ஒழுக்கமுடைமை என்ற அதிகாரம் வகுத்து மாந்தர் ஒழுகுமுறைகளை முன்பு அறிவுறுத்திய வள்ளுவர் இங்கு கூடாவொழுக்கம் எனத்தனியே பேசுகிறார்.
இவ்வதிகாரப் பாடல்கள் பெரும்பாலும் துறவுக்கோலம் பூண்டோர் மனவலி இல்லாமல் காம இச்சைமேலிட மகளிரைப் பிறர் அறியாமல் கூடும் புறத்தொழுக்கம் மேற்கொள்ளுதலைக் குறிப்பதாக உள்ளன. இதுபோன்று உலகோரை வஞ்சித்து வாழும் பிறவகையான போலித்துறவியரையும் உள்ளடக்கிக் கூடாவொழுக்கம் அதிகாரப்பாடல்கள் வரையப்பட்டுள்ளன.
இனி, சொ தண்டபாணிப்பிள்ளை கூடாவொழுக்கம் என்பதற்கு சிற்றின்பஞ் சேராத ஒழுக்கம் என விளக்கம் தருவார். இவர் 'கூடாவொழுக்கம்' என்பது, 'கொல்லா நலம்' 'பொய்யா வொழுக்கம் ' என்பனபோல கூடாமையாகிய ஒழுக்கம் என்னும் பொருள்பட நின்றது; கூடுதலாவது சிற்றின்பச் சேர்க்கை; கூடாமையாவது ௮ச் சேர்க்கை யொழிதல்' என்பார். இவ்விளக்கம் அத்துணைப் பொருத்தமாக இல்லை. கூடாஒழுக்கம் என்பதற்குத் துறவு மேற்கொண்டோர்க்குப் பொருந்தாததாய தீயவொழுக்கம் எனப் பொருள் கொள்வதே சிறக்கும்; கூடாநட்பு என்னும் அதிகாரப் பெயர் போலக் கூடா வொழுக்கத்தினையும் கொள்ள வேண்டும்.
கூடாஒழுக்கம் என்பதைத் தவத்திற்கு அல்லது துறவறத்திற்குப் பொருந்தாத ஒழுக்கம் என்று பலரும் விளக்கினர். இதைப் படிற்றொழுக்கும் என்றும் வள்ளுவர் குறிக்கிறார். அதிகாரப்பாடல்களில் தவமறைந்து அல்லவை செய்தல்...(274) என்பதில் தவம், பற்றற்றேம் என்பார்...(275) என்பதில் பற்றற்றேம், நெஞ்சின் துறவார் துறந்தார்போல்................(276) என்பதில் துறவு .....மாண்டார்நீர் ஆடி....(278) என்பதில் நீராடி என்ற குறிப்புகள் வருகின்றன. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (280) என்பதில் துறவுக்கான புறக்கோலங்கள் பேசப்படுகின்றன. இயல் பகுப்பில் துறவற இயலில் வைக்கப்பட்டதாலும் கூடாவொழுக்கம் அதிகாரம் கள்ளொழுக்கம் மேற்கொள்ளும் துறவியரைப் பற்றியதே என்பதில் ஐயமில்லை.
மக்கள் நல்வாழ்வுக்கு வழிகாட்டுபவர்களாகவும், அறவுணர்வுகளை ஊட்டுபவர்களாகவும், எல்லா உயிர்களிடத்தும் அருள் செய்பவர்களாகவும் விளங்க வேண்டியவர்கள் துறவறம் பூண்டவர்கள். இவற்றிற்கு மாறாக பலர் நெஞ்சத்தால் துறவாமால், பொருள் வருவாய் கருதியோ பிறர் மதிப்பைப் பெற விரும்பியோ சமூகம், அரசியல் செல்வாக்குப் பெறும் நோக்கத்திலோ துறவியர் வேடம் தாங்கித் துறந்தார் போல் நடித்து வாழ்ந்து வருகின்றனர். தவவேடத்தில், செய்யத்தகாத, உலகம் பழிக்கும் இழிவான செயல்களை மறைவாகச் செய்கிறார்கள்.
