இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0272வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றம் படின்

(அதிகாரம்:கூடாஒழுக்கம் குறள் எண்:272)

பொழிப்பு (மு வரதராசன்): தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப்போல் உயர்ந்துள்ள தவக்கோலம், ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?

மணக்குடவர் உரை: வானளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும் அஃதியாதினைச் செய்யவற்று; தன்னெஞ்சறியக் குற்ற முண்டாயின்.
தான்- அசை. இஃது இக்கூடா ஒழுக்கத்தானைப் பிறரறிந்து இகழாராயினும் அவன் செய்கின்ற தவத்தினாற் பயனுண்டாகாது என்றது.

பரிமேலழகர் உரை: வான் உயர் தோற்றம் எவன் செய்யும் - ஒருவனுக்கு வான் போல உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்; தான் அறி குற்றம் தன் நெஞ்சம் படின் - தான் குற்றம் என்று அறிந்த அதன் கண்ணே தன் நெஞ்சு தாழும் ஆயின்.
( 'வான் உயர் தோற்றம்' என்பது 'வான் தோய்குடி' (நாலடி 142) என்றாற்போல இலக்கணை வழக்கு. அறியாது செய்த குற்றமல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம் கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்ததாயேவிடும்; விடவே நின்ற வேடமாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே அல்லது வேறு பயன் இல்லை என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: தன்மனம் குற்றமென அறிந்தும் செய்தால் பெரிய தவக்கோலத்தால் என்ன பயன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தான்அறி குற்றம் தன்னெஞ்சம் படின்?

பதவுரை:
வான்-விசும்பு; உயர்-உயர்ந்த; தோற்றம்-தோற்றம், உருவம்; எவன்-என்னத்தை; செய்யும்-செய்யும்; தன்-தனது; நெஞ்சம்-உள்ளம்; தான்-தான்; அறி-அறிந்த; குற்ற-குற்றம்; படின்-உண்டாயின்.


வானுயர் தோற்றம் எவன்செய்யும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வானளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும் அஃதியாதினைச் செய்யவற்று;
பரிப்பெருமாள்: வானளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும் அஃதியாதினைச் செய்யவற்று;
பரிதி: வான்போலப் பெரிய தபசு பண்ணி ஆவது என்ன?
காலிங்கர்: இவ்வுலகத்து ஒருவர் தம் பெயர் தேவர் அறியுமாறு விளங்கிற்றாயினும், அஃது என்செய்யும்; யாதுமோர் பயனும் இல்லை;
பரிமேலழகர்: ஒருவனுக்கு வான் போல உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'வான் உயர் தோற்றம்' என்பது 'வான் தோய்குடி' (நாலடி 142) என்றாற்போல இலக்கணை வழக்கு.

'வான் போல உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'வானுயர் தோற்றம்' என்றதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் வானளவும் உயர்ந்த தோற்றம் என்றும் பரிதி வான்போலப் பெரிய தபசு என்றும் காலிங்கர் பெயர் தேவர் அறியுமாறு விளங்கிற்று எனவும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவனது வானம் போல் உயர்ந்த தவக் கோலத்தால் பயன் என்ன?', 'மிக உயர்ந்த துறவுச் சின்னங்களால் மட்டும் என்ன நன்மை வந்துவிட முடியும்?', 'ஒருவனுக்கு வான்போல உயர்ந்த தவக்கோலம் என்ன பயனைச் செய்யும்', 'அவனுக்கு மிக உயர்ந்த தோற்றம் என்ன பயனைத் தரும்? (உயர்ந்த தோற்றம்-கல்வியால், பதவியால், புகழால் பெரியோராய் விளங்குதல்.)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வானம் போல் உயர்ந்த தவக் கோலத்தால் என்ன ஆகும்? என்பது இப்பகுதியின் பொருள்.

