இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0278



மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்

(அதிகாரம்:கூடாஒழுக்கம் குறள் எண்:278)

பொழிப்பு (மு வரதராசன்): மனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு பெற்றவரைப் போல நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

மணக்குடவர் உரை: மாசு மனத்தின்கண் உண்டாக வைத்து மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு, பொருந்தாத விடத்திலே மறைந்தொழுகு மாந்தர் பலர்.
இது பலர்க்குக் கூடாவொழுக்க முண்டாகு மென்றது.

பரிமேலழகர் உரை: மாசு மனத்தது ஆக - மாசு தம் மனத்தின் கண்ணதாக, மாண்டார் நீர் ஆடி - பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி, மறைந்தொழுகும் மாந்தர் பலர்-தாம் அதன்கண்ணே மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர்.
(மாசு: காம வெகுளி மயக்கங்கள். அவை போதற்கு அன்றி மாண்டார் என்று பிறர் கருதுதற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார். இனி 'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப்பட்டாரது நீர்மையை உடையராய' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும், அவரை அறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: மனத்தில் குற்றமிருக்க, மாட்சிமையுடைய துறவிகள் போல் நீர் பல கால் மூழ்கி அத்துறவிக் கோலத்தில் மறைந்து தீயவை செய்தொழுகுவார் உலகத்தில் பலராவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி மறைந்தொழுகும் மாந்தர் பலர்.

பதவுரை:
மனத்தது-நெஞ்சத்துள்ளது; மாசாக-குற்றமாக; மாண்டார்-மாட்சிமைப் பட்டவர்; நீர்-நீர்; ஆடி-முழுகி; மறைந்து-ஒளிந்து; ஒழுகும்-நடந்து கொள்ளும்; மாந்தர்-மக்கள்; பலர்-பலர்.


மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாசு மனத்தின்கண் உண்டாக வைத்து மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு;
பரிப்பெருமாள்: மனத்துக்கண் மாசு உண்டாக வைத்து மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு;
பரிதி: மனத்திலே மாசாகிய குற்றம் பெருகி மாண்டாராயிருக்கவும் மார்கழித் தீர்த்தம் என்றும் மகாதீர்த்தம் என்றும் ஆடி;
காலிங்கர்: தம் மனத்துள்ள துறவற நெறிக்குக் குற்றமாகியவற்றைப் புறமே உலகத்தார் கண்டு மதிக்குமாறு மாட்சிமைப்படப் பலகாலும் நீராடித் தமதுள்ளத்துக் கிடந்த மாசானது உயிர்க்குப் புலப்படாமல்;
பரிமேலழகர்: மாசு தம் மனத்தின் கண்ணதாக பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி;
பரிமேலழகர் குறிப்புரை: மாசு: காம வெகுளி மயக்கங்கள். அவை போதற்கு அன்றி மாண்டார் என்று பிறர் கருதுதற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார். இனி 'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப்பட்டாரது நீர்மையை உடையராய' என உரைப்பாரும் உளர்.

'மாசு தம் மனத்தின் கண்ணதாக பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப்பட்டாரது நீர்மையை உடையராய' என உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனத்தில் அழுக்கிருக்கவும் நீரெல்லாம் ஆடி', 'மனதில் கெட்ட நோக்கங்களை வைத்துக் கொண்டு அதற்காகவே துறவிகள் போல வேடம் பூண்டு நடித்து', 'அகத்திற் குற்றம் இருக்கப் புறத்தே தவத்தாற் சிறந்தவர்போல நீரின் மூழ்கி ஒழுக்கமுடையவராய் நடித்து', 'மனத்தின் கண்ணே குற்றம் இருக்கவும், பெருமையுடைய பெரியோர்போல வெளித்தோற்றத்தால் நடித்து' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனத்தின் கண்ணே குற்றம் இருக்கவும், மாட்சிமையுடைய துறவிகள் போல் நீர் பல கால் மூழ்கி நடித்து என்பது இப்பகுதியின் பொருள்.

மறைந்தொழுகும் மாந்தர் பலர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருந்தாத விடத்திலே மறைந்தொழுகு மாந்தர் பலர்.
மணக்குடவர் குறிப்புரை: இது பலர்க்குக் கூடாவொழுக்க முண்டாகு மென்றது.
பரிப்பெருமாள்: பொருந்தாத விடத்திலே மறைந்தொழுகு மாந்தர் பலர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பலர்க்குக் கூடாவொழுக்க முண்டென்றது.
பரிதி: அதிலே மறைந்தொழுகு மாந்தரும் உண்டு என்றவாறு.
காலிங்கர்: அதனை மறைத்து இங்ஙனம் கூடாவொழுக்கத்தினை ஒழுகும் மானிடர் உலகத்துப் பலர் என்றவாறு.
பரிமேலழகர்: தாம் அதன்கண்ணேமறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும், அவரை அறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.

