இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0273



வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

(அதிகாரம்:கூடாஒழுக்கம் குறள் எண்:273)

பொழிப்பு (மு வரதராசன்): மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றது.

மணக்குடவர் உரை: வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து.

பரிமேலழகர் உரை: வலி இல் நிலைமையான் வல் உருவம்- மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான் வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன்வழிப்படுதல்; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று - பசு 'காவலர் கடியாமல்' புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போலும்.
(இல்பொருள் உவமை. 'வலிஇல் நிலைமையான்' என்ற அடையானும், மேய்ந்தற்று என்னும் தொழில் உவமையானும் வல் உருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம். காவலர் கடியாமை 'புலி புல் தின்னாது' என்பதனாலும் அச்சத்தானும் ஆம். ஆகவே, வல்உருவங் கோடற்குப் பயன் அன்ன காரணங்களான் உலகத்தார் அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியும் இன்றிப் பிறர் அயிராத வல்உருவமுங் கொண்டு நின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடிய வழியே ஓடிமறைந்து பிறர்க்கு உரிய மகளிரை விழைதலாம். அவ்வாறாதல், பெற்றம் தனக்கு உரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற்போலும் என்ற உவமையான் அறிக.)

வ சுப மாணிக்கம் உரை: அடக்கமில்லான் கொண்ட கொடிய வேடம் பசு புலித்தோலிட்டுப் பயிர்மேய்வது போலாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று.

பதவுரை: வலி-வலிமை அல்லது உறுதி; இல்-இல்லாத; நிலைமையான்-நிலைமையை யுடையவன், இயல்பினையுடையவன்; வல்உருவம்-வலிபெற்ற தோற்றம், இங்கே தவ வேடம்; பெற்றம்-மாடு, பசு, காளை; புலியின்-வேங்கையினது; தோல்-தோல்; போர்த்து-உடல் மேலே போர்த்திக்கொண்டு; மேய்ந்து-மேய்ந்தால்; அற்று-அத்தன்மைத்து, போலும்.


வலிஇல் நிலைமையான் வல்லுருவம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல்;
பரிப்பெருமாள்: வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல்;
பரிதி: தவத்தில் உறுதியில்லாதவன் வலுவாகக் கொண்ட வேஷம்;
காலிங்கர்: இவ்வுலகத்துத் தான் கொண்டதோர் தங்குறை முடிப்பதொரு கோட்பாட்டு வலி தன் நெஞ்சத்தில்லாத தன்மையான் அவன்மாட்டுத் தவநெறி வலிபெற்று நின்றதுபோலத் தோன்றுகின்ற கோலமானது யாதினை ஒக்குமோ எனில்;
பரிமேலழகர்: மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான் வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன்வழிப்படுதல்;

'தவத்தில் உறுதியில்லாதவன் வலுவாகக் கொண்ட வேடம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனத்தை அடக்கும் ஆற்றலில்லாத இயல்பினான் வலிமையுடையாரது தவக்கோலம் பூண்டு தீயவை செய்தல்', 'வைராக்கியம் இல்லாத துறவியின் தவ வேடம்', 'ஐம்புலன்களை அடக்கும் வலிமையில்லாத நிலைமையில், சிறந்த தவக்கோலத்தை மேற்கொள்ளுதல்', 'மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலிமை இல்லாத இயல்பினை உடையான் கொண்டுள்ள பிறர் அஞ்சத்தகும் தவவேடம் கொண்டு குற்றங்களைச் செய்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனத்தை அடக்கும் வலிமை இல்லாத இயல்பினான் கொண்டுள்ள வலிய தோற்றம்தரும் கோலம் என்பது இப்பகுதியின் பொருள்.

பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து. [பெற்றம்- மாடு; பைங்கூழ் - பசிய பயிர்] -
பரிப்பெருமாள்: பெற்றமானது பிறர் ஐயப்படாமைக்குப் புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் வடிவு கண்டு தவவரென்று கொள்ளப்படாதென்றார்; அவரதனைப் பூண்டு கொள்கின்றது எற்றுக்கென்றார்க்கு, அதுவும் தாம் மறைந்தொழுகுதற்காக.
பரிதி: ரிஷபம் மேயவேண்டிப் புலித்தோல் போர்த்துப் புறப்பட்டதற்குச் சரி என்றவாறு. [ரிஷபம் - காளை]
காலிங்கர்: புலிபோல்வதோர் மனத்திட்பம் இல்லாத பசுவானது திட்பமுள்ளதுபோலப் புலியினது தோலினைப் போர்த்து நடித்தும், பண்டைப் புல்லினையே பின்னும் மேய்ந்த அத்தன்மைத்து என்றவாறு.
பரிமேலழகர்: பசு 'காவலர் கடியாமல்' புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: இல்பொருள் உவமை. 'வலிஇல் நிலைமையான்' என்ற அடையானும், மேய்ந்தற்று என்னும் தொழில் உவமையானும் வல் உருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம். காவலர் கடியாமை 'புலி புல் தின்னாது' என்பதனாலும் அச்சத்தானும் ஆம். ஆகவே, வல்உருவங் கோடற்குப் பயன் அன்ன காரணங்களான் உலகத்தார் அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியும் இன்றிப் பிறர் அயிராத வல்உருவமுங் கொண்டு நின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடிய வழியே ஓடிமறைந்து பிறர்க்கு உரிய மகளிரை விழைதலாம். அவ்வாறாதல், பெற்றம் தனக்கு உரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற்போலும் என்ற உவமையான் அறிக. [இல்பொருள் உவமை - எக்காலத்தும் இல்லாத பொருளை உவமமாக எடுத்துரைப்பது; வல்லுருவம் - வலிய விலங்கின் உருவம்; மனவழிப்படுதல் - மனம் போன வழியில் போதல்]

'பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பெற்றம் என்ற சொல்லுக்குக் குறளில் உள்ளபடி 'பெற்றம்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் பொருள் கூறினர். பரிதி 'ரிஷபம்' அதாவது காளை என்று பொருள் கொள்ள, காலிங்கரும் பரிமேலழகரும் பசு எனப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பசு புலித்தோல் போர்த்துப் பயிரை மேய்ந்தாற் போலும்', 'ஒரு பசுமாடு புலித்தோலைப் போர்த்துக் கொண்டு தானியப் பயிரைத் தின்பது போன்றது', 'பசு புலியின் தோலைப் போர்த்துக்கொண்டு பயிரை மேய்ந்ததுபோல் ஆகும்', 'பசு புலித் தோலைப் போர்த்துக்கொண்டு பயிரை மேய்ந்ததை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மாடு புலித்தோலைப் போர்த்துக் கொண்டு பயிரை மேய்ந்ததை ஒக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனத்தை அடக்கும் வலிமை இல்லாத இயல்பினான் கொண்டுள்ள வல்லுருவம், மாடு புலித்தோலைப் போர்த்துக் கொண்டு பயிரை மேய்ந்ததை ஒக்கும் என்பது பாடலின் பொருள்.
'வல்லுருவம்' என்ற சொல் குறிப்பது என்ன?

பற்றைத் துறந்துதான் வந்தான்; ஆனால் அவனால் தன் காமப்பசியைத் தணிக்க முடியவில்லையே!

புலன்களை அடக்கி ஆளும் மனவலிமை இல்லாத நிலையிலுள்ள ஒருவன் வல்லுருவம் தாங்கி நிற்பது, மாடானது வலிமையுள்ள புலித்தோலைப் போர்த்துக் கொண்டு பயிரை மேய்தலுக்குச் சமம்.
தவவலிமை வேடத்தால் ஆகாது என்று சொன்ன முற்குறளைத் தொடர்ந்து நெஞ்சம் அறிந்த மறைந்த ஒழுக்கத்தை உவமையுடன் சொல்கிறது இப்பாடல். குறள் நடையும் சொல்லாட்சியும், இக்குறள் காம இச்சை கொண்டு திரியும் போலித்துறவி பற்றியது என்பதைத் தெரிவிக்கின்றன. தன் மனத்தைக் கட்டுப்படுத்த இயலாத அவன் தனது பசியடங்க, திட்டமிட்டு, தவவேடம் பூண்டு மேய்ச்சலுக்கு செல்கிறான் என்பதைக் கூறுவது இது.
புற உலகுக்கு அவன் ஒரு துறவி அதாவது ஆசைகளையெல்லாம் விட்டொழித்தவன், ஆனால் உண்மையில் அவன்மனம் போன வழியில் போகும் வஞ்சநோக்குடையவன். தன் காம விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளவே தவ வேடம் பூண்டுள்ளான். தனக்கு உரிமையில்லாப் பிற மகளிரிடம் காமஉறவு கொள்வதற்காகவே துறவிவேடத்தில் இருக்கிறான். இவனது செய்கையை ஒரு மாடானது புலித்தோலைப் போர்த்துப் பயிரை மேய்வதைப் போன்றது என்கிறார் வள்ளுவர்.
தவம் ஆற்றலுள்ளது என்பதால், அவ்வேடம் மேற்கொள்வதின் மூலம், தம்முடைய உலகியல் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில், சிலர் துறவிக் கோலம் பூணுகின்றனர். நெஞ்சால் துறவாமல், துறவுவேடத்தை ஒரு கருவியாக ஏற்று, தம்மை நம்பி வந்த மக்களை ஏமாற்றி அவர்கள் உடைமைகளைக் கவர்ந்து செல்வச் செழிப்பிலும், காமஇன்பத்திலும் திளைக்கின்றனர் என்னும் அவர்களது வஞ்சகத் தன்மையை வெளிக்காட்டுகிறது இக்குறள்.

