இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0275பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவும் தரும்

(அதிகாரம்:கூடாஒழுக்கம் குறள் எண்:275)

பொழிப்பு (மு வரதராசன்): 'பற்றுக்களைத் துறந்தோம்’ என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம், என்ன செய்தோம் என்ன செய்தோம்’ என்று வருந்தும்படியான துன்பம் பலவும் தரும்.

மணக்குடவர் உரை: பற்றினை யற்றேமென்பாரது குற்றத்தினை யுடைய ஒழுக்கம் எல்லாரும் எற்றெற்றென்று சொல்லும்படி பல குற்றமும் உண்டாக்கும்.
எற்றென்பது திசைச்சொல். இது தீமைபயக்கு மென்றது.

பரிமேலழகர் உரை: பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் - தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு யாம் பற்று அற்றேம் என்று சொல்வாரது மறைந்த ஒழுக்கம், எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும் - அப்பொழுது இனிதுபோலத் தோன்றும் ஆயினும், பின் என் செய்தோம் என்று தாமே இரங்கும்வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும்.
(சொல் அளவல்லது பற்று அறாமையின் 'பற்று அற்றேம் என்பார' என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய் இன்பத்தின் பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்தார், அதன் விளைவின் கண் 'அந்தோ வினையே என்றழுவர்' (சீவக.முத்தி,27) ஆகலின் 'எற்று எற்று' என்னும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் கூடா ஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: ஆசையில்லை எனச்சொல்வாரது பொய்நடத்தை சீசீ என்று இகழும் துன்பத்தைத் தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவும் தரும்.

பதவுரை:
பற்று-விருப்பம்; அற்றேம்-இழந்தேம்; என்பார்-என்று சொல்லுபவர்; படிற்று-மறைந்த ஒழுக்கம்-ஒழுக்கம்; எற்றுஎற்று-என் செய்தோம்! என் செய்தோம்!! என்று-என்பதாக; ஏதம்-துன்பம்; பலவும்-பலவற்றையும்; தரும்-கொடுக்கும்.


பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பற்றினை யற்றேமென்பாரது குற்றத்தினை யுடைய ஒழுக்கம்;
பரிப்பெருமாள்: பற்றினை யற்றேமென்பாரது குற்றத்தினை யுடைய ஒழுக்கம்;
பரிதி: மூன்றுவகை ஆசை குடிகொண்டிருக்கவும், பற்றற்றோம் என்று வார்த்தையினாலே சொல்லி நடக்கிறதெல்லாம்;
காலிங்கர்: தன் நெஞ்சினால் பற்றறாதே வறிதே இவ்வுலகத்திலே பற்று அற்றோம் என்று சொல்லுமவனது பொய்யான ஆசாரமானதுதானே கொடிய வினையாதலால்;
பரிமேலழகர்: தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு யாம் பற்று அற்றேம் என்று சொல்வாரது மறைந்த ஒழுக்கம்.

'பற்றினை யற்றேமென்பாரது குற்றத்தினை யுடைய ஒழுக்கம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆசைகளை அகற்றினோம் என்று சொல்லாற் கூறிச் செயலால் தீமை புரிவோரின் கூடா ஒழுக்கம்', 'ஆசைகளையெல்லாம் விட்டொழித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் துறவிகள் கள்ளத்தனமாக அந்த ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் முறை', 'எமக்கு ஆசையில்லை என்று பொய்யுரைப்பாரது வஞ்சக ஒழுக்கமானது', 'பிறர் மதிக்கும் பொருட்டு 'யாம் பற்று அற்றேம்' என்று கூறுவார் மறைவாகச் செய்யும் தீய ஒழுக்கம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

'பற்று விட்டொழித்தோம்' என்று கூறுபவர் மறைவாகச் செய்யும் ஒழுக்கம் என்பது இப்பகுதியின் பொருள்.