தன்னெஞ்சம் தான்அறி குற்றம் படின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னெஞ்சறியக் குற்ற முண்டாயின்.
மணக்குடவர் குறிப்புரை: தான்- அசை. இஃது இக்கூடா ஒழுக்கத்தானைப் பிறரறிந்து இகழாராயினும் அவன் செய்கின்ற தவத்தினாற் பயனுண்டாகாது என்றது.
பரிப்பெருமாள்: தன்னெஞ்சறியக் குற்ற முண்டாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தான்- அசை. இஃது இக்கூடா ஒழுக்கத்தினைப் பிறரறிந்து இகழப்படானாயினும் அவன் செய்கின்ற தவத்தினாற் பயனுண்டாகாது என்றது.
பரிதி: தன் ஆத்துமா அறிய அந்நெறி செய்வானாகில்; அஃது எப்படி என்றால் அவநெறி, தவநெறியைக் கெடுக்கும் என்றவாறு.
காலிங்கர்: எப்பொழுது எனில் தன்னுடைய நெஞ்சமானது தானறிவதொரு தவநெறிக்குற்றம் உடைத்தாயின் என்றவாறு.
பரிமேலழகர்: தான் குற்றம் என்று அறிந்த அதன் கண்ணே தன் நெஞ்சு தாழும் ஆயின்.
பரிமேலழகர் குறிப்புரை: அறியாது செய்த குற்றமல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம் கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்ததாயேவிடும்; விடவே நின்ற வேடமாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே அல்லது வேறு பயன் இல்லை என்பதாம்.

'தன்னெஞ்சறியக் குற்ற முண்டாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தான் அறிந்த குற்றத்தை ஒருவன் மனம் விரும்பிச் செய்யுமாயின்', 'தன்னுடைய மனச்சாட்சி குற்றமென்று சொல்லுகிற காரியத்தைச் செய்கிறவனுடைய', 'தனது மனம் அறியக் குற்றப்படுவானாயின்', 'தன் நெஞ்சம் தான் குற்றம் என்று அறிந்த ஒன்றை ஒருவன் செய்வானானால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தான் குற்றம் என்று அறிந்த ஒன்றை ஒருவன் செய்வானானால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தான் குற்றம் என்று அறிந்த ஒன்றை ஒருவன் செய்வானானால் வானுயர் தோற்றத்தால் என்ன ஆகும்? என்பது பாடலின் பொருள்.
'வானுயர் தோற்றம்' என்றால் என்ன?

குற்றம் என்று தெரிந்தே அதைச் செய்வானானால், வானளவு பெரிய தோற்றம் கொண்டிருந்தாலும் அது என்னத்துக்கு ஆகும்?

அவன் மிக உயர்ந்த தோற்றப் பொலிவு கொண்டவன். அத்தோற்றப் பொலிவால் அவனைப் பின்பற்றுவோர் பலர். அவர்களுக்கு ஆர்வமூட்டி ஊக்கமளிக்கும் திறன் பெற்றவனாதலால், அவனை அவர்கள் மிக உயர்ந்த இடத்தில் வைத்துள்ளார்கள். அப்படிப்பட்ட வானுயர் தோற்றம் கொண்டவன் அவன் நெஞ்சம் அறிய அதாவது அவனது மனச்சான்றுக்கு எதிராகக் குற்றம் செய்து ஒழுகுகிறான். அவனது மறைந்த ஒழுக்கம் வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொள்கிறான். பொதுவெளியில் உள்ள அவனது தோற்றம் அக்குற்றத்திலிருந்து தன்னைக் காக்கும் என நினைக்கிறான். ஆனால் அது முடியாது என்கிறது பாடல். அவனது கள்ள ஒழுக்கம் வெளிச்சத்துக்கு வரும்போது அவனது மிக உயர்ந்த தோற்றப் பொலிவும் அப்பழியினின்று காக்க உதவாது.