துறவறத்திற்கு உரிய ஒழுக்கமில்லாதவர்கள், அந்நிலைக்குரிய உடைகளையும் நடைகளையும் போலியாக அமைத்துக்கொண்டு உலகத்தை ஏமாற்றுகின்ற தன்மையை ஓர் அழகிய உவமையால் எடுத்துக் கூறுகிறது பாடல். அந்த உவமை கூறுவது என்ன? பைங்கூழ் உண்ண விழைந்த ஒரு பசு, புலியின் தோலைப் போர்த்துக்கொண்டு பயிரை மேய்ந்தாற்போல மனதால் துறவாதோர். துறவிகளுக்கான வேடம் புனைந்து தங்கள் காமத் தேவைகளையும் மற்றவற்றையும் நிறைவேற்றிக் கொள்கின்றனர். புலித்தோலைப் போர்த்த பசுவானது புறத்தே புலிபோலவே தோன்றுதலால், அதனைக் கண்ட அளவிலே பயிரைக் காக்கின்ற காவலாளன் புலி புல்லைத் தின்னாதாதலால் தன் பயிருக்கு யாதொரு தீங்கும் விளையாது என எண்ணி 'புலி' பயிர்களுக்கிடையில் சென்றதைப் பொருட்படுத்தமாட்டான். மேலும் புலி அச்சமூட்டும் விலங்காதலால் வாளா இருப்பான்; மற்ற ஆடு மாடுகளும் அதைப் புலியென்று அஞ்சி ஓடிவிடும். பிறகு தன் விருப்பத்திற்கேற்றபடி போட்டியின்றிப் பயிரை மேயலாம். இவ்வாறு வல்லுருவத்‌தோடு சென்று தன்வழியில் ஆசைதீர பயிரைத் தின்னும். ‌அதுபோல கள்ள ஒழுக்கமுள்ளவன் துறவியின் ஆடையை அணிந்து கொண்டு உலாவும் பொழுது தவக்கோலத்தைக் கண்டு ஒரு துறவி தீச்செயல் புரியமாட்டான் என்று நம்பி மகளிரும்கூட அச்சமின்றி நெருங்கி அன்புடன் பழகுவார்கள்; அவன் தவவலிமை கொண்டவன் என்று நம்பும் உலகத்தார் அவன்மீது ஐயப்படாமல் இருக்கும்போது வேண்டிய தாறுமாறுகளைச் செய்துவிடுவான்; தன் விருப்பம் போலக் கூடாஒழுக்கத்தில் திளைப்பான்; வலியுடையான் போன்று தோன்றித் தம் எண்ணத்தை முடித்துக்கொள்வான்.
திட்டமிட்டு வஞ்சிக்கின்ற செயலைக் குறிப்பதாக உள்ளது இந்த உவமை. 'ஊர் மேய்தல்' என்ற இழிவு தரும் வழக்குத் தொடரும் இப்பாடலில் ஆளப்பட்டதும் நோக்குதற்குரியது.

தன் மீது புலியின் தோலைப் போர்த்துப் பயிர்மேயும் பசுவைப் போன்றவர்கள் இவர்கள் என்று வள்ளுவர் புதிய உவமையைப் படைக்கின்றார். 'பசுத் தோல் போர்த்திய புலி' அல்லது 'ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்' என்று கூறுவதுதான் மரபு. ஆனால் வள்ளுவரோ இப்போலித் துறவிகளைப் 'புலித்தோல் போர்த்திய பசு' என்று புதிய உவமையால் சுட்டுகின்றார்.
இக்குறளில் உள்ள 'பெற்றம்' என்றது 'பசு' எனப் பெண்பால் குறித்தது என்று பலரும் காளை என ஆண்பாலைச் சொல்வது என்று ஓரிருவரும் பொருள் கூறியுள்ளனர். அது பால் குறிக்காத பொதுச் சொல் என்றும் சொல்வர். பெற்றம் என்பதற்கு மாடு என்ற பொதுச்சொல்லைப் பொருளாகக் கொள்ளலாம்.