எற்றெற்றென்று ஏதம் பலவும் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாரும் எற்றெற்றென்று சொல்லும்படி பல குற்றமும் உண்டாக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: எற்றென்பது திசைச்சொல். இது தீமைபயக்கு மென்றது.
பரிப்பெருமாள்: எல்லாரும் எற்றெற்றென்று சொல்லும்படி பல குற்றமும் உண்டாக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: எற்றென்பது திசைச்சொல்; இன்னா செய்தலின் மேனின்றது. என்றென்பதனை எனவென்று திரிக்க. இது தீமைபயக்கு மென்றது.
பரிதி: அதிக்கிரமமே செய்வார்க்குக் குற்றம் வெகுவிதமாக வரும் என்றவாறு.
காலிங்கர்: அஃதிங்ஙன் ஏறி முயன்று நிறைந்த அளவு தொழுவுக்குச் செல்வதாகிய குற்றம் பலவுந்தரும் என்றவாறு.
பரிமேலழகர்: அப்பொழுது இனிதுபோலத் தோன்றும் ஆயினும், பின் என் செய்தோம் என்று தாமே இரங்கும்வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: சொல் அளவல்லது பற்று அறாமையின் 'பற்று அற்றேம் என்பார' என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய் இன்பத்தின் பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்தார், அதன் விளைவின் கண் 'அந்தோ வினையே என்றழுவர்' (சீவக.முத்தி,27) ஆகலின் 'எற்று எற்று' என்னும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் கூடா ஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.

'எற்றெற்றென்று சொல்லும்படி பல குற்றமும் உண்டாக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். எற்றெற்றென்று என்றதை விளக்குவதில் உரையாசிரியர்கள் பெரிதும் வேறுபடுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்ன என்ன செய்தோம் என்று தாமே பின் இரங்குமாறு பல துன்பங்களையும் கொடுக்கும்', ''இருக்காது' 'இருக்காது' என்று பிறர் நம்பும்படியாகவே பலவித துன்பங்களையும் உண்டாக்கி விடும்', 'அப்பொழுது இனிதுபோலத் தோன்றினாலும் பின்னர் 'என் செய்தோம்! என் செய்தோம்!' என்று வருந்தும்படி பல துன்பங்களைக் கொடுக்கும்', 'அப்பொழுது இனிமையாகத் தோன்றினாலும் பின்னர் 'என் செய்தோம்' என்று தானே இரங்குமாறு பல துன்பங்களையும் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

'என் செய்தோம்! என் செய்தோம்!' என இரங்கும்படி பல துன்பங்களைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
'பற்று விட்டொழித்தோம்' என்று கூறுபவர் மறைவாகச் செய்யும் ஒழுக்கம் எற்றெற்றென்று பல துன்பங்களைத் தரும் என்பது பாடலின் பொருள்.
'எற்றெற்றென்று' என்றதன் பொருள் என்ன?

'நான் துறவி' என்று சொல்லிக்கொண்டு ஒழுக்கமற்ற செயல்கள் புரிபவன் அவற்றுக்குண்டான துன்பங்களை அடைந்தே தீர்வான்.

உலகப்பற்றை அறவே ஒழித்துவிட்டோம் என்று சொல்லிக்கொண்டு தீச்செயல்களில் ஈடுபடுவர்களுடைய பொய்யொழுக்கம், சீசீ என்று இகழப்படும் பல துன்பங்களைத் தரும்.
'யாம் ஆசைகளைத் துறந்தேம்' என்று பிறர் மதிப்பைக் கருதிச் சொல்பவருடைய பொய்யொழுக்கம், பிறகு ஒருகாலத்தில் மிக இழிவான பின்விளைவுகளை உண்டாக்கும். தொடக்கத்தில் இப்பொய்க்கோலம் அவர்களுக்குப் பெரும் நன்மை தரலாம். காலப் போக்கில் இவர்களின் தீய செயல்களும், போலித் தவவேடமும் வெளிப்பட்டவுடன், சீச்சீ என்று மற்றவர்கள் இகழும்படி துன்பங்கள் - எள்ளல், திட்டுதல், இழிவுநிலை- நேரும். பொய்யான துறவு வாழ்க்கை ஒருவனுக்குக் குற்றங்களைக் கொண்டு சேர்த்துப் பின்னர் அவற்றிற்கு 'ஐயையோ எற்று, எற்று என் செய்தோம், என் செய்தோம்' என்று தன்னிரக்கம் கொள்ளும்படி ஆகும்.

'எற்றெற்றென்று' என்றதன் பொருள் என்ன?