'மறைந்தொழுகு மாந்தர் பலர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏய்த்து நடப்பவரே உலகில் ஏராளம்', 'கள்ள வாழ்க்கை நடத்துகிற மனிதர்கள் பலர் உண்டு', 'மறைவாகத் தவறியொழுகும் மக்கள் பலர்', 'மறைந்து வாழுகின்ற மக்கள் உலகத்தில் பலராவார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மறைந்து ஒழுகுகின்ற மக்கள் உலகத்தில் பலராவார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனத்தின் கண்ணே குற்றம் இருக்கவும், மாண்டார்நீர் ஆடி, மறைந்து ஒழுகுகின்ற மக்கள் உலகத்தில் பலராவார் என்பது பாடலின் பொருள்.
'மாண்டார்நீர் ஆடி' என்ற தொடர் குறிப்பது என்ன?

உள்ளத்தில் அழுக்கை வைத்துக்கொண்டு நீரில் மூழ்கி எழுவது மாட்சிமைப்படுத்துமா?

மனத்தில் நிறைந்திருப்பது குற்றமாக இருக்க, வெளிஉலகுக்குத் தவ ஒழுக்கத்திற் சிறந்தவர் போல் நடித்து நீரில் முழுகி, மறைந்த ஒழுக்கம் உடைய மக்கள் இவ்வுலகில் பலராவர்.
துறவிகளின் போலித் தோற்றத்தையும் அவர்களது கள்ள வொழுக்கத்தையும் கடிந்தபின் அத்தகைய மாந்தரின் புறச்செயல்களும் எள்ளப்படுகின்றன. புறத்தோற்றம் செம்மையானாலும் கூடாஒழுக்கம் மேற்கொண்டவனது அகம் இருண்டதுதான் என்று முன்பு குன்றிமணி உவமைவழி சொல்லப்பட்டது. இங்கு ஒருவனது நீராடல் போன்ற புறச்செயல்கள் அவனைத் தூய்மைப்படுத்த உதவா என்று கூறப்படுகிறது. நெஞ்சத்தூய்மையே ஒருவனுக்கு மாட்சிமை பெற்றுத் தரும். மனத்தில் மாசு நீங்காமல் நிற்க, மாண்பினர் போல் புறத்தே புனலாடித் தூய்மை காட்டித் தம் குற்றங்களை மறைத்து வாழ்வோர் பலர் உலகத்தில் இருக்கின்றார்கள் என்கிறது பாடல்.
பலர் என்றதால் உண்மைத்துறவிகளைவிட வஞ்சகத் துறவிகளே நிறைய உள்ளனர் எனச் சொல்லப்பட்டது. அவர்கள் பற்றி விழிப்புடன் இருக்கவேண்டும் என்பது செய்தி.

உள்ளத்திலிருந்து உலகப் பற்றை நீக்காமல், பொருள் வருவாய் கருதியோ, பிறர் மதிப்பைப் பெற விரும்பியோ, சமூகத்திலோ அரசியலாரிடமோ செல்வாக்குப் பெறும் எண்ணத்திலோ துறவியர் வேடம் தாங்கித் துறந்தார் போல் நடந்து கொள்பவர்கள் தங்கள் குற்றங்களை மறைத்து வாழ்கின்றவர்கள் ஆவர். உள்ளத்தால் தூயவராய் இல்லாமல். வானுயர் தோற்றம், குன்றிமணிபோல் செம்மை, என இவ்வாறு, வெளிவேடத்தால் நடித்து ஏமாற்றுவோரை அடுத்து இங்கு 'புனித நீராடுவதாகக்' கூறி, மாண்புமிக்கவர் என்ற வேடம் தரிக்க முயலும் மாந்தர் பற்றிப் பேசுகிறார் வள்ளுவர். மனத்திலிருந்து மாசு நிங்காதவரை, நம்பிக்கைக்கு உரிய இடத்தை வஞ்சித்தற்கு உரியதாய் மாற்றிவிட்டபின் 'நீராடல்' மட்டும் ஒருவரை தூய்மைப்படுத்த முடியாது. மனதில் கசடு நிறையக்கொண்டு, நற்பேறுகள் தருவனவாக நம்பப்படும் குளம், ஆறு, கடல் இவற்றில் நீராடி மாண்புடையர் ஆகிவிட்டார்போல ஏமாற்றும் மாந்தர் பற்றி விழிப்புடன் இருக்க அறிவுறுத்துகிறார் அவர்.