'வல்லுருவம்' என்ற சொல் குறிப்பது என்ன?

'வல்லுருவம்' என்றதற்கு வலிதாகிய தவவுருவம், வலுவாகக் கொண்ட வேஷம், தவநெறி வலிபெற்று நின்றதுபோலத் தோன்றுகின்ற கோலம், வலியுடையார் வேடம், மிகுந்த ஆற்றலுடையது போன்ற தவவேடம், கொடிய வேடம், வலிமையுடையாரது தவக்கோலம், வலிமை காட்டும் வேடம், தவத்தினர்க்குரிய வலிய கோலம், சிறந்த தவக்கோலம், பிறர் அஞ்சத்தகும் தவவேடம், தவ வேடமாகிய வலிமை பொருந்திய உருவம், வலிமை மிக்க துறவியரின் தவக் கோலம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வல்லுருவம் என்ற சொல்லுக்கு வலிய தோற்றம் என்பது நேர்பொருள்.
வலிய தோற்றத்தை எப்படிப் பெறுவது? சிலர்க்கு இயல்பாகவே-செல்வம், செல்வாக்கு, கல்வி, ஆளுமைத்திறன் போன்றவற்றால் வலிய தோற்றம் அமைந்து விடுவது உண்டு. இவ்வதிகாரம் பெரிதும் வஞ்சத் துறவிகள் பற்றியது. உண்மையான துறவிக்கு வலிய தோற்றம் தவத்தின் வலிமையால் இயல்பாக வந்துவிடும். சரி, ஏன் ஒருவர்க்கு வலிய தோற்றம் தேவைப்படுகிறது? ஒருவரது வலிய தோற்றம் பிறரை மதிக்கச் செய்யும். அச்சம்தரும் தோற்றம் அவர்க்கு இழிவு உண்டாவதிலிருந்து காக்கும். அது செல்வாக்கு மிக்கதாகிறது. இந்த செல்வாக்கை ஈட்ட இயலாதவர்கள் குறுக்குவழியில் துறவியின் ஆற்றலைப் பெறுவதற்குப் பொய்யாகத் துறவிக்கோலம் பூண்டு வலிய தோற்றம் தர முயல்கின்றனர்.
தவத்தினர்க்குரிய கொள்கையில் பிடிப்பில்லாமல் ஆனால் தன்னிடம் தவநெறி வலிமை பெற்று நிற்கிறது என்பதுபோலத் தோன்றுகிற உருப்பெறுகிறான் வஞ்சமனத்தான் ஒருவன். பற்றெல்லாம் அற்ற பெரியார்க்குரிய வேடம் புனைகிறான். அவன் பேசும் மொழிகளும் வழிபாடுகளும் ஆரவாரச் சடங்குகளும் மக்களை மயக்கும். அவன் தோற்றத்தைக் கண்டு தவத்தால் வலியவர் என்று உலகோர் அஞ்சுவர்; தவக்கோலத்தில் இருப்பதால், அந்தத் தவக்கோலத்திற்கு மதிப்புக் கொடுத்தும் 'இவரால் நம் வாழ்வுக்குக் கேடு இல்லை' என்று எண்ணியும் அவனைப் போற்றிக்கொண்டு இருப்பர். தவக்கோலத்தில் இருப்பவனோ தம் மாயவலைகளில் சிக்குண்ட அவர்களைத் தம் விருப்பத்திற்கேற்றவாறு செயல்பட வைப்பான். மகளிரும் அவனிடம் ஏமாறுவர். இறுதியில் அவனை நம்பியவர்கள் தம்மிடமுள்ள எல்லாவற்றையும் இழந்து நிற்பார்கள்.

'வல்லுருவம்' என்ற சொல்லுக்கு வலிய கோலம் என்பது பொருள்.

மனத்தை அடக்கும் வலிமை இல்லாத இயல்பினான் கொண்டுள்ள வல்லுருவம், மாடு புலித்தோலைப் போர்த்துக் கொண்டு பயிரை மேய்ந்ததை ஒக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கூடாஒழுக்கம் உடையான் வல்லுருவைத் துணையாக்கிக் கொள்கிறான்.

பொழிப்பு

மனத்தை அடக்கும் வலிமை இல்லாத இயல்பினான் பூண்ட தவவேடம் பசு புலித்தோல் போர்த்துப் பயிரை மேய்வது போலாம்.