இவ்வதிகாரம் துறவறத்தில் இருந்துகொண்டு தீயொழுக்கம் மேற்கொள்பவர்களைப் பற்றியதாக உள்ளதாதலால் இக்குறள் தவப்பண்புகளினால் உண்டாகும் தோற்றத்தைச் சொல்வதாகக் கொள்வர்.
ஒரு சிலருக்கு அவர்கள் பெற்ற கல்வி, ஆளுமைப் பண்பு, செல்வாக்கு, எழில்நலம் போன்றவற்றால் ஒரு தோற்றம் கிடைக்கும். பொதுவாகத் துறவிகளுக்கு என்று ஒரு தனித் தோற்றம் உண்டு. அத்துறவிகள் முன்சொன்ன பண்புகளையும் பெற்றிருந்தால் வானுயர் தோற்றம் அடைவர். அவர்கள் தெரியாமல் செய்யும் சிறுசிறு தவறுகள் அந்த உயர்ந்த தோற்றத்தால் மற்றவர் கண்களுக்குப் புலப்படாமலேயே மறைந்துபோய்விடும் அல்லது மன்னிக்கப்படும். ஆனால் அவர்கள் நெஞ்சம் அறிந்தே தீயொழுக்கம் கொள்வார்களேயானால் அத்தோற்றம் உடனே தாழும்; அத்தோற்றத்தால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும். .
துறவிகள் காமஇன்பத்தில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தகாததாகும். தவக்கோலத்தில் இருந்துகொண்டு காமம் போன்ற பொருந்தாஒழுக்கத்தில் விழுந்தான் எனத் தெரிந்த உடனேயே மற்றவர் பார்வையில் அத்துறவியின் தோற்றம் சிதைந்து போகிறது. தவத்தால் வந்த பெருமைகள் அவனுக்கு இருந்தாலும் அவற்றால் அவனது தீய ஒழுக்கத்தால் ஏற்பட்ட பழியை மறைத்துவிட முடியாது. அவை மன்னிக்கவும்படா. பிறிதோர் இடத்தில் பிறன் மனை புகுவோனைக் கடிந்துரைக்கும்போது இப்பாடலின் கருத்தமைந்தவாறு எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல் (பிறனில் விழையாமை 144 பொருள்: இது தகாது என்று சிறுதும் சிந்திக்காமல் பிறன் மனைவியை விரும்பி அவன்மனையில் நுழைபவன் எவ்வளவு பெருமையுடையவராயினும் என்ன?) எனக் கேட்பார் வள்ளுவர்.

கள்ளொழுக்கம் மேற்கொண்டோர் பெருங்குற்றங்களை, மற்றவர்களுக்குத் தெரியாமல், செய்கிறார்கள். ஆனால் குற்றம் என்று உணர்ந்தே செய்கிறார்கள். அறியாமற் செய்த குற்றத்திற்கு கழுவாய் கிடைக்கலாம். ஆனால் அறிந்து செய்த குற்றத்திற்கு அது இல்லையாதலால், அப்பழியை அவன் எப்பொழுதும் சுமந்துகொண்டே இருக்க வேண்டும். அவன் செய்யும் குற்றங்கள் வெளிவரும்போது அவனது வானுயர் தோற்றமும்கூட அவனைப் பழியினின்று உய்விக்க இயலாது.

'வானுயர் தோற்றம்' என்றால் என்ன?

'வானுயர் தோற்றம்' என்றதற்கு வானளவும் உயர்ந்த பெருமை, வான்போலப் பெரிய தபசு, தம் பெயர் தேவர் அறியுமாறு விளங்குவது, வான் போல உயர்ந்த தவவேடம், வானத்தைப்போல் உயர்ந்துள்ள தவக்கோலம், வானத்தில் உயர்ந்த திருவேடப் பொலிவு, பெரிய தவக்கோலம், வானம் போல் உயர்ந்த தவக் கோலம், மிக உயர்ந்த துறவுச் சின்னங்கள், மிக உயர்ந்த கல்வி, பதவி, புகழ் முதலியவை, வான்போல உயர்ந்த தவக்கோலம், மிக உயர்ந்த தோற்றம், ஆகாயத்தை அளாவிய தோற்றம், வானளாவ வுயர்ந்த தவக் கோலம், விண்ணவரும் விரும்பும் உயர்ந்த தவவேடம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘தோற்றம்’ என்பதற்குத் தவவடிவம். பெருமை என்னும் பொருள்கள் உள. 'வானுயர் தோற்றம்' என்னும் தொடர் வானத்தைப்போல் உயர்ந்துள்ள கோலம் எனப்பொருள்படும். அதிகாரம் கருதி வானத்தைப்போல் உயர்ந்துள்ள தவவேடம் எனப் பொருள் கொள்வர்.
வானுயர் தோற்றம் தருபவரை ஈர்ப்புத் தன்மையும் சொல்வாக்கும் மிக்க, பொலிவுள்ள, தோற்றம் தரும் மனிதர் (charismatic person) எனலாம்.

தான் குற்றம் என்று அறிந்த ஒன்றை ஒருவன் செய்வானானால் வானம் போல் உயர்ந்த தவக் கோலத்தால் என்ன ஆகும்? எனக் கேட்கிறது இக்குறள்.அதிகார இயைபு

தோற்றப் பொலிவினால் கூடாஒழுக்கத்தை மறைத்து விடமுடியுமா?

பொழிப்பு

தன்மனம் குற்றமென அறிந்தும் செய்தால் வானம் போல் உயர்ந்த தவக் கோலம் என்னத்துக்கு?