'மாண்டார்நீர் ஆடி' என்ற தொடர் குறிப்பது என்ன?

'மாண்டார்நீர் ஆடி' என்ற தொடர்க்கு மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு, மாண்டாராயிருக்கவும் மார்கழித் தீர்த்தம் என்றும் மகாதீர்த்தம் என்றும் ஆடி, உலகத்தார் கண்டு மதிக்குமாறு மாட்சிமைப்படப் பலகாலும் நீராடி, பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி, தவத்தால் மாண்பு பெற்றவரைப் போல நீரில் மூழ்கி, மாட்சிமைப்பட்டார் போலக்காட்டித் தீர்த்தங்கள் எனப்படும் புனித நீராடி, மாண்புடையோர் தன்மையைக் கொண்டு, நீரெல்லாம் ஆடி, மாட்சிமையுடைய துறவிகள் போல் நீர் பல கால் மூழ்கி, துறவிகள் போல வேடம் பூண்டு நடித்து, தவத்தினர் போல் தூய நீராடல் முதலியவற்றால் தம்மைப் பொலிவாகக் காட்டி, தவத்தாற் சிறந்தவர்போல நீரின் மூழ்கி ஒழுக்கமுடையவராய் நடித்து, பெருமையுடைய பெரியோர்போல வெளித்தோற்றத்தால் நடித்து, தவத்தால் மாட்சிமைப் பட்டவர் போற் பலகால் குளிர்ந்த நீரில் மூழ்கி, மாண்பு மிக்க பெரியோர்களின் வேடம் பூண்டு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மாண்டார்நீர் ஆடி என்பதிலுள்ள நீர் என்ற சொல்லுக்கு நீர்மை எனப் பொருள்கொண்டு மாட்சிமைப்பட்டவருடைய நீர்மையைப் பூண்டு அதாவது குணமுடையராய்க் காட்டி எனப் பொருள் கூறினர் மணக்குடவரும் பரிப்பெருமாளும். 'மாண்டாராயிருக்கவும் மார்கழித் தீர்த்தம் என்றும் மகாதீர்த்தம் என்றும் ஆடி' எனச் சமயச் சார்பான விளக்கம் கூறினார் பரிதி. மற்றவர்கள் மாட்சிமையுடைய துறவிகள் போல் நீர் பல கால் மூழ்கி நடித்துக் காட்டி என உரை செய்தனர்.
'மனத்திலிருக்கிற கசடென்னும் மாசுள்ள தீவினைக் குற்றத்தை அறிவினாலே சுத்தி பண்ணி யறியாத மானிடர் நல்ல நதி தேடி மாசித் தானமாடுவார்' என்கிறது பழைய உரை ஒன்று. இது நல்லதோர் விளக்கம். ‘புறந்தூய்மை நீரான் அமையும்...(வாய்மை 298 பொருள்: புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும்) என்று அடுத்த அதிகாரத்தில் கூறப்படும். ஆதலால் அந்நீரால் புற்ந்தூய்மை பெறலாமே தவிர மனமாசு நீங்காது என்னும் குறிப்பு இங்கு புலப்படுகிறது. மனத்தூய்மைக்கு மெய்யுணர்வுதான் வேண்டப்படும்; வள்ளுவர் புனலாடலைப் நற்பேற்றிருக்குரிய கருவியாகக் கருதவில்லை என்பதும் தெரியவருகிறது.