அகத்தே தவவுணர்வு சிறுதும் இல்லாதவர் புறத்தே மட்டும் கோலம் காட்டிப் பிறரை ஏமாற்றித் திரிவது வஞ்சக ஒழுக்கமாகும். தவம் செல்வாக்குடையது என்பதால் அதனை மேற்கொள்வதின் மூலம், தம்முடைய உலகியல் வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எண்ணி, சிலர் ஏய்த்துப் பிழைக்க வேண்டும் என்பதற்காகவே தவவேடம் பூணுகின்றனர். மற்றும் சிலர் மனத்தை வழிப்படுத்தும் ஆற்றல் இல்லாமல் தவக்கோலம் கொள்வதால், பிறரை வஞ்சிக்கும் தன்மை மிகுந்து பின்னர் பொய்யொழுக்கத்திற்கு மாறிவிடுகின்றனர். தவக்கோலத்தைக் கண்டு ஒரு தீங்கும் இல்லை என்று நம்பி பெண்களும் மற்றவரும் ஐயமின்றி இவர்களை நெருங்கிப் பின்பற்றத் தொடங்குவார்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மணமாகாத பெண்டிரையும் பிறர் மனைவியரையுங் கூடுதல், அடைக்கலப் பொருளைக் கவர்தல், கொள்ளையடித்தல், தம் விருப்பம் நிறைவேறும் பொருட்டு எத்துணை நல்லவரையுங் கொல்லுதல் ஆகிய தீச்செயல்களிலெல்லாம் ஈடுபடுவர். இவ்வாறு ஆற்றல் மிக்க தவக்கோலத்தைக் கொண்டு நம்பியவர்களை வஞ்சிப்பர் இவர்கள்,
புறத்தோற்றங்களால் தன்னை ஒருவன் தான் துறவி என்று வெளிப்படுத்திக் காட்டுகிறான். முக்கோல் கொண்டிருத்தலும், கமண்டலம் வைத்திருத்தலும் துறவிக்கு உரியன ஆயின; சடை வளர்த்தலும் மழுக்க வழித்தலும் வழக்கமாயின; குறிப்பிட்ட நிறமுள்ள ஆடை அணிவது போன்றவை நிலைத்துவிட்டன. மெய்த் தவத்தோர்க்கு இடையே பொய்த்தவத்தோர் பலர் தோன்றிவிட்டபின், மெய்யர் எவர், பொய்யர் எவர் என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டது. பொய்த்துறவியர் போற்றப்பெறும்நிலை உண்டாயிற்று.
இதனால்தான், உள்ளத்தே தவத்தன்மை கொண்டிருப்பான் ஒருவன், புறத்தேயும் அதனைக்காட்டுமாறு ஏதேனும் கோலம் கொள்வானாயின் குற்றமில்லை என்றுகூட இங்கு சொல்லப்படவில்லை; துறந்தவர்க்குப் புறவேடம் தேவையே இல்லை என்றே கூறப்படுகிறது.
புறக்கோலத்தால் அன்றி, ஒருவரது செயலின் தன்மை கொண்டே, அவர் உண்மையானவரா அல்லது போலித் துறவியா என்பதை அறிந்து கொள்க என இவ்வதிகாரப் பாடல் ஒன்று அறிவுறுத்துகிறது.
துறவியர் சேர்ந்தியங்கும் நிறுவனங்களை வள்ளுவர் குறிப்பிடவில்லை. ஆனால் மடம், பள்ளி, கழகம், சங்கம் போன்ற நிறுவன அமைப்பினுள்ளேயோ அல்லது தனியாகவோ போலித்துறவிகள் இயங்கி வருகிறார்கள். நிறுவன அமைப்பு கொண்ட போலித்துறவிகள் அரசியல் சார்புநிலை எடுத்து ஆட்சிபலத்தின் துணையோடும் வணிகர், தொழிலதிபர் ஆகியோரின் அரவணைப்போடும், பன்னாட்டுத் தொடர்போடும், வலுப்பெறுகின்றனர்.
துறவுவேடம் பூண்டவர்கள் அரசியலில் நேரடியாகத் தலையிடுவதும் அரசியலார் துறவிகளைச் சார்ந்திருப்பதும் வழக்குமுறையாகிவிட்டது. போலித்தவவர்களைப் பின்பற்றுவோர் தாங்கள் நம்பும் துறவோர் தவறே இழைக்க மாட்டார் என்ற கருத்துக் கொண்டவர்களாகி விடுகின்றனர்; தவறு செய்தாலும் அவர் தண்டிக்கப்படக் கூடாது என்றும் எதிர்பார்க்கிறார்கள். கண்மூடித்தனமாக நம்புவோர்கள் அவர்களுக்காக வன்முறையில் ஈடுபடவோ/ கலகத்தைத் தூண்டிவிடவோ தயங்குவதில்லை. கூடாவொழுக்கத்தோடு உலவும் துறவுக்கோலக் குற்றவாளிகள் பலர் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதும் கசப்பான உண்மை.
போலித் தவஒழுக்கம், 'வஞ்சமனம்'. 'படிற்றொழுக்கம்', 'வலிஇல்வல்லுருவம்', 'தவமறைந்து அல்லவை செய்தல்', 'வஞ்சித்து வாழ்தல்', 'மனத்தது மாசாக' என்னும் தொடர்களால் இகழப்படுகிறது. துறவறத்திற்கு வெளிக்கோலத்தைவிட மனப்பக்குவம்தான் தேவை என்பதைச் சொல்லவரும் வள்ளுவர் 'வெளுத்ததெல்லாம் பாலல்ல' என்ற கருத்தை நம் மனதில் நன்கு பதியுமாறு இங்கு சொல்லியுள்ளார்.