'பிறன் பொருளைக் கள்ளத்தாற் கள்வோம் என்று கருதுதல்' என உடன்பாட்டுப் பொருளில் உரை வழங்கியுள்ளமையும் அறியத்தக்கது.
‘எனல்’ என்றது இங்கு 'என்று கருதற்க' என்று பொருள்படும்.
|
மனத்தில் நினைப்பதுங் கூட தீமையேயாகும், பிறருக்குச் சொந்தமான பொருளை வஞ்சித்துத் திருடிக் கொள்ளலாம் என்று எண்ணற்க என்பது இக்குறட்கருத்து.
உள்ளம் கள்ளாமை எண்ணம் கொள்ள வேண்டும் என்பதைக் கூறும் பாடல் இது.
பிறன் பொருளை மனத்தால் நினைப்பதும் தீது; அவன் அறியாமல் வஞ்சித்துக் கொள்வோம் என்று எண்ணற்க.
|