இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0276



நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்

(அதிகாரம்:கூடாஒழுக்கம் குறள் எண்:276)

பொழிப்பு (மு வரதராசன்): மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவர் போல் இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை.

மணக்குடவர் உரை: நெஞ்சிற் றுறவாராய்த் துறந்தாரைப் போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போலக் கொடியா ரில்லை யுலகத்து.

பரிமேலழகர் உரை: நெஞ்சின் துறவார் - நெஞ்சால் பற்று அறாது வைத்து, துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல், வன்கணார் இல் - வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை.
(தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, 'யாம் மறுமைக்கண் தேவராற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்' என்று அறியாது ஈந்தாரை, அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். 'அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி உடம்போடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர் ஏறே' (சீவக. முத்தி - 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் 'வன்கணார் இல' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: மனத்தால் துறவாது துறந்தவர் போல ஏய்ப்பவரே எல்லாரினும் கொடியவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்.

பதவுரை: நெஞ்சில்-உள்ளத்தில்; துறவார்-துறவு கொள்ளமாட்டார்; துறந்தார்-பற்றினை விட்டவர்; போல்-போல; வஞ்சித்து-ஏமாற்றி; வாழ்வாரின்-வாழ்வாரைப் போல; வன்கணார் -கொடியார்; இல்-இல்லை.


நெஞ்சில் துறவார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சிற் றுறவாராய்;
பரிப்பெருமாள்: நெஞ்சிற் றுறவாராய்;
பரிதி: மனத்தில் மூன்று ஆசையும் இருக்க; [மூன்று ஆசையும்-மண் ஆசை, பெண்ணாசை, பொன்னாசை என்பன]
காலிங்கர்: இவ் உலகத்துச் சிலர் துறக்கக் கருதுகின்றது மற்றதனை நெஞ்சினால் துறவாராய்;
பரிமேலழகர்: நெஞ்சால் பற்று அறாது வைத்து;

'நெஞ்சில் துறவாராய்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனத்தால் பற்றுக்களை விடாமல்', 'மனதில் ஆசைகளை விடாமல்', 'நெஞ்சில் ஆசை நீங்காதவராய்', 'உள்ளத்தால் துறவாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உள்ளத்தால் துறவாது என்பது இப்பகுதியின் பொருள்.

துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துறந்தாரைப் போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போலக் கொடியா ரில்லை யுலகத்து.
பரிப்பெருமாள்: துறந்தாரைப் போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போலக் கொடியா ரில்லை யுலகத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கொடிய ரென்றது.
பரிதி: ஆசையை விட்டோம் என்பார் வஞ்சகர்க்குள் வஞ்சகர் என்றவாறு.
காலிங்கர்: வறிதே துறந்தார் போலப் பாவித்து இங்ஙனம் வஞ்சித்து உயிர் வாழ்வாரைப் போலத் தறுகணாளர் ஒருவரும் இல்லை என்றவாறு. [தறுகணாளர்- கொடியர்]
பரிமேலழகர்: பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல் வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, 'யாம் மறுமைக்கண் தேவராற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்' என்று அறியாது ஈந்தாரை, அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். 'அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி உடம்போடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர் ஏறே' (சீவக. முத்தி - 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் 'வன்கணார் இல' என்றார்.

'துறந்தாரைப் போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போலக் கொடியாரில்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துறவிகள் போல் நடித்து ஏமாற்றி வாழ்பவர்களைப் போலக் கொடியவர்கள் இவ்வுலகத்தில் இல்லை', 'விட்டுவிட்டவர்களைப் போல உலகத்தை ஏமாற்றி சீவனம் நடத்துகிறவர்களைப் போன்று பாவங்களுக்குப் பயப்படாத நெஞ்சழுத்தமுள்ளவர்கள் வேறு யாரும் இல்லை', 'துறவினர் போல நடித்துப் பிறரை வஞ்சித்து வாழ்கின்றவர்களைப் போலக் கொடியவர்கள் இல்லை', 'துறந்தார்போல நடித்துப் பிறரை ஏமாற்றி வாழ்வாரைப்போலக் கொடியவர் உலகத்தில் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துறந்தார்போல நடித்து ஏமாற்றி வாழ்வாரைப்போலக் கொடியவர் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உள்ளத்தால் துறவாது, துறந்தார்போல வஞ்சித்து வாழ்வாரைப்போலக் கொடியவர் இல்லை என்பது பாடலின் பொருள்.
'வஞ்சித்து வாழ்வார்' யார்?

துறவுக்கோலம் காட்டி, பெரியோர்போலப் போற்றப் பெற்று, உழைக்காது, கொடிய குற்றம்புரிந்து வாழ்பவர் மிகவும் அஞ்சத்தக்கராவார்.

பற்றினை உள்ளத்திலிருந்து ஒழிக்காதவராய், ஆனால் முற்றும் துறந்தவர் போலக் காட்டி, மக்களை வஞ்சித்து வாழ்கின்றவரைப் போன்ற கொடியவர் யாரும் இலர்.
வெளி உலகுக்கு அமைதியான தோற்றம் தருவர்; தம் சீடர்கள் மூலம்வழி அவரிடம் ஒளி வட்டம் தெரிகிறது காணீர் என்று பொய்யான பரப்புரை பகன்று அருள் வடிவன் போன்று மற்றவர்களுக்குக் காட்சி அளிப்பர்; தனது சமய அரசியல் செல்வாக்கினால் அதை மக்கள் நம்பும்படி செய்வர்; ஆனால் உண்மையில் பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை நீங்காதவராய் மறைந்த ஒழுக்கத்தில் வாழ்வர். இவர்கள் கொடியவர்களில் மிகவும் கொடியவர் என்கிறார் வள்ளுவர்.