'எற்றெற்றென்று' என்ற தொடர்க்கு எற்றெற்றென்று சொல்லும்படி, வெகுவிதமாக, ஏறி முயன்று நிறைந்த அளவு தொழுவுக்குச் செல்வதாகிய, பின் என் செய்தோம் என்று தாமே இரங்கும்வகை, என்ன செய்தோம் என்ன செய்தோம்’ என்று வருந்தும்படியான, 'என்ன செய்தோம்' என்று திரும்பத் திரும்ப வருந்தும்படியாக, 'என் செய்தோம், என் செய்தோம்' என்று ஏக்கமுறக் கூடிய, சீசீ என்று இகழும், என்ன என்ன செய்தோம் என்று தாமே பின் இரங்குமாறு, 'இருக்காது' 'இருக்காது' என்று பிறர் நம்பும்படியாகவே, 'என்ன செய்தோம்' 'என்ன செய்தோம்' என்று வருந்தத்தக்க, 'என் செய்தோம்! என் செய்தோம்!' என்று வருந்தும்படி, 'என் செய்தோம்' என்று தானே இரங்குமாறு, 'நாம் என்ன தவறு செய்துவிட்டோம்' என்று எண்ணி எண்ணி வருந்தும்படியான, என்ன இழிவு, என்ன கொடுமை என்று இகழப்பட்டு, கொல் வெட்டு என்று சொல்லுதற்குக் காரணமாய என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எற்று-திசைச் சொல் என மணக்குடவர் சொல்கிறார். ஆனால் அவர் சொற்பொருள் தரவில்லையாதலால் என்ன பொருள் கொண்டார் எனத் தெரியவில்லை. இத்தொடருக்கு உரையாளர்கள் உரைகள் வேறுபடுகின்றன. 'என் செய்தோம்' என்று தாமே வஞ்சகத்துறவி இரங்குவான் என்றும் 'என்ன இழிவு, என்ன கொடுமை' என்று அவன் இகழப்படுவான் என்றும் மாறுபட மொழிந்தனர்.
வ உ சி இன்னொரு வகையாக 'கொல் வெட்டு என்று சொல்லுதற்குக் காரணமாய எனப் பொருள் கூறுகிறார். 'எற்று எற்று என்பது துறவு வேடத்தான் தீயன புரிதற்காகப் பிறன் இல்லின்கண் சென்று பிறன் கைப்பட்ட பொழுது அப் பிறன் தன் பக்கத்தில் நிற்பானைப் பார்த்துக் கூறும் கூற்று' என விரித்துரைத்து 'தவ வேடம் புனைந்து தீயன புரிவோர் கொலையுண்டு இறப்பர்' எனக் கருத்தும் கூறினார்.

இரா சாரங்கபாணி '‘எற்றென் கிளவி இறந்த பொருட்டே’ (இடையியல்,15) என்னும் தொல்காப்பிய நூற்பாவின்படி ‘எற்று’ என்னும் இடைச் சொல் கழிந்ததே என்ற பொருளில் இரக்கப் பொருள் தரும். ‘எற்றென உடம்பின் எழினலம்’ என்பதை உரையாசிரியர் அப்பொருட்கு மேற்கோள் காட்டுவர். மேலும், தொல்காப்பியர் பொருளியலில், வருத்த மிகுதி சுட்டுங்காலை, உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம் (32) எனக் கூறியுள்ளார். ஆகவே ‘எற்று எற்று’ என்பதற்குக் கழிந்த செயலுக்கு இரங்குதலாகவும், அதுவும் தன் செயலலுக்குப் பிறர் இரங்குவதாகக் கொள்ளாமல் தானே இரங்குவதாகவும் கொள்ளுதல் இக்குறட்போக்குக்குப் பொருத்தமாகும். எற்றென் றிரங்குவ செய்யற்க... (வினைத்தூய்மை 655 பொருள்: 'யான் செய்தது எத்தன்மைத்து' என்று வருந்துவதற்குரிய வினைகளைச் செய்யாதொழிக) எனப் பிறிதோரிடத்தும் இப்பொருளில் வருதல் காண்க' என முடிநிலையாகக் கூறுகிறார்.

'எற்றெற்றென்று' என்ற தொடர்க்கு ''என் செய்தோம்! என் செய்தோம்!' என' என்பது பொருள்.

'பற்று விட்டொழித்தோம்' என்று கூறுபவர் மறைவாகச் செய்யும் ஒழுக்கம் 'என் செய்தோம்! என் செய்தோம்!' என இரங்கும்படி பல துன்பங்களைத் தரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கூடாஒழுக்கச் செயல்கள் சீசீ என்று இகழப்படும்.

பொழிப்பு

பற்றுக்களை அகற்றிவிட்டோம் என்று சொல்பவரது மறைந்த ஒழுக்கம் 'என் செய்தோம்! என்று தன்னிரக்கம் கொள்ளும்படி பல துன்பங்களைத் தரும்.