தமிழண்ணல் நீராடல் பற்றி எழுதியவற்றிலிருந்து சிலபகுதிகள்: 'தமிழர்கள் 'நீராடலில்' அதிக ஆர்வம் காட்டினர். 'தாய் அருகா நின்று தவத்தைந்நீராடுதல்' (91) என்று வையையாற்றில் கன்னிப் பெண்கள், தாய்மார் அருகேநிற்கத் தைத்திங்களில் 'தவம்போல' நீராடி, நல்ல கணவன்மார் வாய்க்க வேண்டினர் என்ற குறிப்பு வருகிறது. ... சிலம்பில் கண்ணகியின் தோழி தேவந்தி, கோவலன் பிரிந்ததற்கு முற்பிறப்பில் கணவனுக்குச் செய்ய வேண்டிய நோன்பு ஒன்றும் செய்யாது பிழை செய்தாய்! அதனால் காவிரி கடலொடு கலக்குமிடத்தில் சோமகுண்டம், சூரியகுண்டம் என இரு துறைகள் உள்ளன. அவற்றில் மூழ்கி, அங்குள்ள காமவேள் கோட்டத்தைத் தொழுதால், பிரிந்த கணவனை அடையலாம்' என்று கூறி அழைக்க, அதற்குக் கண்ணகி 'பீடுஅன்று' -அவ்வாறு அடைவது பெருமையன்று என்று பதிலிறுக்கிறாள். (கனாத்திறம் உரைத்த காதை 54-64). நான்மறையாளனாம் மாங்காட்டு மறையவன் கவுந்தியடிகளிடம் மதுரைக்கு வழி கூறிய பொழுது இடப்பக்கமாகப் போகும் வழி ஒன்றைக் குறிப்பிடுகிறான். அவ்வழியில் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்ற மூன்று பொய்கைகளைக் குறிப்பிட்டு, அவற்றில் மூழ்கி எழுந்து சென்றால் நன்மைகள் பல விளையும் எனக் கூறுகின்றான். அதைக் கவுந்தியடிகள் மிக வன்மையாக மறுத்துவிடுகிறார். (காடுகாண்காதை) மதுரையில் கோவலனைக் கண்ட மாடலமறையவன் குமரியம் துறையில் நீராடிப் போந்ததாகக் கூறுகிறான். (அடைக்கலக் காதை) மேலும் குமரித்துறையில் புனித நீராடியவன், தன் பாவம் தீர 'நல்நீர்க் கங்கை ஆடப் போந்தேன்' என்று கங்கைக் கரையில் செங்குட்டுவனைக் கண்டு, அவனிடம் தமிழ்நாடு விட்டுச் செங்குட்டுவன் சென்றபின் நடந்தன எல்லாம் கூறுகின்றான்
இன்றும் ஆடிப் பெருக்கில் நீராடுதல், ஐப்பசியாம் குளிர் காலத்தில், பனி புலருமுன் புனித நதிகளைத் தேடிப்போய் நீராடுதல் போலும் வழக்கங்கள் உள.'

இரவில் செய்த பாபத்தைக் காலைக் குளியலும், பகலில் செய்த பாபத்தை மாலைக்குளியலும் போக்கும் என்றும் நம்பி புனலாடி இருக்கின்றனர். நீருள் மூழ்கிப் பூசனை செய்தால் வீடுபேறு கிடைக்கும் என்றால் நீருள்ளேயே கிடக்கும் தேரை என்ன பெறும்? என்று குரல் எழுப்புகின்றார் சிவவாக்கியர்:
காலை மாலை நீரில் மூழ்கும் மந்த மூடர்காள்
காலை மாலை நீரில் கிடந்த தேரை என்பெறும்
நீரை அள்ளி நீரில் விட்டு நீர் நினைந்த காரியம்
ஆரை உள்ளி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்

'கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?' என்று அருளாளர்களும் கேட்டனர்.
மனத்தில் உள்ள அழுக்கை நீக்கினால் மட்டுமே தீவினை நீங்கி இறை அருளைப் பெற முடியும். அதை விட்டுவிட்டுப் புண்ணியத் துறைகளில் நீராடி பாவம் போக்கினேன் என்று பிறர்க்குத் தவத்தான் மாட்சியுடையராய் நீராடிக் காட்டி அந்நீராடற் சடங்கில் மறைந்து ஒழுகுவோர் பலர் என்பது இக்குறள் கூறுவது.

மாண்டார்நீர் ஆடி என்பதற்கு 'மாட்சிமையுடையராய் நீரில் மூழ்கி' என்பது பொருள்.

மனத்தின் கண்ணே குற்றம் இருக்கவும், மாட்சிமையுடைய துறவிகள் போல் நீர் பல கால் மூழ்கி நடித்து, மறைந்து ஒழுகுகின்ற மக்கள் உலகத்தில் பலராவார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கூடாஒழுக்கம் உடையவனது புறச்செயல்கள் அவனைத் தூய்மைப்படுத்தா.

பொழிப்பு

மனத்தில் குற்றமிருக்க, மாட்சிமையுடையார் போல் நீர் பல கால் மூழ்கி நடித்து, மறைந்து ஒழுகுவார் உலகத்தில் பலராவர்.