கூடாஒழுக்கம்‌ என்பதற்கு ஏற்றதோர் தெளிவுரையாக அமைந்த குறள் இது. துறந்தார் என்போர் உள்ளத்தால் துறவுநிலை மேற்கொண்டவர்கள்; உயிர்களிடம் அருள் காட்டி ஒழுகுபவர்கள்; அவர்கள் மக்களை நல்வழி ஆற்றுப்படுத்துவராக இருக்க வேண்டியவர்கள், ஆனால் நெஞ்சால் துறவாதவர்கள், மாறுபட்டு, கள்ளமாக இழிவான செயல்களைச் செய்து உலகப் பழிக்கு ஆளாகின்றவர்கள். இவர்கள் உலகப்பற்றைத் துறக்காது, தவவேடம் மதிப்பைத் தேடித்தருவது என்பதால் ஆன்மீகத் தேடலில் உள்ளவர்கள் தங்குவது போன்ற உறைவிடம் அமைத்துக்கொண்டு, தவக்கோலம் பூண்டு வஞ்சகம் செய்கின்றனர். இவர்களின் நோக்கம் உயிர் விடுதலைக்கான முயற்சியன்று; மண், பெண், பொன் மூன்றின் மேலிருக்கும் தங்கள் அடங்கா வேட்கையை நிறைவேற்றிக் கொள்ளுதலேயாம். இவ்விதம் துறந்தவர்களைப்போல் நடித்து உலகோரை ஏமாற்றித் தம்மை நம்பியவர்களை வஞ்சித்து வாழ்வு நடத்துவோரைப் போல் நெஞ்சழுத்தமுள்ள கொடியவர்கள் வேறில்லை என்கிறது பாடல். கொடியவர்களுக்கெல்லாம் கொடியவன் யார் என்றால் உள்ளத்தால் துறவியாக இல்லாமல் துறவி போல நடிப்பவன்தான் என்று இப்பாடலில் வரையறை செய்கின்றார் வள்ளுவர்.
இப்படிப்பட்ட துறவியரை 'வன்கணார்' என்று வள்ளுவர் குறிக்கின்றார். வன்கணார் என்றால் வன்கண்மை உடையோர் அதாவது கொடியவர் என்று பொருள். நெஞ்சில் ஈரமும், அருளுமில்லாமல், தம்நலத்துக்காக பிறரை நம்பவைத்து ஏமாற்றுதலைவிட வஞ்சகச் செயல் வேறு ஏதேனும் இல்லை என்பதால் அவ்வஞ்ச நெஞ்சத்தாரின் ‘வன்கணாரில்’ என்றார்

'வஞ்சித்து வாழ்வார்' யார்?

'வஞ்சித்து வாழ்வார்' என்றதற்கு வஞ்சனை செய்து வாழுமவர்கள். வஞ்சகர், வஞ்சித்து உயிர் வாழ்வார், வஞ்சித்து வாழுபவர், வஞ்சனை செய்து வாழ்கின்றவர், ஏய்ப்பவர், ஏமாற்றி வாழ்பவர்கள், உலகத்தை ஏமாற்றி சீவனம் நடத்துகிறவர்கள், வஞ்சகமாகக் காட்டி வாழ்கின்றவர், பிறரை வஞ்சித்து வாழ்கின்றவர்கள், பிறரை ஏமாற்றி வாழ்வார், மக்களை ஏமாற்றி வாழ்கின்றவர், பிறரை யேமாற்றி வாழும் பொய்த் துறவியர், உலகத்தாரை வஞ்சித்து வாழ்வார் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வஞ்சித்து வாழ்தல் என்பது சொல் செயல்களில் ஏய்த்து வாழ்க்கை நடத்துதல் எனப்பொருள்படும். இந் நேர்பொருளிலேயே இத்தொடர் இங்கு ஆளப்பட்டது.
சிலர் நேர்மையான வழியில் வாழ்வு நடத்தமுயலாமல் குறுக்கு வழியில் வாழ நினைக்கின்றனர். அவர்களுக்கு மனச்சான்று என்று ஒன்றும் கிடையாது. இவர்கள் துறவுவேடத்தில் மக்களை எளிதில் ஏமாற்ற முடியும் என எண்ணி தவம் செய்வார்போல் நடித்துப் பிழைப்பு நடத்துகின்றனர்.
உலக இன்பங்கள் எவற்றையுமே துறக்காமல் எல்லாவற்றையும் துறந்துவிட்டேன் என்று பொய் சொல்லுதல். இறைவனுக்குத் திருப்பணி செய்யவேண்டும், ஏழைகளுக்கு உணவுக்கொடை செய்யவேண்டும் என்று சொல்லி மக்களிடம் பணம் ஈட்டல், தாங்கள் மற்றோரினும் உயர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டு உழைக்காமல் பொய்சொல்லி வாழ்க்கை நடத்துவது போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்பவர்களை 'வஞ்சித்து வாழ்வார்' எனக் கூறுகிறர் வள்ளுவர் இங்கு.

'வஞ்சித்து வாழ்வார்' என்பது ஏமாற்றிப் பிழைப்பவர் எனப் பொருள்படும்.

உள்ளத்தால் துறவாது, துறந்தார்போல நடித்து ஏமாற்றி, வாழ்வாரைப்போலக் கொடியவர் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மனத்தது மாசாக கூடாஒழுக்கம் உடைய போலித்துறவிகள் கொடுமையானவர்கள்.

பொழிப்பு

உள்ளத்தால் பற்றுக்களை விடாமல் துறந்தவர் போல வஞ்சித்து வாழ்வாரினும் கொடியவர் இல்லை.